Chapter 10
நினைவினிலே கலந்தவனே..
நீயின்றி நானில்லை..
ரமணன் கோபமாக தங்கையை உறுத்துப் பார்த்தான்.. சாருலதா மௌனமாக.. ஆனால்.. ஒரு திடத்துடன் நிமிர்ந்து நின்று, அவன் பார்வையை எதிர் கொண்டாள்.. அவர்கள் இருவரையும் பெற்ற தகப்பனான கங்காதரனின் கண்களில்.. மகளின் நிமிர்வு பட்டது.. அவர் யோசனையுடன் மனைவியைப் பார்த்தார்.. கண்களில் கலக்கத்துடன் மகளைப் பார்த்தாள் மேகலா..
“ஏன் லேட் சாரு..?”
“கோவிலுக்குப் போயிருந்தேன்ம்மா..”
“இவ்வளவு நேரமாகவா சாமி கும்பிட்டாய்..?”
“சாமி கும்பிட்டுவிட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.. நேரமாகி விட்டது..”
மேகலாவின் பார்வை.. கணவனின் பார்வையைச் சந்தித்து மீண்டது.. கங்காரனின் முகத்தில் கோபச் சிவப்பு உதயமாவதைக் கண்டவள்.. பதற்றம் கொண்டாள்..
“யாருடன் பேசிக் கொண்டிருந்தாய் சாரு..?”
“என்னைக் கொண்டு வந்து வாசலில் இறக்கிவிட்டுப் போகிறாரே.. அவருடன்தான் பேசிக் கொண்டிருந்தேன்..”
ரமணன் தங்கையைப் பார்த்து பல்லைக் கடித்தபடி அவளருகில் வேகமாய் நகர முற்பட.. அஞ்சலி அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள்..
“பொறுங்க.. அத்தை விசாரித்துக் கொண்டு இருக்காங்கல்ல.. அப்புறமும் நீங்கள் ஏன் பாய வேண்டும்..?”
“அவள் திமிராய் பதில் சொல்வதைக் கேட்டாயா.. இல்லையா..? இதைக் கேட்டுக் கொண்டு பொறுமையாய் நிற்கச் சொன்னால்.. என்னால் அது முடியாது..”
“சாருலதா திமிர் பிடித்தப் பெண்ணில்லை..”
“அவள் பேசுவதைக் கேட்ட பின்னாலுமா இப்படிச் சொல்கிறாய்..?”
“அவள் மனதிலிருப்பதை, அவள் சொல்கிறாள்..”
“எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாமா..?”
“இன்னும் அவள் முழுதாய் சொல்லவில்லைங்க..”
“இன்னும் சொல்ல என்ன இருக்கிறது..?”
“நிறைய இருக்கிறது.. அவளைப் பேசவிடுங்க..”
மகனை, மருமகள் அடக்கிக் கொண்டிருப்பதைச் செவிமடுத்துக் கொண்டே.. மகளை நிதானமாய்.. ஆனால் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தார் கங்காதரன்..
“உன்னை வாசலில் வந்து விட்டுவிட்டுப் போகிறவர் யாரும்மா..?”
“தனஞ்ஜெயன்.. என்னுடைய சீனியர் ஆபிஸர்..”
“ஓ.. உன் ஸ்கூட்டி என்ன ஆனது..? ரிப்பேரா..?”
“இல்லைப்பா.. அது ஆஃபீஸ் ஷெட்டிலேயே இருக்கிறது.. நானும்.. தனாவும் இன்றைக்கு கோவிலுக்குப் போவதாய் முடிவு பண்ணியதால்.. நான் அவருடைய வண்டியிலேயே வந்து விட்டேன்..”
மேகலா, உதட்டைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டாள்.. மகளை நன்கு புரிந்து வைத்திருந்தவளுக்கு, அவள் ஒரு முடிவுடன் பதில் சொல்வது நன்றாகப் புரிந்து விட்டிருந்தது..
