Chapter 18
“ரூபிணி.. ரெடியா.. போகலாமா..” வாசவி அறை வாசலில் இருந்து குரல் கொடுத்தாள்..
“ம்ம்.. ரெடி.. போகலாம்…” கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் ரூபிணி.
‘ஆலிவ் கிரீன்’ என்று அழைக்கப்படும் பாட்டில் பச்சை வண்ணக் கலரில் பட்டுப்புடவை கட்டியிருந்தாள். அதே வண்ணத்தில் கைகளுக்கு ஜரிகை பார்டர் கொண்ட பிளவுஸ்… காதுகளில் முத்து ஜிமிக்கி அணிந்து.. கழுத்தில் முத்துக்களில் பதக்கம் கோர்க்கப்பட்ட மாலை அணிந்திருந்தாள்.. நீண்ட பின்னலை தளர்வாய் பின்னி.. அதில் நெருக்கிக் கட்டப்பட்ட மல்லிகைப் பூவை சூடியிருந்தாள்.. மல்லிகையின் மணம் அவள் நாசியை வருடியது.
“கோமளா.. ரூபிணி ரெடியாகிவிட்டாள்… நீதான் லேட்…” என்று குரல் கொடுத்தவாறு உள்ளே வந்த வாசவி.. ஆரஞ்சு வண்ண பிரிண்டட் சில்க்கில் இருந்தாள்.
“வாவ்…” என்று குரல் கொடுத்தபடி ரூபிணியை ஏற இறங்கப் பார்த்தாள்.
“எவ்வளவு அழகாய் இருக்கிறாய் ரூபிணி.. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.. அப்புறம் ஏன் ஹரிஹரன் உன்னிடம் மயங்க மாட்டார்…?” அவள் இயல்பாய் கூற ரூபிணிக்கு தூக்கிவாரிப் போட்டது.
“என்ன வாசவி.. இப்படிச் சொல்லிவிட்டாய்…”
“எல்லாம் எனக்கும் தெரியும் ரூபிணி.. ஹரிஹரன் உன்னைக் காரில் அழைத்து வந்து ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டுவிட்டுப் போயிருக்கிறார்.. உன் வண்டியை ரிப்பேர் பண்ணிக் கொடுத்திருக்கிறார்…”
“இதெல்லாம் ஜஸ்ட் எ ஹெல்ப் தானே வாசவி…”
“ரூபிணி.. உன் குழந்தைத் தனத்தைப் பார்த்தால் ரசிக்கத்தான் தோன்றுகிறது.. நீ இவ்வளவு இன்னொ ஸன்டா..? ஹரிஹரனைப் பார்ப்பதென்றால் அப்பாயின்ட் மென்ட் வாங்கித்தான் பார்க்க முடியும்.. தமிழ்நாட்டின் முக்கிய வி.ஜ.பிக்களில் அவரும் ஒருவர்… அவரிடம் சரிக்குச் சரியாய் நின்று பேச பெரிய அந்தஸ்துள்ள மனிதர்களே பயப்படுவார்கள்.. அவர் யாரையும் மதித்து ஓர் வார்த்தை அதிகம் பேசமாட்டார்.. அப்படிப்பட்ட சூப்பர் மேன்.. உனக்கு டிரைவர் வேலை பார்க்கிறார்.. உன் வண்டியை ரிப்பேர் பண்ணி அனுப்புகிறார்.. என்றால்… எதுவும் விசயம் இல்லாமல் இருக்குமா..?”
“வாசவி.. ப்ளீஸ்.. நான் ஏற்கெனவே கலங்கிப் போயிருக்கிறேன்.. நீ வேறு பயமுறுத்தாதே..”
“எதற்குக் கலக்கம்.. சிங்கத்தை உன் கண்ணசைவில் கட்டிப் போட்டிருக்கிறாய்.. இதில் கலக்கம் எங்கேயிருந்து வந்தது..?”
“என்னைச் சொல்லிவிட்டு நீங்கள் இரண்டு பேரும் அரட்டை அடித்துக் கொண்டு நிற்கிறீர்களே.. இப்படியே.. நாம் லேட்டாகப் போனால்.. ஜமுனாவின் மேரேஜ் ரிஸப்சனுக்குப் போக மாட்டோம்.. அவளுடைய வளைகாப்பிற்குத்தான் போவோம்…” குரல் கொடுத்துக் கொண்டே கோமளா வந்தாள்..
பேச்சை நிறுத்திவிட்டு வாசவியும் ரூபிணியும் அறையை விட்டு வெளியே வந்தனர்.. ரூபிணி அறைக் கதவை மூடி சாவியை ஹேண்ட் பேகிற்குள் போட்டுக் கொண்டு ஜமுனாவிற்கு கொடுக்க வாங்கிய வண்ணக் காகிதத்தால் சுற்றி அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பொருளை எடுத்துக் கொண்டாள்..
“என்ன வாங்கியிருக்க ரூபிணி..?” கோமளா வினவினாள்.
“வெள்ளிக் குத்துவிளக்கு…” ரூபிணி படியிறங்கிக் கொண்டே கூறினாள்..
“ரூம்மேட் இல்லையா.. உன் பெஸ்ட் பிரண்ட் வேறு.. ஆனால் நீ எப்படி அவளது கல்யாணத்திற்குப் போகாமல் விட்டாய்…”
“அவர்களுடைய ஊர் தர்மபுரிக்குப் பக்கம்.. அங்கே தனியாய் போக என் பேரண்ட்ஸ் பெர்மிஷன் தரவில்லை..”
“எல்லோருக்கும் அதுதானே பிரச்சனை..? சரி.. சரி… ரிசப்ஸனிலாவது காலாகாலத்தில் போய் கலந்து கொள்வோம்..” கோமளா பரபரப்பாய் மணி பார்த்தாள்..
