Chapter 33
நதியோரம் நடந்த போது..
மெல்லத் தொட்ட தென்றல்காற்று..
என்னை விட்டுப் போகாமல்..
மனதை வருடும் பூங்காற்று…
-நதியோரம் நான் நடந்த போது-
நரேந்திரன் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள் நிவேதிதா.. புருவங்கள் முடிச்சிட.. துளைக்கும் பார்வையுடன் தம்பி மனைவியை கேள்வி கேட்டான் நரேந்திரன்…
“உன் அக்காவின் வாழ்க்கையிலே கஷ்டம் வந்தா அதை சரி செய்யப் பார்க்கனும்.. அதை விட்டு
விட்டு மத்தவங்க மேலே பழி போட்டு அவங்களைப் பழிவாங்கக் கிளம்பக்கூடாது.. நீ என் குடும்பத்தை பிரிக்கப் போகிறயா..?”
“இத்தனை நாளா இது எனக்குத் தெரியாமல் போச்சேண்ணா…”
“எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.. கார்த்திகாயினி மதன்பூரில் என்னைச் சந்தித்தாள்.. அப்போதே நிவேதிதாவின் நோக்கத்தைச் சொல்லிட்டா…”
இதைச் சொல்லிய நரேந்திரனின் கண்களைச் சந்தித்த வித்யாவின் விழிகளில் வேதனை
இருந்தது.. மனைவியின் கண்ணோடு கண் கலந்த நரேந்திரன் வித்யாவைப் பார்த்தபடியே சுரேந்திரனிடம் பேசினான்…
“அவ என் காதலியாய் என்னைச் சந்திக்கலை சுரேன்.. ஒரு தோழியாகத்தான் என்னைச் சந்திச்சா.. அவளோட வாழ்க்கையைச் சொல்லி அழுதா… என்னால் அதைக் கேட்டுட்டு சும்மா இருக்க முடியலை சுரேன்.. அவளோட கணவனைப் போய் பார்த்தேன்.. அவங்க சேர்கிறதுக்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டேன்.. அவ கஷ்டப் படறதைப் பார்த்த பின்னாலே அவளை அப்படியே விட்டுவிட என்னாலே முடியலை சுரேன்.. என் மனசில இதுக்குக் காரணம் நான் தானோன்னு குற்ற உணர்வு வந்துருச்சு..”
‘இதுக்காகத்தான் அடிக்கடி வெளியூர் போனானோ..’ வித்யா லேசாக மனம் தெளிந்தாள்…
“இப்ப அவங்க ஒற்றுமையாய் ஆகிட்டாங்க சுரேன்.. கார்த்திகாயினி அவ கணவனோட சேர்ந்துட்டா..
இங்கே வந்து பார்த்தா உன் வொய்ப் நம்ம வீட்டிலே வேற்றுமையை உண்டு பண்ணிக்கிட்டு இருக்கா.. கார்த்திகாயினி தேவிக்காக இவதான் வித்யாவை பழி வாங்கிக்கிட்டு இருக்கா…”
“நான் பார்த்துக்கிறேன் அண்ணா…”
“இதை முதலிலேயே நீ செய்திருக்கனும்.. பேக்டரியில நீ வித்யாவிடம் பட்டுன்னு பேசிட்டயே.. நீ பேசின வார்த்தைகளை உன்னாலே திருப்பி வாங்கிக்க முடியுமா…?”
நரேந்திரனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்ற நினைவில் தலை குனிந்தான் சுரேந்திரன்…
“ஐ ஆம் ஸாரி அண்ணா…”
“ஸாரி சொல்லி சரி பண்ண முடியாத விசயங்களும் நம் வாழ்வில் இருக்கு சுரேன்.. உன் வொய்ப் புத்திசாலி.. நம்ம குடும்பத்திலே மகியும் யுகேயும் என்னோட ஒற்றுமையாய் இல்லைங்கிறதை தெரிஞ்சு வைத்துக் கிட்டா.. மிச்சம் இருக்கிறது நீ மட்டும்தான்.. உன்னையும் என்னையும் பிரிக்க திட்டம் போட்டு
செயல் படுத்திக்கிட்டு இருக்கா…”
“இனி இது போல நடக்காதுண்ணா.. இவ நினைச்சா உங்களையும்.. என்னையும் பிரிச்சுர
முடியுமா..? அண்ணா.. நான் நம்ம அம்மாவைக் கூட விட்டுப் பிரிவேன்.. உங்களை விட்டு ஒர் நாளும்
பிரிய மாட்டேன்..”
