Chapter 02
நதியோரம் நடந்த போது..
தொலைவினிலே ஒரு பாட்டு..
பாட்டுச் சத்தம் நீ கேட்டு.
பாடுவாயோ எதிர் பாட்டு..?
-நதியோரம் நான் நடந்த போது-
இப்போதெல்லாம் இது போன்ற வார்த்தைகளை அடிக்கடி வித்யா கேட்க நேரிடுகிறது.. எங்கே.. எப்போது.. எந்த வகையில் தொழிலாளர்களின் மனதில் இந்த விஷ விதை விழுந்தது என்று அவளால் அனுமானிக்க முடியவில்லை.. யாருக்காக அவள் மகேந்திரனை எதிர்த்துப் போராடினாளோ.. அந்தத் தொழிலாளர்களே அவளுக்கு எதிராக அணி திரண்டு நின்றார்கள்…
நரேந்திரன் பேச வாய் திறந்தான்.. வித்யா கண் சமிஞ்கையில் அவனை அமர்த்தினாள்.. அங்கே
அந்த இடத்தில்.. அது போன்றதொரு சூழ்நிலையில்.. நரேந்திரனையும்.. தொழிலாளர்களையும் பேசவிடுவது புத்திசாலித்தனமல்ல என்பது அவளுடைய எண்ணம்.. ஒரு சிறு தீப்பொறிகூட பற்றி எரியும் காட்டுத்தீயாக மாறிவிடக் கூடும்.. எனவே அவளே பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தாள்..
“ஓகே சார்.. நீங்க யூனியன் லீடர்.. புது ஆர்டரை ஒப்புக்கொள்கிறதுக்கு முன்னாலே உங்ககிட்ட கலந்து பேசியிருக்கனும்னு நீங்க நினைக்கறீங்க.. ஆனா.. இது வரைக்கும் அப்படியொரு நிலைப்பாடை பேக்டரி நிர்வாகம் எடுத்ததில்லையே.. இதுக்கு முதலில் பல புது ஆர்டர்கள் வந்திருக்கு.. அப்போதெல்லாம் நிர்வாகம் தான் அதை முடிவு செஞ்சிருக்கு.. இப்போ மட்டும் புதுசா என்ன ரூல் சொல்றிங்க..?”
வித்யாவின் கிடுக்கிப் பிடியில் ரங்கதுரை திணறிப் போனான்.. அவளுடைய கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனான்…
“அது அப்போம்மா…”
“எப்ப..? எழுபது வருசத்துக்கு முந்தியா…?”
“அப்பல்லாம் எந்த புது ஆர்டர் வந்தாலும் வேலை செய்கிற அளவுக்கு நம்மகிட்ட ஆள்கள் இருந்தாங்கம்மா..”
“இப்ப என்ன ஆள் குறைப்பா பண்ணியிருக்கோம்..? அதைவிட அதிகமான ஆள்களுக்கு வேலை கொடுத்திருக்கோம்.. சம்பளத்தை உயர்த்தியிருக்கோம்.. குடியிருக்க குவார்ட்டர்ஸ் கட்டிக் கொடுத்திருக்கோம்.. பிள்ளைகள் படிக்க ஸ்கூல் தொடங்கியிருக்கோம்.. இவ்வளவு ஏன்..? உங்க ட்ரீட்மென்டுக்காக ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிருக்கோமா இல்லையா..?”
“அது.. வந்து..”
“வந்து போயெல்லாம் வேண்டாம்.. உண்டா.. இல்லையா..? அதை மட்டும் சொல்லுங்க..”
“உண்டுதான்..”
“இத்தனையும் செய்ய அதிகப்படி வருமானம் வேண்டுமா.. வேண்டாமா..? உங்களை அதிகப்படியாய் உழைக்கச் சொல்லலை.. வேலை நேரத்துக்கு மேலே யாரும் ஒரு செகண்ட் கூட அதிகமா உழைக்க வேணாம்.. ஆனா.. வேலை நேரத்துக்குள் செய்கிறதை உண்மையா செய்யுங்க.. அவ்வளவுதான்..”
