Chapter 26
மூர்த்தி முட்டாள் அல்ல.. விழுப்புரத்தில் ரூபிணியின் நிழலைத் தொட்டாலும் தன் தலை தன் உடலில் நிலைக்காது என்பதை நன்கு உணர்ந்தவன்.. ஹரிஹரன் ஓர் வேட்டையாடும் வேங்கை என்பதை நன்கு அறிந்தவன்.. முகம் காட்டி சண்டையிடுவது வீரர்களின் யுத்தம்.. முகம் மறைத்து இன்னல் விளைவிப்பது கோழைகளின் துரோகம்.. மூர்த்தி வீரனல்ல.. கோழை.
எனவே அவன் ஒரு மொட்டைக் கடிதத்தை ரூபிணியின் பெற்றோருக்கு அனுப்பினான்..
கவனமாக டைப் செய்யப்பட்டு தன் முன்னால் இருந்த அந்தக் கடிதத்தை நூறாவது முறையாக எடுத்துப் படித்தார் ரெங்கநாதன்.. அன்று காலையில் அவர் பேங்கிற்கு வந்து அமர்ந்ததும்,
“சார்… உங்களுக்கு ஒரு ஸ்பீடு போஸ்ட்…” என்றபடி போஸ்ட்மேன் வந்தார்..
கையெழுத்துப் போட்டு வாங்கின ரெங்கநாதன் தன் முகவரி டைப் அடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் யார் அனுப்பியது என்று பார்த்தார்.. நல்லான், தூத்துக்குடி என்றிருந்தது..
மூர்த்திதான் தன் கையெழுத்தை கவனமாய் தவிர்த்து டைப் செய்து தூத்துக்குடிக்கு போயிருந்தபோது அங்கேயிருந்த போஸ்ட் ஆபிஸில் ஸ்பீடு போஸ்டில் அனுப்பிவிட்டு வந்து விட்டானே..
ரெங்கநாதன் சாதாரணமான மனநிலையுடன் தான் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.. டைப் செய்யப்பட்டிருந்த கடித வரிகளில் அவரது பார்வை ஓட ஆரம்பிக்க.. அவரது இதயம் துடிக்க ஆரம்பித்தது..
‘ஹலோ மிஸ்டர் ரெங்கநாதன்..!’
நலமா..? யார் நலம் விசாரிக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா.. எல்லாம் உங்கள் நலம் விரும்பி தான் நலம் விசாரிக்கிறேன்.. எப்படியிருக்கிறீர்கள்..?
உங்களுக்கென்ன சார்… விழுப்புரம் தொலைத் தூரத்தில் இருக்கிறது.. கோவில்பட்டியில் இருக்கும் உங்களுக்கு விழுப்புரத்தில் நடக்கும் கதை தெரியாமல் நிம்மதியாக உண்டு, உறங்கி,எழுவீர்கள்.. இங்கே உங்கள் மகள் ரூபிணி இந்த ஊரே மிரளும் தாதாவிடம் உறவாடிக் கொண்டிருப்பாள்.. மிஸ்டர் ரெங்கநாதன்.. அந்த ஹரிஹரனின் கண் முன்னால் அவனது பெற்றவர்களை ஒரு ரௌடி கொன்றுவிட்டான்.. இவன் பதிலுக்குப் பதில் அந்த ரௌடியை அதே இடத்தில் வெட்டிக் கொன்று பழிக்கும் பழி வாங்கினான்.. எவரேனும் அவனுக்கு எதிராய் ஓர் பார்வை பார்த்துவிட்டாலே பூண்டோடு அழித்து விடுவான்.. அப்படிப்பட்ட பயங்கரவாதியின் பள்ளியறைப் பாவையாய் உங்கள் மகள் வாழ ஆசைப்படுகிறாள்.. நீங்கள் தெருமுனையில் சத்தம் கேட்டால் ஜன்னல் கதவுகளைக் கூட இறுக மூடிக் கொண்டு வாழும் மிடில் கிளாஸ் பயந்த மனிதர்.. உங்கள் மகளுக்க கத்தி… துப்பாக்கி.. வெடி குண்டுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதனையா மாப்பிள்ளையாய் பார்ப்பீர்கள்..? இந்த விழுப்புரத்திற்கு வந்து கேட்டுப் பாருங்கள்.. உங்கள் மகள் ஹரிஹரனின் காதலி என்று இந்த ஊரே சொல்லும்.. மனச்சாட்சிக்கு அஞ்சி வாழும் உங்கள் மகளை ஒரு பயங்கரவாதியின் கையில் ஒப்படைக்கப் போகிறீர்களா… யோசியுங்கள்.
– உங்கள் நலம் விரும்பி.
ரெங்கநாதனுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்தது. செல்போனை எடுத்து மனைவியை அழைத்தார்..
“என்னங்க… இப்போதுதானே வேலைக்குப் போனீர்கள் அதற்குள் அவசரமாய் கூப்பிடுகிறீர்களே…” என்றாள் அதே ஊரில் வேறு ஒரு பேங்கில் வேலை பார்க்கும் வீரலட்சுமி.
“லட்சுமி.. உடனே லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வாடி..”
