Chapter 12
நெருப்புடன் நீ விளையாடுகிறாய் என்று அன்று ஜமுனா எச்சரித்தாள், நெருப்பு வளையத்திற்குள் சிக்கி விட்டாய் என்று இன்று ப்ரீதி கூறுகிறாள்.. இருவரும் அவளின் அன்புத் தோழிகள். நலம் விரும்பிகள்.. இருவர் நாடுவதும் ரூபிணியின் நன்மையைத்தான்.. ஆனால் ரூபிணியின் மனம் அந்த நெருப்பு மனிதன் ஹரிஹரனிடம் சிக்கியிருக்கிறதே.. அவள் என்ன செய்வாள்? ப்ரீதியோ தன் கடமையைச் செய்து கொண்டிருந்தாள்…
“மூர்த்தி திரும்பி வந்தபோது அவனது நடையுடை பாவனை எதுவும் சரியில்லையாம்.. சாப்பிடக் கஷ்டப் பட்டிருக்கிறான். உட்காரக் கூட முடியாமல் சிரமப் பட்டானாம்.. அதனால்தான் பாதியிலேயே எழுந்து ஓடியிருந்திருக்கிறான். ஜவஹர் சந்தேகப்பட்டு அவனைக் கூப்பிட்டுக் கொண்டு சென்ற சர்வரிடம் போய் விசாரித்து இருக்கிறான்.. சர்வர்தான் எல்லாவற்றையும் சொன்னானாம்.. மூர்த்தி அடிவாங்கினதில் எனக்கு சந்தோசம்தான்.. அவனுக்கு இதுவும் வேண்டும்.. இன்னமும் வேண்டும்..”
“ஓ.. அதனால்தான் நம் ஆபிஸர் அவனிடம் இன்னும் கொஞ்சம் வேண்டுமா? தரச் சொல்லவா.. என்று கேட்டதும் அப்படி அலறினானா?” ரூபிணி ‘களுக்’கென்று சிரித்தாள்.
ப்ரீதியும் உடன் சேர்ந்து சிரித்தாள். ஆனால் அவளது சிரிப்பு பாதியிலேயே மறைந்தது. ரூபிணியை கவலையுடன் பார்த்தாள்..
“இது சிரிக்க வேண்டிய விஷயமில்லை ரூபிணி.. ரொம்ப ரொம்ப சீரியஸான விஷயம்.. இனி உன் சுதந்திரம் பறி போய்விடும்.. ஜவஹர் கூட உன்னிடம் பேச யோசிப்பான்.. நாம் காட்டுக் கத்தலாய் கத்தினால்தான் சபாபதி நமக்கு காபி வாங்கிக் கொண்டு வந்து தருவான்.. இன்றைக்கு டான்னு நாலு மணிக்கெல்லாம் காபி நம் டேபிளில் வந்து கிடைத்து விட்டது.. எப்படின்னு யோசிச்சயா..?”
“அட.. ஆமாம்.. ஆனால் ப்ரீதி.. நீ பயப்படுவ தெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்… இது நம் ஆபிஸ் ப்ரீதி..”
“நம் ஆபிஸில் உன்னைப் பார்க்க வந்த ஹரிஹரன் எங்கே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்..? விசிட்டர்ஸ் ஹாலிலா…?” ப்ரீதியின் குரலில் எள்ளல் இருந்தது.
“நம் ஆபிஸரின் ரூமில்…” ரூபிணியின் குரல் உள்ளே இறங்கி விட்டது.
“சரி.. நீங்களிருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஆபிஸர்கூட இருந்தாரா? இல்லை வெளியே போய்விட்டாரா…?”
“வெளியே போய்விட்டார்…”
“இது உன் ஆபிஸ்… இங்கே ஹரிஹரன் தேர்ட் பெர்ஸன்.. ஆனால் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது..?”
ரூபிணி மௌனமானாள்.. ப்ரீதி தொடர்ந்து பேசினாள்.