“அப்ப நாங்க வெட்டியா அரட்டையடிக்கிறோம்ன்னா சொல்றீங்க..?”
“நான் அப்படிச் சொல்லலை.. தேவையில்லாத யோசனைகளை யோசிக்க ஆரம்பிச்சிருக்கீங்கன்னு சொல்றேன்.. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது.. அது எத்தனை நாளைக்கு நிலைக்கும்..? வானத்தைப் போல வாழ்க்கை பரந்து.. விரிந்திருக்கிறது.. அதில் சிறகடித்துப் பறந்தால்தான் நம்மால் வாழ முடியும்.. புரிஞ்சுக்கங்க… பறக்காமல் பறவைக்கு இரை கிடைக்காது.. அது தொழிலாளிகளுக்கான உங்களுக்கும் சரி.. முதலாளிகளான எங்களுக்கும் சரி.. அழகானதல்ல..”
“அழகா பேசறிங்கம்மா.. அற்புதமா மூளைச் சலவை செய்றீங்க.. படிச்சவங்க இல்ல.. பேசச் சொல்லியா கொடுக்கனும்..?”
“அதையேதான் நானும் கேட்கிறேன்.. நீங்க உழைப்பாளிக.. உழைக்க உங்களுக்கு சொல்லியா கொடுக்கனும்..?”
“எப்படியோ.. நீங்க தொழிலாளிக பக்கமிருந்து.. முதலாளிக பக்கம் போயிட்டிங்கன்னு உங்க வாயாலேயே ஒப்புக்கிட்டிங்க.. அந்த மட்டிலும்.. உங்க நேர்மைக்கு நன்றி..”
ரங்கதுரை சரியான இடத்தில் அடித்து விட்டான்.. வித்யாவின் முகம் மாறியது.. எவ்வளவோ யோசித்துச் செயல்பட்டும் தன்னையுமறியாமல் வாய் விட்டு விட்டோமே என்று அவள் மனம் வருந்தியது..
‘உங்களில் ஒருத்தி..’
இதுதான் அவள் பெர்ஸனல் மேனேஜராக பொறுப் பேற்றுக் கொண்ட முதல் நாளில் தொழிலாளர்களின் மத்தியில் சொன்ன வார்த்தை..!
அது காற்றோடு போய் விட்டதா..?
என்று அவள் நரேந்திரனின் கையால் தாலி வாங்கி அவன் மனைவியானாளோ… அன்றிலிருந்தே தொழிலாளர்கள் அவளிடமிருந்து விலகி நிற்க ஆரம்பித்து விட்டார்கள்.. அதை வித்யாவும் உணர்ந்துதான் இருந்தாள்.. என்னதான் நான் எப்போதும் போலவே இருக்கிறேன்.. முதலாளியின் மனைவியாக ஆனதினால் எனது குணம் மாறிவிடவில்லை என்று அவள் திரும்பத் திரும்பச் சொன்னாலும்.. அவர்கள் காதுகளில்
அவை ஏறவில்லை.. அவர்களுக்காக முதலாளிகளுடன் போராடிய பழைய வித்யாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள்.. அதில் தவறில்லைதான்.. ஆனால்.. பழைய நிர்வாகம் மாறி புதிய நிர்வாகம் வந்த பின்பு போராட்டத்திற்கே வேலையில்லாமல் போய் விட்டதே.. அதை அவர்களிடம் யார் சொல்வது..?
