Chapter 15

0Shares

நதியோரம் நடந்தபோது

நடை தளர மனம் தளரும்

விடையில்லாத கேள்வி கேட்டால்

விடைதேடி உயிர் எங்கு செல்லும்?

…நதியோரம் நான் நடந்த போது…

நீண்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்ட படித்துறை அது.. நீரில் பல படிகள் மறைந்திருந்தன.. நீருக்குள் காலை விட்டு அளைந்தவாறு வித்யா அமர்ந்திருந்தாள்.. சில சமயம் குனிந்து கைகளாலும் நீரைத் துழாவி மகிழ்ந்தாள்.. ஓர் சின்னஞ்சிறு சிறுமியைப் போல் குதூகலித்துக் கொண்டிருந்தாள்.. நரேந்திரன் சிறு முறுவலுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.. ஓர் அன்னப்பறவை நீரில் விளையாடுவது போலிருந்தது அவளது நீர் விளையாட்டு..

“உனக்கு நதி என்றால் இவ்வளவு பிரியமா..?”

“ஆமாம்.. எங்கள் ஊரான ஆயகுடி பழனியில் இருக்கிறது.. அங்கேயும் ஆறு உண்டு.. ஆனால் நான் போனதில்லை..”

“ஏன்..?”

“ஏன்..? கேள்வி கேட்பது சுலபம்.. பதில் சொல்வது தான் துயரம்.. எனக்கு அம்மா இல்லை.. என் ஆறு வயதில் இறந்து விட்டார்கள்.. அப்பா அடுத்த வருடமே மறு கல்யாணம் பண்ணிக் கொண்டார்.. புரிகிறதா..?”

“ம்ம்.. சித்தி கொடுமை..!”

“ஆமாம்.. சித்தி என்னை பள்ளிக்குப் போக விட்டதே பெரிய விசயம்.. வீட்டின் சம்பளமில்லாத வேலைக்காரி யாகவும், சமையல்காரியாகவும்தான் நான் அந்த வீட்டில் இருந்தேன்..”

நரேந்திரன் மனம் கலங்கினான்.. அடுத்தவருக்கு ஓர் துன்பமென்றால் உடனே அதைப் போக்கத் துடிக்கும் இவளுக்கு இப்படி ஓர் கொடுமையா..?

“நீ தான் உன் ஸ்கூல் பர்ஸ்ட்டுன்னு கேள்விப்பட்டேன்..”

“ஆமாம்.. எல்லோரும் தூங்கியவுடன் சமையலறை யில் உட்கார்ந்து படிப்பேன்.. அதற்கும் கரண்ட் பில் அதிகமாகும்ன்னு சித்தியிடம் திட்டு வரும்.. ச்.. எப்படியோ படித்து முடித்து விட்டேன்..”

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.. சூழ்நிலையின் கனம் மனத்தை அழுத்த நரேந்திரன் பேச்சை மாற்ற விரும்பினான்..

“உனக்கு நீந்தத் தெரியுமா..?”

“தெரியாது.. உங்களுக்கு..?”

“ஹைய்யோ.. போட்டி போட்டுக் கொண்டு நீந்துவோம்.. மகி, யுகேயெல்லாம் சின்ன வயசில் இப்படி வினயமாக இல்லை.. லீவு நாளில் இந்தக் கரையிலிருந்து நீந்தி அந்தக் கரையை தொட்டு விட்டு வர வேண்டும்.. நான்தான் எப்போதும் ஜெயிப்பேன்.. தெரியுமா..?”

“அப்படியா..?” என்று வரிசைப்பற்கள் தெரிய முறுவலித்தாள் வித்யா.. அந்தப் பல் வரிசையில் மயங்கிய நரேந்திரன்..

“அந்தக் காலத்து கே.ஆர் விஜயாவும், இந்தக் காலத்து சிநேகாவும் புன்னகைக்குப் பெயர் போனவர்கள்..” என்றான்..

“ஆமாம்.. கே.ஆர். விஜயாம்மாவை புன்னகை அரசி என்பார்கள்.. சிநேகாவை புன்னகை இளவரசி என்பார்கள்..”

“உன் புன்னகையை மட்டும் அந்தப் பட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தவர்கள் பார்த்தால் இரண்டையும் பிடுங்கி உன்னிடம் கொடுத்து விடுவார்கள்..”

“போதுமே..” வெட்கத்தில் முகம் சிவந்தது வித்யாவிற்கு..

“வித்யா.. நான் உண்மையிலேயே மகி இவ்வாறு நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.. சிறிது நாள்களாகவே அவன் போக்கு சரியில்லை.. ஆனால் இவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டானே..”

“நீங்கள் அதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள்.. நான் சொல்வது பணப் பிரச்சனையை மட்டும் அல்ல..”

