Chapter 29
“நான் உன்னிடம் அனுப்பியது வெறும் டூ வீலரை இல்லைடி.. அது என் நெஞ்சம்டி… அது என் நெஞ்சம்…”
ஹரிஹரன் பொரிந்தான்.. ரூபிணி இதழ் கடித்தாள்.. அவள் கண்கள் கலங்கி விட்டன.. இவனது காதல் தீயில் பற்றி எரிந்தாலும் ஏன் இவனை அவளால் வெறுக்க முடியவில்லை…?
“ஹரி… நானாக எதையும் சொல்லவில்லை.. நீங்கள் தான் என் வாயைப் பிடுங்கி வார்த்தைகளை வரவழைக் கிறீர்கள்..” அவள் எரிச்சலுடன் கூறினாள்..
“ஓகோ.. வாயைப் பிடுங்கினால் என்ன வேண்டு மானாலும் பேசி விடுவாயா..?” வெறுப்புடன் கேட்டான் அவன்..
“நீங்கள் பேசிய விதம் அப்படி…?”
“உனக்குப் பிடித்த மாதிரி பேச என்னால் முடியாது.. நான் இப்படித்தான் பேசுவேன்…”
“நான் மட்டும் உங்களுக்குப் பிடித்த மாதிரிப் பேச வேண்டுமா…?”
“ஏய்.. எனக்குப் பிடித்த மாதிரிப் பேசச் சொல்லி உன்னை எப்போதாவது கட்டாயப்படுத்தியிருக்கிறேனாடி.. பிடிக்காதவளின் நிழலைக் கூட இந்த ஹரிஹரன்
திரும்பிப் பார்க்க மாட்டான்.. நீதானேடி… ஹோட்டலில் என் அருகே வந்து தானாக உட்கார்ந்தாய்.. விடிய விடிய நான் போனில் பேசும்போது தூங்காமல் விழித்திருந்து என்னோடு பேசினாய்.. அப்புறம் என்ன செய்தாய்..? அந்த அன்பில் நிலையாக நின்றாயா..? இல்லையே… ஊர் பார்க்கிறது… உலகம் பார்க்கிறது என்று பயந்தாய்..
நான் உன் அன்பைக் கேட்டு உன்னை வற்புறுத்தினேனா… விலகித்தானே சென்றேன்.. உனக்காக என் ஊரை விட்டே வட இந்தியாவிற்குப் போய் மாதக் கணக்கில் இருந்தேனடி… திரும்பி வந்தவனைப் போகவிடாமல் மண்டபத்தில் மயக்கி நிறுத்தியது யார்..? நீதானேடி.. அன்று ஒரு பாட்டுப் பாடினாயே.. அது என்ன பாட்டு..? ம்ம்… நினைவு வந்து விட்டது. ‘பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே…’ நீ சிறையில் மாட்டியிருப்பதாய் கதறிப் பாடி என் மனதைக் கரைத்தது நீதானேடி… அப்போதும் உன் அழைப்பில்லாமல் நான் உன்னிடம் வரமாட்டேன் என்ற என் உறுதியில் நிலையாய் நின்றேனடி.. உன் கண்ணில் படாமல் பின்பக்க மாடிப் படியில் இறங்கிப் போய் விட நினைத்து வந்தால் தோட்டத்தில் நிற்கிறாய்.. உன் தோழிகள் போன பின்னாலும் இருட்டில் என்னை எப்படி அடையாளம் கண்டாய்..? ஏன் என் அருகில் நெருங்கி வந்தாய்..? நீயாக வாய் திறந்து ஏன் பேசினாய்..? நான் கை தொட்ட மறு நொடியில் என் நெஞ்சில் ஏன் முகம் புதைத்தாய்..? இத்தனையும் செய்து விட்டு நீ யார்… நான் யார்…? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று வேறு கேட்கிறாய்.. என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு…?”
ஹரிஹரன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரூபிணியின் நெஞ்சைச் சுட்டன.. இவை அனைத்தும் இல்லையென்று அவள் மறுக்கவில்லையே.. ஆனால் ‘நீயார்.. எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..?’ என்ற ரீதியில் அவள் பேசியதும் தவறுதானே…
கோபம் வந்து விட்டால் இன்னது பேசுகிறோம் என்று ஏன் தனக்கு மறந்து போகிறது என்று தன்னைத் தானே நொந்து கொண்டவளாய் அவள் கூறினாள்..