நரேந்திரனும்.. சுரேந்திரனும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த பேக்டரியில் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.. அதை எதிர்த்த மகேந்திரன் பேக்டரியில் உரிமையில்லாமல் வெளியேற்றப்பட்டு விட்டான்.. அவனுக்கும் யுகேந்திரனுக்கும் மில் கொடுக்கப்பட்டு விட்டதால்.. அவன் பேக்டரிக்கு வராமல் மில்லுக்கு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.. மகேந்திரனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
அவன் எதிர்பார்த்ததே வேறு.. பேக்டரி அவன் கைக்கு வரவேண்டும்.. அதில் அவன் எம்.டியாக பொறுப்பேற்று அந்த இருக்கையில் அமர வேண்டும்.. எதற்கெடுத்தாலும் நரேந்திரனுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கும் குகனை அடக்கி ஒடுக்கி.. பேக்டரியை விட்டு வெளியே துரத்த வேண்டும்.. முதலாளி அவனில்லையே என்ற நினைவில் ஆடிய தொழிலாளிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.. அவன் யார் என்பதை காண்பிக்க வேண்டும்..
அவன் மனதில்.. அடுக்கடுக்கான ஆசைகள் பல புதைந்திருந்தன.. அத்தனையும் பேக்டரியின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொள்வதிலேயே இருந்தன.. ஆனால்.. அந்த ஆசைகளையும்.. அவன் யார் என்பதையும் நரேந்திரன் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பான் என்று ஒர்நாளும் அவன் நினைத்தும் பார்த்ததில்லை…
“என்னங்க இப்படியாகிருச்சு..?”
கணவனுக்கு மில்லில் சரிபங்கு கிடைத்தும் மீனலோசனி அவனிடம் துக்கம் விசாரித்தாள்.. அதில் அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. குப்புற விழுந்து மண்ணைக் கவ்விக் கொண்டதை எந்த ஆண்மகன்தான் மனைவியிடம் ஒப்புக் கொள்வான்..? தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்றுதானே தட்டி விடுவான்..?
மகேந்திரனும் அதைத்தான் செய்தான்…
“என்ன இப்படியாகிருச்சுன்னு கேட்டு வைக்கிற..? எப்படி ஆகிருச்சு..?”
“பேக்டரி உங்க கையை விட்டுப் போயிருச்சே..”
“மில் கைக்கு வந்திருச்சே…”
“வந்தாலும்.. அதைக் கைப்பற்ற விட்டுட்டுத்தான் உங்க தம்பி வேற வேலை பார்ப்பார்.. போங்கத்தான்..
நீங்க வேற கடுப்பைக் கிளப்பாதீங்க..”
“விடாம என்ன செய்யப் போறான்..?”
“விட்டுட்டாலும்.. ம்ஹீம்.. எடுத்து வைத்தாலும்.. கொடுத்து வைக்கனும்கிறது இதுதான் போல…”
“என்ன மீனா.. வாய் நீளுது..”
“நீளாம என்ன செய்யும்..? நான்தான் நம்ம பக்கம் பேசறதுக்கு எங்க அப்பா வீட்டிலிருந்து அவங்க எல்லோரையும் வர வைச்சிருந்தேனில்ல…? அதை யூஸ் பண்ணிக்கிட்டு பேக்டரியைக் கைப் பற்றுகிறதை விட்டுட்டு.. அதைக் கோட்டை விட்டுட்டு வந்து நிற்கறிங்க…”
“பேக்டரிக்கு மில் என்ன குறைச்சலா..?”
“அதில குறைச்சல் இல்லை.. அங்க உங்க பார்ட்னரா யுகேந்திரன் உட்கார்ந்திருக்கார்.. அதுதான் குறைச்சல்..”
