Chapter 11
இதயத்திலே இருப்பவனே..
நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயன் கோபத்துடன் தன் எதிரே நின்று கொண்டிருந்த உதவியாளரைத் திட்டிக் கொண்டிருந்தான்.. சாருலதா அவனது கேபினுக்குள் நுழைந்தாள்.. உதவியாளரை திட்டுவதை நிறுத்திவிட்டு.. அவளை அனல் பார்வைப் பார்த்தான் அவன்..
‘எதற்கு இப்படிப் பார்க்கிறான்..?’ அவள் புரியாமல் அவன் முகம் பார்க்க..
“நீங்க போங்க ரமேஷ்.. இனிமேல் இப்படிச் செய்யாதீங்க.. ஸ்டேட்மென்டை கரெக்ட் பண்ணி.. புதிதாய் பிரிண்ட் போட்டுக்கிட்டு வாங்க..” என்று ரமேஷை அனுப்பி வைத்தான் தனஞ்ஜெயன்..
“தனா..” என்று சாருலதா ஆரம்பிக்க..
“அறிவில்லையா.. உனக்கு..?” என்று வெடித்தான் அவன்..
“ஏன் கோபமாய் பேசுகிறீங்க..?”
“பின்னே.. நீ செய்யும் காரியத்திற்கு உன்னைக் கொஞ்சச் சொல்கிறாயா..?”
‘அப்படியே.. நீ கொஞ்சி விட்டாலும்.. முசுடு..’ சாருலதா மனதிற்குள் அவனைத் திட்டிவிட்டு.. வெளியே..
“நான் என்ன செய்தேன்..?” என்று கேட்டாள்..
“அது கூடத்தெரியவில்லை.. மக்கு.. நீயெல்லாம் எப்படித்தான் இந்த ஆஃபீஸில் இத்தனை வருடமாய் குப்பை கொட்டுகிறாயோ..?”
“எதைத் திட்டுவதென்றாலும்.. காரணத்தை சொல்லி விட்டுத் திட்டுங்க..”
“கேபினுக்கு கதவுன்னு ஒன்று இருக்கில்ல.. அதைத் தட்டிவிட்டு வரணும்கிற மேனர்ஸ் உனக்கு இருக்க வேண்டாமா..? நீ பாட்டுக்கு உள்ளே வந்து விடுவதா..?”
“உங்கள் ரூமிற்கு.. நான் வருவதற்கு.. பெர்மிசன் கேட்டு விட்டுத்தான் வரவேண்டுமா..?”
“என் வீட்டிற்கு நீ வருவதாக இருந்தால்.. பெர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. அது உன் வீடு.. நீ இஷ்டப்படி.. வரலாம்.. நான் ஏனென்று கேட்க மாட்டேன்.. இது ஆஃபீஸ்.. இங்கே சில பார்மாலிட்டிஸ் இருக்கிறது.. இப்போது பார்த்தாயா.. நீ வரும் போது நான் ரமேஷை திட்டிக் கொண்டிருந்தேன்.. உன் முன்னால் திட்டு வாங்க.. அவன் சங்கடப்பட்டிருப்பானா.. மாட்டானா..?”
“எனக்கென்ன தெரியும்.. நீங்க அவரைத் திட்டிக் கொண்டிருப்பீங்கன்னு..”
“தெரிய வேண்டும்.. சும்மா.. புத்திசாலின்னு பீற்றிக் கொண்டாள் போதாது.. அந்தப் புத்தியைக் கொஞ்சம் யூஸ் பண்ணனும்..”
மனம் நிறையக் கவலையுடனும்.. போராட்டத்துடனும் அவனது துணையைத் தேடி வந்த சாருலதா மனம் நொந்தாள்.. அவனிடம் பேச வந்ததைப் பேசாமலேயே திரும்பிச் சென்றுவிட்டாள்..
‘எப்போது பார்த்தாலும் இதேதானா.. எப்போது இவன் தேளாய் கொட்டுவான்.. எப்போது தேனாய் சிரிப்பான் என்று தெரியாத பிழைப்பு.. என்ன பிழைப்பு..’
அவளுடைய இருப்பிடத்தில் அமர்ந்து.. பேப்பரில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.. அவளது கையில் இருந்த பேப்பர் உறுவப்பட்டது..
“ம்ம்.. மனம் சரியில்லைன்னா.. கவிதை மழை கொட்ட ஆரம்பித்து விடுமே..” என்றபடி அவள் எதிரே அமர்ந்து அவளது கவிதையை வாய்விட்டு படிக்க ஆரம்பித்தான் தனஞ்ஜெயன்..
“ஊனக் கனவுகளே..
ஊனுருக்கும் நாள் தோறும்,
காண ஒரு மனதில்லை..
கவிக் குயிலோ மனச்சிறையில்..”
பேப்பரில் இருந்து பார்வையை உயர்த்தி சாருலதாவைப் பார்த்தான் அவன்.. அவளோ.. அவனது பார்வையைத் தவிர்த்து.. கம்ப்யூட்டரின் கீ போர்டைத் தட்டிக் கொண்டிருந்தாள்..
‘கோபமாம்.. என்னோடு பேச மாட்டாளாம்..’ அவன் முகத்தில் இளநகை அரும்பியது..
‘என்னோடு பேசாமல் இருந்து விடுவாளா..? இவளால் அது முடியுமா..?’ என்ற நினைவு மனதில் எழ, அவன் முகம் மென்மையானது.
“என்னடி இது..?” என்றான் பேப்பரை அவள் முன்னால் காட்டி..