இதை நிவேதிதாவைப் பார்த்தபடி சொன்னான் சுரேந்திரன்.. அவன் குரலில் தொனித்த உறுதியில் நிவேதிதா.. உதட்டைக் கடித்தபடி தலை குனிந்தாள்.. எதையோ செய்யப்போக.. எதுவாகவோ ஆகிவிட்டதில் அவளுக்குள் கணவனின் காதலையும்.. அன்பையும் இழந்து விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது…
நரேந்திரனுடன் பேசியபடி சுரேந்திரன் வீட்டுக்குள் சென்று விட்டான்.. போகும்போதே நரேந்திரன் திரும்பி வித்யாவை கண்ணசைவில் அழைக்க.. அவளும் நரேந்திரனைத் தொடர்ந்து விட்டாள்.. சுரேந்திரன் நிவேதிதாவைத் திரும்பியும் பார்க்கவில்லை…
நிவேதிதா தனிமையாக உணர்ந்தாள்.. தன்னை நொந்தபடி வீட்டுக்குள் போனாள்.. அங்கே எல்லோரும் கூடி நிற்க.. நரேந்திரன் அவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. சுரேந்திரனின் பக்கம் திரும்பினான்…
“இந்த அரண்மனை நம்ம அப்பா.. அம்மா வாழ்ந்த அரண்மனை சுரேன்.. இங்கே அவங்க
பெற்ற பிள்ளைகளான நாம ஒற்றுமையாய் வாழனும்.. அப்படி வாழ முடியலைன்னா அவரவர் வழியில் வாழப் போயிடனும்.. அதுக்காகத்தான் உங்களுக்கெல்லாம் சொத்தைப் பிரித்துக் கொடுத்தேன்.. கடைசி வரை அம்மா என் பாதுகாப்பில் இருக்கனும்கிறதுக்காக இந்த அரண்மனையை நான் எடுத்துக்கிட்டேன்..
தாய்க்குப் பின் தாரம்.. அம்மாவைக் காப்பாற்ற நினைக்கிறவன் மனைவியை விட்டு விடுவேனா..?
இது வித்யாவின் வீடு.. அவ யாரையும் உதாசீனம் செய்ய மாட்டா.. அப்படி அவ செய்தா அதை நான் கண்டிப்பேன்.. ஆனா அவ பாட்டுக்கு அவளோட வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கும் போது அவளிடம் மத்தவங்க வம்பு பண்ணினா பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டேன்..”
நரேந்திரன் அங்கிருந்த எல்லோரையும் பார்த்தபடி பேசினான்.. அனைவரும் உதட்டைக் கடித்தபடி நிலம் பார்த்தார்கள்.. நரேந்திரனின் கோபத்தில் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள்..