“புரிகிறது வித்யா.. மகி சொன்ன புட்டியையும், குட்டியையும் சொல்கிறாய்..” என்றான் சங்கடத்துடன் நரேந்திரன்..

“ஆமாம்.. உங்களைப் போன்ற ஓர் மனிதர் தனது நல்ல பெயருக்கு இழுக்கு வருவது போல் நடந்து கொள்ளலாமா..?”

“என் நிலைமையக் கொஞ்சம் யோசித்துப் பார்..”

“யோசிக்காமலென்ன.. யோசித்து விட்டேன்.. கடந்த காலத்தை நினைத்து வருந்துவதைவிட எதிர்காலத்தில் இனியாவது நேர்வழியில் நடக்கலாமே..”

“பூர்ணிமா சொல்வதைச் செய்யச் சொல்கிறாயா..?”

“ஆமாம்.. உங்கள் தகுதிக்கும், படிப்புக்கும் ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்.. மணம் செய்து கொள்ள..”

“வித்யா.. எனக்கு வரும் பெண்ணிடம் நான் எதிர்பார்க்கும் தகுதிகள் எனக்கு இருக்கிறதா..?”

வித்யா பேச்சிழந்தாள்.. ‘இந்தக் கேள்விக்கு விடை என்ன சொல்ல…? வாழ்க்கையில் இதுபோல் இன்னும் எத்தனை கேள்விகளை நான் சந்திப்பது..?’ பதில் சொல்லாமல் மௌனித்தாள் அவள்.. அவன் நீரின் மேற் பரப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. மெல்ல அவன் முகம் பார்த்த வித்யா..

“உங்களை உங்கள் குறைகளுடன் ஏற்றுக் கொள்ள ஒருத்தி வரமாட்டாளென்று முடிவு செய்து விட்டீர்களா..?” என்று கேட்டாள்..

“ம்ம்.. வரலாம்.. ஆனால் எனக்கு மனம் இருக்கிறதே வித்யா.. தெரிந்தே ஓர் பெண்ணின் வாழ்வைப் பாழடிப்பதா..?”

“என்ன பேச்சு இது நரேன்.. நீங்கள் என்ன அப்பேர்ப் பட்ட அயோக்கியனா..? முதலில் உங்களைப் பற்றியே நீங்கள் இப்படி நினைத்துக் கொள்வதை நிறுத்துங்கள்..” என்றாள் வித்யா கோபத்துடன்..

“இல்லை வித்யா.. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்..” நரேந்திரன் பேச்சை இடை மறித்தாள் வித்யா..

“போதும் நரேன்.. அப்புறம் நான் எழுந்து போய் விடுவேன்..” என்று படபடத்தாள்.. அவளது கோபத்தைக் கண்ட நரேந்திரனின் மனம் பூவாய் மலர்ந்தது.. அவளது உரிமையான கோபம் அவன் மனதைத் தாலாட்டியது.. அவன் பாட விரும்பினான்..

“பொன்னை விரும்பும் பூமியிலே..

என்னை விரும்பும் ஓர் உயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என் உயிரே..”

என்று மெல்லிய குரலில் பாடினான்.. வித்யாவின் கோபம் மறைந்து மனம் சிறகானது..

“பழைய பாடல்கள் பிடிக்குமா..?” என்று வினவினாள்.

“அது மட்டும்தான் பிடிக்கும்.. புதிய பாடல்கள் பிடிக்காது என்றில்லை.. அது கணநேரம் கூட நெஞ்சில் நிற்காமல் மறைந்து விடுகிறது.. எவர் கிரீன்.. பழைய பாடல்கள்தான்..”

“அதனால்தான் அதற்கு ‘நெஞ்சில் நிற்பவை’ன்னு டைட்டில் கொடுக்கிறாங்க..”

“அதுசரி.. நீ அருமையாய் பாடுவியாமே.. பூர்ணிமா சொன்னாள்..”

“சும்மா.. குரல் நல்லாயிருக்குன்னு காலேஜில் பாடச் சொன்னாங்க.. பாடினேன்.. பர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது..”

“சும்மா பாடினதற்கே பர்ஸ்ட் பிரைஸா.. அனுபவித்து, ரசித்துப் பாடினாயானால் எப்படியிருக்கும்.. பாடு வித்யா..”

“நானா.. இப்போதா..”

“ஆமாம்.. எனக்காக.. ப்ளீஸ்..”

அவன் கெஞ்சல் மனதைக் தொட வித்யா கண்மூடிப் பாடினாள்..

 “நீ எங்கே என் நினைவுகள் அங்கே..

நீ ஒரு நாள் வரும் வரையில்

நானிருப்பேன் நதிக்கரையில்..”

