Chapter 01
நதியோரம் நடந்தபோது
கண்டதென்ன.. ஒன்றா…? இரண்டா…?
நெஞ்சினிலே உள்ளதையே
தொடர்ந்து சொல்ல வேண்டாமா…?
-நதியோரம்… நான் நடந்தபோது-
‘டிங் டாங்..’
சுவர் கடிகாரத்தில் ஆறுமணியைக் குறிக்கும் மணியோசை ஒலித்தது… வித்யா கைக்கடிகாரத்தை ஒருதரம் பார்த்துக் கொண்டாள்.. என்னதான் சுவர் கடிகாரம் ஆறுமணியாகி விட்டதைச் சொன்னாலும் கைக்கடி காரத்திற்கு கண்கள் போகும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லையே என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வந்தது…
அவளைச் சுற்றி ஆயிரம் மாற்றங்கள் வந்திருக்கின்றன.. வந்து கொண்டிருக்கின்றன.. இன்னமும் ஆயகுடியில் அவளுக்குள் இருந்த சில பழக்கங்கள் மாறாமல் அப்படியேதான் இருந்தன.. கம்யூட்டர் காலத்தில்.. பெருமாள் கோவிலின் மணியோசையைக் காதில் கேட்கும் போது ‘பெருமாளே..!’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதை அவள் மாற்றிக் கொள்ளவில்லை… அது அவளின் ரத்தத்தில் ஊறியிருந்தது..
அலுப்பான சில கணங்களில்.. அயர்வான சில பொழுதுகளில்… உடலும்.. மனமும் சோர்ந்து போகும் போது… அவளையறியாமல் அவளின் வாய் ‘பெருமாளே..’ என்று அரற்றும்.. அந்தப் பழக்கமும் மாறவில்லை..
அவ்வளவு பெரிய பேக்டரியின் பெர்ஸனல் மேனேஜராக அவள் இருந்த போதும்… மாலையில் நரேந்திரனின் கையில் மல்லிகைப் பூவின் வாழையிலைப் பொட்டலம் இருக்கிறதா என்று அவளின் விழிகள் தேடும்.. அந்தப் பழக்கமும் மாறவில்லை…
அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலி இருந்தது… அவன் மனதில் அவள் மீதான வற்றாத காதல் இருந்தது… இருந்த போதும்.. ஏதேனும் ஒரு வேலையின் நினைவில் அவளைக் கவனிக்காமல் அவன் பதில் சொல்லி விட்டால்… அவள் முகம் பார்க்காமல் அவன் நடந்து விட்டால்… கைப்பொருள் நழுவிப் போவதைப் போல அவள் மனம் துடித்துப் போகிறதே.. அந்தப் பழக்கத்தையும் அவளால் மாற்றிக் கொள்ள முடியவில்லை…
பொன் அந்தி மாலைப் பொழுதில்.. நதியோரம் அவனுடன் நடக்கும் போது… அவன் முடி காற்றில் கலைந்து பறக்குமே.. அப்போது அவள் மனதில் கிறக்கம் ஏற்படும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை…
தோழியாக இருந்தவள் நாத்தனாராகி விட்டபோதும்.. தென்காசியிலிருந்து பூர்ணிமா வந்து இறங்கும் ஒவ்வொரு முறையும்.. “வித்யா…” என்ற அவளின் அழைப்பிற்கு இரு கரத்தையும் நீட்டி.. பார்வையால் அவளை அழைத்து அணைத்துக் கொள்வாளே… அந்த வழக்கமும் இன்னும் மாறவில்லை..
“ஹாய்… டியர்..” அறைக்குள் நரேந்திரன் நுழைந்தான்.
என்னவோ… அன்றுதான் அவனை முதன்முதலாகப் பார்ப்பதைப் போல அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த வித்யாவின் விழிகளில் தெரிந்த காதலில் அவன் மயங்கிப் போனான்…
“ஏய்ய்… நான் உன் புருசன்டி..” என்று கண் சிமிட்டினான்..
“வேற யாருக்கும் புருசன்னு சொல்லிப் பாருங்க… தெரியும்..” அவனை விழுங்கி விடுவதைப் போலப் பார்த்தபடி வித்யா கூறினாள்…
“அட..! நீ மிரட்டக் கூடச் செய்வியா…?”
“பின்னே… மிரட்ட மாட்டாங்களா…?”
“ஏண்டி…? நான் உன்னோட அப்பாவி புருசன்டி…”
“அப்பாவியா…? நீங்களா…? குட் ஜோக்…”
வித்யா எழுந்து கொண்டாள்… மேஜையைச் சுற்றி அவனருகில் வந்தாள்… அவன் தோளில் மாலையாக கைகளைப் போட்டு வளைத்து… அவன் முகத்தை இழுத்தாள்…
“வித்யா…” கிறங்கிப் போனவனாக நரேந்திரன் ஆவலுடன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்..
“மே ஜ கமின் சார்….” கேபின் கதவு ஒற்றை விரலால் தட்டப் பட்டது..
ஏமாற்றத்துடன் விலகிக் கொண்ட நரேந்திரன்..
