Chapter 32

0Shares

நதியோரம் நடந்த போது..

      பூங்காற்றாய் வந்த தோழி…

நான்சாய தோள் கொடுத்தாள்..

      தாயாகி அவள் மடிசாய்த்தாள்…

-நதியோரம் நான் நடந்த போது-

மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் வித்யா.. அவள் பின்னால் மெதுவாக நடந்து வந்த பூர்ணிமா வித்யாவின் தோளைத் தட்டினாள்.. திரும்பிய வித்யா வெறுமையாகப் புன்னகைத்தாள்…

‘பெரியண்ணன் முன்னாலே வித்யாவை நீ ஒரு சொல் சொல்லிவிட முடியுமா…?’

பூர்ணிமா சுரேந்திரனைப் பார்த்துக் கேட்ட கேள்வி அவள் நினைவுக்கு வந்தது.. அவள் மனம் புண்ணாக வலித்தது…

‘இவளுக்குத் தெரியுமா..? இவளுடைய பெரியண்ணன் முன்போல இல்லையென்பது…’ மன ரணத்துடன் அவள் வானத்தைப் பார்த்தாள்…

‘என்னால் காத்திகாயினியை விடமுடியாதுன்னு அவர் சொல்லிட்டாருன்னு இவளுக்குத் தெரியுமா..? அவரை எப்படி விடறதுன்னு நான் மருகிக்கிட்டு இருக்கிறதைப் பத்தி இவளுக்குத் தெரியுமா..?’  வித்யாவின் கண்களில் நீர் மல்கியது..

“என்னடி… பலமான யோசனையில் இருக்க..?”

“ம்ப்ச்.. சும்மா.. ஒன்னுமில்லை பூர்ணி…”

வித்யாவின் மனதும் ஒன்றுமேயில்லைதான் என்று எண்ணிக் கொண்டது.. அவளுக்கென்று யார் இருக்கிறார்கள் என்ற நினைவு வந்தபோது வயிற்றில் நரேந்திரனின் குழந்தை அசைந்து…

‘உனக்கு நானில்லையா..?’ என்று கேட்டது…

“ஒன்றுமேயில்லாததுக்கா இவ்வளவு பெரிய யோசனை..? அதுதான் மணிமுத்தாறு அரண்மனையில் கோட்டையைப் பிடித்து கொடியை நாட்டி விட்டாயே.. இனிமேலும் என்னடி யோசனை வேண்டிக்கிடக்கு..?”

“கோட்டையைப் பிடித்திருக்கிறது என்னவோ உண்மைதான் பூர்ணி.. ஆனால் கொடியை நாட்டலை..” விரக்தியுடன் பேசினாள் வித்யா…

“இன்றைக்கு இந்த நிவி பண்ணின கலாட்டாவைச் சொல்றியா..? போடி பைத்தியம்… நீ கொடியை நாட்டலைன்னா என் பெரியண்ணா சும்மா விட்டு விடுவாரா..? எல்லோரையும் ஒருவழி பண்ணி விட மாட்டாரா..? நீதானே அவரின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிற..? இல்லைன்னா இந்த அரண்மனையில உன் மன அமைதியைக் கெடுக்கிறவங்களுக்கு இடமிருக்குமா..?”

“நான் யாரையும் வெளியேற்ற நினைக்கலை பூர்ணி…” கண்கலங்கின வித்யா..

‘நான்தான் வெளியேறனும்னு நினைக்கிறேன்..’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..

அவளின் தலை தன்னிச்சையாக தோழியின் தோள்மீது சாய்ந்தது.. இதைப் போலத்தானே அன்று கார்த்திகாயினி நரேந்திரனின் தோள்மீது சாய்ந்திருந்தாள் என்ற நினைவு வர அவள் மனம் துடிக்க நிமிர்ந்தாள்..

“வித்யா..” பூரணி தோழியின் கவலையில் துணுக்குற்றாள்…

“எனக்கு அரண்மனை தேவையில்லை பூர்ணி.. உன் அண்ணனின் மனதில் எனக்கான இடம் நிலைத்திருந்தால் போதும்…”

“அது உனக்குத்தானே வித்யா.. உன் ஒருத்திக்கு மட்டும்தானே அது சொந்தம்…”

பூர்ணிமா ஆறுதல் படுத்த முனைந்தாள்.. வித்யாவின் மனம் அமைதியடைய மறுத்தது.. அவளது மனம் அலைகடலாய் கொந்தளித்தது அடங்காமல் அலைபாய்ந்தது…

தோழியின் விழிகளில் தெரிந்த கலக்கத்தில் பூர்ணிமாவின் மனம் பதறியது.. அவள் வித்யாவை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.. அமைதியில்லாமல் அலைபாய்ந்த தோழியின் தலைமுடியைக் கோதி விட்டபடி மெதுவான குரலில் பாடினாள்…

“பேசுகிறேன்.. பேசுகிறேன்..