“எல்லோரும் ஒன்றாய் இருக்கனும்னு அம்மா ஆசைப்பட்டாங்க.. மனசில வேற்றுமை வைத்துக்கிட்டு ஒற்றுமையாய் ஒரே வீட்டில் இருக்கிறது கஷ்டம்ன்னு அவங்களுக்குப் புரியலை.. சுரேந்திரனின் கல்யாணத்தை சாக்காக வைத்துத்தானே எல்லோரும் இந்த வீட்டில் இருந்தீங்க..? அதுதான் அவனின் கல்யாணம் முடிந்துருச்சே.. இனி எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குப் போய் விடலாமே…”
மீனலோசனி மகேந்திரனின் முழங்கையை சுரண்டினாள்…
“என்னடி..” என்றான் அவன்…
“தணிஞ்சு பேசுங்க.. பெரியவர் ரொம்ப கோபமாய் இருக்கிறார்…”
“கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க..? எல்லா வேலைகளையும் நீங்க பண்ணித் தொலைங்க.. உங்களைக் கட்டிக்கிட்ட பாவத்துக்கு.. நாங்க எங்க அண்ணனிடம் பேச்சு வாங்கறோம்…”
அலுத்துக் கொண்ட மகேந்திரன்.. நரேந்திரனைப் பார்த்து…
“எங்களாலே எந்தப் பிரச்னையும் வரலையே அண்ணா…” என்றான்…
“உனக்கு எல்லாம் தெரியனும் மகி.. பிரச்னையை உண்டு பண்றது யாருன்னு உனக்குத் தெரியாமலிருந்தா எப்படி..? இந்த வீட்டுக்குள்ளே நிவேதிதா பிரச்னையை உண்டு பண்ணியிருக்கலாம்.. அதை தூண்டி விட்டது யாரு..?” கண்டிப்புடன் கேட்டான் நரேந்திரன்…
“அண்ணா…” மகேந்திரன் மென்று விழுங்கினான்..
“இது வித்யாவின் வீடு மகி.. இங்கே அவ வைத்தது தான் சட்டம்.. அதை மாத்த யாராலேயும் முடியாது.. அவ விருப்பப்படிதான் இந்த வீடு இருக்கும்.. அதை ஏத்துக்கிட்டு இருக்கிறவங்க எங்க
கூட இருக்கலாம்.. அப்படி இருக்கிறவங்க மட்டும் எங்க கூட இருந்தால் போதும்.. மத்தவங்க அவங்கவங்க வீட்டுக்குப் போகலாம்..”
யாரும் அங்கிருந்து வெளியேறப் போவதாக அறிவிக்கவில்லை.. நரேந்திரன் சொன்னதை ஏற்றுக் கொள்வதைப் போல அமைதியாக இருந்தார்கள்..
நிவேதிதா வித்யாவின் அருகில் நெருங்கி சன்னமான குரலில்…
“ஸாரி..” என்றாள்…
“இட்ஸ் ஆல் ரைட்..” பெருந்தன்மையாகப் பதில் சொன்னாள் வித்யா…
“என்ன பிரபா இது.. ஆனானப்பட்ட மதன்பூர் மகாராஜாவின் மகளாலேயே இந்த வித்யாவை ஒன்னும் பண்ண முடியலைன்னா நாம எம்மாத்திரம்..?” பிரபாவதியின் காதை ரகசியமாக கடித்தாள் மீனலோசனி…
“நாமன்னு என்னையும் கூட்டுச் சேர்க்காதீங்க அக்கா.. ஏற்கனெவே என் அண்ணனும் அண்ணியும் உங்க கூடப் பேசக்கூடாதுன்னு வார்ன் பண்ணியிருக்காங்க.. இப்ப என்னடான்னா பெரியவரு உத்தரவே போட்டுட்டாரு.. எனக்கெதுக்கு இந்த வேலை..? அரண்மனையிலே இருக்கனும்னா அந்த வித்யாவின் வம்புக்கு போகாமலிருந்தாத்தான் முடியும்ன்னா அது வம்புக்கு நான் ஏன் போகனும்..?” பிரபாவதி கழண்டு கொண்டு விட்டாள்..
“உனக்கே இவ்வளவு விவரம் இருக்கும்போது எனக்கு இருக்காதா…? நீ மட்டும் அரண்மனையிலே குடியிருக்க நான் வெளியேறனுமா..? அவ வம்புக்கு நானும் போகப் போறதில்லை..” மீனலோசனி தான் கெட்டிக்காரி என்பதை உறுதிசெய்தாள்…
“வா.. வித்யா…”
நரேந்திரன் மாடியேறினான்.. வித்யா பின் தொடர்ந்தாள்.. அறைக்குள் போனதும் கதவை அடைத்தவன்.. அவளைப் புயல் வேகத்தில் ஆக்ரமித்தான்.. இத்தனை நாளாய் இந்தக் காதலை எங்கே ஒளித்து வைத்திருந்தான் என்று வித்யா திணறிப் போனாள்…
“என்ன தைரியம்டி உனக்கு.. என் காதல் மேலேயா சந்தேகப் படற..? பூர்ணி மட்டும் உன் கூடவே இருப்பா.. நான்கூட இருக்க மாட்டேனா..? கொன்று விடுவேண்டி..”
