Chapter 19

0Shares

ரூபிணியை அணைத்துக் கொண்ட ஜமுனா நந்தகோபால் பக்கம் திரும்பி,

“இவள் ரூபிணி.. என் ஹாஸ்டல் ரூம் மேட் அன்ட் மை டியரெஸ்ட் பிரண்டு…” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்..

“ஹலோ…” என்றான் நந்தகோபால்.

என்ன பேசுவது என்று தெரியாமல் ரூபிணி லேசாக புன்னகைத்தாள்.

“வீடியோவுக்கு நில்லுடி..” ஜமுனா தன்னருகில் ரூபிணியை நிற்க வைத்துக் கொண்டாள்..

மிகச் சரியாக அந்த நேரத்தில் ஹரிஹரன் மேடையேறி நந்தகோபாலின் அருகே நின்று கொண்டு இயல்பாக வீடியோவுக்கு போஸ் கொடுத்தான்.

ஜமுனாவும்.. நந்தகோபாலும் நடுவில் நிற்க.. அவர்கள் இருவர் பக்கமும் ரூபிணியும் ஹரிஹரனும் நிற்பது போல் வீடியோவில் எடுக்கப்பட்டு விட்டது.

ஜமுனாவின் விழிகள் ரூபிணியிடம்,

‘பார்த்தாயா..?’ என்று வினவின.. ரூபிணி என்ன செய்வாள்..? தன் வழக்கப்படி இதழ்களை மடித்துக் கடித்தாள்.. அதைப் பார்த்தவாறு ஹரிஹரன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிட்டான்.

‘அவன் எங்கே..?’ என்று ரூபிணியின் விழிகள் துழாவின.. ஆனால் அவளின் பார்வை வட்டத்திற்குள் அவன் சிக்கவேயில்லை.. ரூபிணிக்கு மனம் வலித்தது.

மின்னல் போல் வந்தான்.. அவள் மணமக்களின் ஒரு புறம் நிற்க.. இவன் மறுபுறம் நின்று வீடியோ எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டானே..

மூன்று மாதங்களாய் அவனைப் பார்க்காத நெஞ்சம் பதறியது.. அவனைப் பார்க்கத் துடித்தது.. கட்டுக் காவலை உடைத்துக் கொண்டு அவனிடம் ஓடி விட மனம் தவித்தது.

“வா ரூபிணி.. சாப்பிட்டு விட்டு வந்துவிடலாம்…” வாசவி அழைத்தாள்.

ரூபிணி மௌனமாய் அவர்களுடன் டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள்.. மெல்லிசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

“பாடும் திறமையுள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தால் மேடையில் ஏறிப் பாட வரலாம்…” பாடகர் மைக்கில் அறிவித்தார்..

ரூபிணியின் ஹாஸ்டல் தோழிகள் ‘ஹோ…’ வென்று ஆர்ப்பரித்தனர்.. சிலர் மேடையில் ஏறிப் பாடினார்கள்.. அவர்களில் ஒருத்தி,

“அடுத்து எங்கள் தோழி ரூபிணி பாடுவாள்..” என்று மைக்கில் அறிவித்தாள்.

ரூபிணி அதிர்ச்சியுடன் விழித்தாள்.. கோமளாவிடம் படபடத்தாள்..

“நானாவது மேடையில் ஏறிப் பாடுவதாவது.. இவள் ஏன் என் பெயரைச் சொல்கிறாள்…”

“இங்கே பார்.. என்றாவது ஒருநாள் இதுபோல் என்ஜாய் பண்ணும் பங்ஷன் வருகிறது.. இதில் போய் அன் ஈஸியாய் பீல் பண்ணிக் கொண்டு ஒதுங்கி நின்றால் எப்படி ரூபிணி..? நீ நன்றாகப் பாடுவாய் என்பதுதான் அவளுக்குத் தெரியுமே.. அதனால் சொல்லிவிட்டாள்.. போய் பாடு…” கோமளா அவளை மேடை நோக்கித் தள்ளிவிட்டாள்.

திருமண மண்டபத்தின் மாடியில் கைப்பிடியில் சாய்ந்து கொண்டு ரூபிணி சங்கடத்துடன் மேடையேறு வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன்.. நீண்ட பின்னல் ஆட பச்சைப் பட்டுப் புடவையில் அவள் அழகுற மைக்கின் முன்னே வந்து நின்ற விதம் அவனைக் கிறங்கச் செய்தது. பெண்மையின் வடிவாய் எழிலுற நின்றவளை ஏக்கத்துடன் பார்த்தான்.

இதுவரை ஹரிஹரன் விரும்பிய எதுவும் அவனுக்குக் கிட்டாமல் போனதில்லை.. முதல் முறையாய் மாதக் கணக்கில் அவன் ஏங்கி உருகுவது அவளை நினைத்துத் தான்..

கிட்டே நெருங்கினாலே பயப்படுகிறாள்.. போனில் பேசப் பதட்டப்படுகிறாள்.. அவளிடம் எப்படித் தன்னை புரிய வைப்பது..? எப்படி அவள் நெஞ்சத்தில் இடம் பிடிப்பது என்று அறியாமல் அவன் திகைத்து நின்றான்.

அவளது நெஞ்சில் அவன் இருக்கிறான் என்பதை அவன் யூகிக்கும் வண்ணம் அவள் வாய் திறந்து பாட ஆரம்பித்தாள்..

