Chapter 24
நதியோரம் நடந்தபோது
நான் கண்டவற்றை இங்கு சொன்னேன்
தோழமையாய் நதி ஓடும்
தொழிலைப் பார்க்க கால்கள் விலகும்
…நதியோரம் நான் நடந்த போது…
ஆயகுடியில் வித்யாவின் அப்பா வையாபுரி வேதனையில் இருந்தார்.. அவனது இரண்டாம் மனைவியின் பெண்ணான நீலா பதின்மூன்று வயதிலேயே பருவம் எய்தியிருந்தாள்.. கங்கா மகளைப் பேணிப் பாதுகாத்தாள்..
“நீலா காலாகாலத்தில் வீட்டுக்கு.. வா.. வயதுக்கு வந்த பெண் தனியாக வரக்கூடாது.. உன் தோழி எவளாவது இருந்தால் கூடவா.. இல்லைன்னா அப்பாவுக்கு போன் பண்ணு அவர் வந்து கூட்டி வருவார்.. டியூசனுக்கு வயதுக்கு வந்த பெண்ணை அனுப்பிட்டு நான் மடியில் நெருப்பைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது..”
கங்கா யதார்த்தமாய் புலம்ப வையாபுரிக்கு ‘சுள்’ளென்று அது உறைத்தது.. வித்யாவும் வயதுக்கு வந்த பெண் என்பது கங்காவின் மனதில் ஏன் உறைக்க வில்லை..? வீட்டு வாசல் படியை மிதிக்காதே என்று கூறிவிட்டாளே.. வித்யா தன் தாயின் தோழி மரகதத்திற்கு அடிக்கடி கடிதம் போட்டுக்கொண்டு இருந்தாள்.. அவள் மூலமாக மகளின் வாழ்க்கையை இதுவரை அறிந்து வந்தார்.. இரண்டாம் வருடமே மத்திய சர்க்கார் வேலையில் அவள் சேர்ந்து வேலை செய்து கொண்டே படிப்பதை அறிந்ததும் பூரித்துப் போனார்..
“கங்கா சேதியைக் கேட்டாயா..? நம்ம வித்யா கவர்ன்மெண்ட் வேலை பார்க்கிறாளாம்.. படித்துக்கிட்டே வேலையும் பார்க்கிறா பார்.. என் பொண்ணு மகா கெட்டிக்காரி..”
“என்னது உங்க பொண்ணா..? ஓகோ அது வேற நினைப்பிருக்கா..? உளவு பார்க்கறீங்களோ.. மகளைப் பத்தி யார்கிட்ட விசாரிச்சீங்க.. அந்த ரகசியம் காக்கிற நர்ஸ் மரகதத்துக்கிட்டயா.. பெருமை வேற பேசறீங்களா..? வயசானவரை ரெண்டாம் தாரமா கட்டிக்கிட்டு நான் லோல் படுவேன்.. நீங்கள் மூத்தாள் பெத்துப் போட்ட ஜென்மத்தைப் பத்தி பீத்திக்கறீங்களோ..”
கங்கா காளி அவதாரமெடுத்தாள்.. வையாபுரி மகளைப் பற்றி அதற்குப் பின்னால் அவளிடம் பேசுவதில்லை.. ஆனால் மகளின் உயர்வு குறித்து மனதில் பெருமை பொங்கும்.. சமீப காலமாக தன் மகளிடம் இருந்து கடிதம் ஏதும் மரகத்திற்கு வரவில்லை என்பதை அறிந்ததும் கவலை அவரைச் சூழ்ந்தது..
“என்ன சொல்றே மரகதம் வித்யா லெட்டரே போடற தில்லையா..?”
“ஆமாண்ணா.. வித்யா லெட்டர் போட்டு ஒரு வருசமாகுது..”