“ஆனா நரேன்.. மதன்பூரில் கார்த்திகாயினி உங்க தோள் மேலே சாய்ந்திருந்தா… அதைப் பார்த்த எனக்கு எப்படியிருந்திருக்கும்..?”
“ஏண்டி.. என்னிடம் அதைக் கேட்கலை..?”
“எப்படிக் கேட்பேன்..?” வித்யா விம்மினாள்…
அவளின் கண்ணீரில் நரேந்திரனின் சட்டை நனைந்தது…
“போடி பைத்தியம்…” மனைவியின் கண்ணீர் துளிகளைத் துடைத்து விட்டபடி மிருதுவாகப் பேசினான் நரேந்திரன்…
“நான் பைத்தியம்தான் நரேன்.. உங்க மேலே காதல் வைச்ச பைத்தியமா நானிருக்கேன்.. உங்க மனசு மட்டும்தான் எனக்கு வேணும் மத்தபடி இந்த அரண்மனை.. பேக்டரின்னு எதுவும் வேணாம்..”
“முட்டாள் போலப் பேசாதே.. இதையெல்லாம் நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமாடி..? அவதான் என் தோளில் சாய்ந்தா.. நான் உடனே விலக்கி விட்டுட்டேன்..”
“விலகி வரவில்லை…”
“எப்படி வர முடியும்..? அவ என்னிடம் காதல் சொன்னவங்கிறதுக்காக நான் இதைச் சொல்லலை.. பழகின ஒரு தோழி… தன் துயரத்தைச் சொல்லி அழுகிறப்ப அதைக் காது கொடுத்துக் கேட்காம விலகி வரலாமா..?”
“அவ தோழி மட்டும்தானா..?”
“இப்ப யோசித்துப் பார்க்கிறப்ப நிச்சயமாய் அது மட்டும்தான்னு எனக்குத் தோணுது.. எப்போதும்
அவ நினைவாய் நான் இருந்ததில்லை.. அவ விட்டுவிட்டுப் போனவுடன் வேற பெண்ணை
கல்யாணம் பண்ணிக்க தயாரானவன்தான் நான்.. ஆனா வித்யா உன்னைப் பார்த்த பின்னாலே உன் நினைவாவே நான் எப்போதும் இருந்திருக்கேன்.. நீ விட்டுவிட்டுப் போயிருந்தா உன்னைத் தேடிப்
பிடிச்சுக் கொன்றுவிட்டு நானும் செத்திருப்பேனே தவிர உன்னைத்தவிர வேற ஒருத்தியை நினைத்தும் பார்த்திருக்க மாட்டேன்…”
“நரேன்…”
வித்யா பதறிப் போனவளாக நரேந்திரனின் வாயை மூடினாள் மூடிய அவளது உள்ளங்கையில் முத்தம் பதித்தான் நரேந்திரன்.. அவளின் கையை விலக்கி தன் கன்னத்தில் அழுந்தப் பதித்துக் கொண்டவன்.. வித்யாவை ஊன்றிப் பார்த்தபடி சொன்னான்..
