Chapter 11
ஹரிஹரனின் பார்வை தன் மேலேயே பதிந்திருப்பதை உணர்ந்த ரூபிணியால் விழிகளை உயர்த்த முடிய வில்லை.. அவளது வெட்கத்தை உணர்ந்த ஹரிஹரனின் முகத்தில் பெருமிதம் வந்தது.
தனது அனைத்து அடையாளங்களும் அகன்று தான் ஒரு ஆண் என்ற உணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருந்தது.. அவனைக் கண்டு ஒரு பெண் நாணித் தலை குனிவது அவனது ஆண்மைக்கு பெருமிதத்தையும் கௌரவத்தையும் அளித்தது. எதிரே அமர்ந்திருந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பக்கவாட்டில் அவளைப் பார்க்க வசதியாய் திரும்பி அமர்ந்து கெண்டான்.
ரூபிணி சங்கடமுற்றாள்.. ஹரிஹரன் அவனது ஆர்வத்தை வெளிப்படையாய் காண்பித்தது இயல்பாய் அவனைப் பார்த்து பேசவிடாமல் அவளைத் தடுத்தது. ஆனால் அவனா அவளைப் பேசாமல் இருக்க விடுபவன்..?
ஹரிஹரன் அவளது மௌனத்தைக் கலைத்தான்..
“கோவில்பட்டிக்கு இந்த மாதம் போவீங்களா…?”
“என் ஊர் கோவில்பட்டி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்..?” ரூபிணி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“அதுவும் தெரியும்… உன் வீடு அண்ணா நகரில் நான்காவது ஸ்ட்ரீட்டில் இருக்கிற ஆறாம் நம்பர் வீடு என்பதும் தெரியும்.. உன் அப்பா பெயர் ரெங்கநாதன்… அம்மா பெயர் வீரலட்சுமி.. இருவருமே பேங்கில் வேலை பார்க்கிறார்கள் என்பதும் தெரியும்.. உன் அக்கா பெயர் தாரிணி.. பெங்களூரில் மேரேஜ் பண்ணிக் கொடுத்திருக் கிறீர்கள்.. உன் தம்பி பெயர் நவின் இன்ஜினியரிங் படிக்கிறான் என்பதும் தெரியும்.. இன்னும் உன் அக்கா வேலை பார்க்கும் கம்பெனி.. குடியிருக்கும் அட்ரஸ்.. உன் தம்பி படிக்கும் காலேஜின் பெயர்.. ஊர்.. எல்லாமே தெரியும்.. சொல்லவா…?”
“வேண்டாம்.. வேண்டாம்.. ஆனால் இவ்வளவும் உங்களுக்கு எப்படித் தெரியும்..?”
“அதுதான் ஹரிஹரன்…”
“இதையெல்லாம் ஏன் தெரிந்து கொண்டீர்கள்..?”
“இது என்ன கேள்வி? உன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அடிமுதல் நுனி வரை தெரிந்து கொள்ளத்தான்..”
“அதுதான் ஏன்..?”
“சும்ம்மா…”
ஹரிஹரன் மிக லேசாக மற்றவர்கள் அறியாத வண்ணம் கண் சிமிட்டினான். இப்போது ரூபிணியின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.
‘எப்படி தைரியமாய் கண் சிமிட்டுகிறான்…?’
ஹரிஹரனின் எதிரேயிருந்தவர்கள் ஹிந்தியில் ஏதோ வினவ.. அவன் ரூபிணியைப் பார்த்தவாறே இந்தியிலேயே பதில் சொன்னான்.. அவர்கள் பலமாய் சிரித்தார்கள்.. ரூபிணி புரியாமல் விழித்தாள்..
“ஏன் சிரிக்கிறார்கள்…?” ரூபிணி வினவினாள்…
“சும்ம்..மா…” அவன் முகத்தில் விசமம் இருந்தது.
“இல்லை.. நீங்கள் என்னைப் பற்றி ஏதோ சொன்னீர்கள்..”
“இருக்கலாம்…”
“என்ன சொன்னீர்கள்…?”
“இன்னொரு நாள் சொல்கிறேன்..”
‘இன்னொரு நாளா?’ ரூபிணி தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
‘இதுபோல் இன்னொரு நாள் வருமா…?’
“இல்லை… இப்போதே சொல்லுங்கள்..”
“இப்போது சொல்லக்கூடாது ரூபி…”
“ரூபியா…?”
