Chapter 05
நதியோரம் நடந்த போது…
சுடுமணலில் பாதம் பதித்தேன்…
இளைப்பாற நிழல் கேட்டால்..
கற்பகவிருட்சமாய் நீ வந்தாய்..
-நதியோரம் நான் நடந்தபோது-
“எனக்கு அது மட்டும் போதும் நரேன்.. வேறு எதுவும் வேண்டாம்… உங்க மனசு…! அது எனக்கு மட்டும் சொந்தமா இருக்கனும்..” வித்யாவின் குரலில் தீவிரம் இருந்தது…
“உனக்கு மட்டும்தாண்டி என் மனசு சொந்தம்…” நரேந்திரன் உறுதியான குரலில் சொன்னான்..
“ஒரு வேளை… அதில வேற யாராவது ஒருத்தரின் நினைவு வந்ததுன்னு வையுங்க…” வித்யாவின் குரலில் தீவிரம் அதிகரித்தது..
“யாருடி வரப் போகிறது…” நரேந்திரன் இலகுவாக அவளின் தீவிரத்தைப் புறக்கணித்து நகைத்தான்…
“இது சிரிக்கிற விசயமில்ல நரேன்.. சீரியஸா சொல்கிறேன்.. உங்க மனசு எனக்கு மட்டும்தான் சொந்தம்கிற நிச்சயம் எனக்கிருக்கும் வரைக்கும்தான் நான் அமைதியாய் இருப்பேன்.. அதில் துளியளவு
இடம் கூட மத்த யாருக்காவது நீங்க கொடுத்தீங்கன்னு வையுங்க.. அந்த நிமிசமே உங்களை விட்டுப் பிரிஞ்சுருவேன்…”
இதைச் சொல்லிய வித்யா நரேந்திரனின் கையால் அறை வாங்கினாள்.. அவளின் காதுகளில் கிர்சென்று
ஒலி கேட்க.. கன்னத்தில் பலமாக வலித்தது…
“கொன்னுருவேண்டி…” நரேந்திரன் உறுமினான்..
“நரேன்…” வித்யா அதிர்ச்சியுடன் அழைத்தாள்..
“பேசாதே… உனக்கு அன்னைக்கே சொல்லி-யிருக்கேன்.. பிரிவைப் பத்திப் பேசாதேன்னு..
உன் வாழ்க்கை என்னோடதான்.. பிரிஞ்சு போயிருவியோ.. உன்னை விட்டு விட்டுத்தான் வேற வேலை பார்ப்பேன்.. கொன்னு இந்த நதிக்கரையிலேயே புதைச்சிர மாட்டேனா…?”
“நரேன்…”
“பேச வந்திட்டா.. என் மனசில உன்னைத் தவிர யாருக்குடி இடமிருக்கு..? உனக்காகத்தான் இத்தனை நாளா கல்யாணம் ஆகாம நான் காத்துக் கிடந்தேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. இவ பினாத்தறா…”
“நரேன்..”
“இது ஒருவழிப் பாதைடி.. நீ திரும்பிப் போக முடியாது..”
திரும்பிப் போக வித்யா நினைப்பாளா…? எங்கே நரேந்திரன் இருக்கிறானோ.. அங்கேயே வித்யாவின் மனம் நிலை கொண்டிருக்கும்.. இதை அவனால் புரிந்து கொள்ள முடியுமா…?
அவள் கண்களில் இருந்து நீர் துளி விழுந்தது.. நரேந்திரனின் மடிமீது அவள் தலை சாய்த்தாள்..
அவன் உக்கிரம் துணிந்தவளாக அவள் தலை முடியை வருடிக் கொடுத்தபடி மெல்லப் பாடினான்..
“ஆலம் விழுதுகள் போல்
உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன..?
வேரென நீயிருந்தாய்…
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..
உன் கண்ணில் நீர் வழிந்தால்…
என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..
என் கண்ணில் பாவையன்றோ..
கண்ணம்மா.. என்னுயிர் நின்னதன்றோ…”
அவன் மடிமீது தலை வைத்து வெகு நேரத்திற்கு வித்யா விசும்பிக் கொண்டேயிருந்தாள்.. அவளின் ஏக்கம்தான் என்ன..? நரேந்திரனுக்கு பிடிபடவில்லை.. அதைத் தீர்க்கும் வகையறியாதவனாக அவள் முடியை ஆதரவுடன் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.. முன்னிரவுப் பொழுதில் அழுகை அடங்கியவளாக வித்யா எழுந்து நின்றாள்.. கூட எழுந்து நடந்த நரேந்திரன் காருக்கு அருகே வந்ததும் கேட்டான்…
“ஏண்டி அப்படி அழுத…?”