“கார்த்திகாயினி என்னைக் காதலித்தது எனக்காக இல்லை வித்யா.. என் ராஜ பரம்பரைக்காக.. அவளுக்குப் பொருத்தமான மணமகனா.. ராஜ பரம்பரையில் பிறந்தவனா.. வெளிநாட்டில் படித்தவனா நானிருந்தேன்.. நான் மட்டும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவனா இருந்திருந்தா அவ என்னைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டா… நீ அப்படியில்லைடி.. என்னை எனக்காகவே காதலிச்ச.. அவ அப்படி இல்லைடி…”
“வேண்டாம் நரேன்…”
என்னதான் கார்த்திகாயினி தேவி இன்னொருவனின் மனைவியாக இருந்தாலும்.. ஒரு காலத்தில் நரேந்திரனைக் காதலித்தவள் என்ற எண்ணத்தில் அவளைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தாள் வித்யா…
ஆனால் நரேந்திரன் அந்தப் பேச்சை அப்படியே விடுவதாக இல்லை…
“எதுடி வேண்டாம்..? நான் உனக்கு வேண்டாமா…?” என்று வம்புக்கு இழுத்தான்…
“ஐயோ…” துடித்துப் போனாள் வித்யா…
“துடிக்குதில்ல.. கேட்கிறப்பவே உனக்கு துடிக்குதில்ல.. இந்தத் துடிப்பு அவளிடம் இருக்காது.. ஏன்னா அவ என் அந்தஸ்தைப் பார்த்து என் கூடப் பழகினவ.. எனக்காக என்னைக் காதலித்தவ இல்லை…”
“என் நரேன்…”
கைப்பொருள் என்றுமே களவு போகாது என்ற நிச்சயத்தைப் பெற்று விட்ட நிம்மதியுடன் நரேந்திரனின் மார்பில் சாய்ந்தாள் வித்யா…
“உன்னுடைய நரேந்திரன் தாண்டி.. என் உடம்பும்.. மனசும் உனக்கு மட்டும்தான் சொந்தம்.. மத்தவங்களை என்னோட சம்பந்தப் படுத்தி நினைச்சேன்னு வை.. நான் மனுசனா இருக்க மாட்டேன்…”
வித்யாவை இறுக்கி அணைத்துக் கொண்டான் நரேந்திரன்.. அந்த இறுக்கமும்.. நெருக்கமும் உணர்த்திய சொந்தத்தில் வித்யாவின் மனதிலிருந்த சஞ்சலங்கள் விலகி ஓடின.. ஆனாலும் அவள் மனதில் சில கேள்விகள் பாக்கியிருந்தன.. அதை எப்படிக் கேட்பது என்று புரியாமல் அவன் தலை முடியில் விரல் விட்டு அளைந்து கொண்டிருந்தவளிடம்..
“கேட்டுவிடு..” என்றான் நரேந்திரன்…
வித்யா திகைத்துப் போனவளாக கணவனைப் பார்த்தாள்..
“எதை..?”
“உன் தலைக்குள் குடாய்ந்து கொண்டிருக்கும் கேள்விகளை..”
‘கண்டு பிடித்து விட்டான்..’ ரகசியப் புன்னகை வித்யாவிடட்ம மலர்ந்தது..
“நீங்க என்னிடம் கலகலப்பா பேசலை…” மனக்குறையுடன் சொன்னாள்..
“நிவேதிதா இந்த வீட்டின் அமைதியைக் குலைத்திருவாளோன்னு கவலை.. அவளால் நானும் சுரேனும் மோதிக்க வேண்டி வந்திருமோன்னு கவலை.. இத்தனைக்கும் மேலா..” அவன் இடைவெளி விட…
“கார்த்திகாயினியைப் பற்றிய கவலை…” வித்யா எடுத்துக்கொடுத்தாள்..
“நீ அவளை விடவே மாட்டியா..? ஆனா வித்யா.. நீ சொன்னதுதான் உண்மை.. அவளைப் பத்தின கவலையும் என் மனசில் இருந்தது.. ஒரு குற்ற உணர்வு.. உன் கூடச் சிரிச்சுப் பேச முடியாம அவ துயரம் ஊடே வந்தது டி…”
“புரியுது…”
“நீ புரிஞ்சுக்குவேன்னு எனக்குத் தெரியும்டி…”
“ஆனா.. அவ போனை நான் அட்டெண்ட் பண்ணினதுக்காக என்னை நீங்க கண்டிச்சிங்க…” வருத்தத்துடன் சொன்னாள் வித்யா…
“போனை எடுத்துப் பேசினவ சகஜமா பேசியிருக்க வேணாமா..? அது முடியலைன்னா பேசியிருக்கவே கூடாது.. யார் போனை எடுத்ததுன்னு அவகேட்டா.. அவ பேசினதும் கட் பண்ணிட்டாங்கன்னு சொன்னா.. அவ நம்மைப் பத்தி என்ன நினைச்சுக்குவா..? அந்தக் கோபம்தான்…”
“அவ போனில் பேசின பேச்சில் நான் அதிர்ந்துட்டேன் நரேன்…”
“என்ன சொன்னா…?”
