Chapter 04
நிழலாக வந்தவனே..
நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயன் சிந்தனை ரேகைகள் முகத்தில் படிய சாருலதாவின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தான்.. ‘இதுவரை, இவ்வளவு நேரம் வேறு எந்தப் பெண்ணின் அருகிலும், அவன் உட்கார்ந்து பேசியதில்லை..’ என்ற உண்மை அவன் மனதைச் சுட்டது..
முதன் முதலாய்.. அவன் வாழ்க்கையிலேயே செய்யாத ஒன்றை, அவள் செய்ய வைத்தாள்.. அடங்கி ஓரிடத்தில் அமராத அவனை.. அவள் முன்னால்.. அரை மணிக்கும் மேலாக அமர வைத்தாள்.. பெண்குலத்தை மதித்துப் பேசியிராதவனின் மனக்கதவைத் தட்டித் திறக்க வைத்து.. அவனை அவளுடன் பேச வைத்தாள்.. ‘சிடு மூஞ்சி’யென்று அந்த அலுவலகப் பெண் குலத்திடம் சிறப்புப் பட்டப்பெயர் வாங்கியிருந்தவனை சிரிக்க வைத்தாள்..
‘இத்தனையும் செய்தவளிடம் எப்படி.. என் நண்பன் உன்னைக் காதலிக்கிறான், நீ அவனுடைய காதலை ஏற்றுக்கொள், என்று சொல்வது..’ தனஞ்ஜெயன்.. முதன் முதலாய் மனம் தவித்தான்..
“சாருலதா.. நான் பேச வந்த விசயமே வேறு..”
“அதனால் என்ன..? முதன் முதலாய் என்னிடம் பேச வந்திருக்கிறீங்க.. பேச வந்ததை மட்டுமே பேசணும்ன்னு கட்டாயம் ஒன்றுமில்லையே.. மனதில் பட்டதைப் பேசுவதற்கு பெயர்தானே பேச்சு..”
‘ஊஹீம்.. இவளிடம் தொடர்ந்து பேசினால், இவள் பேச்சாலேயே என்னைக் கட்டிப் போட்டுவிடுவாள்..’
சாருலதாவை அபாயகரமான ஆயுதம் போல் எண்ணி, தன்னைத் தயார்படுத்திக் கொண்டான் தனஞ்ஜெயன்..
அவள் முகத்தைப் பார்க்காமல்.. தன் விரல்களைப் பார்த்துக்கொண்டு.. சிரித்த முகத்துடன் கூற ஆரம்பித்தான்..
“என் ஃபிரண்ட் கிருஷ்ணனைத் தெரியுமில்லையா..?”
“இந்த ஆஃபீஸில் நம்முடன் வேலை செய்கிறவர்தானே.. ‘கூட வேலை பார்க்கிறவர்’ என்ற முறையில் தெரியும்..”
அவனது தீவிரமான முகபாவனையைக் கண்டதுமே.. சாருலதா சுதாரித்துக் கொண்டாள்.. கவனமாக வார்த்தைகளைக் கோர்த்து அவனுக்குப் பதில் சொன்னாள்.
“ஆனால்.. அவன் மனதில் உங்கள் மேல் ஒரு எண்ணம் இருக்கிறது.. ஈர்ப்பு இருக்கிறது..”
“புரியவில்லை..”
“அவன் உங்களைக் காதலிப்பதாய் சொல்கிறான்..”
இதைச் சொல்லும் போது தனஞ்ஜெயன்.. ஜன்னல் பக்கம் முகம் திருப்பிக் கொண்டான்.. அதைக் கவனித்த சாருலதாவின் மனதில் மெல்லிய சாரல் அடித்தது..
“ஈஸிட்..? எத்தனை நாளாக.. இதைச் சொல்கிறார்..?”
“இரண்டு வருடங்களாக..”
“நான் இந்த ஆஃபீஸிற்கு வேலைக்குச் சேர்ந்தே இரண்டு வருடங்கள்தானே ஆகின்றன..”
“உங்களைக் கண்ட நாள் முதலாய்க் காதலாம்..”
“ஓஹோ.. இதற்கும்.. உங்களின் ராத்தூக்கம் கெடுவதற்கும் என்ன சம்பந்தம்..?”
“அவனும் தூங்கித் தொலைக்காமல்.. என்னையும் தூங்கவிடாமல்.. ராத்திரி முழுவதும்.. காதோரமாய்.. ஓட்டைப் பானைக்குள் நண்டை விட்டது போல..