“தெரியலை..” துக்கத்துடன் பதில் சொன்னாள் வித்யா.. அவளுக்குத் தெரியத்தான் இல்லை.. அவளால் படிப்பிற்காக ஆயகுடியை துறக்க முடிந்தது… பூர்ணிமாவின் வேண்டுகோளுக்காக கல்லூரி விடுதியை துறக்க முடிந்தது.. நரேந்திரனின் விருப்பத்திற்காக பார்த்துக் கொண்டிருந்த வேலையையும்.. காத்துக் கொண்டிருந்த வேலையையும் துறக்க முடிந்தது.. ஆனால் எதற்காகவும் நரேந்திரனைத் துறக்க அவளால் முடியவே முடியாது…
இருந்தும் அந்த வார்த்தைகளை அவள் சொன்னாள்.. ஏன்…? அவள் மனதின் அடி ஆழத்தில் இருக்கும் பயம் தான் என்ன…? கைப் பொருளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுமியாக ஏன் அவள் தத்தளிக்கிறாள்…?
“உனக்கு யோகம்டி.. கிரண்பூர் சமஸ்தான இளவரசி மட்டும் விட்டுக் கொடுக்கலைன்னா.. என் பெரியத்தானின் மனசில உனக்கு இடமேது…?”
கேட்டாளே ஒரு கேள்வி…! மீனலோசனி அருமையான கேள்வியொன்றைக் கேட்டு வைத்தாள்… நரேந்திரனுடன் மணமாகி.. மறுவீட்டுக்கு ஆயகுடி போய் வந்து.. பொறுப்புள்ள பெரியண்ணியாக பூர்ணிமாவின் திருமணத்திலும் நின்று முடித்த வித்யாவிடம் ஒர் நாள் இந்தக் கேள்வியை மீனலோசனி கேட்டாள்…
வித்யாவிற்குத் தெரியும்.. அவள் மனதை பலவீனமாக்கத்தான் அப்படிப்பட்ட கேள்வியினை மீனலோசனி கேட்கிறாள் என்று…
ஆனால்.. அந்தக் கேள்வியில் உண்மை இருக்கிறதல்லவா…? கார்த்திகாயினி தேவி மட்டும் காதலனுக்காக காத்திருந்தால்.. நரேந்திரனின் வாழ்வில் வித்யாவிற்கு இடமில்லையே…
அன்றிலிருந்துதான் வித்யாவின் மனம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.. அவளது நரேந்திரனை யாராவது அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டுப் போய் விடுவார்களோ என்று அவள் பயந்தாள்.. எந்த இழப்பையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியும்.. நரேந்திரனை பிரிந்தால்.. அந்தப் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியாதே…
அதற்குப் பின்னால் அடிக்கடி அவள் இப்படிப் பேசி நரேந்திரனிடம் அறை வாங்கிக் கொள்வது வாடிக்கையான ஒன்றாக ஆகி விட்டிருந்தது…
காருக்குள் ஏறிய வித்யா.. கன்னத்தை தடவிக் கொண்டாள்.. நரேந்திரனின் கைவிரல் தடங்கள்… அவள் தொடுகைக்கு தட்டுப்பட்டன.. அவனின் கோபத்தின் வேகத்தில் அவள் மனம் நிம்மதி அடைந்தது…
“நீயாய் வாய் விட்டு கன்னத்தைப் புண்ணாக்கிக்கற..” நரேந்திரன் சங்கடப் பட்டான்..
“காரைக் கிளப்புங்க…” வித்யா அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
“உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலைடி…” நரேந்திரன் குற்றம் சாட்டியபடி காரைக் கிளப்பினான்..
சாலையில் வேகமெடுத்த காரின் முன்புறம் தெரிந்த மரங்களை வேடிக்கை பார்த்தபடி நரேந்திரனின் தோளில் சாய்ந்திருந்த வித்யா..
“பேக்டரியில ஒன்னைக் கவனிச்சீங்களா…?” என்று திடிரென்று கேட்டாள்..
“ஒன்னா…? ஓராயிரம்ன்னு சொல்லு…” நரேந்திரன் அலுத்துக் கொண்டான்…
“ரங்கதுரையின் பேச்சில மாற்றம் தெரியுது…”
“அது கொஞ்ச நாளாவே மாறிக் கிட்டுத்தான் இருக்குது…”
“அது தானாய் வந்த மாற்றம் போலத் தெரியலை..”
“புத்திசாலி..! கண்டுபிடிச்சிட்ட.. நீ சொல்கிறதும்.. சந்தேகப்படறதும் உண்மைதான்.. மகி… ரங்கதுரையை அடிக்கடி மீட் பண்றானாம்…”
“நினைச்சேன்…”
“ஆனா.. அதை என்கிட்டச் சொல்ல மாட்ட.. ஏன்னா அவன் என் தம்பி பாரு.. ஏண்டி இப்படி இருக்கிற…?”
“விடுங்க நரேன்.. அவர் குணம் தெரிந்ததுதானே..”
“அதுக்காக இந்த அளவுக்கு கீழே இறங்கறதா…? குகன்தான் அவனை வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கான்..”
