Chapter 03
சொல்லாலே சுட்டவளே..
நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயன் நட்பை ஆராதிக்கிறானோ… இல்லையோ.. அவமரியாதை செய்ய மாட்டான்.. கிருஷ்ணன் சாருலதாவின் மீது பைத்தியமாக இருப்பதை அவளிடம் சொல்லத்தான் அவன் வந்தான்.. ஆனால், வந்த இடத்தில் சாருலதாவின் புது விதமான பார்வையைச் சந்தித்ததும் அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை..
‘அடக் கஷ்டகாலமே.. பட்ஷி இப்படி என்னைப் பாருகுவது போல் பார்த்து வைத்தால் நான் கிருஷ்ணனுடைய காதலைச் சொல்வது எப்படி..? இவளுக்கு கொஞ்சமாவது நியாய.. அநியாயம் தெரிகிறதா.. அவன்தான் இவள் நடந்து வரும் பாதையில் பூப்போட்டுக் கொண்டு இருக்கிறானே.. இந்தப் பார்வையை அவன் பக்கம் வீசினால், அவன் பிழைத்துக் கொள்வான்.. அதை விட்டுவிட்டு.. என்னைப்போய்.. மொச்சைக் கொட்டை கண்ணை விரித்துக் கொண்டு பார்க்காவிட்டால்தான் என்ன..!’
அவன் எச்சரிக்கையுடன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவும்.. சாருலதாவும் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்..
‘எழுந்து போய் விடலாமா..’ என்று யோசித்த தனஞ்ஜெயன் உடனடியாக அந்த எண்ணத்தைக் கைவிட்டான்..
வந்த வேலையை முடிக்காமல் ஒரு பெண்ணின் கண்ணிற்கு பயந்து அவன் எழுந்து போவதா..? முன்வைத்த காலை பின்வைக்காத தனஞ்ஜெயன்.. ஒரு பெண்ணின் பார்வைக்கு அஞ்சி புறமுதுகு காட்டுவதா..?
‘ஊஹும்.. இன்றைக்கு இவளிடம் கிருஷ்ணனின் காதலைச் சொல்லாமல் போகக்கூடாது..’ தனஞ்ஜெயன் தனக்குள் உறுதியை வரவழைத்துக் கொண்டு, அவளை ஏறிட்டுப் பார்த்தான்..
“நான் சொல்ல வந்தது முக்கியமான விசயம் சாருலதா..”
“ஆமாமாம்.. ராத்தூக்கம் கெடுவது முக்கியமான விசயம்தான்..”
‘இவன் என்ன.. என்னைக் கிண்டல் செய்கிறாளா..?’ அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது..
அவளுடைய பார்வையால் இளகியிருந்த அவனது சுபாவம் பழையபடி இரும்பு நிலைக்கு மாறியது..
“விடிய.. விடியத் தூங்காமல் விழித்திருந்தால் அது உடலையும் பாதிக்கும்.. மனதையும் பாதிக்கும் என்பது ஐந்தரறிவு உள்ள விலங்குகளுக்கும் தெரியும்.. ஆறறிவு உள்ள உங்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது..”
சாருலதாவின் கண்கள் அவன் சொல்வதில் இருந்த கேலியைப் புரிந்து கொண்டு மின்னின.. இப்படி ஒரு அறிவார்ந்த நையாண்டிப் பேச்சு அவனிடம் இருப்பதை.. அவள் அந்த அலுவலகத்தில் வந்து சேர்ந்த நாள் முதலாய் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. இன்றுதான் முதன்முதலாக நேரடியாக அவன் அவளிடமே தன் நையாண்டிப் பேச்சை பிரயோகிப்பதைக் கேட்கிறாள்..
“ஸோ.. இப்போது நான் தெரியாதுன்னு உங்களுக்குப் பதில் சொன்னால் எனக்கு ஆறறிவு இல்லையென்று அர்த்தமாகிவிடும்.. இல்லையா மிஸ்டர் தனஞ்ஜெயன்..?”