“யெஸ்…”
“என் பெயர் ரூபிணி…”
“இருக்கட்டுமே…”
“அது அழகான பெயர் தெரியுமா..?”
“அழகான பெண்ணுக்கு அழகான பெயர்தான் வைப்பார்கள்.. அதிலும் உன் பேரண்ட்ஸ் உன் அழகைப் பார்த்து பொருத்தமாய் பெயர் வைத்திருக்கிறார்கள்.. ரூபிணி.. ரூபவதியென்றால் அழகான பெண் என்று அர்த்தம். ரூபிணியென்றால் அழகே உருவானவள் என்று அர்த்தம்…”
ஹரிஹரனின் பார்வை ரசனையாய் அவள் மேல் படிந்திருந்தது.. அவளைத் தலையோடு கால் வரை ஓர் முறை பார்த்தான். ரூபிணி முகம் திருப்பிக் கொண்டாள். மயில் கழுத்து நிறத்தில் ஜரிகைக் கரையிட்ட காட்டன் புடவையில் தேவதைபோல் இருந்தாள்.. நீண்ட பின்னல்.. காதுகளில் அழகிய பூக்களின் கொத்துக்கள் ஒன்று சேர்ந்த வடிவில் தோடு… கழுத்தில் மெல்லிய செயின்… கைகளில் பொன் வளையல்கள்.. இடது கையில் சிறிய கைக்கடிகாரம்.. முகத்தில் சாயப் பூச்சில்லாத இயற்கை வனப்பு.. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது ஹரிஹரனுக்கு…
“ரூபிணி.. அழகே வடிவானவள்… ரூபி.. வைரம்.. இரண்டுமே உனக்குப் பொருத்தும் ரூபிணி…”
இயல்பான ஒருமைக்கு அவன் எப்போது தாவினான் என்று ரூபிணி யோசித்தாள். அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதைத் தவறாக நினைக்கவும் முடியவில்லை.. ஒருமை தந்த மன நெருக்கம் நிறைவைத் தந்ததால் அதைப் பற்றிய சிந்தனையைத் தவிர்த்தாள்.
“ரூபிணி.. சாப்பிட வரவில்லையா…?” பிரீதியின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.. அவளது அலுவலகத்தார் வந்து விட்டிருந்தனர்… ப்ரீதி சற்று தள்ளி நின்று கொண்டு அழைத்தாள்..
“ஓகே.. சார்.. எங்க ஆபிஸில் வந்திட்டாங்க.. ஸீ யு லேட்டர்..”
“ஊஹூம்…? லேட்டர்ன்னா எப்போ..?”
“சார் ப்ளீஸ்.. தே ஆர் வெயிட்டிங் பார் மீ…”
“நானும்தான் உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்..”
“சார்… நான் போகவேண்டும் சார்…”
“எனக்குப் பதிலைச் சொல்லிவிட்டுப் போ…”
“நான் சொல்கிறேனே…”
“எப்போது…?”
“போனில் சொல்கிறேன்…”
ரூபிணி அப்போதைக்கு தப்பிக்க அந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள். ப்ரீதி ரூபிணியைப் பார்த்த பார்வையில் சிறு கலக்கம் இருந்தது.
“அது ஹரிஹரன் போல இருக்கிறதே…”
“அவரேதான்..”
“அவருடனா இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தாய்…?”
“ஆமாம்…”
எளிதாய் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டவளிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள் ப்ரீதி.. அதற்குள் அவர்களது ஆபிஸர் ‘யார் யாருக்கு என்ன வேண்டும்..?’ என்று வினவ அவர்களது கவனம் சாப்பாட்டில் திரும்பியது.
அனைவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இடையில் சர்வர் வந்து மூர்த்தியின் காதுகளில் ஏதோ சொல்ல… அவன்.
“ஒரு நிமிஷம்.. வந்து விடுகிறேன்..” என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்..
ஜந்து நிமிடங்களில் திரும்பி வந்தவனின் முகம் வீங்கினாற் போல இருந்தது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.. தலை முடி கலைந்திருந்தது. உடை கசங்கியிருந்தது. குனிந்த தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான்..
“மூர்த்தி.. உங்களுக்கு அடுத்து என்ன சொல்ல..?” ஆபிஸர் வினவினார்.. அவனிடமிருந்து பதிலே இல்லை.. அருகில் அமர்ந்து ப்ரீதியை சைட் அடித்துக் கொண்டிருந்த ஜவஹர் மூர்த்தியின் முதுகில் ஓர் அடி வைத்தான்.