“மூர்த்தியைக் கூப்பிட்டு விட்டது ஹரிஹரனுடைய பி.ஏ… இவன் ஏன் உடனே பாதிச் சாப்பாட்டில் எழுந்து போய் அடியை வாங்கிக் கொண்டு வந்தான்..? வரமாட்டேன்னு சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்லவில்லை…? கூப்பிட்ட உடனே போய் விட்டால் எலும்பை மட்டும் எண்ணி அனுப்பி வைத்து விடுவார்கள்.. வரமாட்டேன்னு சொன்னால் தூக்கிக் கொண்டு போய் கையைக் காலை முறித்து ரோட்டில் தூக்கிப் போட்டு விடுவார்கள் அதற்காகத்தான்.. நினைத்துப் பார் ரூபிணி.. அவனை அடித்தது நான்கு பேர்.. நாம இருபத்தி நான்கு ஆள்கள் உள்ளே கூப்பிடு தூரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்… அவன் ஒரு சத்தம் போட்டு நம்மை உதவிக்குக் கூப்பிட்டிருக்கலாம். அவன் கூப்பிடவில்லை.. வாயைத் திறக்காமல் ஸின்ஸியராய் அடி வாங்கியிருக்கிறான்.. வாயைத் திறந்தால் என்ன நடக்குமென்று அவனுக்குத் தெரியும்…”
“ப்ரீதி.. நீ நினைப்பது போல் எதுவும் இல்லை…”
“இல்லையென்று நம்ப நான் தயாராக இல்லை.. நான் வந்தபோது நீ ஹரிஹரனுடன் பேசிக் கொண்டிருந்தாய்.. எனக்கு பக்கென்று ஆகி விட்டது. ஐந்து நிமிடங்களாக அங்குதான் நின்று கொண்டிருந்தேன்.. உன் முகமும்.. ஹரிஹரனின் பார்வையும் எனக்கு உணர்த்திய செய்தியே வேறு… உனக்குத் தெரியுமா ரூபிணி.. ஹரிஹரன் பெண்களிடம் பேசவே மாட்டார்.. அவரைப் பற்றி ஆயிரம் வதந்திகள் உண்டு.. அதில் பெண்ணைச் சம்பந்தப்படுத்தி ஒரு வதந்தி கூட இல்லை.. அப்படிப்பட்ட மனிதன் உன்னிடம் பேசுகிறார்.. அதுவும் மிகப்பெரிய பிஸினெஸ் பேச்சை நிறுத்தி வைத்து விட்டு…”
“பிஸினெஸ் லன்ச்சுக்கு வந்திருந்தார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும் ப்ரீதி.. என்ன பிஸினெஸ் என்று தெரியாது..”
“டில்லியில் ஒரு ஸ்டார் ஹோட்டல் கட்டப் போகிறாராம்.. அது சம்பந்தமாய் பேச வந்திருந்தவர்கள் தானாம் அவர்கள்..”
“இது உனக்கு எப்படித் தெரியும்…?”
“ஜவஹரிடம் அந்த சர்வர் சொன்னானாம்..”
“ஸோ.. ஹோட்டலுக்குப் போனால் நாம் பார்த்துப் பேச வேண்டும்…”
“எங்கு பேசினாலும் பார்த்துத்தான் பேசவேண்டும். இங்கே ஆபிஸில் சபாபதியின் முன்னால் பேசிப்பார்.. அவன் பிபிஸி.. இந்த விழுப்புரம் தாண்டியும் அவன் பேச்சு ஒளிபரப்பாகி விடும்.. இந்நேரம் உன் மேல் ஹரிஹரன் காட்டிய அக்கறை பற்றி இந்த ஊர் முழுவதும் தெரிந்திருக்கும்…”
தெரிந்திருந்தது என்பது அன்று மாலை ஜமுனா முறைத்துக் கொண்டு அறைக்குள் வந்தபோதே தெரிந்தது.
‘ப்ரீதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதா… இனி இவளிடமும் வாங்க வேண்டுமா…’ சோர்வாய் நினைத்துக் கொண்டாள் ரூபிணி…
“தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன்.. நெருப்பை அள்ளிப் போட்டுக் கொள்கிற மர மண்டைகளை இப்போதுதான் பார்க்கிறேன்..”
உடை மாற்றிக் கொண்டே சுவரைப் பார்த்துப் பேசினாள் ஜமுனா.. ரூபிணி உதட்டை மடித்துக் கடித்தாள்.
‘இவளுக்கு என்ன சமாதானம் சொல்வது..?’
மெதுவாய் சென்று ஜமுனாவின் தோளைத் தொட்டாள்.. அவளோ கோபத்துடன் இவளது கையைத் தட்டி விட்டாள்…
“என்னிடம் யாரும் பேச வேண்டாம்…”
“ஏன் ஜமுனா.. நான் என்ன செய்தேன்…?”
“பேச வேண்டாமென்று சொல்கிறேனில்லை…”
“உன்னிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவேன்..?”
“பேசுவதற்கு உனக்கு ஆளா இல்லை…?”
ஜமுனாவின் குத்தல் புரிந்தாலும் புரியாதது போல் ரூபிணி வினவினாள்..
