Chapter 21

0Shares

நதியோரம் நடந்த போது

விரல் கோர்த்த என்னவளே..!

சந்தேகம் வரலாமா…?

என் தேகம் உனதில்லையா…?

-நதியோரம் நான் நடந்தபோது-

அவள்… அந்தப் பெண்.. கார்த்திகாயினி தேவி..!

எந்தப் பெண்ணை முதன் முதலில் நரேந்திரன் காதலித்தானோ அந்தப் பெண்தான் வித்யாவின் கண் முன்னாலேயே அவளுடைய நரேந்திரனின் தோள் மீது தலை சாய்த்தாள்…

எந்தப் பெண்ணின் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக வித்யா மனதிற்குள் குமுறிக் கொண்டிருக்கிறாளோ.. அந்தப் பெண்தான் நரேந்திரனின் தோள் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்..

வித்யாவின் மனதில் இடி இடித்தது.. சுரேந்திரனின் திருமணத்தைப் பற்றி பூர்ணிமாவும்.. அவளும் மணிமுத்தாறு அரண்மனையின் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது இடி இடித்து கடும் மழை பொழிந்ததின் காரணத்தை அவள் மதன்பூர் அரண்மனையில்.. அந்த நொடியில் கண்டு கொண்டாள்..

நரேந்திரன் கார்த்திகாயினியை விலக்கி நிறுத்தினான்.. ஆனால் விலகி வந்து விடவில்லை.. 

அங்கே நின்றபடி அவளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்…

“யார் தெரிகிறதா…?”

வித்யாவின் பின்னாலிருந்து குரல் கேட்டது.. முகம் வெளுத்துப் போயிருந்த வித்யா திரும்பினாள்.. நிவேதிதா நின்று கொண்டிருந்தாள்…

“அது கார்த்திகாயினி தேவி… என் அக்கா…” நிவேதிதாவின் விழிகளில் சவால் இருந்தது…

“என்ன…?” வித்யா அதிர்ந்து விட்டாள்…

“யெஸ்.. என் அக்காவேதான்.. அக்கான்னா கூடப்பிறந்த அக்கா இல்லை.. என் அம்மா கூடப் 

பிறந்த அக்காவின் மகள்.. கிரன்பூர் அரண்மனையின் ஒரே வாரிசு… உன்னைப் போல வேலை செய்ய வந்து.. முதலாளியின் கை பிடித்தவளல்ல.. அழகாலும்.. அறிவாலும்.. அந்தஸ்தாலும்.. உனக்கு முன்னாலேயே மிஸ்டர் நரேந்திரனின் மனதில் இடம் பிடித்தவள்…”

“நிவேதிதா…”

“என் பெயரைச் சொல்லிக் கூப்பிடக் கூட உனக்கு அருகதை இல்லை.. இருந்தும் நீ கூப்பிடுகிறாய்.. நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.. எதனால்…? மிஸ்டர் நரேந்திரன் உன் கழுத்தில் கட்டியிருக்கிற தாலியினால்.. அந்தத் தாலி எப்படி உனக்கு கிடைத்தது தெரியுமா…? என் அக்கா மிஸ்டர் நரேந்திரனை விட்டுக் கொடுத்ததால் கிடைத்தது”

வித்யாவின் விழிகள் அகன்றன.. எந்த வார்த்தைகளை மீனலோசனி சொல்கிறாளோ.. அதே வார்த்தைகளை இன்று நிவேதிதாவும் சொல்கிறாள்…

ஏன்…? அந்த வார்த்தைகள் மனதிற்கு வலியைத் தந்தாலும் அவற்றில் உண்மை இருப்பதினால்தானே சொல்கிறார்கள்…?

“நினைச்சுப் பார்க்கலைல்ல.. இந்த மதன்பூர் அரண்மனைக்கும்.. கிரண்பூர் அரண்மனைக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு நீ நினைத்துப் பார்க்கலைல்ல.. என் அக்காவா கார்த்திகாயினி தேவி வந்து நிற்பாங்கன்னு நினைச்சுப் பார்க்கலைல்ல…” நிவேதிதாவின் விழிகளில் வேட்டைக்காரனின் பார்வை இருந்தது…

வித்யா வேட்டையாடப் படும் பறவையின் பார்வையை உயிர்துடிக்கப் பார்த்து வைத்தாள்… 

அந்தப் பார்வையைக் கண்டும் நிவேதிதா மனம் இரங்கவில்லை…

“ஊடே வந்த உனக்கே இப்படியிருந்தால்… காதலித்து விட்டுக் கொடுத்த என் அக்காவிற்கு எப்படியிருக்கும்…?”

“நான் உன் அக்காவின் காதலைப் பறிக்கவில்லை..”