“இந்த நேரத்தில் நீங்க என்கூட இருந்திருக்கனும் நரேந்தர்.. ஏன் வரலைன்னு கேட்டா…” வித்யாவின் முகம் கன்றிச் சிவந்தது…
“என்மேல் உனக்கு நம்பிக்கையே வராதாடி..? அவளோட கணவனும் அவளும் ஒன்றாய் சேர்ந்துட்டாங்க.. என்னை விருந்துக்கு கூப்பிட்டிருந்தாங்க.. அதைத்தான் அவ அந்த லட்சணத்தில் சொல்லியிருக்கா.. நீ இந்த லட்சணத்தில் புரிந்துக்கிட்டு இருக்க..”
“அவ கொடுத்த விருந்து எப்படியிருந்தது..?”
“நான்தான் போகலையே…”
“இப்ப நீங்க போயிருந்தது..?”
“சென்னையில் ஒரு கம்யூட்டர் கம்பெனியை ஆரம்பிக்கலாம்கிற எண்ணம்டி.. சுரேந்திரனை அங்கே அனுப்பி வைத்து விடலாம்கிற திட்டமிருக்கு.. பேக்டரி நமக்கு.. கம்யூட்டர் கம்பெனி அவனுக்குன்னு
ரெஜிஸ்டர் பண்ணிரப் போறேன்.. அவன் சிட்டி லைப்பை விரும்புகிறவன்.. நிவேதிதாவின் குணத்துக்கு மணிமுத்தாறு அவனுக்கு சரிப்பட்டு வராது.. அவனுக்குத்தான் அங்கே அவன் பங்குக்கு வந்த
வீடு இருக்கே…”
“பேக்டரியில் அவருக்கும் பங்கிருக்கே..”
“அதை விலை போட்டு வாங்கிக்கிட்டதாய் கணக்குக் காட்டித்தான் ரெஜிஸ்ட்ரேசன் நடக்கப் போகுது.. இதைப்பற்றி ஏற்கனெவே சுரேன்கிட்டப் பேசிட்டேன்.. அவனும் ஒப்புக்கிட்டான்..”
“கம்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்க கோடிக் கணக்கில் பணம் தேவைப்படுமே.. இப்பத்தானே பாகம் பிரிச்சிருக்கீங்க..”
“அந்தக் கவலை உனக்கெதுக்கு..? நான் கடனுக்குப் பழகினவன்.. அவ்வளவு கடனை அடைத்தவன்.. இந்தக் கம்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிறதுக்காக வாங்கும் கடனை அடைக்க மாட்டேனா..?”
“ஆனா.. இது ஏன் நரேன்..?”
வித்யா தவிப்புடன் கேட்டபோது.. அவள் முகத்தை கைகளில் ஏந்தி காதலுடன் சொன்னான் நரேந்திரன்..
“உனக்காகடி.. பேக்டரிக்குள்ளே உன்னைக் கேள்வி கேட்க யாரும் வரக்கூடாது.. அது உன்
புருசனுக்கு மட்டும் சொந்தமானதாக.. உனக்கு மட்டும் உரிமையானதாக இருக்கனும்.. நான் இல்லாதப்ப நீ
பட்ட பாட்டை குகன் போனில் சொன்னான்டி.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. இனி அங்கே உனக்கு இணையா யாரும் இருக்கக் கூடாதுன்னு…”
“எனக்காகவா நரேன்..?” வித்யா கண்கலங்கிவிட்டாள்..
அப்போதுதான் பாரம் இறக்கி வைத்திருந்த அவளுடைய கணவன் அவளுக்காக மீண்டும் பாரம் சுமக்க ஆயத்தமாகி விட்டானா..?