வையாபுரி சென்னை டெலிபோன் டிபார்ட் மெண்டிற்கு போன் பண்ணி விசாரித்தார்.. அவள் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டாள் என்று கூறினார்கள்.. அவளது பொறியியல் கல்லூரிக்குப் போன் பண்ணினார்.. வித்யா யுனிவர்ஸிட்டி ரேங்க் எடுத்துத் தேறியிருப்பதாகவும், அவள் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு போய் விட்டாளென்றும் கூறி விட்டார்கள்.. மகள் எங்கே போனாள்.. என்ன ஆனாள்.. என்று அவர் தவித்துக் கொண்டு இருந்தபோது வாசலில் பெரிய வெளிநாட்டுக் கார் ஒன்று வந்து நின்றது.. பக்கத்து வீட்டினர் வாசலுக்கு வந்து கூடி வேடிக்கைப் பார்க்கவும் கங்கா, ‘நம் வீட்டுக்கு யார் காரில் வரப் போகிறார்கள்..’ என்ற எண்ணத்துடன் அசட்டையாக வாசலுக்கு வந்து பார்த்தாள்.. வையாபுரி கண்ணாடியை மாட்டிக் கொண்டு படியில் நின்று பார்த்தார்..
காரின் கதவைத் திறந்து கொண்டு சௌதாமினி தேவியும், சுரேந்திரனும் இறங்கினார்கள்.. சௌதாமினியின் கழுத்து, காது. கைகளில் டாலடித்த வைரங்களைப் பார்த்து வாய் பிறந்த கங்கா..
“யாருங்க நீங்க.. யார் வீட்டு அட்ரஸாவது விசாரிக்க வந்திங்களா..?” என்று கேட்டாள்..
“இல்லைம்மா.. இது தாலுகா ஆபீஸில் வேலை பார்க்கும் வையாபுரி என்பவரின் வீடு தானே..” என்று சௌதாமினி வினவ..
“இதுதான்.. இந்த வீடுதான்.. தோ அங்கே படியில் நின்றுக்கிட்டு இருக்காரே அவர்தான் நீங்கள் தேடி வந்தவர்.. என் புருசன்.. ஹிஹி..” என்று கங்கா பரபரத்தாள். வையாபுரி அவர்கள் யாரென்று தெரியாதவராய்..
“வாங்கம்மா.. வாங்க சார் உட்காருங்க.. என்ன விசயமாய் என்னைத் தேடி வந்திருக்கீங்க..” என்று கேட்டார்..
சௌதாமினியின் கண்ணசைவில் கார் டிரைவர் ஒரு பெரிய வெள்ளித் தட்டை எடுத்து வந்து கூடத்திலிருந்த ஸ்டூலின் மேல் வைத்து விட்டுச் சென்றான்.. தட்டில் விலை உயர்ந்த பட்டுச் சேலையுடன் பழங்கள்.. பூ.. வெற்றிலைபாக்கு.. தேங்காய் இவை இருந்தன..
‘வெள்ளித் தட்டா..?’ என்று கங்காவிற்கு மூச்சை அடைத்தது..
“இதெல்லாம் என்னங்கம்மா..” புரியாதவராய் வையாபுரி வினவினார்..
“ஐயா.. நாங்கள் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு என்கிற ஊரிலிருந்து வருகிறோம்.. உங்கள் பெண் வித்யா எங்கள் பேக்டரியில் பெர்ஸனல் மேனேஜர் ஆக வேலை பார்க்கிறாள்.. அவளை என் மூத்த மகன் நரேந்திரனுக்கு பெண் கேட்டு உங்கள் பெண் வித்யாவின் சம்மதத்தோடு இங்கே வந்திருக்கிறோம்.. இது என் கடைசி மகன் சுரேந்திரன்..”
கங்காவிற்கு நெஞ்சைப் பிளந்தே விட்டது பொறாமைத் தீ.. அந்த ஓடுகாலிக்கு.. மூத்தாள் மகளுக்கு இப்படியொரு ராஜவாழ்வா..? கூடாது.. அவள் தாய், தகப்பனில்லாத அநாதை மாதிரி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.. கணவனை போகவிடக்கூடாது என்று நினைத்தவள் ஆங்காரமாய் கூச்சலிட்டாள்..
