Chapter 22

0Shares

“இது புலிமேல் செய்யும் சவாரி ரூபிணி… நான் புலி வாலைப் பிடித்து விட்டவன்.. இனி இதை விட முடியாது.. என்ன ஒன்று இந்தப் புலி சைவப் புலி… ஆளை அடிக்கும்.. கொன்று திண்காது.. குறுக்கு வழியில் போகாது.. ஒருவன் மற்றவரை தன் நேர்மையால் கூட அஞ்ச வைக்க முடியும்.. நான் நேர்மையானவன் ரூபிணி.. என்னிடம் இருக்கும் பணம்.. நான் நேர் வழியில் சம்பாதித்து குவித்த பணம்.. நிழல் உலக தாதாக்கள் என்னைக் கண்டால் நடுங்குவார்கள்.. ஆனால் நிழல் உலகின் வியாபாரங்கள் என்னிடம் இல்லை.. இந்த ஹரிஹரன் மீன் பிடித்து ஏற்றுமதி செய்வதில் இருந்து ஹோட்டல்.. காலேஜ்.. என்று ஆயிரம் தொழில்கள் செய்கிறவன்.. கஞ்சா கடத்து கிறவனோ.. கடத்தல் தொழில் செய்கிறவனோ இல்லை.. போலீஸ் முதல் பொறுக்கி வரை என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.. அரசியலில் பெரிய பெரிய தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டன் வரை என் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்பார்கள்.. நான் கேட்பது எதுவாக இருந்தாலும் உடனே செய்தும் கொடுப்பார்கள்…”

“அது பயத்தினால் வந்தது தானே….”

“இல்லை என் மேலிருக்கும் மதிப்பு மரியாதையினால் வந்தது.. கடலூர்.. விழுப்புரம்.. பாண்டிச்சேரி.. என்ற மூன்று பெரிய நகரங்களிலும் நான் கொடி கட்டிப் பறக்கிறவன்.. இது என் ராஜ்யம்… இங்கேயிருக்கும் அரசியல்வாதிகளுக்கு என் தயவு எப்போதும் தேவைப் படும்.. ரவுடிகளுக்கோ நான் சிம்ம சொப்பனம்..”

“அதுதான் எப்படி வந்தது…?”

“என் விதி… வந்துவிட்டது.. ரூபிணி.. நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்தபோது என் தாயும் தந்தையும் என் கண் முன் வெட்டப்பட்டு துடிதுடித்து இறந்து போனார்கள்.. அது உனக்குத் தெரியாது…” ஹரிஹரனின் குரலில் கண்ணீர் இருந்தது..

“ஐயையோ.. எதற்காக..?” ரூபிணி துடிதுடித்து விட்டாள்…

“என் தகப்பனாரின் மீன் பதனிடும் தொழிற்சாலையை அபகரிக்க.. என் அப்பா சிறிய அளவில் ஆரம்பித்து வளர்த்த தொழில் அது.. அதை விற்று விடுமாறு ஒரு ரௌடி அவரை வற்புறுத்தினான்.. அவர் மறுத்துவிட்டார்…”

“அவன் ஏன் உங்கள் அப்பாவின் தொழிலை குறி வைத்தான்..?”

“கடலும்… கடல் சார்ந்த தொழில்களும்… ரௌடிகளின் கையில் இருந்த காலம் அது.. மீனை ஏற்றுமதி பண்ணுகிறேன் என்று சொல்லி கஞ்சாவை கடத்தலாம்.. அதனால் கேட்டிருக்கிறான்.. என் அப்பா மறுத்துவிட்டார்.. அவர் கனவு கண்டு உருவாக்கிய தொழில் அது.. அவரது ரத்தத்தை வியர்வையாய் சிந்தி அவர் பாடுபட்டு உருவாக்கிய தொழிற்கூடம் அது. என் அப்பா வசதியானவர்தான்.. ஆனால் பணக்காரர் இல்லை.. மூன்று வேளை சாப்பாடும் வாழ்நாள் முழுவதும் வாழ சொந்த வீடும்.. உடுத்திக் கொள்ள நல்ல துணிமணிகள் வாங்கிக் கொள்ளப் பணமும் கொண்டவர் அவ்வளவுதான்.. வீட்டை விற்றுத்தான் தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.. அம்மா பயந்திருக்கிறார்கள்.. ஆனால் அப்பாவின் விடாமுயற்சியில் தொழில் வளரவும் அமைதியாகி விட்டார்களாம்.. ஆறே வருடத்தில் தொழிலையும் வளர்த்து சொந்தமாய் புது வீட்டையும் வாங்கி விட்டார் அப்பா..”