“ஆ.. ஆ.. என்ன..” மூர்த்தி பயந்து போனவன் போலவும்.. வலி தாங்க முடியாதவன் போலவும் அலறினான்.
“என்னப்பா ஆச்சு.. ஏன் இப்படி அலறுகிறாய்..?”
“உனக்கெப்படிடா என் வேதனை தெரியும்..”
“அது சரி.. உன் வேதனை உனக்குத்தானே தெரியும். ஆபிஸர் சார் கூப்பிடுகிறார்.. என்னன்னு கேளு…”
“சார்…”
“இன்னம் சொஞ்சம் வேண்டுமா மூர்த்தி.. தரச் சொல்லவா…?”
“ஐயையோ…”
“ஏன்ப்பா.. என்ன ஆச்சு உனக்கு பிரைட் ரைஸ் பிடிக்குமே… இன்னும் கொஞ்சம் தரச் சொல்லவான்னு கேட்கிறார்.. அதுக்கு ஏன் அலறுகிற…?”
“எனக்கு எதுவும் வேண்டாம் சார்.. நான் போகிறேன்..”
மூர்த்தி எழுந்து அவசரமாய் கையைக் கழுவி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
“ஏம்பா ஜவஹர்! ஏன் இவன் இப்படி ஓடுகிறான்…”
“எனக்குத் தெரியவில்லை சார்..”
ஜவஹர் யோசனையுடன் எழுந்து கைகழுவச் சென்றான். சற்று நேரம் கழித்து திரும்பி வந்தான்.
“ரூபிணி சாப்பிட்டு விட்டாயா…” ப்ரீதி கேட்டாள்.
“ம்ம்…” ரூபிணி எழுந்து கொண்டாள்.
கைகழுவி விட்டுத் திரும்பி வரும்போது ஹரிஹரன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ரூபிணியின் பார்வை தாவியது.
ப்ரீதி அருகே அமர்ந்திருந்ததால் ஹரிஹரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு அவ்வளவு நேரமும் இருந்தவள் கிளம்பப் போகிறோம் என்று தெரிந்ததும்.. அவனை இனி எப்போது பார்க்க முடியுமோ.. இல்லை பார்க்க முடியாமலே போய் விடுமோ என்ற தவிப்புடன் அவனிருக்கும் திசையைப் பார்த்தாள்.
அதே நேரம் அவனும் அவளையே பார்த்துக் கொண்டு எதிரே இருந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தான். அவனது பார்வையைச் சந்தித்ததும் ரூபிணியின் உடல் குப்பென்று வியர்ந்து விட்டது… இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“போகலாமா…” ப்ரீதி அவளது கரம் பிடித்து இழுத்தாள்..
“போகவேண்டுமா…?” மீண்டும் ஏக்கத்துடன் ஹரிஹரனிடம் அவளது பார்வை ஓடியது.
“போகத்தான் வேண்டும்…” ப்ரீதி வெடுக்கென்று பதில் சொன்னாள்..
“ம்ம்ம்…” ரூபிணி நகர நினைத்தாலும் அவள் கால்கள் நகரவில்லை..
ப்ரீதி கோபத்துடன் அவளது கை பற்றி இழுத்தவாறு ஹோட்டலை விட்டு வெளியே சென்றாள்.. ஏ.ஸி. ஹாலை கடக்கும் கடைசி நொடியில் ரூபிணி ஹரிஹரனைத் திரும்பிப் பார்க்க.. அவன் தலை அசைத்தான்.
அந்தச் செய்கையில் மனம் நிறைந்தவள் செலுத்தப் பட்டவள் போல வண்டியை எடுத்தாள்..
“இறங்கு…” ப்ரீதி அதட்டினாள்..
“ஏண்டி..” புரியாமல் விழித்தாள் ரூபிணி..
“நீ வண்டியை ஓட்டினால் ஆக்ஸிடென்ட்தான் வரும். நான் ஓட்டுகிறேன்.. நீ பின்னால் உட்காரு…”
“நான் என்ன இன்றைக்குன்னா புதிதாய் வண்டி ஓட்டுகிறேன்..?”