“என்னன்னு தெரியாமல்தான் இப்போது படித்தீர்களாக்கும்..” அவள் முகம் நிமிராமல் பதில் சொன்னாள்..
‘பேசி விட்டாள்..’ அவன் முகத்தில்.. வெற்றிக் குறியீடு வந்தது..
“அது தெரியுது.. கவிதை எழுதினால்கூட.. ஆரோக்கியமான கவிதையாய் எழுத மாட்டாயா…?
அது என்ன ஊனக் கனவுகள்.. ஊனை உருக்குவது..? கவிதையில் கூட.. ஊனத்தைப்பற்றியும்.. உருக்குவதைப் பற்றியும்தான் உனக்கு எழுத வருமா..? உருப்படியாய் எழுத வராதா..?”
அவன் வம்பிழுத்தான்.. அவன் எதிர்பார்த்தபடி அவள் ரோசமாய் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..
“இதோ பாருங்கள் தனா..”
“பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்..!”
அவனது காந்தம் போன்ற கண்கள் கவர்ந்து இழுக்க.. அவள் பேச்சு வராமல் தடுமாறினாள்..
‘ஊஹூம்.. இவன் மயக்கப் பார்க்கிறான்.. திட்டுவதை எல்லாம் திட்டி விட்டு.. இப்போது கொஞ்சிக் குலாவ வருகிறான்.. மயங்கி விடக்கூடாது..’
அவள் அவசரமாய் அவன் முகத்திலிருந்த பார்வையை விலக்கிக் கொண்டாள்..
“நான் பாட்டுக்கு.. நானுண்டு.. என் கவிதையுண்டுன்னு இருக்கிறேன்.. என்னோடு வம்புக்கு யாரும் வரவேண்டாம்..”
“வேறு யாரும் வந்தால்.. இந்த தனஞ்ஜெயன் யாருன்னு அவங்களுக்குக் காட்டி விடுவேன்.. அதனால் நீ கவலைப்படாதே.. உன்னோடு வம்புக்கு நான் மட்டும் தான் வருவேன்..”
“அதுதானே உங்களுக்குத் தெரியும்..”
“எது.. வம்பு வளர்ப்பதா..?”
“ஆமாம்..”
“யாரிடம் வம்பு வளர்க்கிறேன்..? எனக்கு உரிமைப் பட்டவளிடம் தானே வம்பு வளர்க்கிறேன்..!”
“அதற்காக.. எந்தநேரம் வம்பு வளர்க்க வேண்டும் என்று இல்லையா..?”
இதைச் சொல்லும்போது சாருலதாவின் கண்கள் லேசாகக் கலங்கிவிட தனஞ்ஜெயன் துணுக்குற்றான்..
“என்ன ஆச்சு சாரு.. ஏன்.. உன்முகம் இப்படி கலங்கித் தெரிகிறது..?”
அதுவரை அவன் மேலிருந்த கோபமெல்லாம்.. காற்றாகப் பறந்து விட தாயின் மடிதேடும் மழழை போல்.. அவன் முகம் பார்த்து மறுகினாள் சாருலதா..
“தனா..”
“என்ன சாரு.. சொல்லு..”
“என் வீட்டில் நம் காதல் தெரிந்து விட்டது..”
“இவ்வளவுதானே.. இதுக்குப் போய் ஏன் அழுகிற..?”
“என்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாங்க..”
“கேட்டால்.. பதிலைச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே..?”
“அப்பா உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்கிறார்..”
“அவ்வளவுதானே..? மாமனாரைப் பார்த்து விட்டால் போச்சு..”
“இன்றைக்கே பார்க்க வேண்டுமாம்..”
“ஓகே.. இன்றைக்கே அவரை வந்து பார்க்கிறேன்.. போதுமா..? இப்போதாவது கொஞ்சம் சிரியேன்..”
சாருலதா முகம் மலர்ந்தது.. லேசாகச் சிரித்தாள்.. அன்புடன்.. அவளது விரல்களைப் பற்றி அழுத்தினான் தனஞ்ஜெயன்..
“குட்கேர்ள்.. இப்படித்தான் சிரித்த முகமாய் இருக்க வேண்டும்.. அழுது வடிந்தால்.. எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது..”
“அப்பா.. துளைத்து.. துளைத்து கேள்வி கேட்பார்..”
“கவலைப்படாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன்..”
“எனக்கென்னவோ.. பயமாய் இருக்கிறது..”
“எதற்குப் பயம்..? பைத்தியம்.. நானிருக்கிறேன்..”
“எப்போதும் எனக்காக நீங்கள் இருப்பீர்கள்தானே..?”
“நிச்சயமாய் இருப்பேன்..!”
“ஐ லவ் யு தனஞ்ஜெயன்..!”
“சேம் டு யு சாரு..”
“எனக்கு உங்களை.. ரொம்.. ரொம்பப் பிடிக்கும் தனா..!”
“இதை நீ செல்லித்தான் நான் தெரிந்து கொள்ளணுமா..?”
“உங்கள் மேல் நான் வைத்திருக்கும் பிரியத்தின் அளவு உங்களுக்குத் தெரியாது..”
“தெரியும்.. என் மேல் நீ வைத்திருக்கும் பிரியத்தின் அளவை உணர்ந்தவன் நான்.. எனக்கு அது நன்றாகத் தெரியும்.. கவலைப்படாமல் வேலையைப் பார்..”
தனஞ்ஜெயன்.. ஆறுதலாய் அவளது விரல்பிடித்து அழுத்திவிட்டு எழுந்து சென்றான்..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.