“ஏன் அவனுக்கென்னவாம்..? ஆக்சுவலாய்.. அண்ணனோ.. சுரேனோ பார்ட்னரா வாய்த்திருந்தால்தான் வம்பு.. அவங்ககூட மல்லுக்கட்டியே நம்ம காலம் ஓடிடும்.. அதுவே யுகேன்னா அனுசரித்துப் போவான்…”
“அதோட.. அனாமத்து கணக்கை எழுத விடாம கண்ணிலே விளக்கெண்னையை ஊற்றிக்கிட்டுப் பார்ப்பார்.. அதுவே உங்க ஏமாளி அண்ணனா இருந்தா.. ஆமாம்.. அப்படித்தான்னு நெஞ்சை நிமிர்த்தி தைரியமா சொல்லிக்கிட்டு பணத்தைச் சுருட்டலாம்.. அது யுகேந்திரன் கிட்ட முடியுமா..?”
முடியாது தான்.. அதை வாய்விட்டு மீனலோசனியிடம் சொல்வது எப்படி..? வசதியான மௌனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டுத் தப்பித்தான் மகேந்திரன்..
“இப்ப பேச மாட்டிங்களே.. உங்க அண்ணனை விடுங்க.. சுரேந்திரன் பார்ட்னரா வந்திருந்தாலும்.. குறைவில்லைதான்.. அவன் பாட்டுக்கு வெளிநாட்டில் கிடப்பான்.. நீங்க பாட்டுக்கு பேக்டரியில ஏகபோக
உரிமை கொண்டாடலாம்.. கேட்கிறதுக்கு யாரிருக்கப் போகிறாங்க..? இப்பப் பாருங்க.. யுகேந்திரன் நல்லா நல்லாக் கேட்பார்.. அவர் சும்மா இருந்தாலும் பிரபாவதி தூண்டி விடுவாள்..”
“அவளும் நீயும் ஒற்றுமையா இருக்கிறவங்களாச்சே மீனா…”
“நீங்களும் யுகேந்திரனும் கூடத்தான் ஒற்றுமையா இருப்பீங்க.. எப்ப.? மத்தவங்களை ஏமாத்திப் பணத்தை கொள்ளையடிக்கிறதில மட்டும்.. அதுவே நீங்க ரெண்டு பேரும் பார்ட்னருன்னா அந்த ஒற்றுமை நிலைத்திருக்குமா..?”
எப்படி நிலைத்திருக்கும்..? யுகேந்திரனின் நட்பான பாசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக.. அவன் மில்லைக் கொள்ளையடிப்பதை மகேந்திரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா..?
“அந்த ஒற்றுமை நிலைத்திருக்கனும்னு நீ ஆசைப் பட்டால் அதை நிலைக்க வைச்சிட்டாப் போகுது…”
“எப்படி நிலைக்க வைப்பீங்க.. மில்லை அவருக்கு தாரை வார்த்துக் கொடுத்து நிலைக்க வைப்பீங்களா..?”
“தெரியுதில்ல.. அப்புறமும் ஏண்டி கிண்டிக் கிளருகிற..?”
“தாங்கலை.. மில்லில் கொள்ளையடிச்சு.. நீலாங்கரையில பங்களாக்களா வாங்கிப் போட்டிருக்கார்.. நீங்க கொஞ்சம் அசந்தாக் கூடப் போதும்.. மில்லை ஏப்பம் விட்டு உங்களுக்கு நாமத்தைப் போட்டு
விடுவார்.. பேக்டரியில சொகுசா இருந்ததைப் போல மில்லிலயும் இருக்கனும்னு நினைச்சிராதீங்க.. பதினொரு மணிக்குப் போகிறது.. ஒரு மணிக்கு சாப்பிட வாரது.. திரும்பவும் மூணுமணிக்கு போகிறது.. ஐந்தடிச்சா வந்திடறதுன்னு இருந்த காலத்தையெல்லாம் மறந்திருங்க.. அதை நீங்க மறக்கலைன்னா.. மில்லை மறந்திர வேண்டியதுதான்..”
மீனலோசனி எச்சரிக்கையுடன் கணவனை முடுக்கி விட்டாள்.. அதன் விளைவாக.. மகேந்திரன் இறக்கை இல்லாமலே பறக்க வேண்டியதாகி விட்டது…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.