உன் இதயம் பேசுகிறேன்…

புயலடித்தால் கலங்காதே-நான்..

பூக்கள் நீட்டுகிறேன்..

எதை நீ தொலைத்தாலும்..

மனதை தொலைக்காதே..

அடங்காமலே.. உள்ளம்..

அலை பாய்வதேன்..?”

“பூர்ணி…” வித்யா உடைந்து போய் அழுதாள்…

“அழுதுவிடு வித்யா.. உன் மனதிலிருப்பதை என்னிடம் சொல்ல முடியாவிட்டால் அழுது தீர்த்துவிடு.. மனதில் வைத்துக் கொண்டு குமுறாதே.. ஆனா.. ஒன்னைமட்டும் நினைவில் வைத்துக்க.. உனக்கு நானும்.. பெரியண்ணனும் இருக்கிறோம்…”

“நீ இருக்கிற பூர்ணி.. என்னைக்கும் என் தோழியா என்கூடவே இருப்ப.. எனக்கே எனக்காக இருப்ப… உன் பெரியண்ணன் இருப்பாரா..?”

வித்யாவின் பரிதவிப்பில் திறக்காத அவளின் இதயக் கதவு மெல்லத்திறந்து விட.. பூர்ணிமாவின் புருவங்கள் சுருங்கின…

அன்று இரவு… பிரகாஷ் படுக்கையில் சாய்ந்து புத்தகத்தில் மூழ்கியிருக்க.. பூர்ணி செல்போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்குப் போனாள்…

“அண்ணா…” என்ற அவளின் அழைப்பிற்கு..

“சொல்லு பூரணி…” என்றான் மறுமுனையிலிருந்த நரேந்திரன்… வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த பூரணி நிம்மதியுடன் போனை அணைத்துவிட்டுத் தூங்கப் போனாள்…

சுரேந்திரன் நிவேதிதாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தான்.. தொடர்ந்து ஒரு முழுநாள் முழுவதும் 

அவன் பேசாமல் இருந்ததில் நிவேதிதா கொதித்து விட்டாள்.. பேக்டரியில் அவள் பேசப் போனபோது சுரேந்திரன் ஏதோ வேலையிருப்பதைப் போல நகர்ந்துவிட.. வீட்டுக்கு திரும்பியதும் தனியறையில் அவனை ஒரு கைபார்த்து விட வேண்டம் என்ற வன்மத்துடன் வீடு திரும்பினாள் நிவேதிதா..

மதன்பூர் மகாராஜாவின் மகளை அவள் கணவன் உதாசீனம் செய்வதா..? அவளென்ன கிள்ளுக்கீரையா..? யாரென்று நினைத்து விட்டான்..? அவள் நிவேதிதா.. சும்மா விடமாட்டாள்…

வீட்டுக்கு வந்ததும்.. சுரேந்திரன் தோட்டத்தில் தனிமையை நாடிப் போய்விட.. பொறுக்க முடியாத நிவேதிதா தோட்டத்திற்கு அவனைத் தொடர்ந்து போனாள்…

“ஐ வான்ட் டு டாக் வித் யு சுரேன்…”

“பட்.. ஐ டோன்ட் வாட் இட்.. எனக்கு தலையை வலிக்குது.. தனியாய் இருக்க விடு.. ப்ளீஸ் கோ இன்சைடு தி ஹவுஸ்…”

“ஓ.. அந்த அளவுக்கு வந்தாகி விட்டதா..? தனியே இருக்கனும்னு நினைக்கிறவர் எதுக்காக மேரேஜ் பண்ணிக்கனுமாம்..?”

“நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கனும்னு நினைக்கவேயில்லை… நீதான் துரத்தித் துரத்தி என்னைக் காதலிச்சு மேரேஜ் பண்ணிக்கச் சொல்லிக் கெஞ்சின.. நான் உன்னைத் தேடி வரலை.. நீதான் என்னைத் தேடிவந்த..”

சுரேந்திரன் கோபத்துடன் நிவேதிதாவின் மனதைக் காயப்படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில் தெரியாத்தனமாக தோட்டத்துப் பக்கம் வந்து விட்டாள் வித்யா..

