Chapter 30

0Shares

“அக்கா…. நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். அம்மா அப்பாவை எதிர்த்து கல்யாணம் பண்ணிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.. அதே சமயம் ஹரிஹரனை மறக்கவும்.. பிரியவும் என்னால் முடியாது.. எனக்கு என் பெற்றவர்களின் சம்மதத்தோடு ஹரிஹரனுடன் என் கல்யாணம் நடக்க வேண்டும்..”

“இது நடக்கக் கூடிய காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை…”

“நீயே இப்படிச் சொன்னால் எப்படி அக்கா…”

“வேறு எப்படிப் பேச ரூபிணி..? நான் இருப்பது பெங்களூர்.. இங்கிருக்கும் எனக்கே ஹரிஹரன் என்ற பெயரைக் கேட்டதும் அவர் யார் என்று தெரிந்து விட்டது.. அம்மா அப்பா எப்படி இதற்கு சம்மதிக்கப் போகிறார்கள்..? திஸ் இஸ் இம்பாஸிபிள்…”

“ஸோ… நீ எனக்கு உதவ மாட்டாய்…?”

“அப்படி நான் சொன்னேனா…? நானும் உடனடியாகக் கிளம்பி ஊருக்கு வருகிறேன்.. உனக்காக நம் அம்மா… அப்பாவிடம் பேசிப் பார்க்கிறேன்…”

“தேங்க் யூ அக்கா…”

ரூபிணி போனை அணைத்துவிட்டு ஜன்னல் வழி சாலையைப் பார்த்தாள்.. ஹரிஹரனின் கார் நின்று கொண்டிருந்தது.. மளமளவென்று பெட்டியை எடுத்துக் கொண்டவள்.. அறையைப் பூட்டி சாவியை ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டு படியிறங்கினாள்.. எதிர்பட்ட ரோஜாரமணியிடம்,

“நான் ஊருக்கு அவசரமாகப் போகிறேன் ரோஜா ரமணி.. வார்டனிடம் சொல்லி விடு…” என்றாள்..

“சரிம்மா.. நீ கவலையில்லாமல் பூட்டு வா..” என்றபடி அவள் உள்ளே சென்று விட்டாள்…

வாசலுக்கு வந்த ரூபிணி பெட்டியை எங்கே வைக்க என்று தடுமாறி நிற்க கார் கதவைத் திறந்து கொண்டு ஹரிஹரன் இறங்கினான்.. அவளிடமிருந்த பெட்டியை வாங்கி பின் சீட்டில் வைத்து விட்டு முன் பக்கக் கதவைத் திறந்து விட்டான்..

‘இவனோடு இது ஒரு தொல்லை.. எதையும் அச்சமின்றி செய்வான்.. இதை எத்தனை பேர் பார்க்கிறார் களோ என்று எண்ணமிட்டவள்.. வாயைத் திறந்தால் அவன் சும்மா விட மாட்டான் என்ற பயத்துடன் வாயை மூடிக் கொண்டு காரில் ஏறி அவனருகில் அமர்ந்தாள்..’

காரை வேகத்துடன் கிளப்பிய ஹரிஹரனின் முகம் கல்லாக இறுகியிருந்தது.. இன்னும் அவன் கோபத்திலிருந்து விடுபடவில்லை என்பது புரிய அவள் நெஞ்சில் துயரம் மண்டியது.. இவனைக் கை பிடிக்க அவள் போராட வேண்டும்.. அதற்கு இவனது அன்பு துணை செய்ய வேண்டாமா..? இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தால் அவளுக்கு எப்படி போராட சக்தி கிடைக்கும்..?

கார் உளுந்தூர்பேட்டையைத் தாண்டியிருந்தது.. நான்கு வழிப் பாதைகள் கொண்ட நெடுஞ்சாலையில் வேகம் கூட்டிப் பறந்து கொண்டிருந்தான் அவன்.. இருவருக்கும் இடையே இரும்புத் திரை போல் கனத்த மௌனம் நிலவியது.. அதைத் தாங்க முடியாத ரூபிணி தானே அவனை அழைத்தாள்.. அவன்தான் அவள் பேசாமல் பேச மாட்டானே…

“ஹரி…” மெல்லிய குரலில் அழைத்தாள் ரூபிணி..

“சொல்லு…” அவன் பார்வை சாலையில் பதிந்திருந்தது..

“ஐ ஆம் ஸோ ஸாரி…”

“ஸாரி சொல்லி விட்டால் சரியாகிப் போய் விட்டதா..?”

“நான் வேறு என்னதான் செய்ய வேண்டும்…?”

“எதையும் செய்ய வேண்டாம்.. வாயை மூடிக் கொண்டு வந்தால் போதும். உன்னுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை…”

அவன் வார்த்தைகளில் வெறுப்பை உமிழ்ந்தான்.. அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

“என்னுடன் பேசப் பிடிக்கவில்லையா..? இல்லை என்னேயே பிடிக்கவில்லையா…?”

“ஏய்ய்.. வாயை மூடிக் கொண்டு பேசாமல் வாடி…”

“இல்லை.. நான் பேசுவேன்.. என்னைப் பிடிக்காதவர் ஏன் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்…?”