“தனஞ்ஜெயன் உன் நண்பரா..?” கங்காதரன் கூர்மையான பார்வையுடன் வினவினார்..
அவர் இந்தக் காலத்து இளைய தலைமுறையினரைப் பற்றி நன்கு அறிந்தவர், அவர்களின் உலகமே வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர்.. எனவே.. கவனமாய் வார்த்தைகளைக் கோர்த்துக் கேள்வி கேட்டார்..
“இல்லைப்பா.. அவர் அதற்கும் மேலே..”
“நேரடியாய் பதில் சொல்லும்மா..”
“நான் தனஞ்ஜெயனைக் காதலிக்கிறேன்ப்பா.. அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைக்கிறேன்..”
வீடு அதிர்ச்சியுடன் அமைதியானது.. சாரு லதாவின் மனதில் காதல் இருக்கும் என்பதை அறியாதவர்களாய் அதுநாள் வரை இருந்தவர்கள்.. இன்று அவள் வாய் மொழியிலேயே அதைக் கேட்கவும்.. சிலையாகிப் போனார்கள்..
சாருலதாவின் சுபாவம் அப்படிப்பட்டது.. அவள் காதலில் விழுவாள் என்று கொஞ்சம்கூட அவர்கள் நினைத்துப் பார்த்ததில்லை.. எதையும் புத்திசாலித் தனமாய் எதிர்நோக்கிக் கையாளும் பெண் மனதில் காதல் இருப்பதை அறிந்தும்.. அவர்கள் தாளமாட்டாமல் அவளிடம் இதைக் கேட்டே விட்டார்கள்..
“ஏன்ம்மா.. காதலித்தால்.. அந்தப் பெண் புத்திசாலியில்லையென்று அர்த்தமா…? இல்லை.. புத்திசாலிகள் காதலிக்கவே கூடாதுன்னு நீங்க சொல்கிறீங்களா..?” அன்று அவள் எதிர்க்கேள்வி கேட்டாள்..
“நீ இந்த வீட்டுப் பெண் சாருலதா..”
“அதனால் என்னம்மா..?”
“எங்களிடம் மறைத்து நீ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணலாமா..?”
“மறைக்க வேண்டும்ன்னு நினைத்ததே இல்லைம்மா.. சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் இதுநாள்வரை வரவில்லை.. அதனால் நான் சொல்லவில்லை.. இப்போது சந்தர்ப்பம் வந்திருக்கிறது.. சொல்லி விட்டேன்.. அவ்வளவுதான்..”
“நீ சொன்னால்.. அதை நாங்கள் உடனே கன்ஸிடர் பண்ணிவிடணுமா..?”
“நான் அப்படிச் சொல்லவில்லையே அண்ணா.. ஆனால், நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக கன்ஸிடர் பண்ணாமல் விடவும் வேண்டாமே..”
“சாரு.. உன்மேல் எங்களுக்கு அக்கறை இருக்கக் கூடாதா..?”
“கூடாதுன்னு நான் சொன்னேனா அண்ணி..? அதே சமயம் நான் சிறு குழந்தையில்லை.. என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பக்குவம் எனக்கு இருக்கிறது என்பதை நீங்களும் புரிந்து கொள்ளணும்..”
“உன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளணும்தானே இப்போது நீ சொல்கிறாய்.. இந்த வீட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையே..”
“இந்த வீட்டின் கௌரவம் பாதிக்கும்படி நான் எதுவும் செய்யவில்லையே அம்மா..”
“நீ பிறந்தது முதல் உனக்கு எது நல்லது.. எது கெட்டதுன்னு.. பார்த்துப் பார்த்துச் செய்தவர்கள் நாங்கள்.. எங்களுக்கு உன் கல்யாணத்தைத் தீர்மானிக்கும் உரிமை கிடையாதா..?”