“ஏங்க.. உடம்பு சரியில்லையா…”
“எதுவுமே சரியில்லைடி.. கேள்வி கேட்காமல் கிளம்பி வா.. நானும் லீவ் சொல்லி விட்டு வருகிறேன்…”
அவசரமாய் எழுந்த வீரலட்சுமி பேங்க் மேனேஜரிடம் லீவு சொல்லிவிட்டு அவரின் அர்ச்சனைகளையும்
வாங்கிக் கட்டிக் கொண்டு பேங்கை விட்டு வெளியே வந்தாள்.
“ஏம்மா… லீவு வேண்டுமென்றால் நேற்று ஈவினிங்கே சொல்ல வேண்டியதுதானே.. காலையில் வந்தவுடன் சொன்னால் உங்கள் சீட்டிற்கு வேறு யாரை அரென்ஜ் பண்ணுவது..?”
“அர்ஜன்ட் சார்.. ப்ளீஸ்..”
“என்னவோ செய்ங்க.. அதுதான் வி.ஆர்.எஸ். ஸ்கீம் வந்து விட்டதே.. பேசாமல் வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதானே.. ஏன் வேலைக்கு வந்து என் உயிரை வாங்குகிறீர்கள்…?”
வீரலட்சுமி எரிச்சலுடன் மணி பார்த்தாள்..
‘இந்த மனுசன் பண்ணிய அளும்பால் காலையில் வந்தவுடன் மேனேஜரிடம் திட்டு வாங்க வேண்டி யிருக்கிறது. எல்லாம் என் நேரம்..’
ரெங்கநாதன் தன் ஹீரோ ஹோண்டாவை அவளருகில் நிறுத்தி,
“ஏறு…” என்றார்..
“என்ன விசயம்…?”
“ரோட்டில் சொல்ல முடியாத விஷயம்..”
வீரலட்சுமி வாயை மூடிக் கொண்டு வண்டியில் ஏறினாள்.. வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்தி தாழிடும் வரை ரெங்கநாதன் எதுவுமே பேசவில்லை..
“உஷ் அப்பாடா…” என்றபடி பேனின் சுவிட்சைத் தட்டிவிட்டு சோபாவில் சரிந்த வீரலட்சுமி.
“என்னன்னு சொல்லுங்களேன்..” என்றாள்.
“சொல்லாவிட்டால் என்ன.. படித்துத் தெரிந்து கொள்..” ரெங்கநாதன் அவள் முன்னால் கவரைத் தூக்கி எறிந்தார்..
“ஏன் இப்படி போடுறீங்க..?”
“உன் மகள் செய்திருக்கும் வேலைக்கு வேறு என்ன செய்வது..?”
“என் மகளா… உங்கள் மகளில்லையா..?”
“பேசாதேடி.. மூன்றைப் பெற்றோம்.. மூத்ததும், கடைசியும் ஒழுங்காய் நம் பேரைக் காப்பாத்துகிறதுகள்.. இரண்டாவதா ஒன்னு வந்து பிறந்திருக்கே.. நம்மை உயிரோடு கொன்று விடுவாள் போல இருக்குடி வீரலட்சுமி.”
“யாரு.. நம்ம ரூபிணியா..? அவள் தங்கம்ங்க..”
“அதனால்தான் அவளை ஒரு தாதா கடத்தப் பார்க்கிறான்..”
“என்னங்க நீங்க என்னென்னவோ சொல்கிறீங்க.. எனக்குப் பயமாய் இருக்குதுங்க…”
“முதலில் அந்த லெட்டரைப் படி…”
“வீரலட்சுமியின் முகம் பயத்தால் வெளுத்திருந்தது. பதட்டத்துடன் லெட்டரைப் பிரித்துப் படித்தாள்.”
“ஏங்க இது மொட்டைக் கடிதாசி..”
“ஆனால் அதில் இருக்கும் விவரம் உண்மை…”
“எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்..”
“ஹரிஹரனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இவன் மறைமுகமாய் பெயரைக் குறிப்பிடாமல் நேரடியாய் ஹரிஹரனைக் குற்றம் சொல்கிறான்.. விழுப்புரத்திற்கு வந்து கேட்டுப் பார் என்கிறான்..”
“இப்போது என்ன செய்வது…?”
“இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது…”
“என்னங்க..”
“என் அக்கா மகனுக்கு ரூபிணியை கட்டிக் கொடுத்து விடலாம்..”
“அவனுக்கா…? அவனைத்தான் வேண்டாமென்று ரூபிணி சொல்லி விட்டாளே.. நமக்கும் அவனைப் பிடிக்காதே…”
“ஏன்.. அவனுக்கென்னடி குறைச்சல்..? படித்தி ருக்கிறான்.. தாலுகா ஆபிஸில் வேலை பார்க்கிறான்.. என் அக்காவும் ரொம்ப நாளாய் பெண் கேட்குது…”
“ஏங்க.. அவன் குடியும்.. கூத்தியுமாய் அலைகிறானே.. அவனுக்கா நம் பெண்ணைக் கொடுப்பது..?”
“வேறு வழி…? பயங்கரவாதிக்கு பொறுக்கி பெட்டரில்லையா..?”
வீரலட்சுமி விக்கித்துப் போய் நின்று விட்டாள்…
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.