“யாருக்குக் கல்யாணம் பேச யார் வீட்டுக்கு வந்தீங்க..?”
பேசிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் ‘பளாரென்ற’ அறை விழுந்தது.. வையாபுரி அவளை கன்னம் கன்னமாய் அறைந்து தீர்த்து விட்டார்..
“என் பெண்ணுக்குக் கல்யாணம் பேச என் வீட்டிற்கு வராமல் யார் வீட்டிற்குப் போவார்கள்..? நானே என் பொண்ணைப் பத்தி ஒரு தகவலும் இல்லைன்னு கவலைப் பட்டுக்கிட்டு கிடந்தேன்.. தெய்வம் போல் இவங்க நல்ல தகவலைக் கொண்டு வந்திருக்காங்க.. பெரிய மனுசங்க கிட்ட பேசத் தெரிஞ்சாப் பேசு.. இல்லைன்னா வாயை மூடிக்கிட்டு உள்ளே போ..”
வையாபுரி அவர்கள் நீட்டிய தட்டைப் பெற்றுக் கொண்டு மகளின் திருமணத்திற்கு சம்மதம் தந்து திருமணத்தை உறுதி செய்தார்..
மீனலோசனியும், பிரபாவதியும் மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப் போனார்கள்.. அவர்கள் ஒன்றை நினைக்க தெய்வம் ஒன்றை நினைத்து விட்டது.. வித்யா அந்த வீட்டு மூத்த மருமகளாக வரப் போவதை அவர்களால் தடுக்க முடியாமல் போய் விட்டது.. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர்கள் இருவரும் தவித்துக் கொண்டு இருந்தனர்..
மகேந்திரனும், யுகேந்திரனும் வருங்காலத்தைப் பற்றிய கவலையில் இருந்தார்கள்.. ஏற்கனவே வேலையாளாக இருக்கும்போதே கண்ணில் விரலை விட்டு ஆட்டினவள் அந்த வித்யா..? இப்போது வீட்டு ஆளாக அதுவும் நரேந்திரனின் மனைவியாக ஆகி விட்டால்.. நினைக்கும்போதே அவர்கள் நெஞ்சம் பதற மணிமுத்தாறு வீட்டில் கலவரம் வெடித்தது.. மாலினிதேவியையும் அவர்கள் தூண்டிவிட அவள் தன் கணவனோடும் புகுந்த வீட்டினருடன் பிறந்த வீட்டில் முற்றுகையிட்டாள்.. மீனலோசனியின் பெற்றோரும், பிரபாவதியின் பெற்றோரும் வந்து விட்டார்கள்.. சௌதாமினியிடம் பஞ்சாயத்து வந்தது..
“அம்மா.. பாகப்பிரிவினை நடந்தாகனும்.. நாளைக்கு யார், யாரோ கிட்டயெல்லாம் கைகட்டி கணக்குச் சொல்ல என்னால் முடியாது..”
மகேந்திரன் தீர்மானமாய் கூறி விட்டான்.. அனைவரும் கூடி நிற்க குடும்ப சபை கூடியது.. நரேந்திரன் பேசினான்..
“அம்மா.. அப்பா போகும்போது எல்லாவற்றையும் சட்டப்படி என் பெயருக்கு மாற்றி விட்டுப் போனார்.. நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.. என்று நம்புகிறேன்.. அவர் என்னிடம் விட்டு விட்டுப் போனது கடன்களையும் பிரச்சனைகளையும்..”
“அதற்காக எங்களையெல்லாம் கை காலோடு வெளியேறச் சொல்கிறீங்களா..?” மகேந்திரன் ஆவேசமாய் பேசினான்..
“இல்லை.. நான் செய்ய வேண்டியதை அம்மாவிடம் கலந்து பேசி விட்டுச் செய்து விட்டேன்.. சொத்தைப் பிரித்து ரெஜிஸ்டர் பண்ணி விட்டேன்.. எப்போது வித்யாவைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு செய்தேனோ.. அப்போதே சொத்துக்களை சரிவர வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் நாளைக்கு என் மனைவியைப் பார்த்து எவனும் விரல் நீட்டிப் பேசக் கூடாது..” நரேந்திரன் தம்பிகளை முறைத்துக் கொண்டே பதில் கூறினான்..
