Chapter 13

0Shares

எப்படி முடியும்..? அவள் கையிலிருந்த செல் போனை அணைக்க ஓர் நொடி போதும்.. ஆனால் அந்த ஓர் நொடிக்குப் பின்பு…? ரூபிணியால் அதைத் தாங்க முடியுமா..? கலவரமாய் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள்..

“என்ன பேச்சையே காணோம்…?”

“எனக்குப் பயமாக இருக்கிறது…”

“எதற்குப் பயம்..? பைத்தியம்.. நானிருக்கிறேன்…”

“இல்லை சார்.. இது சரி வராது…”

“சரி வராததை விட்டுவிடு.. நான் ‘சார்’ என்று நீ அழைத்ததைச் சொல்கிறேன்.. அது சரி வராது ரூபிணி… விட்டுவிடு.. இனி அப்படி என்னை அழைக்காதே…”

“வேண்டாம். நான் நம் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க விரும்பவில்லை…”

“இடைவெளியே இல்லாமல் மனத்தால் நெருங்கி விட்ட பின்பு இல்லாத ஒன்றைக் குறைப்பதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்..?”

“இது பேச நன்றாக இருக்கும்..”

“கேட்கவும் நன்றாகத்தான் இருக்கும்..”

“நடைமுறை என்பது வேறு…”

“நடைமுறையில் என்னைத் தடுப்பது யார்..? என்னைத் தடுக்க எவனும் இன்னும் பிறக்கவில்லை.. இனி பிறந்து வந்தாலும் அவன் என் மகனாகத்தான் இருப்பான்…”

ரூபிணிக்கு மெய் சிலிர்த்தது.. ‘ஹரிஹரனின் மகன்..’

“என்ன ரூபிணி.. மீண்டும் பேசா மடந்தையாகி விட்டாய்..? கற்பனையில் என் மகனைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாயா..?”

ரூபிணி அழுது விட்டாள்.. “அது நடக்குமா..?”

“ஏய்ய்.. ஏன் அழுகிறாய்.. இதோ பார் ரூபிணி.. சுற்றியுள்ளவர்கள் ஆயிரம் சொல்வார்கள்.. நாம் நம் மனம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.. எந்த நம்பிக்கையில் நீ லாரன்ஸிற்கு பரிந்து என்னிடம் சிபாரிசு செய்தாய்…? எந்த நம்பிக்கையில் சில்மிஷப் பேச்சு பேசுகிறவனிடமிருந்து தப்பிக்க என் அருகினில் வந்து உட்கார்ந்தாய்…? அந்த நம்பிக்கையை மட்டும் கடைசி வரை என் மேல் வை.. எல்லாம் சரியாகிப் போய் விடும். நான் இருக்கிறேன் ரூபிணி.. பயப்படாதே.. தைரியமாய் இரு… நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்…”

ரூபிணி சுதாரித்துக் கொண்டாள்.. இனிப்பாக இருக்கிறது என்பதற்காக ஜமுனாவும் ப்ரீதியும் சொல்வது போல் அபாயகரமான விளையாட்டை விளையாடுவதா? இன்று இந்த ஊருக்கு தெரிவது கோவில்பட்டிக்குத் தெரிந்தால் அம்மாவும் அப்பாவும் தாங்கிக் கொள்வார்களா..?

“சார்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்..”

“சார் என்று கூப்பிடாதே…”

“இல்லை சார்… நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்..”

“சார் என்று கூப்பிடாதேயென்று சொல்கிறே னில்லை..?” ஹரிஹரனின் குரலில் குழைவு மறைந்து கடுமை இருந்தது..

“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? சொல்லச் சொல்ல சார் என்று கூப்பிடுகிறாயே.. ஹரிஹரனை உன் இஷ்டத்துக்கு விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டாயா? ஜாக்கிரதை.. இன்று ஹோட்டலில் நான் உன்னை ‘நீ’ என்று அழைத்தபோது ஏன் நீ அதை ஆட்சேபிக்கவில்லை? சொல்லு… ஏன் பேசாமல் ஏற்றுக் கொண்டாய்…?”