“ப்ரீதியை சொல்கிறாயா?”
“நான் யாரைச் சொல்கிறேன் என்று உனக்குத் தெரியாதா..?”
“தெரியவில்லை…”
“நீ எப்போதிருந்து இப்படி ஒரு மறைத்துப் பேசுகிறவளாய் ஆனாய்..? உனக்கு இப்படியெல்லாம் பேச வராதே…”
ரூபிணிக்கு அயர்வாய் இருந்தது..
‘உன் நேர் கொண்ட பார்வை எங்கே போனது? உன் பார்வை ஏன் அலை பாய்கிறது..?’ ப்ரீதி கேட்டாள்.. இப்போது ஜமுனா ரூபிணியின் பேச்சை குறை சொல்கிறாள்..
அவளது நேர் கொண்ட பார்வையும்.. ஒளிவு மறைவில்லாத பேச்சும் எங்கே போயின..?
ஹரிஹரனின் பின்னாலேயே போய் விட்டன என்று அவளது மனம் கூறியது.. ரூபிணி ஜமுனாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றாள்..
“ஒன்று தானாய் தெரிய வேண்டும்.. இல்லை யென்றால் சொல்வதைக் கேட்க வேண்டும்.. பிடிவாதமாய் தண்டவாளத்தில்தான் தலையை வைத்துக் தூங்குவேன் என்றால் எப்படி…?”
“ஜமுனா.. நானாய் போய் பேசவில்லையடி.. சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது..”
“சும்மா… கதை விடாதே.. வேண்டுமென்றே வம்பை விலைக்கு வாங்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறாய்…”
“என் ஆபிஸில் மூர்த்தி என்று ஒரு ராஸ்கல்…”
“எல்லாம் எனக்குத் தெரியும்.. எனக்கு மட்டுமல்ல.. இந்த ஊரில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்.. உனக்கு ஒன்று தெரியுமா…?”
“என்னது…?”
“நீ ஆபிஸில் இருந்து வரும் போது ஒரு புல்லட் உன்னைப் பாலோ பண்ணிக் கொண்டு வந்ததாமே…”
“எனக்குத் தெரியாதே…”
“இப்போது தெரிந்துகொள்.. ஆளைப் பார்க்கிறாயா..?”
ஜமுனா ஜன்னல் திரையை விலக்கிக் காட்டினாள்.. ரூபிணி மறைவாய் நின்று பார்த்தாள்.
ஹாஸ்டலின் எதிர்புறம் சாலையில் ஒரு புல்லட் நின்று கொண்டிருந்தது.. அருகே வாட்டசாட்டமாய் ஒரு ஆள் நின்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்..
“யார் அந்த பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் ஆளையா சொல்கிறாய்…?”
“பேப்பர் படிப்பதெல்லாம் பாவ்லா.. அந்த ஆள் நம் ஹாஸ்டலுக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கிறான்.. சம்பளம் நம் ஹாஸ்டல் நிர்வாகத்தார் குடுக்க மாட்டார்கள்.. அந்த ஹரிஹரன் கொடுப்பார்…”
“இது எதுக்குடி வெட்டி வேலை…?”
ஜமுனா தீர்க்கமாய் பார்த்தாள்.. ரூபிணியின் முகத்தில் தெரிந்த அறியாமையைக் கண்டு ஒரு கணம் அவள் மேல் பரிதாபப்பட்டாள்.. மனம் இளகியவளாய் ரூபிணியை அருகே அமர்த்திக் கொண்டு புத்தி சொன்னாள்..
“ரூபிணி… நிலாவைக் காட்டி நம் அம்மாக்கள் நமக்கு சோறு ஊட்டியிருக்கிறார்கள்.. நீ அந்த நிலவைத் தொடக்கூட ஆசைப்படலாம்.. ஏனென்றால்.. அதில் நாம் கால் பதித்திருக்கிறோம்.. சூரியனைத் தொட ஆசைப்படலாமா..? ஹரிஹரன் சுட்டெரிக்கும் சூரியன்.. விலகி நில்.. இல்லையென்றால் எரிந்து சாம்பலாகி விடுவாய்…”
தோழியின் வார்த்தைகளால் ரூபிணி மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தது எல்லாம் சற்று நேரம் தான்.. அந்த சுட்டெரிக்கும் சூரியன் இரவு பத்து மணியளவில் செல்போனில் அழைத்தபோது அவளுக்கு இரு தோழிகளின் பயமும், அறிவுரையும் மறந்தே போனது.