“ஹரி… நான் பேசியது தவறுதான்.. ஆனால் என் பேரண்ட்ஸின் சொல் கேட்டு மனம் மாறிவிடுவேன் என்று நீங்கள் நினைத்துப் பேசியதும் தவறுதான்…”
மறு முனையில் மௌனம் நிலவியது.. சற்று நேரம் கழித்துப் பேசிய ஹரிஹரனின் குரலில் கோபம் அப்படியே இருந்தாலும் வேகம் குறைந்திருந்தது..
“சரி… நீ பேசியது தவறா.. இல்லை நான் பேசியது தவறா என்று ஆராய்ச்சி பண்ண இப்போது நேரம் இல்லை.. ஒன்றை நீ உறுதியாக தெரிந்து கொள்.. நீ உன் பெற்றோரைப் பார்க்கப் போவதாக இருந்தால் என்னுடன் தான் போக வேண்டும்…”
“அது எப்படி சாத்தியம்..?”
“ஏய்ய்.. சாத்தியமில்லாதது என்று என் வாழ்வில் எதுவும் இல்லை.. தெரிந்ததா…?”
“நீங்கள் உங்களைப் பற்றியேதான் பேசுகிறீர்கள்.. என்னைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..”
“நீ வேறு நான் வேறு இல்லை.. உன்னைப் பற்றித் தனியாக நினைக்க என்ன இருக்கிறது..? என் வழி எதுவோ.. அதுதான் உன் வழி.. என்னைப் பின் பற்றி நடக்க நீ பழகிக் கொள்…”
ரூபிணி பேச வழியின்றி திகைத்து நின்றாள்.. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய்..
“ஓ.கே. நீங்கள் காரை எடுத்துக் கொண்டு வாங்க.. நான் வருகிறேன்.. சேர்ந்தே போகலாம்…” என்றாள்..
“தெருமுனையில் வெயிட் பண்ணவா..?”
“இவ்வளவு நடந்த பிறகு தெருமுனையில் எதற்கு வெயிட் பண்ண வேண்டும்..? கோவில்பட்டிக்கே சேர்ந்து போகப் போகிறோம் விழுப்புரத்தில் ஹாஸ்டல் வாசலில் இருந்து சேர்ந்து போவதில் என்ன வந்து விடப் போகிறது.. ஹாஸ்டலுக்கே வாங்க..”
“குட்…” மறுமுனை துண்டிக்கப்பட்டது..
ரூபிணி பெருமூச்சுடன் தரையில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்து யோசித்தாள்.. செல்போனை எடுத்து அவளது அக்காவை அழைத்தாள்..
“சொல் ரூபிணி…”
“அக்கா.. எனக்கு உன் உதவி வேண்டும்..”
“பணம் வேண்டுமா..?”
“இல்லை.. எனக்கு உன் சப்போர்ட் வேண்டும்..”
“எதற்கு..?”
“என் காதலுக்கு..”
“காதலா… நீயா…”
“ஏன் நான் காதலிக்கக் கூடாதா? அக்கா நீயும் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டவள்தான்.. உன் காதலர் நம் இனம்.. வேறு பிரச்னைகள் இல்லாத குடும்பம்.. ஒரே படிப்பு.. ஒரே ஊரில் வேலையென்பதால் எளிதாக உன் காதலில் நீ ஜெயித்து விட்டாய்.. ஆனால் என் கதை அப்படியில்லை…”
“அவர் வேறு ஜாதியா..?”
“ஆமாம்…”
“என்ன வேலை பார்க்கிறார்..?”
“ஆயிரக்கணக் கானவர்களுக்கு வேலை கொடுக்கிறார்…”
“பெரிய இடமா…?”
“ஆமாம்..”
“பெயர் என்ன..?”
“ஹரிஹரன்…”
“வாட்…? விழுப்புரம் ஹரிஹரனா…?”
“அவரேதான்…”
“ரூபிணி… எப்படி பயமில்லாமல் சொல்கிறாய்..?”
“பயத்தையெல்லாம் தாண்டி விட்டேன்… வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன்.. இது மட்டும் உறுதி அக்கா..”
“நம் அம்மா… அப்பாவிற்குத் தெரியுமா…?”
“தெரிந்துதான் என்னை வரச் சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. அம்மாவுக்கு சீரியஸ் உடனே புறப்பட்டு வாவென்று அப்பா காலையில் போன் பண்ணினார்…”
“என்னிடம் சொல்லவில்லையே…”
“பொய்யை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசிய மில்லையே.. என்னைத்தானே அவர் வரவழைக்க வேண்டும்…”
ரூபிணி போனில் விசும்பினாள்.. அவளது தமக்கை செய்வது அறியாது திகைத்தாள்…
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.