“வந்து தொலை…” என்றான்…
அவனின் கோபத்தைக் கண்ட வித்யா வாய் மூடிக் களுக்கென்று சிரித்தாள்..
“உனக்குச் சிரிப்பு வருது…? ஊம்…?” அவளை முறைத்தான் நரேந்திரன்..
உள்ளே வந்த குகனுக்கு நரேந்திரனின் ஏமாற்றத்தையும்… கோபத்தையும் பற்றி என்ன தெரியும்…? அதனால் உற்சாக முகத்துடன்…
“ஒரு குட் நியுஸ் சார்…” என்றான்..
“குட் நியுஸ்…? சொல்லு… சொல்லு..” கடுப்புடன் சொன்னான் நரேந்திரன்..
“நம்ம பேக்டரியோட புது டீலிங் ஆர்டர் அசெப்ட் ஆகிருச்சு சார்…” குகனின் முகத்தில் பல்ப் எரிந்தது…
நரேந்திரனுக்கு அந்த விவரம் தெரியும்… முதலில் அவளிடம்தான் சம்பந்தப் பட்டவர்கள் அந்த விவரத்தைத் தெரியப்படுத்தியிருந்தார்கள்… அவனும் அப்போதே வித்யாவிடம் அதைச் சொல்லி விட்டிருந்தான்…
‘இதற்காகத்தான் இவன் பூஜை வேளைக் கரடியைப் போல உள்ளே நுழைஞ்சானா…’ நரேந்திரனுக்கு எரிச்சலான எரிச்சல்… குகனுக்கோ சந்தோசமான சந்தோசம்…
“இப்பத்தான் போன் வந்தது சார்…”
“ஓஹோ…”
“எனக்குத் தரையில கால் படவே இல்லை..”
“அப்படியா…?”
“வானத்தில பறக்கறதைப் போல இருந்தது…”
“தண்ணி… கிண்ணி… அடிச்சிருந்தியா…?”
“சார்…?”
“அப்பத்தானே வானத்தில் ரெக்கையில்லாமலே பறக்கலாம்…?”
நரேந்திரனின் குரலில் தெரிந்த கடுப்பை உணர்ந்தவன்… அது எதற்காக என்று புரியாத குழப்பத்துடன் வித்யாவின் முகம் பார்த்தான்… அதில் சிரிப்பிருந்தது…
“மேடம்…?”
“எங்களுக்கு மதியமே விசயம் தெரியும் குகன்…”
வித்யா சிரிக்க… குகனின் முகத்தில் குடம்.. குடமாய் அசடு வழிந்தது…
“நான் உங்களுக்கு விசயம் தெரியாதுன்னு சொல்ல வந்தேன்..” அவன் முகம் விழுந்து விட்டது..
“அதுக்கு எதுக்காக மூட்-அவுட் ஆகறிங்க…? சப்போஸ் எங்களுக்கு அது தெரியாம இருந்திருந்தா இது ஸ்வீட் நியுஸ்தானே..? தேங்க் யு குகன்..”
“எதுக்காக மேடம்…?”
“இந்த பேக்டரியின் வளர்ச்சியிலே நீங்க காட்டற உண்மையான ஈடுபாட்டுக்கு.. இதன் வெற்றியிலே நீங்க காட்ற உண்மையான சந்தோசத்துக்கு…”
மனதிலிருந்து சொன்னாள் வித்யா… அந்த வார்த்தைகளில் கூம்பில் போன குகனின் முகம் பூவாக மலர்ந்தது…
“தேங்க் யு மேடம்…” அவன் நன்றிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்…
மூடிய கேபின் கதவைப் பார்த்த நரேந்திரனின் முகத்தில் பாதியில் விட்டதைப் பிடிக்கும் எண்ணம் பிரதிபலித்தது… அவன் போதையுடன் வித்யாவைப் பார்த்தபடி அவளைத் தன் கை வளைவிற்குள் இழுத்தான்.. அவளும் மறுக்காமல் அவன் கைகளுக்குள் வந்தாள்.. அவனின் இடுப்பைச் சுற்றி அவள் கரங்கள் வளைத்ததில் நரேந்திரனின் போதை அதிகமானது.. அவளது தோள் தடவிய அவன் கைகள் உயர்ந்து அவள் முகம் தடவி.. அவள் முகத்தில் அழுந்தப் பதிந்தன… அவள் இதழ் நோக்கி ஆவலுடன் அவன் குனிந்தான்…
“மேடம்…” கேபினின் கதவ படபடவென்று தட்டப்பட்டது.
இருவரும் அவசரமாகப் பிரிந்து நின்றார்கள்…
“உள்ளே வாங்க…” வித்யா அழைத்தாள்.