நரேந்திரன் பத்திரங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கூறினான்..
“மில்லை மகேந்திரனும், யுகேந்திரனும் சமமாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.. அவர்கள் இருவர் பெயருக்கும் ரிஜிஸ்டர் பண்ணி விட்டேன்.. பேக்டரி எனக்கும், சுரேந்திரனுக்கும்.. அம்பாசமுத்திரத்தில் இருக்கும் மூன்று வீடுகளும் மூன்று தம்பிகளுக்கும்.. மணிமுத்தாறு வீடு என் பெயரில் இருக்கிறது.. அப்புறம் மாலினிக்கு தேவையான வைர நகைகள், புதியது குடும்பப் பரம்பரை நகைன்னு.. கோடிக் கணக்கில் பெறும்.. கொடுத்து இருக்கிறோம்.. அதுபோக திருநெல்வேலியில் பங்களா ஒன்றும் வாங்கிக் கொடுத்தாகி விட்டது.. அவள் கணவரின் தொழிலுக்கு பணம் வேண்டும் என்று ஆறுகோடி கொடுத்திருக்கிறோம்.. இதை மொத்தம் கூட்டிப் பார்த்தால் எங்களுடைய பங்குகளை விட அதிகம் இருக்கும்.. என்ன மாலினி மீதத்தை கொடுத்து விடுகிறாயா..?”
அந்த மாலினிதேவி அசடு வழிந்தாள்.. அவள் கணவன் வேலையிருப்பது போல் அவர்களது அறைக்கு நகர அவளது மாமனாரும் மாமியாரும் மகனின் பின்னேயே மாயமானார்கள்..
பிரபாவதியின் பெற்றோர் பண்போடு அமைதி காக்க மீனலோசனியின் தந்தை துள்ளினார்..
“சென்னையில் இருக்கும் நாலு பங்களாக்கள் யார் யாருக்கு..?”
“மாமா.. அது என் உழைப்பில் வாங்கியது.. ஒன்று சுரேந்திரன் பெயரில் இருக்கிறது.. இன்னொன்று பூர்ணிமாவின் பெயரில் இருக்கிறது.. மற்ற இரண்டும் என்னுடையவை..”
“நீங்கள் சம்பாதித்தால் உங்களுக்கு மட்டும் சொந்தமா..?”
“நிச்சயமாய்.. உங்கள் மருமகன் அடிக்கடி குத்திக் காட்டிப் பேசியது போல் பெண்டாட்டி, பிள்ளை குட்டின்னு இருக்கிறவன் தன்னைப் பற்றியும் நினைச்சுப் பார்க்கணும். உங்கள் மருமகன் கோடிக் கணக்கில் அடித்து வைத்திருக்கும் அனாமத்துப் பணத்தில் பெசண்ட் நகரில் இரண்டு பங்களாக்களை வாங்கிப் போட்டிருக்கானே.. அவற்றையும் நான் பாகப்பிரிவினையில் சேர்த்திருக்கணும்.. போகட்டும்ன்னு விட்டு விட்டேன்..”
யுகேந்திரன், மகேந்திரன் முறைத்தான்.. ‘இவனால் யுகேந்திரன் வாங்கிப் போட்டிருக்கும் நீலாங்கரை பங்களாக்கள் கணக்குக்கு வந்து விடும் போலிருக்கிறதே’ என்ற கவலை அவனுக்கு.. ஆனால் அவன் அறியவில்லை.. பிரகாஷின் தங்கையை மண முடித்திருப்பதால் நரேந்திரன் அதை அம்பலப்படுத்தாமல் விட்டு விட்டான் என்பதை..
