Chapter 10
ரூபிணியின் அலுவலகத்தில் வருடாந்திர ஆடிட் நடந்து முடிந்தது. ஆடிட் பார்ட்டிக்கு விருந்து கொடுப்பது அவர்களது அலுவலக வழக்கமாம். பெரிய ஸ்டார் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிடுவது என்று முடிவாகியது.. எல்லோரும் அவரவருடைய இரண்டு சக்கர.. நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள்.. அன்று ப்ரீதி அவளுடைய ஸ்கூட்டியில் வரவில்லை.. “ரிப்பேர்” என்றாள்..
“ஓ.கே. என்னுடன் வா போகலாம்..” ரூபிணி எளிதாய் கூறினாள்.
மதியம் பனிரெண்டு மணிக்கே ப்ரீதி எழுந்து ரூபிணியின் டேபிள் அருகே வந்தாள். ரூபிணி கேள்வியாய் பார்த்தாள்.
“அம்மா… திடீரென்று வரச் சொல்கிறார்கள் ரூபிணி. வீட்டுக்குப் போய் விட்டு நேரே ஹோட்டலுக்குப் போய் விடலாம்.. ஆபிஸரிடம் பெர்மிசன் வாங்கி விட்டேன்.. போகலாமா..”
“ம்ம்.. வேலையிருக்கிறதே…” ரூபிணி தயங்கினாள்.
“வந்து பார்த்துக் கொள்ளலாம்..” ப்ரீதி அவசரப் படுத்தினாள்..
ரூபிணி அரை மனதாய் எழுந்து கம்ப்யூட்டரை அணைத்து விட்டு டேபிளைப் பூட்டி சாவியை ஹேன்ட் பேகிற்குள் போட்டுக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொண்டே அலுவலகப் படிகளில் இறங்கினார்கள்.. ரூபிணி தன் கைனடிக் ஹோண்டாவை கிளப்பினாள்.. ப்ரீதி பின்னால் அமர்ந்து கொள்ள ப்ரீதியின் வீட்டை நோக்கி ஸ்கூட்டர் பறந்தது.
“என்னம்மா.. ஏன் வரச் சொன்னீங்க…” ப்ரீதி வீட்டுக்குள் நுழைந்து கொண்டே கேட்டாள்..
“மும்பையிலிருந்து உன் அத்தையும் மாமாவும் வந்திருக்கிறார்கள். கோயம்புத்தூர் போகிறார்களாம்.. ஆன் தி வேயில் உன்னைப் பார்த்து விட்டுப் போகணும்னு வந்தாங்களாம்.. ஈவினிங்கே கிளம்பி விடுவார்களாம். நீ ஆபிஸில் ஆடிட்ன்னு சொன்னாயே.. அதனால்தான் மதியமே வந்து விட்டுப் போன்னு போன் பண்ணினேன்..” ப்ரீதியின் அம்மா ரூபிணியை பார்த்துக் கொண்டே பேசினாள்..
ப்ரீதியின் முகம் ஏனோ கருத்தது. தாயின் பார்வையை உணர்ந்தவளாய் ரூபிணியை அறிமுகம் செய்து வைத்தாள்.
“அம்மா.. இவள் ரூபிணி.. என் கோவொர்க்கர்.”
“அப்படியாம்மா.. உட்கார்.. என்ன சாப்பிடுகிறாய்?”
“ஒன்றும் வேண்டாம்மா… ஆக்சுவலாய் இன்றைக்கு எங்கள் ஆபிஸில் விருந்து கொடுக்கிறார்கள்.. நானும் ப்ரீதியும் ஹோட்டலுக்கு போகும் வழியில் வந்து விட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறோம்..”
ப்ரீதியின் தாய் ப்ரீதியைப் பார்த்த பார்வையில் ஏதோ செய்தி இருந்தது. அதற்குள் ப்ரீதியின் அத்தையும்.. மாமாவும் ஆர்ப்பரித்தவாறு வந்து விட்டார்கள்..
“ஹாய் ப்ரீதி.. ஹவ் ஆர் யு..? ஐயோ.. எவ்வளவு வளர்ந்து விட்டாய்?”
“குட்டிப் பெண்ணாய் இருக்கும்போது நாம் பார்த்தது.. இத்தனை வருடங்களில் வளர்ந்திருக்க மாட்டாளா?”
ரூபிணி தர்ம சங்கடமாய் உணர்ந்தாள்.. ப்ரீதியின் முகம் பார்த்தாள்..