கோபமான முகத்துடன் யூனியன் லீடர் ரங்கதுறை உள்ளே வந்தான்… அவனின் சிவந்த விழிகளும்… முறுக்கிய மீசையும்.. துடித்துக் கொண்டிருந்தன…
“போச்சுடா… கிளம்பற நேரத்தில இவன் என்ன வழக்கைக் கொண்டு வந்திருக்கானோ தெரியலையே…” நரேந்திரன் வித்யாவின் காதுகளில் முணுமுணுத்தான்…
வித்யாவிற்குத் தெரியும்… யூனியன் லீடர் கோபமாக வந்திருக்கும்போது… அவனை எதிரில் வைத்துக் கொண்டு.. பேக்டரியின் எம்.டியும்.. பெர்சனல் மேனேஜரும் ரகசியம் பேசினால் அவன் அதை ரசிக்க மாட்டான் என்பது…
அவனே எரிகிற நெருப்பாக வந்திருக்கிறான்.. அதில் எண்ணையை ஊற்றி விடும் செயலைச் செய்ய வேண்டுமா என்ற நினைவோடு… நரேந்திரனின் முகம் பார்க்காமல்… யூனியன் லீடரின் முகம் பார்த்தாள் அவள்…
“சொல்லுங்க சார்… என்ன பிரச்சனை…?”
“நாங்க மனுசங்களா… இல்ல.. மாடா மேடம்…?”
“வாட் இஸ் திஸ் சார்… பிரச்னை என்னன்னு கேட்டா.. நீங்க பிரச்னையைச் சொல்லாம அதைப் பெரிதாக்கறிங்க.. வாட் இஸ் யுவர் பிராப்ளம்…?”
“பேக்டரிக்கு புது ஆர்டர் வந்திருக்கா…?”
“ஆமாம்…”
“யாரைக் கேட்டு அதை ஒப்புக்கிட்டிங்க…?”
யாரைக் கேட்கனும் என்ற கேள்வி நரேந்திரனின் தொண்டை வரைக்கும் வந்து விட்டது.. அதே கேள்வி வித்யாவின் மனதில் எழுந்தது.. இருந்தும் இருவரும் அதை முகங்களில் பிரதிபலிக்கவில்லை.. அவர்களுக்குத் தெரியும்.. முதலாளிகள் சில நேரங்களில் வாயிருந்தும் ஊமைகளாக இருக்க வேண்டி வரும் என்பது…
நரேந்திரன் வித்யாவைப் பேச விட்டு அமைதி காத்தான்… இந்த இடத்தில் அவன் பேசக்கூடாது… வந்திருக்கும் கேள்வி அவனுடைய சுய மரியாதையை ஆட்டிப் பார்ப்பது… அதற்கு கோபப்பட்டால் அது தொழிலாளரின் பிரச்னையாக உருவெடுத்துவிடும்… அதே சமயம் அதைக் கண்டு கொள்ளாமல் அவன் தன்மையாகப் பேசினால்.. அந்தக் கம்பெனிக்கு அவன்தான் முதலாளி என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்…
வித்யா அமைதியாகவே பேசினாள்… புயலை எதிர்நோக்கும் பூவாக அவள் நிலைமையை முகம் மாறாமல் எதிர் கொண்டாள்…
“நீங்க யூனியன் லீடர்… நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தையும் தொழிலாளர்களைத் தான் பாதிக்கும்… அதைப் புரிஞ்சுதான் பேசறிங்களா…?”
“நான் பேசறதே அவங்களுக்காகத்தானே மேடம்.. நீங்க பாட்டுக்கு புது ஆர்டரை ஒப்புக்கிட்டா வேலையை யாரு செய்கிறது…?”
“பொறுப்பான தொழிலாளிகளின் பிரதிநிதி நீங்க.. உங்க வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வரலாமா…? நம்ம வேலையை நாமதான் செய்யனும்… இதுக்குன்னு வெளியே இருந்தா ஆள் வருவாங்க…?”
“போட்டுருவீங்களா…? வெளி ஆளை வேலைக்குப் போட்டிருவீங்களா…? நாங்க விட்டிருவமா…? இதுதான் உங்க திட்டமா…? இப்பத்தானே புரியுது… நீங்க முதலாளியோட பெண்டாட்டிங்கிறதை காண்பிச்சுட்டிங்-களேம்மா… கல்யாணத்துக்கு முந்தியிருந்த பெர்சனல் மேனேஜரம்மா வேற… இப்ப இருக்கிற மேனேஜரம்மா வேற… நீங்க எங்களுக்குச் சாதகமா பேசி ரொம்ப நாளாச்சும்மா..”
வித்யாவுக்கு ஆயாசமாக இருந்தது.. இந்த ரீதியான குற்றச்சாட்டுக்களை அவள் அடிக்கடி எதிர் நோக்க வேண்டியிருக்கிறது.. தொழிலாளர்கள் அவள் மேல் வைத்திருந்த நம்பிக்கை… எப்போது… எப்படி… அசைய ஆரம்பித்தது என்று அவளுக்கே புரியவில்லை…
அவள் எப்போதும் போல்தான் இருந்தாள்.. திருமணத்துக்கு முன்னால் மட்டும்… அவள் வேறு… நரேந்திரன் வேறு என்றா அவள் நினைத்தாள்…? அப்போதும் மனதளவில் அவன் மனiவியாகத்தானே அந்த பேக்டரியில் காலடி வைத்தாள்…?
இதை அவர்களுக்கு யார் சொல்வது…?
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.