அழகாய் பாடினாள்.. அவள் குரல் கேட்டு நதி நீர் துள்ளிக் குதித்து அவள் கால் தொட்டு விளையாடியது.. நரேந்திரன் தன் வசத்தில் இல்லை.. இதமான மாலை நேரத்தில் நதிக்க்கரை ஓரத்தில் அமைதியான அழகே வடிவான மனதிற்கு இதமான பெண்ணொருத்தி அவன் ஒருவனுக்காக மட்டும் அவன் கேட்பதற்காக மட்டும் பாடுகிறாள்.. என்ன வரம் வேண்டும் என்று இறைவன் அவனிடம் வரம் கேட்டால் இந்த வினாடி அப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்ற வரத்தைத்தான் கேட்பான்.. வித்யா அவன் தோழியானாள்..

“போதுமா.. இனிப் போகலாமா..?” மோகனப் புன்னகையுடன் அவள் கேட்டாள்.. அதில் கிறங்கிப் போனவனாய் அவன் எழுந்தான்.. நதியோரம் நடந்து கொண்டே அவள் கேட்டாள்..

“பாட்டுப் பாடியதற்கு பரிசு கிடைக்காதா..?”

“என்ன வேண்டும் கேள்.. தருகிறேன்..”

“இந்த நதியோரம் நடக்க தினமும் அழைத்து வர வேண்டும்.. இதுதான் நான் கேட்கும் பரிசு..”

அவன் திரும்பிப் பக்க வாட்டில் நடந்து வரும் அவளையே பார்த்தான்.. வரம் கொடுக்க விரும்பியவனுக்கே வரமளித்த தேவதையாய் அந்தக் கணத்தில் அவள் தோன்றினாள்.. இவ்வளவு இதமாக அவன் என்றும் உணர்ந்ததில்லை.. இது தினந்தோறும் அவளுக்குக் கிடைக்குமானால் அவன் உயிரையே அவள் காலடியில் கிடத்துவானே..

“நிச்சயமாய் அழைத்து வருகிறேன்..”

காரில் ஏறிக் கொண்டனர்.. வீட்டிற்குள் கார் நுழைந்த போது தோட்டத்தில் பூர்ணிமா ஓர் இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.. நரேந்திரனின் முகம் மலர்ந்தது..

“பிரகாஷ் வந்திருக்கிறானா..?” என்று கூறிக் கொண்டான்..

“அவர்தான் பிரகாஷா..?” என்றாள் வித்யா ஆவலாக..

“ஆமாம்.. வா போய் விசாரிக்கலாம்..”

காரை நிறுத்திவிட்டு இருவரும் தோட்டத்திற்குள் சென்றார்கள்.. பூர்ணிமா பிரகாஷிடம் தீவிரமாய்..

“அவள் முகத்தை ஓர் தரம் பார்த்தால் நீ இப்படிப் பேசமாட்டாய்..” என்று கூறிக் கொண்டிருந்தாள்..

பேசிக் கொண்டிருந்த பிரகாஷ் திரும்பி அவர்களைப் பார்த்து விட்டான்.. உடனே, “ஹலோ நரேன் மாமா.. என்ன அதிசயம் இது.. இன்றைக்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டட்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா..?” என்று சிரித்தான். சிரிக்கும்போது அவன் கண்களும் கூடச் சேர்ந்து சிரிப்பதைக் கண்டாள் வித்யா.. ‘பூர்ணிமாவிற்குப் பொருத்தமானவன் இவனே’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்..

“புதிர் போட்டுப் பேசுவதை வாடிக்கையாய் வைத்திருக்கிறாய்.. என்னவென்று நீயே சொல்லி விடு.. எதற்கு மழை பெய்யப் போகிறது..?”

“இந்த நேரத்தில் வீட்டில் உங்களை எதிர்பார்க்கவே யில்லை.. வீடு என்பது உங்கள் தம்பிகளுக்கும், தங்கை களுக்கும் தானே.. நீங்கள் பேக்டரியிலோ இல்லை மில்லிலோ தலையை உடைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கப் பிறந்தவர் ஆயிற்றே..”

“போதும்.. கேலி செய்தது.. பிரகாஷ்.. இது வித்யா.. பூர்ணிமா சொல்லியிருப்பாளே.. வித்யா இது பிரகாஷ்..”

இருவரும் கரம் குவித்துக் கொண்டனர்.. பிரகாஷின் சிரிக்கும் விழிகள் தன்னை ஆராய்ச்சியுடன் நோக்குவதை உணர்ந்தாள் வித்யா.. இருந்தும் புன்னகை மாறாமல்..

“வணக்கம் அண்ணா..” என்றாள்..

“அண்ணாவா..?” என்றான் பிரகாஷ் ஆச்சரியத்துடன்.

“ஆமாம்.. பூர்ணிமாவின் கணவர்தான் எனது அண்ணன்..”