சும்மா லொட லொடன்னு காதல் பேச்சைப் பேசிக் கொண்டிருந்தால்.. ஒரு மனிதனின் ராத்தூக்கம் கெடுமா.. கெடாதா..?”
“ஏன்.. உங்களுக்கு மத்தவங்க பேசினால் தூக்கம் வராதா..? பேசப் பிடிக்காதா..? இல்லை பேச்சே பிடிக்காதா..?”
“என்னைப் பார்த்தால் செவிட்டூமை மாதிரியா தெரிகிறது..? இவ்வளவு நேரமும் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தது யார்..? உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது யார்..?”
“நான் பேசினால் கேட்கலாம்.. அவர் பேசினால் கேட்கக்கூடாதா..?”
“எனக்கு அந்தப் பாகுபாடெல்லாம் கிடையாதுங்க.. நீங்கள் ரம்பம் போட்டாலும் நான் இப்படித்தான் சொல்வேன்..”
“அதுதான் எனக்குத் தெரியுமே.. பாரபட்சமில்லாமல் முகத்தில் அடித்தது போல் பேச உங்களை மிஞ்ச யாராலும் முடியாதே..”
“கிண்டலா..?”
“நான் பாராட்டுதலாக இல்லை சொன்னேன்..?”
“இது பாராட்டா..?”
“பின்னே இல்லையா..?”
“ஹலோ.. நான் கிராமத்துக்காரன்.. இந்தக் கேலிப்பேச்சு.. கிண்டல் பேச்செல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது போல் அத்துபடியான விசயம்.. நான் பேச ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டிங்க..”
“பேசுங்கன்னுதானே நானும் சொல்கிறேன்.. கேட்க நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன்..”
“ஆனால் பேச.. நான் தயாராக இல்லை.. நீங்க முதலில் என் பிரச்னைக்கு வாங்க..”
“என்னதான் உங்க பிரச்னை..?”
“அவன் விடியவிடிய என் காதுக்குள் ஓதிக் கொண்டிருந்தால் என் ராத்தூக்கம் கெடுமா.. கெடாதா..? இதைத்தானே அப்போதிலிருந்து நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..”
“கட்டாயம் கெடும்..?”
“அதனால்தான் உங்களிடம் இதைச் சொல்ல வந்தேன்..”
“உங்கள் ராத்தூக்கத்தைக் காப்பாற்ற நான் என்ன செய்ய வேண்டும்..?”
இதைக் கேட்ட சாருலதாவின் முகத்தில் என்ன இருக்கிறது என்று ஆராய்பவன் போல அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் தனஞ்ஜெயன்..
‘இவள்.. என்ன.. என்னைக் கேலி செய்கிறாளா..?’
“சொல்லுங்கள் தனஞ்ஜெயன்.. நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீங்க..?”
“எதையோ செய்துவிட்டுப் போங்க.. அவனும் நீங்களும்.. மரத்தைச் சுற்றி வந்து காதல் டூடய் பாடினாலும் சரி.. இல்லை.. வானத்தை அண்ணாந்து பார்த்து.. பிதற்றலாய் நான்கு வரிகளை எழுதி.. கவிதைன்னு பெயரைச் சொன்னாலும் சரி.. கல்யாணம் பண்ணிக் கொண்டு இந்த நாட்டின் மக்கள் தொகையை டெவலெப் பண்ணினாலும் சரி.. ஆளை விட்டுவிட்டு எங்கேயாவது.. கண்காணாமல் தொலைந்தால்.. அதுவே எனக்குப் போதும்.. பொழுது விடிந்து.. பொழுது போகும் வரை.. அவன் பேசும் புராணத்தைக் கேட்கும் கொடுமையிலிருந்து என்னைக் காப்பாற்றினால் போதும்..”
“உங்களைப் காப்பாற்றுவதற்காக.. எனக்கு விருப்பமில்லாததை நான் எப்படிச் செய்ய முடியும் தனஞ்ஜெயன்..? இதை வேறு யார் சொன்னாலும் பரவாயில்லை.. உங்கள் வாயால்.. நீங்கள் இதைச் சொல்லக்கூடாது..”
“அவன் உங்களைக் காதலிக்கிறதாய் சொல்கிறான்ம்மா..”
