Chapter 17
ஜமுனாவின் வருங்காலக் கணவன் உயர்திரு. நந்தகோபாலன் ஜமுனாவைத் தேடி வந்து நின்றபோது முதலில் ஜமுனா அவன் தன் பெற்றவர்களின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து வீர வசனம் பேசப் போகிறான் என்று எண்ணி புளகாங்கிதமடைந்தாள். ஆனால் அவனோ எடுத்த எடுப்பில்,
“உன் வீட்டாருக்கு தப்புத்தப்பாய் ஆலோசனை சொல்லிக் கல்யாணத்தை நிறுத்தி வைத்துக் கொண்டிருப்பது நீதானாமே..? இது என்ன பைத்தியக்காரத் தனம் ஜமுனா…” என்றுதான் கேட்டு வைத்தான்..
“பைத்தியக்காரத்தனமா..? ஏன் சொல்ல மாட்டீர்கள்? நீங்கள் பேசவில்லை.. உங்கள் உடம்பில் ஓடும் ஆண் பிள்ளை ரத்தம் அப்படியெல்லாம் பேசச் சொல்கிறது.. ஆணாகப் பிறந்து விட்டத் திமிர்.. பெண்களைக் கண்டால் இளப்பமாகத் தெரிகிறது…”
“ஸ்ஸ்.. ஆ.. இப்பவே கண்ணைக் கட்டுதே.. இன்னும் உனக்குத் தாலிக் கட்டி குடும்பம் நடத்த ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் இப்படி ஆணாதிக்கம்.. பெண்ணடிமைன்னு லெக்சர் அடித்தே என்னை ஒரு வழி பண்ணிவிடுவாய் போல இருக்கே..”
கண்ணை மூடி அவன் சொன்ன விதத்தில் ஜமுனா விற்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு பொய்யாய் அவனை முறைத்தாள்.. அவனோ அவளை ரசனையாய் நோக்கி கண்சிமிட்டினான். ஜமுனா தான் வீழ்த்தப்படுவதை உணர்ந்தாள்.. தன் உணர்வுகளை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இதோ பாருங்கள் மிஸ்டர் நந்தகோபால்..?”
“இதோ பாருங்கள் என்று வெறும் கையைத் தானே ஆட்டுகிறாய்.. எதைப் பார்க்கச் சொல்கிறாய்..?” அவன் தேடும் பாவனையில் அங்கும் இங்கும் பார்வையை அலைய விட ஜமுனாவிற்கு அவன் முதுகில் நாலு போட்டால் என்ன என்று தோன்றியது.
‘இவன் கெட்டிக்காரன்.. நான் அவனால் ஈர்க்கப் படுகிறேன் என்பதை உணர்ந்தே விளையாட்டுக் காண்பிக்கிறான்..’
ஜமுனாவின் முகம் சிவந்தது. ‘பெண்கள் ஆண்களை தம் விருப்பத்திற்கு வளைத்தது அந்தக் காலம். இன்றைய ஆண்கள் மகா கெட்டிக்காரர்கள்.. சாகஸக் கலை பயின்றவர்கள்.. பெண்களை தங்களது விருப்பத்திற்கேற்ப வளைத்து விடும் வல்லமை கொண்டவர்கள்..’
“காலம் காலமாய் பெண்களை அவமானப்படுத்தும்.. துன்பப்படுத்தும் வழக்கம் வரதட்சணைக் கொடுமை.. மாட்டை வாங்கினால் கூட பணம் வாங்குகிறவர்தான் கொடுக்க வேண்டும்.. பெண்ணை மட்டும் பணம் வாங்கிக் கொண்டுதான் அழைத்துப் போவீர்களோ…”
அவன் முகம் தீவிரமானது.. அவளை ஏற இறங்க ஓர் முறை பார்த்தான். “உன் வசனத்தில் இன்னும் ஓர் வாக்கியத்தை சேர்த்துக் கொள்.. மனதுக்குப் பிடித்த பெண்ணை பணம் வாங்கிக் கொண்டுத்தான் அழைத்துப் போவீர்களா என்று கேட்க வேண்டும்.. வெறுமனே பெண் என்கிறாயே..”
ஜமுனா தடுமாறினாள்.. அவன் கண்களில் சிரிப்பு இருந்தது..
“நான் எவ்வளவு சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா..?”
“அதை நீ ஏன் பேச வேண்டும்..?”
“நான் பேசாமல் வேறு யார் பேச வேண்டும்..?”
“மற்றவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை..? உன்னைப் பற்றித்தான் நான் கவலைப்பட முடியும்..”
“என்னைப் பற்றிக் கவலைப்படுகிறவர்.. என் கருத்துக்களையும் கொள்கைகளையும் மதித்திருக்க வேண்டும்..”
“உன் கருத்துக்களும்.. கொள்கைகளும் சரியானவை தான்.. நான் இல்லையென்று சொல்லவில்லையே.. ஆனால் அது நமக்கு எதற்கு..?”
“ஊருக்குத்தான் உபதேசமா..” ஜமுனா கேட்டாள்.
ஜமுனா சிமிண்ட் பெஞ்சில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. அவள் கூறியதைக் கேட்ட ரூபிணி சிரித்தாள்..
“ஸோ.. நான் உன்னைக் கேட்ட கேள்வியை நீ மிஸ்டர் நந்தகோபாலிடம் ஏற்கனவே கேட்டுவிட்டாய்..?”
“ஆமாம்..”
“அப்புறம் என்ன ஆச்சு..?”