திருமண நாள் வந்தது.. முதல் நாளே ஆயகுடியி லிருந்து வையாபுரி குடும்பம் வந்து விட்டது.. மரகதம் திருமணத்தன்று வந்தாள்.. சுபநேரத்தில் வையாபுரியும் கங்காவும் தாரை வார்த்துக் கொடுக்க நரேந்திரனின் பெற்றவர்கள் ஸ்தானத்தில் நரேந்திரனின் ஒன்று விட்ட பெரியப்பாவும் பெரியம்மாவும் வாங்கிக் கொள்ள நரேந்திரன் வித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான்.. மரகதம் வந்து வாழ்த்த அவள் தாள் பணிந்து எழுந்த வித்யா,
“அத்தை.. நீங்கள் மட்டும் சரியான நேரத்தில் உதவா விட்டால் நான் சிரமப்பட்டிருப்பேன்.. என் அம்மாவின் ஆசைப்படி அவர்களுடைய நகைகளை மட்டும் போட்டுக் கொண்டுதான் நான் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்…” என்றாள்..
அப்போதுதான் மரகதம் வித்யாவின் உடலில் அவள் தாய் கமலம் தந்த நகைகள் மட்டும் அலங்கரிப்பதைக் கவனித்தாள்..
சௌதாமினியும், பூர்ணிமாவும் எவ்வளவோ கெஞ்சியும் வைர நகைகளை அணிந்து கொள்ள மறுத்து விட்டாள்..
“வித்யா.. இது உன்னுடைய நகைகள்ம்மா.. பரம்பரையாய் இந்த வீட்டு மூத்த மருமகள்கள் போட்டுக் கொள்வது..”
“அத்தை நான் இவற்றை அணிந்து கொள்கிறேன்.. ஆனால் என் கல்யாணம் முடிந்த பின்னால் அணிந்து கொள்கிறேன்.. அத்தை.. என் அம்மா இறக்கும்போது என் கல்யாணத்திற்காக என்று கொடுத்த நகைகளில் மீதமிருக்கும் நகைகள் இவை.. வைர நகைகளை விட இதன் மதிப்பு மிகமிக அதிகம் அத்தை.. அவர்கள் ஆத்மா என்னைக் காற்றோடு கலந்து வாழ்த்த வேண்டுமானால் நான் இவற்றை மட்டுமே அணிய வேண்டும்…”
மறுநாள் வையாபுரி ஆயகுடிக்கு கிளம்பும்போது வித்யாவை மறுவீட்டுக்கு வரும்படி அழைத்தார்.. வித்யா நரேந்திரனின் முகம் பார்த்தாள்.. முதல் நாளிரவு அவள் கேட்டுக் கொண்டது அவன் நினைவில் வந்தது..
முதலிரவு.. வித்யாவும் நரேந்திரனும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்தான்.. ஆனால் கணவன், மனைவியாக அவர்கள் உரிமையுடன் சந்திக்கும் இரவு அது..
இதுநாள் வரை கால் வைத்திராத நரேந்திரனின் மிகப் பெரிய பிரம்மாண்டமான அறைக்குள் நுழைந்தாள் வித்யா.. சௌதாமினியின் அறை போலவே முன்னால் வரவேற்பு அறையும் அடுத்து படுக்கையறையும் அமைந்திருந்தன.. நரேந்திரன் அறைக்கதவைத் தாழிட்டு விட்டு அவளை நெருங்க அவள் பின்னடைந்தாள்… வெட்கத்துடன் ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து வீட்டின் பின்னே ஓடிய நதியைப் பார்த்தாள்.. அது மானசீகமாய் அவர்கள் வாழ்த்தியது போலிருந்தது.. நரேந்திரன் அவள் பின்னால் வந்து முதுகோடு அணைத்து அவளது தலையில் சூடியிருந்த பூவை முகர்ந்தான்..
“வித்யா.. நாம் சென்னை வீட்டில் மொட்டை மாடியில் சந்தித்த இரவு நினைவிருக்கிறதா..” கிறக்கத்துடன் கேட்டான்..
மறக்க முடியுமா அந்த இரவை..? வித்யா “நினைவிருக்கிறது” என்றாள்..