“யாரிடம் சொன்னார்..? என்னிடமா..? இல்லையே.. இரண்டு வருடமாய் என்னைக் காதலிப்பதாய் உங்களிடம் சொல்லி.. உங்களின் ராத்தூக்கத்தைக் கெடுப்பவர்.. என்னிடம் ஒரு வார்த்தைகூட இதைப் பற்றிச் சொல்லவில்லையே..”
“அதனால் என்ன..?”
“இது என்ன தனஞ்ஜெயன்.. இவ்வளவு எளிதாக சொல்லிட்டீங்க.. என் விருப்பம் என்னன்னு தெரியாமல்.. இரண்டு வருடமாய் எப்படி அவர் என்னைக் காதலிப்பதாய் சொல்லலாம்..? இது என்னைப் பாதிக்கும் விசயமில்லையா..?”
“காதல் தவறான விசயமில்லைம்மா..”
“நானும் அப்படிச் சொல்லவில்லை.. ஆனால்.. காதல் தானாக வரவேண்டும்.. ஒருவரின் வற்புறுத்தலால் வரக்கூடாது..”
“அவன் அழகானவன்.. வசதியானவன்.. உங்கள் மேல் அதிகமான அன்பை வைத்திருக்கிறான்..”
“இந்த நாட்டை ஆளும் ராஜாவாகக்கூட அவர் இருந்து விட்டுப் போகட்டுமே.. என் மனதிற்கு அவரைப் பிடிக்க வேண்டாமா..?”
“உங்களுக்கு யாரைத்தான் பிடிக்கும்..?” எரிச்சலுடன் தனஞ்ஜெயன் கேட்க..
“உங்களை மட்டும்தான் எனக்குப் பிடிக்கும்..” என்று அவள் பட்டென்று பதில் சொல்லிவிட்டாள்..
“என்னது..?” தனஞ்ஜெயன் திகைத்துப் போய் அமர்ந்து விட்டான்..
‘இதற்காகத்தான் காதல் தூது விடும் வேலையை நண்பர்கள் நம்பி யாரும் விடுவதில்லை போல..’ என்று எண்ணியவனின் மனதில்.. கிருஷ்ணனும் தனஞ்ஜெயனை நம்பி.. தூது போகச் சொல்லவில்லை என்ற உண்மை உறைத்தது..
“என்னம்மா.. இப்படி ஒரு கல்லைத் தூக்கி என்தலையில் டமால்ன்னு போடுறீங்க..?”
“நான் காதலைச் சொல்வது.. உங்களுக்கு கல்லைத் தூக்கிப் போடுவது போல இருக்கா..?”
“கிருஷ்ணன் என் நண்பன் சாருலதா..”
“இருக்கட்டுமே..”
“அவன் உங்களைக் காதலிக்கிறான்..”
“ஆனால்.. நான் உங்களைத்தானே காதலிக்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால்.. உங்களைத்தான் என்னால் காதலிக்க முடியும்..”
“ஏன்..?”
“ஏனென்றால்.. என் மனதிற்கு உங்களை மட்டும் தான் ரொம்ப.. ரொம்ப பிடித்திருக்கிறது..”
“அவனிடம் உங்களுக்குப் பிடிக்காத குணங்கள் என்று எதுவும் இல்லை சாருலதா.. இன்னும் சொல்லப் போனால் நானாவது குடிப்பேன்.. அவனிடம் அந்தப் பழக்கம் கிடையாது.. உங்களிடம் இதைச் சொல்வதற்கென்.. எனக்குப் பெண்களைக் கண்டாலே பிடிக்காதுங்க.. ஆனால், அவன் அப்படியில்லை.. பெண்களை ஆராதிப்பவன்..”
இப்படிப் பேசியவனை ஆழமாய் நேர்பார்வை பார்த்தாள் சாருலதா..
“ஏன் உங்களுக்குப் பெண்களைக் கண்டால் பிடிக்காது..?”
“காரணம் தெரியாது..”
“உங்கள் அம்மாவை உங்களுக்குப் பிடிக்காதா..?”
“யாருக்குத்தான் அம்மாவைப் பிடிக்காமலிருக்கும்..”
“உங்களுடைய அம்மாவும் பெண்தானே..”
தனஞ்ஜெயன் அவளை எரிச்சலுடன் பார்த்தான்..
“இதிலிருந்து நீங்கள் சொல்ல வருவது என்னவோ..?” சாருலதா நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, அவன் முகத்தை தீர்க்கமாக பார்த்தாள்..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.