அவளைக் கண்டதும் வெகுண்டு போன நிவேதிதா.. கொதிப்புடன் அவள் பக்கம் கை நீட்டி…

“யெஸ்.. நானும் அதைத்தான் சொல்றேன்.. நான்தான் உங்களைத் தேடி வந்தேன்.. நீங்க என்னைத் தேடி வரலை.. இவளைத் தேடி வந்தீங்க..” என்று வித்யாவின் பக்கமாக கை காட்டினாள்…

வித்யா திகைத்துப் போய் நின்று விட்டாள்.. அவளை வைத்துக் கொண்டு நிவேதிதா இப்படிப் பேசிவிடுவாள் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை…

“ஷட் அப்..” சுரேந்திரன் நிவேதிதாவிடம் சீறிவிட்டு..

“ஸாரி அண்ணி…” என்று வித்யாவிடம் சொன்னான்..

“திட்டறது இங்கே.. ஸாரி அங்கேயா..? என்னடா.. வொய்பை எது சொன்னாலும் இவர் பொறுத்துக்கிட்டுப் போகிறாரே.. அவ்வ்வ்வ்வளவு நல்லவரா இவர்ன்னு யோசிச்சேன்.. கதை இப்படிப் போகுதா..?” நிவேதிதா விடுவதாக இல்லை..

“உன்னை வாயை மூடச் சொன்னேன்…”

“நான் ஏன் வாயை மூடனும்.. காதல் அங்கே.. மேரேஜ் இங்கேயா..? எனக்கு இரண்டில் ஒன்று தெரிஞ்சாகனும்…”

பொறுக்க முடியாமல் சுரேந்திரன் கையை ஓங்கியபோது…

“பொறு சுரேன்..” என்ற குரல் கேட்டது…

அந்தக்குரலை அடையாளம் கண்டு கொண்ட வித்யாவும்.. சுரேந்திரனும் திரும்பிப் பார்த்தார்கள்.. நரேந்திரன் வந்து கொண்டிருந்தான்.. 

“நீ தெரிந்துக்க வேண்டியது நிறைய இருக்கு சுரேன்.. அதுக்குள்ளே கையை ஓங்கினா எப்படி..?” என்று சுரேந்திரனிடம் சொல்லிவிட்டு நிவேதிதாவின் பக்கம் திரும்பினான் நரேந்திரன்..

“உனக்கு என்ன தெரியனும் நிவேதிதா..?”

நரேந்திரனின் நேரடியான இந்தக் கேள்விக்கு நிவேதிவினால் பதில் சொல்ல முடியவில்லை.. அவளையு மறியாமல் அவள் சுரேந்திரனின் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்றாள்.. மனைவியின் அந்தச் செய்கையில் மனதை மயிலிறகு வருடுவதைப் போல உணர்ந்தான் சுரேந்திரன்.. ஒரு கணவனாக.. மனைவியின் சார்பாக அண்ணனிடம் பேசினான்..

“என்ன விசயம் அண்ணா..?”

“அதை உன் வொய்ப்தான் சொல்லனும் சுரேன்.. உனக்கு நிவேதிதாவின் மனதில் என்ன இருக்குன்னு தெரியுமா…?”

“கொஞ்சம் தெரியும் அண்ணா.. இவ கார்த்திகாயினி தேவியின் ஒன்றுவிட்ட தங்கைங்கிறதாலே அண்ணி மேல கோபமாய் இருக்கிறான்னு தெரியும்…”

“அங்கேதான் உன் கணக்கு தப்புது சுரேன்.. உன் வொய்ப் கோபமாய் இருக்கிறது.. என் மேலேயும்தான்.. நிவேதிதா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் உன்மேல இருந்த காதலினால் இல்லை.. என்மேலே இருந்த பகையால் உன்னைத் தேடிப் பிடித்துக் காதலித்து கல்யாணம் பண்ணியிருக்கா..”

“அண்ணா…”

“நிவேதிதாவின் நோக்கம் எது தெரியுமா..? எந்தக் குடும்பத்தைக் காரணமாக வைத்து நான் கார்த்திகாயினியை வேண்டாம்ன்னு சொன்னேனோ.. அந்தக் குடும்பத்தை விட்டு என்னைப் பிரிக்கனும்.. 

அந்தக் குடும்பம் என்னைத் தூக்கி எறியனும்.. அதுதானே நிவேதிதா…?”

சுரேந்திரன் அதிர்ச்சியுடன் நிவேதிதாவின் கையைப் பிடித்து முன்னால் இழுத்தான்….

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link