“ஆனால் இன்றைக்குத்தானே புதிதாய் நீ நிலை தடுமாறி நின்று நான் பார்க்கிறேன்..? இந்த நிலையில் நீ வண்டியை ஓட்ட வேண்டாம்…”
“ப்ரீதி…”
“பேசாமல் பின்னாலே உட்கார்..”
அலுவலகம் வந்து சேர்ந்த பின்னால் இருவருக்கும் பேச நேரம் கிடைக்கவில்லை. நான்கு மணிக்கு சபாபதி அவர்கள் இருவரின் டேபிள் மேலேயும் காபிக் கோப்பைகளை வைத்து விட்டுச் சென்றான். காபியை உறிஞ்சிய படி ரூபிணியைப் பார்த்தாள் ப்ரீதி.. ரூபிணி அவள் பார்வையைத் தவிர்த்தாள்.. ப்ரீதியின் முகத்தில் கோபச் சிரிப்பு வந்தது.
“ஏய்ய்.. என்னைப் பாரு…”
“என்ன…?”
“நீ முதன் முதலாய் வேலையில் சேர்ந்தபோது எப்படி இருந்தாய் தெரியுமா..? நேர் கொண்ட பார்வையுடன் இருந்தாய்.. இன்று அந்தப் பார்வை எங்கே போனது..?”
“இல்லையே.. நான் எப்போதும் போல்தானே இருக்கிறேன்..”
“வேண்டாம் ரூபிணி.. இது சரிவராது..”
“எது..?” ரூபிணி திகிலுடன் கேட்டாள்.. ப்ரீதி அவளுடைய அந்தரங்கத்தை அறிந்து கொண்டு விட்டாள் என்ற பயம் அவளுள் எழுந்தது. ப்ரீதியின் வார்த்தைகள் அவளது பயத்தை உறுதிப்படுத்தின..
“எண்ணையும்.. தண்ணீரும் ஒன்றாய் சேர முடியாது ரூபிணி.. இந்த எண்ணத்தை மறந்து விடு.. உன் மனதில் ஆசைகளை அழித்துவிடு..”
“ப்ரீதி.. நீ சொல்வது எனக்குப் புரியவில்லை..”
“புரியும்.. புரியாதது போல் நடிக்காதே.. நான் ஹோட்டலின் ஏ.ஸி. ஹாலுக்குள் வரும்போது நீ ஹரிஹரனின் பக்கத்தில் உட்கார்ந்து ஆண்டாண்டு காலமாய் பழகியவள் போல் பேசிக் கொண்டிருந்தாய்..”
“அது… மூர்த்தி வந்து தொல்லை கொடுத்தான்.. அதனால்தான்…”
“இனி மூர்த்தி தொல்லை கொடுக்க மாட்டான்..”
“எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்கிறாய்…”
“இப்போதுதான் ஜவஹர் வந்து என்னிடம் சொல்லிவிட்டுப் போனான்..”
“நீ அவரிடம் பேசமாட்டாயே…”
“உன் விஷயம் என்பதால் கேட்டுக் கொண்டுதானே ஆக வேண்டும்..?”
“என் விஷயமா…?”
“ஆமாம்.. மூர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாதியில் சர்வர் கூப்பிடவும் எழுந்து போனானே… ஏன் என்று தெரியுமா…?”
“ஏன்…?”
“கூப்பிட்டு விட்டது ஹரிஹரனின் பி.ஏ… மூர்த்தியை பாத்ரூமிற்குள் விட்டு நான்கு பேர், நொறுக்கி எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்…”
“எதற்கு…?”
“உனக்கு இன்னும் புரியவில்லையா..?”
“புரியவில்லை ப்ரீதி…”
“புரியவில்லையா..? ரூபிணி.. உனக்கு எப்படி புரிய வைப்பது? இனிமேல் அப்படித்தான்.. உன் நிழலைப் பார்க்கக் கூட யாரும் பயப்படுவார்கள்.. உன்னைச் சுற்றி நெருப்பு வளையம் விழுந்து விட்டது ரூபிணி.. தெரிந்தோ.. தெரியாமலோ.. நீ அதற்குள் சிக்கி விட்டாய்.. உன்னால் மீண்டு வர முடிந்தால் வந்து விடு. அதுதான் ஒரு பிரண்டாக நான் உனக்குச் சொல்லும் அட்வைஸ்..”
ப்ரீத்தியின் கண்கள் கலங்கி விட்டன.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.