   “நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை – உன்

    நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை..

    காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை – உன்னைக் 

    கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை..”

ரூபிணியின் நெஞ்சத்தின் தாபம் பொங்கி எழுந்தது. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் சொல்லி அழுக ஓர் ஜீவனும் இல்லாமல் அவள் துடிக்கும் துடிப்பு பாடலாய் வெளிவந்து கொண்டிருந்தது.

   “உன் முகத்தைக் காண்பதற்கே கண்கள் வந்தது..

    உன் மார்பில் சாய்வதற்கே உடலும் வந்தது..

    கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது..

    காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது..”

அவள் விழிகள் அவனைத் தேடின.. எல்லா வற்றையும் தாண்டி அவனிடம் ஓடி விட அவளது நெஞ்சம் தவித்தது.. ‘இனி நீ அழைக்காமல் உன்னைத் தேடி வர மாட்டேன்…’ என்று சொன்னவன்… அவள் கண் பார்வையிலிருந்தும் கருத்திலிருந்தும் மறைந்து போனான்.. பிரிந்து போனான்.. எதிர்பாராமல் அவன் இங்கு வந்து நின்றும்.. அவன் காலடியில் விழுந்து இதயத்தைத் திறந்து அவனைக் காதலிக்கும் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் ஊமையாய் அவள் நிற்கிறாளே.. அவளே வேலியடைத்து உருவாக்கிக் கொண்ட சிறையில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறாளே.. இதிலிருந்து அவளுக்கு விடுதலையே கிடைக்காதா..? அவன் முகத்தை இனிப் பார்க்கவே முடியாமல் போகிவிடுமோ.. அவள் மனம் பரிதவித்தது.

  “பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே..

  உன்னைப் புரிந்தும் கூடச் சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே..

  இன்று.. நாளை.. என்று நாளை எண்ணுகின்றேனே…”

அவள் பாடப்பாட ஹரிஹரனின் புருவங்கள் முடிச்சிட்டன.. அவளது விழி சொல்லும் கதை அவனுக்குப் புரிந்தது.. அவளது நெஞ்சம் படும்பாடு அவன் மனத்தைத் தொட்டது.

‘ஏன் இப்படித் தவிக்க வேண்டும்.. ஓர் வார்த்தை.. அது கூட வேண்டாம்.. ஓர் பார்வை பார்த்தாலே போதுமே.. அவளை சிறை மீட்டு விடுவேனே.. அவள்தான் தானாய் பூட்டிக் கொண்ட விலங்கு என்பதை ஒத்துக் கொள்கிறாளே.. அவளாக அதை உடைக்காமல் அவனால் எப்படி அவளை சிறை மீட்க முடியும்..?’

ஒரு பெருமூச்சுடன் அவன் திருமண மண்டபத்தின் மாடியிலிருந்து பின் பக்கமாய் இறங்கிய மாடிப்படிகளில் மெதுவே இறங்க ஆரம்பித்தான்.. முன்பக்கமாய் போய் ரூபிணியை பார்க்க அவன் விரும்பவில்லை.. எங்கே தன் சுய கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு அவளைத் தூக்கி காரில் போட்டு கொண்டு பறந்து விடுவோமோ என்ற பயத்தில் அவன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.. பின்பக்கம் இறங்கிய மாடிப் படிகள் தோட்டத்தில் போய் முடிவடைந்தது. கடைசிப் படியில் கால் வைத்தவன் அப்படியே நின்றுவிட்டான்..

எவளைப் பார்க்க அஞ்சி.. எவருக்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் ஹரிஹரன் திருடன் போல் பின்பக்கமாய் நழுவ எண்ணிப் படி இறங்கினானோ.. அவள்.. ரூபிணி.. அவளது தோழிகளுடன் அங்கே நின்று பேசிக் கொண்டிருந்தாள்..

இருளில் ஹரிஹரனின் உருவம் அவர்களுக்குத் தெரியாமல் போக அவர்கள் தங்கள் போக்கில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி,

“ரூபிணி.. யாரை நினைத்துடி இப்படி உருகி உருகிப் பாடினாய்..?” என்று கேட்டுச் சிரித்தாள்..

“இவள் யாரையும் நினைத்து உருகினாளோ.. இல்லையோ.. எனக்குத் தெரியாது.. ஆனால் மண்டபத்தில் நிறைய ஆண்கள் இவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயமாய் எனக்குத் தெரியும்.. அதுவும் என் பக்கத்தில் அட்டகாசமாய் ஜுன்ஸும் காட்டன் சர்ட்டும்.. கூலிங்கிளாஸுமாய்.. ஹீரோ போல் நின்று கொண்டிருந்த ஒருவன் ரூபிணியை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஊடே.. ‘ஸ்வீட் வாய்ஸ்’ன்னு கமென்ட் வேற அடித்தான்.. ஜமுனாவின் ஹஸ்பெண்ட் கூட வேலை பார்க்கிறவனாம்.. இன்ஜினீயர்.. இப்போது கூட உள்ளே கூட்டத்தில் ரூபிணியைத்தான் அவன் தேடிக் கொண்டிருப்பான்..” இன்னொருத்தி சொல்லச் சொல்ல ஹரிஹரனின் நெஞ்சம் கோபாவேசம் கொண்டது..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link