“நான் அதைக் கவனிக்கவில்லை…”

“ஏன் கவனிக்கவில்லை.. இதையே உன் ஆபிஸில் யாராவது உன்னை ‘வா.. போ..’ என்று கூப்பிட்டால் கேட்டுக் கொள்வாயா..?”

“மற்றவர்களும் நீங்களும் ஒன்றா…” ரூபிணி தன்னையும் அறியாமல் வெடுக்கென்று கூறினாள்..

மறுமுனையில் ஓர் நொடி மௌனம் நிலவியது..

“ரூபிணி… இதிலிருந்தே உன் மனம் உனக்குப் புரியவில்லையா..?” ஹரிஹரனின் குரலில் பழைய மென்மை மீண்டிருந்தது..

“என் மனம்.. என் மனம்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்..”

“சொல்.. கேட்கிறேன்…”

“என்னைத் தொடர்ந்து வர ஏன் ஆளை அனுப்பியிருக்கிறீர்கள்…?”

“ஓ.. அது உனக்குத் தெரிந்து விட்டதா..?”

“ஊருக்கே தெரிந்து விட்டது…”

“அதுதான் கோபமா..? நான் அவனைக் கண்டிக்கிறேன்.. இனி அவன் தொடர்ந்து வரமாட்டான்..”

“ஏற்கனவே வந்தது வந்ததுதானே…”

“ஸாரி.. ஸாரி.. போதுமா..? யாருக்கும் தலை வணங்காத இந்த ஹரிஹரன் உன் கோபத்துக்குப் பயந்து ‘ஸாரி’ சொல்லி விட்டான்.. கோபம் தீர்ந்ததா..?”

ரூபிணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“சிரிக்கிறாயா.. அப்பாடா ஒரு வழியாய் சிரித்து விட்டாய்..”

“ரொம்பப் பயந்தவர் போல என்னமாய் நடிக்கிறீர்கள்..”

“பயமில்லாதவன்தான்… அது மற்றவர்களிடம்… உன்னிடம் பயம்தான்…”

“தோடா.. ஊரே உங்களைப் பார்த்து பயப்படுகிறது. நீங்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறீர்களா..? யாரிடம் கதைவிடுகிறீர்கள்..”

“உன்னிடம் தானே நான் கதை பேச முடியும்…”

“நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே..”

“என் கோபத்தைக் கண்டு பயந்தவள்தான்.. சும்மா சொல்லு..”

“ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருந்தால் ஒருவர் மேல் ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தால்.. அது மனதுக்குள் இருந்தால் மட்டும் போதாதா…?”

“நீ என்ன சொல்ல வருகிறாய்..?”

“மனதுக்கு தெரிவது ஊருக்குத் தெரிய வேண்டுமா..? நான் ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்க்கிறேன்.. என் பேரண்ட்ஸ் என்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது இல்லையா..?”

“அதற்காக…?”

“பார்த்தீர்களா.. கோபப்படுகிறீர்கள்.. உங்கள் உலகம் வேறு.. என் உலகம் வேறு.. நான் இப்போதுதான் என் பேரண்ட்ஸை விட்டு வெளியே வந்திருக்கிறேன்.. உங்களைப் போல நினைத்ததைப் பேசவும்.. செயல் படுத்தவும் என்னால் முடியாது…”

“உனக்காக நான் பேசி விட்டுப் போகிறேன்.. பழைய பாடல் ஒன்று இருக்கிறது தெரியுமா..?”

அவன் பாடினான்..

    “நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும்..

    நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…”

“சரியாப் போச்சு போங்க.. பாட்டையே உல்டா பண்ணிப் பாடிட்டிங்க.. அது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்ன்னுல்ல  வரும்…”

“என்ன செய்வது.. நீதான் என்னைப் போல் நினைத்ததைப் பேச முடியாது என்கிறாயே.. உனக்காக நான் பேச வேண்டியது தான்..”

“ஓ.கே. குட்நைட்.. போனை வைத்து விடவா..?”

“எங்கே வைக்கப் போகிறாய்..?”

“நீங்கள் பேச்சை வளர்ப்பதிலேயே குறியாய் இருப்பீர்கள்..”