‘இவள் புத்திசாலி..’ தனஞ்ஜெயனின் இதழ்கள் வளைந்து சிறு குறுநகையை வெளியிட்டன..
‘பெண்களில் புத்திசாலிகள் கிடையாது..’ என்பது அவனது அபிப்ராயம்.. அதை நன்றாக அறிந்து வைத்திருந்த.. அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்கள் குலம்.. அவனோடு அவசியமாகக்கூட பேச்சு வைத்துக் கொள்வதில்லை..
“புரிந்து கொண்டுவிட்டிங்களே.. பரவாயில்லை.. உங்கள் மண்டையிலும் கொஞ்சம் மசாலா இருக்கத்தான் செய்கிறது..”
‘எவ்வளவு தைரியமிருந்தால்’ தேடி வந்து, முன்னால் அமர்ந்து.. அவனாக பேச்சை வளர்த்துக்கொண்டு, அவளை மட்டம் தட்டுவான்.. என்று கோவம் வருவதற்குப் பதிலாக அவனது அந்த தைரியத்தை ரசித்து.. அவன் மேல் ஓர் ஆர்வம்தான் சாருலதாவிற்கு வந்து தொலைத்தது..
அவள் கண்களில் சிரிப்போடு அவனைப் பார்த்தாள்… “தன்னைப் போல் பிறரையும் நினைன்னு ஏசு சொல்லிவிட்டார் என்பதற்காக.. உங்களைப் போல் என்னையும் நினைத்துவிட்டால் எப்படி..? என் மண்டையில் மசாலா இருக்கத்hன் செய்கிறது ஆமாம்.. உங்கள் மண்டையில் என்ன இருக்கிறது..? களிமண்ணா.. இல்லை செம்மண்ணா..?”
‘இதைப்பாருடா.. பட்ஷி இந்தப் போடு போடுவதை..’ தனஞ்ஜெயன் உண்மையிலேயே அவளை உற்றுப் பார்த்து வைத்தான்..
அவன் பார்த்தப் பார்வையில் சாருலதா முகம் சிவந்தாள்.. அந்த முகச் சிவப்பை கண்டவனின் மனதில் கிருஷ்ணனின் முகம் வந்து தொலைக்க.. அவன் அதைக் கண்டும் காணாதவன் போல் பேச்சைத் தொடர்ந்தான்..
“ஏன் மேடம்.. வீடு.. கீடு கட்டிக் கொண்டிருக்கிறீங்களா..?”
“எதற்குக் கேட்கறீங்க..?”
“என் தலையில் இருக்கும் மண்ணின் மேல் இத்தனை ஆர்வமாய் இருக்கீங்களே அதனால் கேட்டேன்..”
“நீங்கள் மசாலாவின் மேல் அவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது.. நான் மண்ணின் மேல் ஆர்வமாய் இருக்கக்கூடாதா..?”
“பதிலுக்குப் பதில்.. ம்ம்..?”
“யெஸ்..”
“இந்தப் புத்திசாலித்தனத்தை மற்றவங்க மனசைப் புரிந்துகொள்வதில் கொஞ்சம் காட்டினால்தான் என்ன..?”
“யார் மனசை நான் புரிந்து கொள்ளணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க..? உங்கள் மனசையா..?”
சாருலதா நேரடியாய் கேட்க.. தனஞ்ஜெயனுக்கு தூக்கிவாரிப் போட்டது..
“பொறுங்கம்மா.. அவசரப்பட்டு வார்த்தையைச் சிதறவிடாதீங்க.. அப்புறம் அதை அள்ள முடியாது..”
“அட.. நீங்கள்கூட இப்படியெல்லாம் பேசுவீங்களா..?”
“என்னம்மா செய்வது..? பேச வேண்டிய நேரம் வந்தால் பேசித்தானே ஆகவேண்டும்..?”