“ப்ரீதி.. உன் பிரண்டுக்கு மாடி ரூமைக் காட்டும்மா.. அத்தையும், மாமாவும் உன்னிடம் பேசி முடிக்கும் வரை அவள் அங்கே வெயிட் பண்ணட்டுமே..” ப்ரீதியின் தாய் ரூபிணியின் சங்கடம் உணர்ந்தவளாய் கூற அது இன்னும் ரூபிணியின் சங்கடத்தை அதிகரித்தது.
“ப்ரீதி.. நான் வேண்டுமானால் ஹோட்டலுக்கு போய் விடவா. நீ பேசிவிட்டு மெதுவாக வா…”
வாசலில் நின்று கொண்டிருந்த காரைப் பார்த்தபடி ரூபிணி வினவினாள் ப்ரீதி யோசனையுடன் தாயைப் பார்த்தாள்.
“ரூபிணி அன் ஈஸியாய் பீல் பண்ணுகிறாள் போல.. நாங்கள் வேண்டுமானால் உன்னைக் காரில் கொண்டு போய் விடுகிறோம்..” ப்ரீதியின் தாய் கூறினாள்.
ஓர் விடுதலை உணர்வுடன் எழுந்த ரூபிணி வாசலுக்கு வந்து கைனடிக் ஹோண்டாவை கிளப்பிக் கொண்டு மெதுவாய் ஹோட்டலை நோக்கி வண்டியை விட்டாள்.. ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தி பூட்டி விட்டு கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். பனிரெண்டே முக்கால் என்றது கைக்கடிகாரத்தின் முட்கள்.. ஒரு மணிக்கு எல்லோரும் வர ஆரம்பித்து விடுவார்கள்.. மெதுவாய் படியேறி ஹோட்டலின் மாடியிலிருந்த ஏஸி ஹாலை அடைந்தாள்.
“ஹாய்…” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். உல்லாசப் பார்வையுடன் மூர்த்தி நின்றிருந்தான். ரூபிணியின் முகம் கடுகடுத்தது.
‘இவன் எப்படி முன்னாலேயே வந்தான்…?’
முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் முகம் திரும்புவதை லட்சியமே பண்ணிக் கொள்ளாமல் மூர்த்தி அவளை நெருங்கி நின்று பேசினான்.
“உங்கள் சீட்டில் நீங்கள் இல்லை.. அதனால்தான் எல்லோருக்கும் முன்னால் இங்கு வந்தேன்.. நான் எதிர்பார்த்தது போலவே நீங்களும் வந்து விட்டீர்கள்..”
என்னவோ அவன் எதிர்பார்ப்பான் என்று அவள் வந்தது போல் அவன் பேசியதில் ரூபிணி எரிச்சலுற்றாள்.
‘இவனுக்கு நான் என்றால் அவ்வளவு ஈஸியா?’
ப்ரீதி அன்று சொன்னது அவள் நினைவில் இருந்தது.
“ரூபிணி… நான் உள்ளூர்காரி.. நீ வெளியூர்.. என்னிடம் வாலாட்டினால் உடனே வந்து என் அப்பாவும்.. அண்ணன்களும் இவன் எலும்பை எண்ணி விடுவார்கள்.. உனக்கு வெளியூரில் இருந்து உன் அப்பா வந்து சேரவே ஒரு நாளாகும்.. நான் வீட்டு மனிதர் துணையோடு இருக்கிறேன்.. நீ ஹாஸ்டலில் இருக்கிறாய்.. எல்லா வற்றையும் விட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.. அது என்ன தெரியுமா..?”
“என்ன…?”
“ஜவஹர் என்னிடம் யார் வாலாட்டினாலும் அவர்களது வாலை ஒட்ட நறுக்கி விடுவான்… என் விசயத்தில் ஜவஹர் ஒரு டெர்ரரிஸ்ட்…”
“மூர்த்தி போன்ற அடாவடிக்காரன் ஜவஹரிடம் பயப்படுகிறானா?”
“ஜவஹரை என்னவென்று நினைத்தாய்…? என்னிடம் மட்டும்தான் ஈகோ பார்க்க மாட்டான்.. பொறுமையாய் போவான்.. நான் என்ன திட்டினாலும் தட்டி விட்டுப் போய் விடுவான்.. அதுவே மற்றவர்களாக இருந்தால் பந்தாடி விடுவான்.. இந்த மூர்த்தியெல்லாம் ஜவஹர் முன்னால் வெறும் பச்சா…”
இதைக் கூறும்போது பெருமையில் ப்ரீதியின் முகம் ஒளிர்ந்தது இன்னும் ரூபிணியின் நினைவில் இருக்கிறது. இவள் உண்மையிலேயே ஜவஹரை வெறுக்கிறாளா என்று தான் சந்தேகப்பட்டதும் அவளது நினைவில் வந்தது.