வித்யா சுதாரித்துக் கொண்டவளாக பதில் சொன்னாள்.. அவளின் இயல்பான நிமிர்வு அவளிடம் திரும்பி விட்டது.. அவள் என்ன தவறைச் செய்தாளென்று நிவேதிதா குட்டக் குட்ட தலையைக் கொடுக்க வேண்டும்…?

அந்த நிமிர்வை அறிந்திராத நிவேதிதாவின் விழிகளில் கோபம் அதிகரித்தது.. அவள் முன்னால் 

ஒரு சாதாரணப் பெண் நிமிர்ந்து பேசுவதா…? என்ன தான் மணிமுத்தாறு அரண்மனையின் மூத்த 

மருமகளாக இருந்தாலும் நிவேதிதாவிற்கு அவள் இணை ஆவாளா…?

தனக்கு போட்டி என்று யாரையும் வித்யா நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாள்.. என் வழி தனிவழி என்று அவள் போக்கில் தெளிந்த நீரோடைபோல போய் கொண்டிருப்பாள்..

அது தெரியாத நிவேதிதா ஆவேசப் பட்டாள்..

“பறிக்கவில்லையா…? என் அக்காவின் காதலைப் பறிக்கவில்லையா…? நீ பறிக்காமலா மிஸ்டர் நரேந்திரன் உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டார்…?”

“அதுக்கு முன்னாலேயே உன் அக்கா காதலை மறந்து வேறு ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. 

அது உனக்கு மறந்து விட்டதா…?”

வித்யா புருவங்களை உயர்த்திக் கேட்டதில் நிவேதிதா சரியான இடத்தில் அடியை வாங்கினாள்…

“ஏன் அதைச் செய்தாங்க…?” அவள் கொதித்தாள்..

“அதைத்தான் நானும் கேட்கிறேன்.. ஏன் அதைச் செய்தாங்க…?” வித்யா நிதானமாகக் கேட்டாள்…

“ஏய்ய்.. எங்க ராஜ வம்சத்து பெருமையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்…?”

“தெரியவே வேணாம்.. உங்க குலப் பெருமையைச் சொல்லச் சொல்லி நான் கேட்டேனா…?”

“உன்னைப் போல ஒருத்திக்கு அரண்மனையின் மருமகளாகும் வாய்ப்புக் கிடைத்து விட்ட ஆணவத்தில் பேசுகிறயா…?”

“ஊஹீம்… என் நரேந்திரனின் மனைவியாகும் வாய்ப்புக் கிடைத்து விட்ட சந்தோசத்தில் பேசுகிறேன்..”

“அது எப்படிக் கிடைத்தது…?”

“சும்மா.. சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல இதையே சொல்லிக்கிட்டு இருக்காதே.. உன் அக்காவை யார் காதலை கை கழுவி விட்டுப் போகச் சொன்னது…? நானா சொன்னேன்…?”

“ஏய்ய்…”

“ஷட் அப் நிவேதிதா.. முதலில் மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்…”

“இல்லைன்னா…?”

“இந்த மேரேஜ் நல்லபடி நடக்க வேண்டாமா…? எனக்கு நீ மரியாதை கொடுக்கலை என்கிற விவரத்தை சுரேந்திரன் தெரிந்துக்கிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?”

வித்யா என்னவோ சுரேந்திரன் அவளின் மைத்துனன்.. அண்ணனின் மீதும்.. அண்ணியின் 

மீதும் பக்தி கலந்த மரியாதையை வைத்திருப்பவன் என்ற அர்த்தத்தில்தான் சொன்னாள்.. அதைக் 

கேட்ட நிவேதிதா வேறு விதமாக அர்த்தப் படுத்திக் கொண்டாள்…

“ஸோ.. நீ சொல்கிறபடிதான் சுரேன் ஆடுவார்ன்னு உறுதியாகச் சொல்கிற…”

“நான் சொல்ல மாட்டேன்.. அவராத் தெரிந்துக் கிட்டால் என்ன ஆகும்ன்னுதான் சொன்னேன்..”

“நீ கெட்டிக்காரி.. அப்படியில்லாமலா என் அக்கா வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறாய்…?”

“உன் அக்காவை யார் வாழ வேண்டாமென்று சொன்னது…?”

“கிரண்பூரின் ராணி.. ஒன்றுமேயில்லாமல் கடனில் மூழ்கிக்கிட்டு இருக்கும் மணிமுத்தாறு அரண்மனையில் வாழ வருவாளா…?”

“ஓஹோ.. அப்புறம் எதுக்காக நீ அடிச்சுக்கிற…?”