“அழாதே கண்ணம்மா.. உன் மனது ஈர மனதுடி.. உன் நிழலில் வாழ்கிறவங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறவ நீ.. அதைக் கேள்வி கேட்க யாரும் வரக் கூடாது…”
“கார்த்திகாயினி வீட்டு விருந்து..?”
“இன்னொரு நாள் வருகிறோம்ன்னு சொல்லியிருக்கேன்…”
“வருகிறோமா…”
“ம்ம்ம்.. வருகிறோம்தான்.. அவ உன்னையும் சேர்த்துத்தான் விருந்துக்கு கூப்பிட்டா.. இப்ப முடியாது அடுத்த வாரம் வர்றோம்ன்னு சொல்லியிருந்தேன்.. இனிமேத்தான் போன பண்ணி என் பெண்டாட்டி வாந்தியும்.. மசக்கையுமா இருக்கிறா.. அவ என் பிள்ளையை பெத்துக் கொடுத்த பின்னாலே நாங்க மூணு பேருமா வர்றோம்ன்னு சொல்லனும்…”
நரேந்திரன் குனிந்து வித்யாவின் வயிற்றில் முத்தமிட வித்யா சிலிர்த்துப் போனாள்…
“எப்படித்தெரியும் நரேன்..? நான் சொல்லலையே..”
“நான் நரேந்திரன்டி.. நீ நரேந்திரனின் பெண்டாட்டி.. உன் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குத் தெரிந்துவிடும்.. டாக்டர் நம்ம பேமிலி டாக்டர்..” நரேந்திரன் கண் சிமிட்டினான்…
“நரேன்..” வித்யா அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள்…
அவளுடைய நரேந்திரன் அவளை விட்டு எங்கும் போய்விடவில்லை.. அவன் அவளுக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உறுதியில் அவள் மனம் அமைதியடைந்தது…
“நான் ரொம்ப பயந்து போயிருந்தேன் தெரியுமா..?”
“தெரியுமே.. என் பெண்டாட்டி முகத்தில சின்ன மாறுதல் வந்தாக்கூட எனக்குத் தெரிஞ்சுரும்.. இது தெரியாம போயிருமா..? ஆனாலும் உன்னைச் சமாதானப் படுத்தனும்னு எனக்குத் தோணலை…”
“ஏன்..?” வியப்புடன் கேட்டாள் வித்யா…
“ஏனா..? கன்னம் வீங்கி விடும்…”
“எதற்காம்..?”
“ஓங்கி ஒரு அப்பு அப்பினா கன்னம் வீங்காதா..?”
“ஓ.. அடிப்பீங்களோ..”
“அடிக்க மாட்டேனா..? உன் மனசில பயம் வரலாமாடி..? அந்த மாதிரியா நீயும் நானும் காதலிச்சோம்..? நீ இல்லைன்னா நான் இல்லைடி.. இது தெரியாம பினாத்தியிருக்கியே… உன்னை என்ன செய்தால் தேவலாம்..?”
எதுவும் செய்து கொள் என்று அவன் கையில் முழுமனதாய் தன்னை ஒப்படைத்தாள் வித்யா.. கூடிக் களித்தவனின் ஆவேசம் அடங்கியதும் திருப்தியுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்…
“இது போல நீயும்.. நானும் சந்தோசமாய் இருக்கிறப்ப கார்த்திகாயினி மட்டும் அவ கணவனை விட்டு விலகி நிற்கிறாளேங்கிற எண்ணம்தாண்டி எனக்கு.. அந்த நினைப்பு என் மனசில நெருஞ்சி முள்ளாய் குத்திக்கிட்டு இருந்ததுடி.. உன்னோடு சிரிச்சு பேச முடியாம என் மனசு வலிச்சது…”
“அவ பாவம்தான் நரேன்.. அவளோட ஹஸ்பெண்டுக்கு ஏன் அப்படிப் புத்தி போனது..?”
“ஆம்பளைத்திமிர்.. உன் புருசனுக்கும் ஒரு காலத்தில அந்தத் திமிர் இருந்ததுதானே…?”