“அன்று உன் பின்னலில் மல்லிகைப் பூவை சூடியிருந்தாய்.. அந்த மலர் வாசம் என்னை மயக்கியது.. உன்னை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று என் உடலும், உள்ளமும் தவித்த தவிப்பு இருக்கிறதே..”
ஏக்கத்துடன் கூறியவன் அவளை இழுத்து அந்த இரவின் நினைவில் இறுக்கி அணைத்து முத்தங்களைப் பதித்தான்.. வித்யா அவன் மார்போடு ஒன்றிப் போனாள்..
“அதற்கப்புறம் அருவியில் விழுந்து விட்டாயே.. அப்போது உன்னை என் கைகளில் தூக்கி வந்தபோது இப்படியே எங்காவது இவளைத் தூக்கிக் கொண்டு ஓடி விடலாமா என்று என் மனம் எப்படித் துடித்தது தெரியுமா..?”
அன்று போலவே இன்றும் அவளைப் பூமாலையாய் கைகளில் ஏந்தியவன் அப்படியே படுக்கையில் கிடத்தினான்.. வித்யாவின் கரங்கள் அவன் கழுத்தில் மாலையாகி இருக்க அப்படியே அவள் மேல் சரிந்து படர்ந்தான்..
தூங்காத கண்கள் நான்கும் விடியலின் அருகாமை நெருங்கி விட்ட போதும் ஒருவர் முகத்தை மற்றொருவர் ஆசையாகப் பார்க்க என்று விழித்திருந்தன.. அப்போது வித்யா கூறினாள்..
“நரேன் என் வீட்டிலிருந்து வெளியேறும்போது ஜெயிக்காமல் அந்த வீட்டுப் படியை மிதிக்கமாட்டேன்னு சபதம் போட்டு விட்டு வந்தேன்..”
“இப்போதுதான் படிப்பை முடித்து விட்டாய்.. வாழ்வில் ஜெயித்து விட்டாய்.. என் உயிராகி விட்டாய்.. இனி உன் அப்பாவின் வீட்டை வெறுக்க வேண்டுமா வித்யா..”
“இக்கட்டான நிலையில் சித்தி என்னை கைவிட்டதை மறக்க முடியவில்லை..”
“அவர்களை ஏன் நினைக்கிறாய்..? உன் அப்பாவை நினைத்துப் பார்.. உன் அம்மாவின் தோழி மரகதம்ங் கிறவங்க சொன்னதாகக் கூறினாயே.. உன் அப்பா உன்னைப்பற்றி அக்கறையாய் விசாரித்ததை.. உன்னைத் தேடிக் கொண்டிருந்ததை.. அவருக்காகப் பொறுத்துப்போ..”
“அப்படியானால் நாம் ஆயகுடி போகலாமா..?”
“நிச்சயம் போவோம்.. பழனி முருகனை தரிசனம் பண்ணி விட்டு வரலாம்..” என்று அவள் தலைகோதி ஆதரவாய் கூறினான் அவன்..
நரேந்திரனும் வித்யாவும் ஆயகுடிக்கு புதுப்பெண், மாப்பிள்ளையாக மறுவீடு போனார்கள்.. பழனி முருகனின் ராஜ அலங்காரத்தை தரிசனம் செய்தார்கள்.. கிளம்பும் போது வித்யா நீலாவையும், ராமுவையும் அழைத்தாள்.. ஒரு பையைக் கொடுத்தாள்..
“நீலா, ராமு இதில் எட்டு லட்ச ரூபாய் இருக்கிறது.. என் வேலைக்கான சம்பளத்தை நான் சேர்த்தது.. வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் படிப்பு, கல்யாணம் எல்லாவற்றிற்கும் இந்த அக்காவின் உதவி இருக்கும்..” தன் பெயரிலிருந்த சேமிப்புப் பத்தரங்களை முடித்து எஸ்.பி.யில் பேங்கில் இருந்த பணத்தையும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள் அவள்.. கங்கா ஆடிப் போனாள்.. அவள் கண்களில் குற்ற உணர்வு வந்தது..