“மிஸ்டர் நரேந்திரன் கிரண்பூருக்கு வந்திருக்க வேண்டாமா…? அந்த அரண்மனைக்கு ராஜாவாக்கு- கிறேன்னு என் பெரியப்பா அவரைத் தேடிப் போய் கூப்பிட்டாரே.. அப்போது அவர் கூடவே கிளம்பி வந்திருந்தால் என் அக்காவின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமே…”

“ஏன்.. அவங்க வாழ்க்கைக்கு என்ன ஆச்சு…? அவங்கதான் உங்க வம்சப் பெருமையைக் காப்பாத்தி 

வேற ஒருத்தருக்கு மனைவியாகிட்டாங்களே.. ஒன்றை நினைவில் வைத்துக் கொள் நிவேதிதா.. அன்றைக்கு மட்டும் நரேன்.. கார்த்திகாயினியின் அப்பா பின்னால் போயிருந்தால் அவரின் குடும்பம் அழிந்திருக்கும்.. இன்றைக்கு.. நீ காதலித்து கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் சுரேந்திரனின் அரண்மனை அந்தஸ்து நிலைத்திருக்காது…”

இதைக் கேட்ட நிவேதிதா ஏளனமாகச் சிரித்தாள்.. அவள் விழிகளில் வன்மம் தெரிந்தது…

“நான் சுரேனைக் காதலித்தேன்.. ஏன் தெரியுமா…? அப்போதுதானே மணி முத்தாறு அரண்மனையில் மருமகளாக உள்ளே நுழைய முடியும்…?”

“புரியலை…”

“உனக்கு புரிய வேணாம்.. புரியும் போது எல்லாம் தானாய் புரியும்…”

நிவேதிதா அங்கேயிருந்து அகன்று விட்டாள்.. வித்யா நரேந்திரன் நின்று கொண்டிருந்த திசையில் பார்த்தாள்.. அப்போதும் நரேந்திரன் கார்த்திகாயினி தேவியுடன்தான் பேசிக் கொண்டிருந்தான்..

“என்னடி அங்கேயே பார்த்துக்கிட்டு நிற்கிற…?”

பூர்ணிமா தேவி அருகில் வந்தபோது.. வித்யா சட்டென்று நகர்ந்து தோழியிடம் போய் விட்டாள்..

“ஒன்றுமில்லையே…”

“ஏன்.. உம்முன்னு இருக்க…?”

“தலைவலி பூர்ணி…”

“எனக்கும் அப்படித்தான்.. எல்லோருக்கும் சீக்கிரமா கிளம்பினாத்தேவலை.. எங்கே…? எல்லோரும்தான் ஆளுக்கொரு திசையில் நிற்கிறாங்களே…”

பூர்ணிமா ஆதங்கப் பட்டபடி மற்றவர்களை ஒன்று சேர்க்கப் போனாள்.. வித்யா நரேந்திரன் வருகிறானா 

என்று அவன் நின்ற திசைப் பக்கம் பார்த்தாள்.. நரேந்திரன் வந்து கொண்டிருந்தான்..

‘அப்பாடி.. வந்துட்டான்…’ வித்யாவின் மனதில் நிம்மதி வந்தது.. கூடவே இனம் விளங்காத சஞ்சலமும் வந்தது..

‘கூடவே அவளும் வந்துட்டா…?’ திகிலுடன் நரேந்திரனின் பின்னால் பார்வையால் துழாவினாள்.. 

நல்ல வேளையாக கார்த்திகாயினி பின் தொடர்ந்து வரவில்லை..

இரவில் திரும்பியபோது.. நரேந்திரன் அதிகம் பேசவில்லை.. சிந்தனையுடனே இருந்தான்.. வித்யாவும் அவனுடன் பேச முயலவில்லை…

அன்று மட்டுமில்லை.. அடுத்து வந்த நாள்களிலும் நரேந்திரன் ஏதோவொரு சிந்தனையுடனே இருந்தான்.. வித்யா அதைக் கலைக்காமல் விலகி நின்றாள்.. பேக்டரியின் வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்..

எப்போதுமே தோழியின் முகத்திலிருந்து அவளின் மனச் சுணுக்கத்தை கண்டு விடும் பூர்ணிமா.. நெருங்கி.. வந்த சுரேந்திரனின் திருமண வேலைகளால் அதைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.. வித்யாவின் மனதில் தனிமை சூழ்ந்தது..

சுரேந்திரனின் திருமணம் அமர்க்களமாக நடந்து முடிந்தது.. மணி முத்தாறு அரண்மனையின் சின்ன மருமகளாக கால் பதித்து நிவேதிதா நுழைந்து விட்டாள்..

‘இதற்குப் பிறகு…?’ வித்யாவின் மனதில் கலவரம் எழுந்தது..

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link