“தெரியுதில்ல.. அப்ப பேசு…”

“போனை கட் பண்ணிவிடவா என்றால் அதற்கும் சண்டைக்கு வருவீர்கள்.. அதனால்தான் வைத்து விடவா என்றேன்..”

“ஏன்.. இன்னொன்றும் சொல்லலாமே..”

“என்ன..?”

“போனை அணைத்து விடவா என்று கேட்கலாமே…”

அவன் குரலில் சீண்டல் இருந்தது.. அவள் உதடு கடித்தாள்..

“அது என்ன எதற்கெடுத்தாலும் உதட்டைக் கடித்துக் கொள்கிறாய்…”

‘எப்படி யூகிக்கிறான்…?’

“உங்கள் போன் நான் என்ன செய்கிறேனென்று காட்டுகிறதா..?”

“இல்லாவிட்டால் அம்மணி என்ன செய்வீர்கள் என்று தெரியாதா..? அதைத்தானே செய்வாய்…”

“போதும்.. நாளைக்கு நான் ஆபிஸ் போக வேண்டாமா..?”

“அது கூட நல்ல ஐடியாதான்.. வேலைக்குப் போகாதே..”

“வேலைக்குப் போகாமல்…”

“நான் உனக்கு வேலை தருகிறேன்..”

“போகாத ஊருக்கு வழி சொல்லாதீர்கள்.. குட்நைட்.”

“குட்நைட்டா.. குட்மார்னிங்ன்னு சொல்லு..”

“குட்மார்னிங்கா…”

“மணி என்ன தெரியுமா.. ஆறு…”

“கடவுளே.. விடிந்து விட்டதா..?”

பாத்ரூம் கதவு படபடவென்று தட்டப்பட அவசரமாய் போனை அணைத்து விட்டு கதவைத் திறந்தாள்..

“ஆவ்” என்று கொட்டாவி விட்டபடி உள்ளே வந்த ஜமுனா..

“ஏண்டி.. எப்ப எழுந்தாய்…?” என்று வினவினாள்..

‘தூங்கினால்தானே விழிப்பதற்கு….’ மனதிற்குள் நினைத்தவள்..

“அப்போதே எழுந்து விட்டேன்…” என்றாள்.

“சரி.. கீழே போய் நம் இரண்டு பேருக்கும் காபி வாங்கிக் கொண்டு வா…”

ஜமுனா பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.. ரூபிணியும் அலுவலகம் கிளம்புவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்..

மதியம் வரை தாக்குப்பிடித்து வேலை பார்த்த ரூபிணி.. தன்னையறியாமல் கம்ப்யூட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டு கண் அயர்ந்து விட்டாள்.. மதியம் சாப்பிடக் கூப்பிட வந்த ப்ரீதி உலுக்கி எழுப்பினாள்..

“ரூபிணி.. ரூபிணி… உடம்பிற்கு என்னடி பண்ணுது..? சபாபதி தண்ணியை எடு..”

ப்ரீதி தண்ணீர் தெளித்தவுடன் முகத்தை சுளித்தவாறு விழித்த ரூபிணி.. “என்னப்பா…” என்றாள் சோர்வாக,

“சாப்பிடப் போகலாம்ன்னு கூப்பிட வந்தால் மயங்கிக் கிடக்கிறாய்…”

“மயங்கிக் கிடக்கிறேனா.. தூங்கிக் கிடக்கிறேன்..” ரூபிணி தலையைப் பிடித்துக் கொண்டாள்..

“என்னடி பண்ணுது…” ப்ரீதி அவளுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்..

“தலைவலிக்குது ப்ரீதி.. நான் ஆப்டே லீவு போட்டு விட்டு ஹாஸ்டலுக்குப் போகிறேன்..”

“பொறுடி.. சூடாய் காபி கொண்டு வரச் சொல்கிறேன்..”

“வேண்டாம்…”

ரூபிணி சோர்வாக எழுந்து லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு  போனாள்.. சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சற்று தூரம் போயிருப்பாள்.. அவளது வண்டி நின்று விட்டது.. இறங்கி வண்டியை யோசனையாய் பார்த்துக் கொண்டு நிற்கையில் அவளருகே கார் ஒன்று வந்து நின்றது.