நரேந்திரனின் பேச்சில் வித்யாவின் முகம் மாறிவிட்டது… மனச் சுணக்கத்துடன் விலக முயன்றாள்.. அவள் கைபிடித்து தடுத்தான் நரேந்திரன்…
“இப்ப எதுக்காக விலகப் பார்க்கிற..?”
“பின்னே..? இப்படிப் பேசினா விலகாம என்ன செய்வாங்களாம்..”
“போடி.. நீயும்.. உன் கோபமும்.. நிலைதடுமாறின என்னை சரியான வழியில இழுக்க உன்னால முடிந்திருக்கிறப்ப.. கார்த்திகாயினியால அது முடிய வேணாமா…?”
“ஆக.. ஐயா அவளுக்குத்தான் அட்வைஸ் பண்ணியிருக்கீங்க… அவ ஹஸ்பெண்டுக்கு பண்ணலை.. நினைச்சேன்.. உங்க ஆம்பளைப் புத்தி இப்படித்தான் யோசிக்குன்னு…”
வித்யா படபடவென்று பொரிந்தாள்.. அவள் கோபத்தை அவன் புன்னகையுடன் ரசித்தான்…
“அடியே.. என் நியாயக்கார பெண்டாட்டியே.. கார்த்திகாயினியின் புருசன் பலதடவை மனம் திருந்தி வந்திருக்கிறான்.. வந்தவனிடம் இவ இணக்கமா பேசி குடும்பம் நடத்தாம பழசையே சொல்லிக் காட்டியிருக்கா.. அவன் பொறுக்க முடியாம பழைய வாழ்க்கைக்கே திரும்பி ஓடிப் போயிட்டான்..”
“அவ ஹஸ்பெண்ட் அநியாயம் செய்தால் அவ அதைச் சொல்லிக் காட்டக் கூடாதா..?”
“குத்திக் காட்டக் கூடாது.. தப்பு பண்ணிட்டேன்.. மன்னிச்சுடுன்னுதானே அவன் வந்திருக்கான்..? இவ அதையே திரும்பத் திரும்ப குத்திக் காட்டிக்கிட்டு இருந்தா.. திருந்தினாத்தானே இந்த வம்புன்னு அவனுக்குத் தோணிப் போயிருமா.. இல்லையா…?”
“ஓ.. இதில இவ்வளவு இருக்கா…?”
“இதுக்கு மேலயும் இருக்கு.. அது எதுக்கு நமக்கு..? இப்ப அவ தன் தப்பை உணர்ந்துக்கிட்டா.. அவளோட புருசனும் இதுக்காகவே காத்திருந்திருக்கான்.. இரண்டு பேரும் பசை போடாமலேயே ஒட்டிக்கிட்டாங்க…”
சந்தோசமாக சிரித்தவனைக் கனிவுடன் பார்த்தாள் வித்யா…
‘இவனுக்குத்தான் கார்த்திகாயினியின் வாழ்க்கை சரியாகி விட்டதில் எத்தனை சந்தோசம்…!’
ஒரு காலத்தில் அவனைப் புறக்கணித்தவள் கார்த்திகாயினிதேவி.. அவனுடைய திருமணம் தடைபட்டுக் கொண்டிருந்ததிற்கு அவளே முதல் காரணமாக அமைந்தாள்..
அப்படிப்பட்டவளின் இல்லற வாழ்வு இனிமையானதாக அமையாமல் போனதில் வியப்பேதும் இல்லை.. அது கடவுள் கொடுத்த தீர்ப்பு…
ஆனால்.. அதைக் கேட்டதும் மனம் பதறிப் போனவனாக அவள் வாழ்வை சரி செய்தானே.. நரேந்திரன்.. அவனின் மனம் வானத்தை விடப் பரந்து விரிந்த பெரிய மனமல்லவா..?
வித்யாவின் மனதில் குளிர்காற்று படிந்ததைப் போல இருந்தது.. அவளின் மனக்குளிர்ச்சியில் அவளும் குளிர்ந்தாள்..
நதியோரம் நடக்கும் போது ஈரக் காற்றுதானே உடலைத் தழுவும்…?
– முற்றும் –
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.