வித்யா நரேந்திரனின் காதல் மீதான தவிப்பை மறந்து பேக்டரியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்….
“வொர்க்கர்ஸ் பிராப்ளம் கிரியேட் ஆகிறது நிர்வாகத்திற்கு நல்லதில்லை நரேன்..”
“எனக்கும் புரியுது.. ஆனா இவங்களை எப்படி திருப்தி பண்றதுன்னு எனக்குத் தெரியலையே…”
“ரங்கதுரையைக் கூப்பிட்டுப் பேசிப் பாருங்களேன்..”
“நோ.. நோ… அந்த அளவுக்கு இறங்கக் கூடாது.. எனக்கொன்னும் டென்சனில்லை வித்யா… நீதான் அழகாய் பிராப்ளத்தை சால்வ் பண்றயே..”
“அதைச் செய்திரலாம்.. இருந்தாலும்.. ஒற்றுமையாய் இருந்த பேக்டரி.. லேபர்ஸ்… நிர்வாகம்ன்னு எதிரும் புதிருமா ஆகிறதா…?”
“இதைப் போல எத்தனையோ பிராப்ளத்தைப் பார்த்திருக்கேன்.. லீவ் இட் வித்யா.. பார்த்துக்கலாம்..”
வீடு வந்து விட்டதில் அவர்கள் பேச்சை நிறுத்தினார்கள்.. பிரம்மாண்ட வெளிப்புறக் கேட்டை காவலாள் திறந்து விட கார் உள்ளே நுழைந்தது.. வீட்டுக்குள் போனவர்களை குரோதப் பார்வையுடன் எதிர் கொண்டாள் மீனலோசனி…
“வீட்டைப் பார்த்துக்க மருமகள்கள் இருக்கணுமாம்.. எனக்கு மட்டும் இந்த நியாயமா அத்தை…?”
சௌதாமினியிடம் அவள் கேள்வி கேட்க.. அவள் அதற்குப் பதில் சொல்லாமல்.. அகலமான புன்னகையுடன்
“வா நரேன்… வாம்மா வித்யா…” என்று மகனையும் மருமகளையும் வரவேற்றாள்…
“ம்ஹீம்.. போட்ட சொக்குப் பொடியை… பெரிசு முதல் சிறிசு வரைக்கும் வீட்டில இருக்கிற அத்தனை ஜீவன்களுக்கும் போட்டாகி விட்டது.. என் பேச்சு காதில் ஏறுமா…?” மீனலோசனி அடுத்த அம்பை எய்து கொண்டிருந்தபோது…
“அம்மா..” என்று வித்யாவிடம் தாவினான் அரவிந்தன்.. அவளும் அவனைத் தூக்கிக் கொண்டாள்..
மீனலோசனிக்குத் தாங்கவில்லை.. அவளுக்கும்.. வித்யாவுக்கும் பொதுவான மாமியாரையே அவள் காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்சிக் கொண்டிருக்கும் போது அவள் பெற்ற பிள்ளை வித்யாவை ‘அம்மா’ என்று அழைத்து சொந்தம் கொண்டாடினால் அவளுக்கு எப்படியிருக்கும்…?
“யாருடா உனக்கு அம்மா…?” அவள் மகன்மீது பாய்ந்தாள்…
“ஏன் மீனா.. குழந்தையை கோபித்துக்கிற…? நான்தான் வித்யாவை அம்மான்னு கூப்பிடனும்னு சொல்லித் தந்தேன்..” சௌதாமினி அமைதியாகச் சொன்னாள்…
“இந்தம்மா என் மகனுக்கு அம்மாவா…?”
“இல்லைதான்.. உறவுப் பிரகாரம் வித்யாவை அவன் பெரியம்மான்னுதான் கூப்பிடனும்.. ஆனாப்
பாரு மீனா.. உன்னை விட வயசில வித்யா ரொம்பவும் சின்னவ.. அதனால சித்தின்னுதான் அவன் கூப்பிட வேண்டியிருக்கும்.. அதனாலதான் இரண்டுக்கும் பொதுவா அம்மான்னு கூப்பிடச் சொன்னேன்…”
நீண்ட விளக்கத்தைத் தந்து மீனலோசனியின் மூக்கை உடைத்தாள் சௌதாமினி.. மாமியாரின் விளக்கத்தைக் கூட மீனலோசனியால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.. அந்த விளக்கத்தை உள்ளேயிருந்து வந்த மகேந்திரனும்.. வித்யாவுடன் நின்று கொண்டிருந்த நரேந்திரனும் கேட்டு விட்டதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. வித்யாவை விட அவள் வயதில் மூத்தவளென்று சௌதாமினி நினைவு படுத்தியதில் மீனலோசனி ஏதோ வேலையிருப்பதைப் போல வீட்டுக்குள் ஓடி விட்டாள்…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.