“காலாகாலத்தில் எங்கே போய் சேரப் போகிறோம்.. இந்த மறதி மணிமேகலைதான் ஹாஸ்டலில் எல்லோரும் சேர்ந்து போக வேண்டும்ன்னு நம் காலைக் கட்டிப் போட்டு விட்டதே.. மூன்று வேன்களை வாடகைக்குப் பேசி வர வைத்திருக்கிறதாம்.. அங்கே பார் வரிசையாய் எல்லோரையும் வேனில் ஏறி உட்கார வைப்பதை.. வர வர இதற்கு தான் வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலின் வார்டன் என்பதே மறந்து விடுகிறது.. என்னவோ ஸ்கூல் ஹாஸ்டல் வார்டன் என்கிற நினைப்பில் இருக்கிறது..” கோமளா பல்லைக் கடித்தாள்..
“விடுடி.. நம்மை விட்டால் யார் அதற்கு கம்பெனி கொடுப்பார்கள்..? அதனால் நம்மோடு ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொள்ள வார்டன் என்கிற பந்தாவைக் காட்டிக் கொண்டு தொற்றிக் கொள்கிறது..” வாசவி சமாதானப் படுத்தினாள்..
அதற்குள் அவர்களைத் திரும்பிப் பார்த்த மணிமேகலை ரூபிணியைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
“ஏம்மா.. ஜமுனா.. நீயே லேட்டாக வந்தால் உன் ரூம் மேட் ரூபிணி கோபித்துக் கொள்ள மாட்டாளா..?” என்றுவேறு வினவி வைத்தாள்..
“பார்த்தாயா.. நம் மறதி மணிமேகலை எவ்வளவு சரியாய் பெயர்களை தப்பாய் இடம் மாற்றிச் சொல்கிறது.. இது கூடப் பேசிப்பேசி.. எதை எங்கோ வைத்தோமென்று எனக்கு மறந்து போகுதுடி..” கோமளா மனம் குமுறினாள்..
“எல்லோருக்கும் இந்தக் கதைதான்.. மறதி நோய் ஒரு தொற்று வியாதியான்னு டாக்டரை கன்சல்ட் பண்ணினால் தேவலைடி..” வாசவி கவலைப்பட்டபடி வாசல் படியில் உட்காரப் போனாள்.
“என்ன வாசவி இங்கே உட்காருகிறாய்..? ஜமுனாவின் மேரேஜ் ரிசப்ஷனுக்கு போக வேண்டாமா..?” ரூபிணி அவளது கையைப் பிடித்து எழுப்பினாள்..
“அடக்கடவுளே.. நான் இங்கேயா உட்கார்ந்து விட்டேன்.. வேனில் ஏறி உட்கார்ந்தது போலவே இருந்ததே..” வாசவி பயந்தே போனாள்..
“ஆபிஸ் டென்சன்.. சீக்கிரம் ஜமுனாவின் மேரேஜ் ரிசப்ஷனுக்கு போகணுமேங்கிற டென்சன்.. நம்மை தனியாக போகவிடாமல் வார்டன் மேடம் நம் காலைக் கட்டிப் போட்டு விட்டுட்டாங்களேங்கிற டென்சன்.. இதனால்தான் இப்படி ஆகிவிட்டது.. நீயாய் எதையாவது நினைத்து மனதைப் போட்டு உழப்பிக் கொள்ளாதே.. வா போகலாம்…” ரூபிணி சமாதானப்படுத்தி அழைத்துப் போனாள்..
ஒரு வழியாய் மூன்று வேனும் வரிசையாய் ஹாஸ்டலை விட்டு வெளியேறின.. ஜமுனாவின் திருமண வரவேற்பு விழுப்புரத்தின் மிகப் பெரிய கல்யாண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது.
“ரிசப்சன் செலவை மாப்பிள்ளையின் காலேஜ் ஓனர் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்… பாரேன் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்திருப்பதை..” ஷர்மிளா என்ற பெண் அவள் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு பெண்ணிடம் கூறினாள்..
ரூபிணி மனம் படபடக்க ஜன்னல் புறம் நோக்கினாள்.. அவளது மனதிலிருந்த பெயரை வாசவி கூறினாள்..
“பின்னே ஹரிஹரன் சாருக்கு பணம் தண்ணீர் பட்டபாடுதானே..” வாசவி ஜாடையாய் ரூபிணியைப் பார்த்தாள்.. ரூபிணிக்கு வியர்த்தது…
நல்லவேளையாக திருமண மண்டபம் வந்துவிடவே அவர்களது பேச்சு நின்றது.. தற்காலிகமாய் தப்பித்து விட்ட நிம்மதியுடன் ரூபிணி வேனிலிருந்த கீழே இறங்கினாள்..
வரிசையாய் கார்கள் நின்று கொண்டிருக்க திருமண மண்டபத்தின் வாசல் சீரியல் விளக்குகளால் களை கட்டியிருந்தது.. பெண்கள் எல்லோரும் பூங்கொத்தி லிருந்து பிரிந்து விழுந்த மலர் கூட்டம் போல் உள்ளே நுழைய அங்கிருந்த அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது. ஒவ்வாருவராய் மேடையில் ஏறி மணமக்களுக்கு வாழ்த்துக் கூறி பரிசுப் பொருளைக் கொடுத்தார்கள். ரூபிணியின் முறை வர அவள் ஜமுனாவின் அருகே சென்று பரிசை நீட்டினாள். ஜமுனா அவளது கை பிடித்து அணைத்து நந்தகோபாலுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.. அப்போது தான் ரூபிணி எதிர்பாராத ஒன்று நடந்தது..
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.