“உரிமைப் பிரச்னையைக் கிளப்ப.. இது ஒன்றும் சொத்துப் பிரச்னை இல்லைப்பா.. வாழ்க்கைப் பிரச்னை.. என் மனதுக்குப் பிடித்தவரோடு நான் வாழணும்னு நினைப்பது தப்பா..?”
“உன் மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டும் போதுமா சாரு..?”
“வேறு என்னம்மா வேண்டும்..?”
“கல்யாணம் என்பது விளையாட்டுச் சமாச்சரமில்லை.. அது ஆயிரம் காலத்துப் பயிர்.. எடுத்தேன்.. கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிவிடக்கூடாது.”
“இதை வேறு விதமாகவும் சொல்லலாம் அம்மா..”
‘எப்படி..?’ என்று கேள்வி கேட்காமல் அவளுடைய குடும்பம் அவளை முறைத்துப் பார்த்தது..
நிச்சயம் அவள் விதண்டாவாதமாய் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுவாள் என்பதை அவர்கள் அறிந்தவர்களாதலால்.. பல்லைக் கடித்துக் கொண்டு.. அவளைப் பார்த்தார்கள்..
“திருமணம் என்பது.. இருமனம் இணையும் விசயம்.. ஆயிரம் காலத்துப் பயிர்களாய் வாழ வேண்டிய வாழ்க்கையை – கடமைக்காக அவர்கள் வாழ்ந்து விடக் கூடாது..”
கங்காதரன்.. கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் அமைதியாய் நின்றார்.. பின் மகளைப் பார்த்துக் கேட்டார்..
“இப்ப முடிவாய் நீ என்னதான் சொல்கிறாய் சாரு..?”
“கல்யாணம் என்ற ஒன்றைப் பண்ணிக் கொள்வதாக இருந்தால்.. தனஞ்ஜெயனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்..”
“அவரின் ஊர் எது..”
“தேனி பக்கத்தில் ஒரு கிராமம்..”
“எதற்கும் அவரை.. நாளைக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்.. அவருடன் பேசிவிட்டு என் முடிவைச் சொல்லுகிறேன்..”
கங்காதரன் விருட்டென்று சென்றுவிட.. குடும்பசபை.. அப்போதைக்கு கலைந்தது..
சாருலதாவிற்கு கண்கள் கலங்கின.. ‘காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா..? ஆள் மாற்றி ஆள் எத்தனை கேள்விகளைக் கேட்டு விட்டார்கள்..!’
அவள் மௌனமாய் சோபாவில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொள்ள.. அவளது கையை ஒரு பிஞ்சுக் கை பற்றி இழுத்தது.. நிமிர்ந்து பார்த்தாள்.. அவளது அண்ணனின் குழந்தை ஆர்த்தி நின்றிருந்தது..
“ஏன் அழுகிற அத்தை..?”
“ஒன்றுமில்லைடி செல்லம்..”
சாருலதா, கண்ணைத் துடைத்துக் கொண்டு குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.. அது அவளது முகத்தை அண்ணாந்து பார்த்தது..
“என்ன ஆர்த்தி..?”
“நீ பாட்டியிடம் கேட்காமல் சாக்லெட் தின்றாயா..?”
“இல்லையே..”
“எதையாவது உடைத்து விட்டாயா..?”
“இல்லைடா கண்ணம்மா..”
“ஹோம் வொர்க் செய்யவில்லையா..?”
“எனக்கு ஹோம் வொர்க்கெல்லாம் கிடையாது.. எல்லாம் ஆபிஸ் வொர்க்தான்.. ஆமாம்.. எதற்கு.. என் கண்ணுக்குட்டி.. அத்தையை இத்தனை கேள்வி கேட்டுதாம்..?”
“அப்புறம் ஏன் அத்தை.. அம்மா.. அப்பா… பாட்டி.. தாத்தா.. எல்லோரும் உன்னையே திட்டினாங்க..?”
‘என்னவென்று பதில் சொல்வது..?’ சாருலதா கண்களில் துளிர்த்த கண்ணீரோடு.. குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.