“இது அந்த மாதிரியான நேரம் போல..?”
“ஆமாம்..”
“ஓகே.. நீங்கள் பேசவந்ததைப் பேசுங்கள்..”
அவள் அனுமதி வழங்குபவள் போல் முகத்தை கித்தாய்ப்பாய் வைத்துக் கொண்டு சொல்லவும்.. தனஞ்ஜெயனுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
‘இவளுக்கு இருக்கிற திமிரைப் பார்.. எனக்கு இவள் பெர்மிசன் கொடுக்கிறாளாமா..? எல்லாம் இந்தக் கிருஷ்ணனைச் சொல்ல வேண்டும்.. அவன் புலம்பும் புலம்பலைத் தாங்க முடியாமல் அல்லவா.. இவளிடம் வந்து பேசித் தொலைக்க வேண்டியிருக்கிறது..’
அவன் அவளை முறைத்துக் கொண்டே பேச்சைச் தொடர்ந்தான்.. சாருலதாவிற்கு அவனது அந்தக் கோபப் பார்வை மிகவும் பிடித்திருந்தது.. ‘அவள் அதை ரசித்துப் பார்க்க ஆரம்பிக்க.. தனஞ்ஜெயனுக்குச் சொல்ல வந்ததை எப்படிச் சொல்ல..?’ என்று ஒரே யோசனையாகப் போய்விட்டது..
‘என்னை இப்படிப் பார்க்காதேன்னு நேரடியாய் சொல்லி விடலாமா..’ என்று யோசித்தவன்.. நான் எப்படிப் பார்த்தேன் என்று அவள் கேட்டு வைத்தால்.. என்ன பதிலைச் சொல்வது..! என்ற நினைவில் அவசரமாய் அந்த யோசனையை அழித்தான்..
“என் மனதை நீங்கள் புரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை மிஸ் சாருலதா..”
“அதை நீங்களாக முடிவு பண்ணினால் எப்படி மிஸ்டர் தனஞ்ஞ்ஜெயன்..”
அவன் வேண்டுமென்றே.. ‘ரூ’ போட்டு அவள் பெயரை நீட்டி முழக்க.. அவள் பதிலுக்கு.. ‘ஞ்’ ல் அழுத்தம் கொடுத்து அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்து.. தன்னை யாரென்று மீண்டும் அவனுக்கு நிரூபித்தாள்..
அவளுடன் பேசுவது இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும்.. என்பதை அன்றுவரை அறியாத தனஞ்ஜெயன், அவளது பேச்சினால் வசீகரிக்கப்பட்டான்.
அவன் இதழ்களில் இப்போது வெளிப்படையாய், அவளது பேச்சை ரசிக்கும் சிரிப்பு உதயமாக.. சாருலதா ஆர்வமாய் அவனது அந்தச் சிரிப்பை ரசித்துப் பார்த்தாள்..
“என்ன அப்படிப் பார்க்கறீங்க… இந்த சிடுமூஞ்சிக்குக்கூட இப்படி சிரிக்கத் தெரியுமான்னு நினைத்துப் பார்க்கறீங்களா..?”
“அட.. எப்படிங்க.. நான் மனதில் நினைத்ததை கரெக்டாய் கண்டு பிடித்தீங்க..”
“இதற்குப் போய் வெத்தலையில் மைதடவி ஜோசியமா பார்த்து விட்டு வரணும்..? உங்களை மாதிரிப் பெண்கள் இப்படித்தானே நினைப்பீங்க..”
“என்னை மாதிரிப் பெண்கள், இப்படித்தான் நினைப்போமென்று, என்ன கணக்கில் நீங்கள் உறுதியாகச் சொல்லுறீங்க..?”