“அம்மாடி வித்யா.. உன்னைப் படிக்க விடக்கூடாதுன்னு கெடுதல் பண்ணினேன்.. இப்ப நீ படிச்சு சம்பாதித்த பணத்தை வாங்கிக்க எனக்கு என்னம்மா உரிமையிருக்கு..” கண்ணீர் விட்டாள் கங்கா…
“பழசை மறந்திடுங்க சித்தி..”
எல்லோரிடமும் விடைபெற்று மணிமுத்தாறு வந்தனர்.. வரும் வழியில் காரில் கணவனைக் கேட்டாள் வித்யா..
“ஆமாம்.. ஏன் மில்லை அவர்கள் இரண்டு பேருக்கும் கொடுத்தீர்கள்..?”
“காரணமாகத்தான் மகி, யு.கே. இருவரும் கள்ளக் கணக்கு எழுதுவதில் கை தேர்ந்தவர்கள்.. தான் திருடி பிறரை நம்புவானா..? இருவரையும் பங்குதாரர்களாக்கி விட்டால் தான் மில் உருப்படும்.. ஒருவரை ஒருவர் சந்தேகப்பட்டுக் கொண்டு ஒழுங்காய் சொத்தை காப்பாற்றுவார்கள்..”
தென்காசியில் மிகப் பெரிய திருமண மண்டபம் அது.. நாதஸ்வரம் முழங்க கெட்டி மேளம் ஒலிக்க சுபயோக சுப தினத்தில் பூர்ணிமாவின் ஆசைப்படி தன் மனைவி வித்யாவோடு அவளது பெரிய அண்ணன் நரேந்திரன் பெற்றவர்கள் ஸ்தானத்தில் நின்று தங்கையை தன் மகளாக ஏற்று தாரை வார்த்துக் கொடுக்க பிரகாஷின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள ஆனந்தக் கண்ணீர் வடிய பிரகாஷின் தாலியை ஏற்றுக் கொண்டு அவன் மனைவியானாள் பூர்ணிமா..
தங்கள் கால்களில் விழுந்த பூர்ணிமாவை அள்ளி அணைத்துக் கொண்ட வித்யா அவள் கன்னத்தில் தாய்மைப் பெருக்கோடு முத்தமிட்டாள்..
சுரேந்திரன் பூர்ணிமாவைப் பார்த்து,
“அப்படியே அண்ணி போல வேறு ஒரு தோழியைப் பார்த்து எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க சபதம் செய் பூர்ணி.. அண்ணி தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.. நீங்கள் என் அம்மா போல்.. விநாயகர் அவர் அம்மா பார்வதி போல பெண் வேணும்னு குளத்தங்கரையில் தவம் இருக்கிறாராம்.. அது போல் தான் கேட்டேன்..”
“அப்போ நீயும் அவர் போலவே பிரம்மச்சாரியாய் இருக்க வேண்டியதுதான்.. ஏன்னா.. என் வித்யா போல் வேறொரு பெண் உலகில் கிடையாது..”
அன்போடு தோழியை அணைத்துக் கொண்டாள் பூர்ணிமா..
நரேந்திரனும் வித்யாவும் கடமைகளை முடித்தவர்களாய் பெருமாளைச் சேவிக்க நதியோரமிருந்த பெருமாள் கோவிலுக்குச் சென்று விட்டு அவர்களது வழக்கமான படித்துறைக்கு வந்தார்கள்..
நதி அமைதியாய் ஓடிக் கொண்டிருந்தது.. மேடுகள்.. பள்ளங்கள் அனைத்தையும் கடந்து கடலில் சென்று கலந்து விடும்.. வாழ்க்கையும் நதி போல் தான்.. அந்த நதி நீரைத் தொட்டு நன்றி சொல்லிக் கொண்ட வித்யா நதியோரம் தன் கணவனுடன் வீடு நோக்கி நடந்தாள்..
– முற்றும் –
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.