“வாங்களேன்.. நாம் நம் இடத்தில் உட்கார்ந்து பேசலாம்…”
மூர்த்தி அவர்களுக்காக ரிஸர்வ் செய்யப்பட்டிருந்த டேபிளைக் காட்டினான்.
‘இவனுடன் ஹோட்டலில் உட்கார்ந்து பேசுவதா..?’
ரூபிணியின் மனம் கோபத்தில் கொதித்தது.. இவன் பேசுவதைத் தவறாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் சாப்பிடுவதற்காக அந்த ஹோட்டலுக்கு வந்திருப்பது உண்மைதானே..
‘அதற்காக.. மற்றவர்கள் அருகில் இல்லாமல் இந்தப் பொறுக்கியுடன் தனியே உட்காருவதா..?’
தற்செயலாக அந்த ஏ.ஸி. ஹாலின் மற்றொரு மூலையைப் பார்த்த ரூபிணியின் முகம் மலர்ந்து விட்டது.
அங்கே அருகில் இருவரோடு அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்..
ஒரு பிஸினெஸ் லன்ச்சிற்காக டில்லியிருந்து வந்திருந்தவர்களுடன் வந்திருந்தான் அவன். வியாபார விஷயமாய் பேசிக் கொண்டே ஹாலின் வாசலைப் பார்த்தவன் யோசனையாய் புருவம் தூக்கினான்.
‘யார் அது…? ரூபிணியல்லவா…? இந்தப் பெண் தனியாக சாப்பிட வந்திருக்கிறாளா…?’
அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே மூர்த்தி அவளிடம் பேசினான் அவள் அதை விரும்பவில்லை என்பதை அவள் முகம் காட்டியது. பேசிக் கொண்டே அவள் பின் வாங்க.. அவனும் அவளை நெருங்கி நிற்க முயல்வதைக் கண்டு ஹரிஹரனின் முகம் இறுகியது.
‘யார் இவன்…?’
அவன் ஏதோ கேட்க… ரூபிணி திரும்பி ஹாலை சுற்று முற்றும் பார்த்தவள் ஹரிஹரனை கண்டு விட்டாள்.
அவனைக் கண்டதும் ஒளிர்ந்த கரு விழிகளில் பரவிய வெளிச்சம் கண்டு ஹரிஹரனின் உடலில் மின்சாரம் பரவியது.
‘என்னைக் கண்டு இவ்வளவு பரவசமா..?’
ரூபிணி நேராய் ஹரிஹரனிடம் வந்தாள்.. ஹரிஹரனின் வியப்பு இன்னும் கூடியது…
“ஹலோ சார்.. ஹவ் ஆர் யு..?”
“பைன்.. எங்கே இந்தப் பக்கம்…?”
“ஆபிஸில் ஆடிட்டிங் பார்ட்டிக்காக இங்கே லன்ச் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். நான் முன்னாலேயே வந்து விட்டேன்..”
“ஈஸிட்.. உங்களுடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்தாரே…”
ஹரிஹரன் தயங்காமல் வினவினான்.. அவனது அந்தக் குணம் ரூபிணிக்கு வியப்பை அளித்தது.
‘எப்படி நேரடியாய் கேட்கிறான்…?’
“அவர் என் ஆபிஸில் வேலை பார்ப்பவர்..”
“ஓ.. உங்கள் பிரண்டோ என்று நினைத்தேன்…”
இது கொஞ்சம் மறைமுகமான கேள்வி.. ஆனாலும் விடாமல் துருவித் துருவிக் கேட்கிறான்.
நீ ஒருவனுடன் ஏன் ஹோட்டலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறாய்..? உன்னுடன் பேசிக் கொண்டிருப்பவன் யார்..? ஆபிஸில் கூட வேலை பார்ப்பவன் என்றால் உனக்கு எந்த அளவுக்கு பழக்கம்?
‘சும்மாவா இவனைப் பார்த்து எல்லோரும் பயப்படு கிறார்கள்’ ரூபிணியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
ஹரிஹரனின் கூரிய விழிகள் அவளது புன்னகையை கண்டு கொண்டன.. அவன் முகத்திலும் புன்னகை பரவியது.
“போயும்… போயும் அவனைப்போய் என் பிரண்ட் என்கிறீர்களே.. அந்த அளவுக்கா என் ரசனை மட்டமாகப் போய் விட்டது..? அவன் ஒரு ரோக்..!”
அருகிலிருந்தவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மிக மெதுவான குரலில் ஹரிஹரனின் காதுகளில் மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தாள் ரூபிணி..
‘அப்படியா சேதி…’ ஹரிஹரனின் விழிகள் தூரமாய் நின்ற மூர்த்தியை பார்வையாலேயே எரித்தன.