ஜமுனாவின் கேள்வியைக் கேட்ட நந்தகோபால் உரக்கச் சிரித்தான்.. அவளோ.. தான் என்ன நகைச் சுவையைச் சொன்னோம் என்று இவன் இப்படிச் சிரிக்கிறான் என்று ரோசப்பட்டவளாய்..
“நான் இப்போது என்ன ஜோக் அடித்தேனென்று இப்படிச் சிரிக்கிறீர்கள்..” என்று கோபமாய் கேட்டாள்.
“மண்டூ.. மண்டூ.. உன் பேரண்ட்ஸிற்கு எத்தனை பிள்ளைகள்..?”
“ஏன்..? நான் ஒருத்தி மட்டும்தான்..”
“உன் அப்பா என்ன ஏழையா..?”
“ஊருக்கே பெரிய பண்ணையார்…”
“அவர் சொத்து முழுவதும் யாருக்கு..?”
“இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி..?”
“உன்னிடம் உன்னை மாதிரியே தானே கேட்க வேண்டும்..”
ஜமுனா முறைத்தாள்.. சந்தடி சாக்கில் இவன் அவளை மட்டம் தட்டப் பார்க்கிறானே..
“அப்போ.. நான் பைத்தியக்காரியா..?”
“பின்னே இல்லையா..? ஊருக்கு பெரிய பண்ணையார் வீட்டுப் பெண்.. அவர் சொத்துக்கு ஒரே வாரிசு.. சீர்வரிசை செய்ய விட மாட்டேன்னு கொள்கை பேசினால் எனக்கு சிரிப்பு வருமா வராதா..?”
“என் அப்பா பணக்காரர் என்பதால்தான் எனக்கு மதிப்பு என்றால் எனக்கு அந்த மதிப்பு வேண்டாம்.. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன்..”
“நீ நீயாக இருப்பதால்தான் நான் உன்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் புரிந்து கொள்.. உன் அப்பா சும்மா ஒன்றும் சும்மா எனக்குப் பெண் கொடுக்க முன் வரவில்லை.. உன் அப்பா கிராமத்திலேயே பெரிய பணக்கார விவசாயி என்றால் என் அப்பா அந்த கிராமத்திற்கு பக்கத்து டவுனில் மிகப் பெரிய வியாபாரி. உன் சொத்துக்கள் கிராமத்தில் வயலாக இருந்தால்.. என் சொத்துக்கள் டவுனில் வீடுகளாகவும்.. கடைகளாகவும் இருக்கின்றன.. என் அப்பாவிற்கு நானும்.. என் அண்ணனும் மட்டும்தான்.. உன் அப்பா சல்லடை போட்டுச் சலித்துத் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை நான்.. இதை முதலில் தெரிந்து கொள்.. விட்டால் இன்றைக்கு முழுவதும் லெக்சர் அடித்துக் கொண்டிருப்பாய்.. அதைக் கேட்க எனக்கு பொறுமையில்லை. இரண்டு பரம்பரைப் பணக்காரர்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் அது பிரம்மாண்டமான கல்யாணமாகத்தான் இருக்கும்.. என் அப்பா அம்மா நுறு பவுன் நகை வேண்டுமென்று கேட்டார்கள் என்கிறாயே.. உன் அப்பா உனக்காக இருநூறு பவுன் நகை செய்து வைத்திருப்பதாக மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த அன்றே சொல்லிவிட்டார் இது உனக்குத் தெரியுமா..? அதோடு வீட்டுக்கு வரும் மருமகள்களுக்கு என்று குடும்ப வைர நகைகளில் என் வருங்கால மனைவிக்காக பிரித்து வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு நீ போட்டுக் கொண்டு வரும் நகைகளின் மதிப்பை விட பலமடங்கு அதிகம்.. இதுவும் உனக்குத் தெரியுமா..?”
ஜமுனாவின் வாய் அடைத்துக் கொண்டது.
“ஊர் பார்க்க நடத்தும் திருமணத்தின் பாரம்பாயமாய் செய்து வரும் சீர்வரிசைச் சடங்குகளை செய்யச் சொல்லி என் வீட்டார் சொல்லியிருப்பார்கள்.. உன் வீட்டில் உனக்காக வாங்கி வைத்திருப்பதை சபையில் வைத்துக் கொடுப்பதை தடுப்பதுதான் உன் கொள்கையா…?”
இப்போது ஜமுனா அருகிலிருந்த செடியின் இலைகளைக் கிள்ள ஆரம்பித்து விட்டாள்.. அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.
“தெரியாமல்தான் கேட்கிறேன்.. நீ கொண்டு வரும் சீர் வரிசைகளையும்.. நகைகளையும் அனுபவிக்கப் போவது யார்..? நீயா.. இல்லை என் வீட்டாரா..? உன்னிடம் வாங்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் என் வீட்டில் இல்லை..” அவன் குரலில் இப்போது கோபம் வந்திருந்தது.
“ஐ ஆம் ஸாரி…” ஜமுனாவின் விழியில் கண்ணீர் தழும்பியது..
நந்தகோபாலன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் கைக்குட்டையை எடுத்து அவள் விழி நீரைத் துடைத்தான்.. அந்த செய்கையில் மனம் நெகிழ்ந்து விட்ட ஜமுனா… அவன் கரம் பற்றி மெதுவாய் இதழ்களைப் பதித்தாள்.
கேட்டுக் கொண்டிருந்த ரூபிணியின் உடலில் உணர்வுகள் அலையடித்து எழுந்தன. மற்றவர்களால் மட்டும் எப்படி நினைத்ததைச் செய்ய முடிகிறது? அவளுக்கு மட்டும் ஏன் நினைவுக்குக் கூடத் தடை விதிக்கப்படுகிறது…? அவள் மனம் ஹரிஹரனை நாடியது.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.