“அது கணவரான பின்தான்..” என்றாள் பூர்ணிமா கோபத்துடன்.. அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை மற்ற இருவரும் யூகித்துக் கொண்டனர்..

“ஆகாமல் யார் விடப் போகிறார்கள்.. நீ குடுகுடு கிழவியான பின் தான் கல்யாணமென்றாலும் பொக்கை வாயுடன் வந்த தாலி கட்டுவேன்.. விட்டு விடுவேன் என்று நினைத்தாயா..?” என்றான் பிரகாஷ் இலகுவாக..

வித்யா சிரித்தாள்..

“அதுதானே.. நான் உங்கள் கட்சிதான் அண்ணா..” என்று அவள் கூற..

“ஆமாமாம்.. பிரித்திக்கு ஊரே கேரண்டி கொடுப்பது போல் இவருக்கு கேரண்டி கொடுக்கிறவள் இல்லையா நீ..?” என்றாள் பூர்ணிமா..

“அப்படியா.. வித்யா எனக்கு கேரண்டியா..? கவலையை விடு வித்யா.. உனக்கு அண்ணனாய் லட்சணமாய் நானும் உனக்கு துணை நிற்கிறேன்..” என்றான் பிரகாஷ் பூர்ணிமாவைப் பார்த்துக் கொண்டு, அவன் விழிகள் கூறிய செய்தியை அறிந்து கொண்டவளாய் நொடிப் பொழுதில் முகம் மலர்ந்து பூர்ணிமா சிரித்தாள்..

“தேங்க்யூ பிரகாஷ்.. தேங்க்யூ.. ஐ லவ் யூ ஸோ மச் மை டியர்..”

வித்யா நமுட்டுச் சிரிப்புடன் நரேந்திரனைப் பார்த்தாள்.. அவன் புரியாதவனாய் தங்கையைப் பார்த்தான். வரும்போது கோபமாய் இருந்தாள்.. இப்போது விழுந்து விழுந்து காதலனைக் கொஞ்சுகிறாள்.. புரியாமல் அவன் விழிக்க வித்யாவிற்கு சிரிப்பு வந்தது..

“இதுதான் காதல்.. கண்டு கொள்ளாமல் கழண்டு கொள்ளுங்கள்..” என்றாள் தாழ்ந்த குரலில்…

“இல்லை வித்யா.. நாம் வரும்போது பூர்ணி அவனை கடித்துக் குதறிக் கொண்டிருந்தாள்..”

“இப்போது பின்னிப் பிணைந்து கொள்கிறாள்.. அப்படித்தானே..? அது ஊடல்… இது கூடல்..”

அவர்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட பிரகாஷ் வியப்படைந்தான். பூர்ணிமாவிடம் கிசுகிசுத்தான்..

“நீ நினைப்பது போல் வேலை கடினமாயிருக்காது பூர்ணி.. எளிதாய் முடிந்து விடும் பாரேன்..”

“நிஜமாகவா பிரகாஷ்.. அப்படி மட்டும் நடந்து விட்டால்..”

“நடக்கும் பாரேன்.. வித்யா எங்கே ஓடப் பார்க்கிறாய்.. நரேன் மாமா நீங்களும் தான் இப்படி உட்காருங்கள்.. இன்றைக்கு பேக்டரியில் மகி மாமாவுக்கு மண்டகப் படியாமே..” என்றபடி அங்கு போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டு நரேனின் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தான்.. பூர்ணிமா கவலையுடன் வித்யாவின் அருகே வந்து..

“என்னடி, மகியண்ணன் நிறைய தொல்லை கொடுத்தாரா..?” என்று வினவினாள்..

“நல்லவேளையாய் சரியான நேரத்தில் நான் போய் விட்டேன் பூர்ணிமா.. நீயேன் கவலைப்படுகிறாய்.. வித்யாவின் மேல் தூசு கூடப் பட விடாமல் நான் பார்த்துக் கொள்வேன்..” என்றான் நரேந்திரன்..

பூர்ணிமாவின் விழிகளும் பிரகாஷின் விழிகளும் சங்கேதமாய் ஏதோ பேசிக் கொண்டன.. அதன் பின் நால் வரும் அங்கேயே அமர்ந்து வெகு நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.. காபி, சிற்றுண்டி தோட்டத்திற்கே வந்தது.. அரட்டை முடியும் தறுவாயில்,

“மணிமுத்தாறு அருவி பார்க்க ஆசைப்பட்டாயாமே வித்யா.. இந்த ஞாயிறன்று நாம் நால்வரும் போகலாம்..” என்றான் பிரகாஷ். வித்யா உற்சாகமாய் தலையாட்டினாள்.

அந்த ஞாயிறு அருவிக் கரையில் நீரோடு வழுக்கி விழுந்து நீரில் மூழ்கினாள் வித்யா..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link