“உங்களிடம் சிரித்துப் பேசினால் ‘வழிசல் பேர்வழி’ன்னு பட்டம் கட்டுவீங்க.. சிரிக்காமல் பேசினால் ‘சிடுமூஞ்சி’ன்னு பெயர் வைப்பீங்க..”
அவனது மிகச் சரியான மதிப்பீட்டைக் கண்டு சாருலதாவிற்கு சிரிப்புடன் ஆச்சரியமும் சேர்ந்து வந்தது.
‘இவன் எப்படி பெண்களின் பேச்சினது போக்கைச் சரியாக கணித்து வைத்திருக்கிறான்..’
அவன் சொல்வது உண்மையென்று அவளது மனச்சாட்சி எச்சரித்ததால் சாருலதா புன்னகையுடன் பதில் கூறாமல் அவனையே பார்த்தாள்..
“என்ன.. பதிலைக் காணோம்..”
“உண்மையைச் சொன்னால் எப்படிப் பதில் சொல்வது..?”
தனஞ்ஜெயன் அவளைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.. உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டு வெளிப்படையாய் பேசும் பெண்ணொருத்தியை, முதன் முதலாய் கண்டுவிட்ட உணர்வு அவனது பார்வையில் தெரிந்தது..
“ஆச்சரியம்தான்..”
“என்ன ஆச்சரியத்தைக் கண்டுவிட்டிங்க..?”
“உள்ளதை உள்ளபடி ஒரு பெண் ஒப்புக் கொள்வது ஆச்சரியம்தான்..”
“இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை தனஞ்ஜெயன்.. பெண்கள் உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொள்பவர்கள்.. அந்த மனோதைரியம் எங்களிடம் உண்டு.. மனதை மறைத்துப் பேசுவது ஆண்களுக்குத்தான் கை வந்த கலை..”
“இதைப்பாருடா.. இப்படி ஒரு வியாக்கினத்தை இப்போதுதான் நான் கேட்கிறேன்.. ‘கடலின் ஆழத்தைக் கண்டுபிடித்து விடலாம்.. பெண்களின் மன ஆழத்தைக் கண்டு பிடித்துவிட முடியாது..’ன்னு நிறையப் பேர் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..”
“உண்மைதான் தனஞ்ஜெயன்… நாங்கள் ஆழமானவர்கள்.. எங்கள் அன்பு ஆழமானதா இருக்கும்.. ஆண்களைப் போல் மேம் போக்காக இருக்காது.. ஆமாம்.. இந்த ஆண்கள் ஏன் பெண்ணின் மன ஆழத்தைக் கண்டுபிடிக்க இவ்வளவு ஆர்வமாய் அலைகிறீங்க..?
எந்தப் பெண்ணாவது ஆணின் மன ஆழத்தைக் கண்டு பிடிக்கணும்னு நினைத்து இருக்கிறாளா..? நினைக்கவே மாட்டாள்..”
“இது என்ன புதுக்கதை..? ஏன் நினைப்பதில்லை..?”
“ஏன்னா.. ஆணின் மன ஆழத்தில் இருக்கும் தூசி, தும்புகளை அறிந்துவிட்டால் அவளுக்கு வாழ்வே வெறுத்துவிடும்..”
“என்ன ஒரு உயர்ந்த அபிப்பிராயம்.. உங்கள் பார்வையில் ஆண்கள் எல்லோரும் ஏமாற்றுப் பிறவிகள்.. அப்படித்தானே..?”
“இல்லை.. பெண்கள்.. ஆண்களை விட மிக.. மிக.. மிகக் குறைவாய் ஏமாற்றுகிறார்கள்..”
இந்தப் பதிலும் தனஞ்ஜெயனைக் கவர்ந்து தொலைத்தது… இவள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறாள் என்பதை அவன் மனம் உணர்ந்தது.. அவளிடம் பேச வந்ததை.. பேச வேண்டுமே என்று அவன் மனம் லேசாக வலித்துத் தொலைத்தது..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.