“உங்கள் அம்மா சந்தோசப்பட்டிருப்பார்கள்…”

“ஆமாம்.. புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறிய அன்று அம்மாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சி இன்றும் என் நினைவில் நிற்கிறது.. அந்த வீடு பாண்டிச்சேரியில் இருக்கிறது…”

“நீங்கள் இப்போது அங்கே குடியில்லையா…?”

“இல்லை… அதைக் கோவிலாக மாற்றியிருக்கிறேன்.. என் பெற்றோர் குடியிருந்த கோவில் அது…”

அவனது துயரம் அவளை உலுக்கியது.. பெற்றவர்கள் கண் முன் வெட்டப்பட்டால் எந்த மகன்தான் பொறுத்துக் கொள்வான்…?

“பொறுத்துக் கொள்ள முடியவில்லை ரூபிணி.. எவ்வளவு கேட்டும் என் அப்பா தொழிற்சாலையை விட்டுக் கொடுக்க மறுத்ததால் கோபம் கொண்ட அந்த ரௌடி என் பெற்றவர்களை என் கண் முன் கொன்று விட்டான்.. என் அப்பாவை என் முன்னாலேயே வெட்டி மண்ணில் சாய்த்தான்.. என் தாய் கத்திக் குத்துடன் என் அப்பாவின் மடியில் விழுந்து இறந்து போனார்கள்.. ரூபிணி..” ஹரிஹரனின் குரல் கரகரத்தது..

“சொல்லுங்கள்…” ரூபிணி அழுது கொண்டிருப்பதை ஹரிஹரனுக்கு அவளது குரல் உணர்த்தியது.. 

சுகத்தில் பங்கு கொள்ள ஆயிரம் பேர் இருந்தாலும்.. சோகத்தில் பங்கு கொள்ள யார் வருவார்கள்..? நெஞ்சம் கலந்தவளின் நேசத்தில் கட்டுண்ட் ஹரிஹரன் தொடர்ந்து தன் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கூறிக் கொண்டு வந்தான்..

“நாங்கள் மூன்று பேரும் கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தோம்.. அப்போதுதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது.. என் அப்பாவும் அம்மாவும் துடிதுடித்து இறக்கும்போதும் திரும்பத் திரும்ப கதறிய வார்த்தைகள் என்ன தெரியுமா ரூபிணி…? ‘ஹரி… ஓடி விடு…’ ….” ஹரிஹரன் பேச முடியாமல் மௌனமானான்..

ரூபிணி தவித்தாள்.. அந்தத் துயரம் மிகுந்த தருணம் அவளது கற்பனைத் திரையில் தோன்றியது. இறந்து கொண்டிருக்கும் கடைசி வினாடிகளில் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு பெற்றவர்கள் என்ன சொல்லுவார்கள்..? அவர்கள் உயிரைக் கொடுத்து வளர்க்கும் பெற்ற மகனின் உயிரைக் காக்கத்தான் துடிப்பார்கள்.. ‘ஓடிவிடு..’ என்றுதான் கதறுவார்கள்…

“நான் ஓடினேன் ரூபிணி.. என்னைத் துரத்தி வந்த ரௌடிகளின் பிடியில் அகப்படாமல் ஓடினேன்.. என்னைப் பெற்றவர்கள் சடலங்களாய் மண்மேல் கிடக்க.. குனிந்து மண்ணை அள்ளி என்னைத் துரத்தி வந்தவர்களின் முகத்தில் வீசிவிட்டு நிற்காமல் ஓடினேன்…” ஹரிஹரன் கூறிக் கொண்டிருந்தான்…

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link