“அப்படியானால் அவனுடன் ஏன் நின்று பேசவேண்டும்..?”
ரூபிணி அவனுக்கு அருகே அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க,
“அவர்களுக்கு தமிழ் தெரியாது…” என்றான் அவன்.
“அவனிடம் நான் எங்கே பேசினேன்..? லன்ச்சுக்கு முன்னாலேயே வந்து விட்டேன். மற்றவங்க வருவதற்காக வெயிட் பண்ண வேண்டும். இவன் வேண்டுமென்றே வந்து பேச்சுக் கொடுக்கிறான்..”
“இங்கே உட்காருங்கள்…”
ஹரிஹரன் அவனுக்கு அருகே இருந்த காலி இருக்கையை காட்டினான். அவள் தயங்காமல் உட்கார்ந்து கொண்டாள்.. அவன் மனதில் இதம் பரவியது.
‘எவ்வளவு இலகுவாக அமர்கிறாள்… அவளது அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவனுடன் பேசப் பிடிக்காதவள்… ஒரே ஓர் முறை நேரில் பேசியவனுடன் பேசத் தயங்காமல் உட்காருகிறாள்.. ஹரிஹரன் மேல் அவ்வளவு நம்பிக்கையா..?’
“நீங்கள் இங்கே..” அவள் கேள்வியை முடிக்காமல் பார்த்தாள்.
“பிஸினெஸ் லன்ச்…” அவன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான்.
“அடடா… நான் டிஸ்டர்ப் பண்ணி விட்டேனே…”
“உங்கள் ஆபிஸ் ஆட்கள் வராமல் நீங்கள் எழுந்து போனால் அதுதான் என்னை டிஸ்டர்ப் பண்ணும்.. நான் நிம்மதியாய் இவர்களுடன் பிஸினெஸ் பேச முடியாது…”
ரூபிணி நம்ப முடியாமல் அவன் முகம் பார்த்தாள்.
‘என் மேல் அவ்வளவு அக்கறையா? நான் அந்த அளவுக்கு முக்கியமானவளா…?’
ஹரிஹரனின் முகபாவனை ‘ஆமாம்’ என்றது.. அவள் விழிகள் படபடக்க பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.. சர்வர் ஆர்டர் எடுக்க அருகில் வந்து மரியாதையுடன் நின்றான். அவனது விழிகள் ரூபிணியை பயபக்தியுடன் பார்த்தன.
‘ஹரிஹரன் சாரின் அருகே இவ்வளவு உரிமையாய் சகஜமாய் அமர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண் யார்..?’
ஹரிஹரன் எதிரே இருந்தவர்களிடம் இந்தியில் ஏதோ வினவினான்.. அவர்கள் சிரித்துக் கொண்டே..
“அச்சா…” என்றார்கள்…
“நான்கு ஜூஸ்…” என்றான் ஹரிஹரன்..
“எனக்கு ஒன்றும் வேண்டாமே…”
“எனக்காக நீங்கள் சாப்பிட வேண்டுமே…”
ஹரிஹரன் குறும்பாகக் கூறினான். ‘எனக்காக…’ ரூபிணி சொன்ன வார்த்தை.. ரூபிணி இதழ் கடித்தாள்.. அவன் பார்வை அவள் இதழ்களில் படிந்தது.. அவள் முகம் சிவந்தாள்.
“இன்னும் நான் சொன்ன வார்த்தையை நினைவில் வைத்திருக்கிறீர்களா…?”
“என்றும் நினைவில் வைத்திருப்பேன்… என்றுமென்றால்.. என் இறுதிவரை…”
ரூபிணி தவித்துப் போனாள்.. ஜமுனா சொன்னது போல் இது விபரீத விளையாட்டுத்தான்.. நெருப்போடு விளையாடும் விளையாட்டு.. ‘மூர்த்திக்கு பயந்து இங்கு வந்து அமர்ந்தது தவறோ…?’ நினைக்கும்போதே அவளது நெஞ்சம் அவளைப் பார்த்துச் சிரித்தது.
‘மூர்த்திக்கு பயந்தா இங்கு வந்து அமர்ந்தாய்…?’
ஹரிஹரனின் முகம் பார்த்தாள்.. அவன் ஜூஸ் தம்ளரை அவள் பக்கம் நகர்த்தினான்.. இயந்திரம் போல் எடுத்துக் குடித்தாள்.. ஹரிஹரன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவளை… அவளது தவிப்பை… அவளது பயத்தை… அவளது நடுக்கத்தை… அவளது படபடப்பை… பார்த்துக் கொண்டே இருந்தான்..
அவன் முகத்தில் என்றுமேயில்லாத கனிவு இருந்தது.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.