“ஏறு..” என்றான் காரின் முன் பக்க கதவைத் திறந்து விட்ட ஹரிஹரன்..

“நோ.. தேங்க்ஸ்..” ரூபிணி பதட்டமாய் சுற்று முற்றும் பார்த்தாள்..

“இப்போது ஏறப் போகிறாயா.. இல்லையா..?” ஹரிஹரன் காரிலிருந்து இறங்கப் போனான்..

இவன் இறங்கி நின்று இவளோடு பேச்சு வளர்ப்பதை யாரேனும் பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்துடன் காரில் ஏறி அவன் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் ரூபிணி..

இளஞ்சிவப்பில் சுடிதார் அணிந்திருந்தவளை ரசனை யாய் பார்த்தபடி காரை ஓட்ட ஆரம்பித்தான் ஹரிஹரன்.. அவள் பதற்றமாய் திரும்பிப் பார்த்தாள்..

“என்ன பார்க்கிறாய்..”

“என் வண்டி…”

“எங்கேயும் போய் விடாது.. ரிப்பேருக்கு போகும்..”

“எப்படி கை கால் முளைத்து பறந்து போகுமா..?”

“கை கால் இருக்கிற ஆள் தள்ளிக் கொண்டு போவான்..”

“என்னது…” ரூபிணி அவசரமாய் திரும்பி பின் கண்ணாடி வழியாகப் பார்த்தாள்..

அவளது கைனடிக் ஹோண்டாவை யாரோ ஒரு ஆள் உருட்டிக் கொண்டு போனாள்..

“ஜயோ…” தலையில் கை வைத்துக் கொண்டாள் ரூபிணி..

“ஏன்..” ஹரிஹரன் புருவம் உயர்த்தினான்..

“ஏற்கனவே.. நீங்களும் நானும் ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்ததை ஊரே பேசுகிறது.. இப்போது எல்லோரும் பார்க்க என் வண்டியை உங்களுடைய ஆள் தள்ளிக் கொண்டு போவதைப் பார்த்தால் இன்னும் என்னவெல்லாம் பேசுமோ…” ரூபிணியின் முகம் பயத்தில் வெளுத்தது.

“இப்படி தொட்டதற்கெல்லாம் பயந்தால் எப்படி…?”

“உங்களை யார் இவ்வளவு பெரிய வி.ஐ.பி.யாக இருக்கச் சொன்னார்கள்.. அதுதான் எனக்குத் தொல்லையாக இருக்கிறது..”

“உனக்குப் பிடிக்கவில்லையென்றால் வி.ஐ.பி. பட்டத்தையே விட்டு விடுகிறேன்..” ஹரிஹரன் இலகுவாகக் கூற ரூபிணி திகைத்துப் போனாள்..

‘ஏன் இப்படி இவன் வேகம் காட்டுகிறான்..? புயல் போல் இருக்கிறானே.. இவனை அவள் நெஞ்சம் நினைப்பது எப்படி நிறைவேறும்..?’

“மதியமே ஹாஸ்டலுக்குப் போகிறாயே.. ஏன்..?”

“உடம்பு சரியில்லை…”

“உடம்புக்கு என்ன…? பீவரா…? டாக்டரிடம் போகலாமா..?” அவன் வண்டியைத் திருப்ப முயல…

“ஐயோ சாமி… உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கொஞ்சம் அடங்கி உட்காருங்கள்.. நீங்கள் என்னை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனால் வேறு வினையே வேண்டாம்..” என்று அலறினாள் ரூபிணி..

அவளது பதட்டத்தைக் கண்ட ஹரிஹரனின் புருவம் சுருங்கியது.. காரை சாலையோரமாக நிறுத்தினான். அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.. ரூபிணி பதட்டத்துடன் சாலையில் கடந்து போகும் வாகனங்களில் போகிறவர்களில் யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என்று கவனிப்பதைக் கண்ட அவனது முகம் இறுகியது.

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link