நினைவில் நின்றதெல்லாம் ஹரிஹரன் அவளுடன் பேச விரும்பி போனில் அழைக்கிறான் என்பது மட்டும் தான்.
செல்போனில் அழைப்பு மணியோசை கேட்டு ஜமுனாவின் தூக்கம் கலைந்து விடுமோ என்ற பயத்துடன் உடனே பேசினாள்.
“ஹரிஹரன் பேசுகிறேன்…” என்றது மறுமுனை..
“ம்ம்…” ரூபிணி ஜமுனாவைப் பார்த்தாள்..
“ம்ம்.. மட்டும்தானா… பேச மாட்டாயா?”
“ம்ம்…” ரூபிணி எழுந்து பாத்ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.. “ரூபிணி…? ரூபிணி தானே..?”
“நான்தான்…”
“ஏன் பேச இவ்வளவு நேரம்..?”
“ரூமில் நானும் இன்னொரு பிரண்டும் இருக்கிறோம்..”
“இப்போது பாத்ரூமிற்குள் வந்து பேசுகிறாயா…?”
“எப்படிக் கண்டுபிடித்தீர்கள்..?”
“ஒரு யூகம்தான்.. சரி போனில் சொல்கிறேன் என்று சொல்லி விட்டுப் போனவள் ஏன் போனில் என்னை அழைக்கவில்லை..?”
“ம்ம்… சும்மாதான்…”
“என்னிடமே வா…? நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கவில்லை பார்த்தாயா…?”
ரூபிணியின் மனம் இனித்தது.. பதில் கூறாமல் நின்றாள்,
“பேச மாட்டாயா…?”
“என்ன பேச…?”
“எதையாவது பேசு.. பேச விஷயமா இல்லை..”
“நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா…?”
“ஆஹா.. எவ்வளவு முக்கியமான விஷயம்..? இப்படித் தான் பேச வேண்டும்..” ஹரிஹரன் வாய்விட்டுச் சிரித்தான்.
ரூபிணி நாக்கைக் கடித்துக் கொண்டாள்…
“நீங்கள்தானே எதை வேண்டுமானாலும் பேசச் சொன்னீர்கள்..?”
“ஓகே.. ஓகே நான்தான் சொன்னேன்.. அதைவிடு.. நான் போனில் கூப்பிடுவேன் என்று நீ எதிர்பார்க்கவே இல்லையா…? உண்மையைச் சொல்ல வேண்டும்..”
“நான் பொய் சொன்னதில்லை..”
“அது முன்பு… இப்போதும் அப்படியே இருக்கிறாயா?” ஹரிஹரன் நகைத்தான்.
“இப்போது மட்டும் என்ன ஆகி விட்டதாம்..?” ரூபிணி ரோசத்துடன் வினவினாள்.
‘இது என்ன ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி நீ இப்போ மாறி விட்டாய் என்று சொல்கிறார்கள்.. அவள் அப்படி என்ன மாறி விட்டாள்..?’
“எதற்குடா கோபப்படுகிறாய்…” ஹரிஹரன் சரஸமாக வினவினான்.
“இப்படியெல்லாம் பேசாதீர்கள்..”
“வேறு எப்படிப் பேச…?”
“நான் தூங்கப் போகிறேன்…”
“தூக்கம் வருகிறதா..?”
“ஏன் வராது…?”
“உன் பிரண்ட் என்ன செய்கிறாள்..?”
“தூங்கிக் கொண்டிருக்கிறாள்…”
“எப்போது தூங்கப் போனாள்..”
“அவள் தூங்கிப் போய் ஒரு மணி நேரமாகிறது..”
“நீ ஏன் தூங்கவில்லை..”
“தூக்கம் வரவில்லை…”
ரூபிணி மீண்டும் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.. இவனிடம் போய் வாய்விட்டு மாட்டிக் கொண்டாளே.. மறுமுனையில் ஹரிஹரன் சிரிப்பது காதில் ஒலித்தது.
“ஏன் தூக்கம் வரவில்லை…?” மென்மையாய் கேட்டான்..
“தெரியவில்லை…” அவள் உண்மையைச் சொன்னாள்..
“நான் சொல்லவா..?” அவள் கிசுகிசுத்தான்..
“வேண்டாம்…” அவள் வெட்கத்துடன் கூறினாள்..
“ஏன் வேண்டாம்.. நான் சொல்லுவேன்…”
“நான் செல்போனை ஆப் பண்ணி விடுவேன்..”
“எங்கே கட் பண்ணு… பார்ப்போம்…”
அவன் சவால் விட்டான்.. அவள் சிலையாகி நின்றாள்.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.