“பேசாதேன்னு சொன்னேன்…”

“அப்படித்தான் நான் பேசுவேன்.. என் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே என்னுடன் கோவில்பட்டிக்கு வருகிறேன் என்று சொன்னீர்கள்.. என் மேல் நம்பிக்கை இல்லாதவர் ஏன் என்னைக் காதலிக்க வேண்டும்…?”

“இப்போது பேச்சை நிறுத்தப் போகிறாயா இல்லையா…?”

“மாட்டேன்.. உங்களை நான் மயக்கினேன் என்றீர்களே.. என்னை நீங்கள் மயக்கவில்லையா..? லாரன்ஸிற்கு வேலை கொடுங்கள் என்று கேட்டேன்.. உனக்காக வேலை கொடுக்கிறேன் என்று கொக்கி போட்டது யார்…? நீங்கள்தானே.. ஹோட்டலில் ஒரு அயோக்கியனின் அருகாமையிலிருந்து தப்பிக்க உங்கள் அருகில் வந்து அமர்ந்தேன்.. மையலுடன் என்னிடம் பேசியது யார்..? நீங்கள் தானே… ஹாஸ்டலுக்கு நான் வந்த பின் விடியும் வரை என்னுடன் போனில் பேசியது யார்..? நீங்கள் தானே… பெரிதாய் விலகிச் சென்றேன் என்று சொல்கிறீர்கள்.. சும்மாவா விலகிச் சென்றீர்கள்..? புது டூ வீலரை வாங்கிக் கொடுத்து விட்டு.. ‘இது என் நெஞ்சமடி நெஞ்சம்’ என்று கடிதம் எழுதி விட்டுச் சென்றது யார்…? நீங்கள்தானே… அன்றைக்கு கல்யாண மண்டபத்தில் ஜமுனாவுடன் நான் வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது மின்னல் போல் மேடைக்கு வந்து நந்தகோபாலன் பக்கத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்தது யார்…? நீங்கள்தானே.. தோட்டத்து இருட்டில் என் கைபற்றி இழுத்தது யார்..? நீங்கள்தானே… உங்கள் மேல் சாய்ந்த என் முகம் பற்றி… முகம் பற்றி…”

மேலே சொல்ல முடியாமல் அவள் வெட்கத்துடன் தடுமாற அவன் சரக்கென்று காரை ஒடித்துத் திருப்பி சாலையோரமாய் நிறுத்தினான்.. புயல்போல் அவள் 

தோள் பற்றி இழுத்து அவள் முகத்தோடு முகம் வைத்து அவளது இதழ் மீது இதழ் பதித்தான்.. ரூபிணி தன் வசமிழந்து அவனது அணைப்பில் தஞ்சம் புகுந்தாள்.. 

சற்று நேரம் கழித்து அவளை விட்டு விலகியவன் அவளை முறைத்தான்..

“பேசாதே.. பேசாதேன்னு சொல்லச் சொல்லப் பேசினாயே… நான் தோட்டத்தில் என்ன செய்தேன் என்பதைச் சொல்ல வேண்டியதுதானே ஏன் வாயடைத்துப் போனாய்..? அதனால்தான் அன்று நடந்ததை இன்று மீண்டும் நினைவு படுத்தினேன்…” என்று கிறங்கிய குரலில் கூறவும் செய்தான்…

‘இவனது ஒரு கண்ணில் நிலவும்.. மறு கண்ணில் சூரியனும் இருக்கிறார்கள் போல… முறைத்துக் கொண்டே கிறங்குகிறான்…’

வெட்கப் புன்னகையுடன் அவனது தோளில் முகம் புதைத்தாள் ரூபிணி…

“இந்தக் கொஞ்சலில் ஒன்றும் குறைச்சல் இல்லை..” மனத்தாங்கலுடன் பேசினான் ஹரிஹரன்…

“வேறு எதிலும் குறைச்சல் இல்லை.. ஹரி.. முக்கியமாய் என் காதலில்.. வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன்.. இல்லையென்றால் உங்கள் காலடியில் உயிரை விடுவேன்…” ரூபிணி கண்ணீர் மல்கக் கூறினான்..

ஹரிஹரன் விதிர்த்துப் போனான்.. ‘என்ன வார்த்தைகளைச் சொல்லி விட்டாள் அவள்..?’ அவளது தலை முடியைப் பற்றி அவளது முகத்தை உயர்த்தி விழியோடு விழி நோக்கினான்..

“எனக்கு இதுதான் தலை விதி என்று நீயும் தீர்மானித்து விட்டாயா..? அன்றைக்கு என் கண் முன் என்னைப் பெற்றவர்கள் இறந்தார்கள்… அது போல் நீயும் போக முடிவு செய்து விட்டாயா…?”

“இல்லை ஹரி… நான் வந்து…”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… பெற்றவர்கள் இல்லாமல் நான் வாழ்ந்தது பழி வாங்க.. படை பலத்தை உருவாக்க… ஆனால் நீயில்லாமல் நான் வாழ மாட்டேன்…”

“என் காதலின் உறுதியைச் சொன்னேன் ஹரி…”

“உன் காதலின் உறுதி பற்றி எனக்கும் தெரியும்டி…”

ஹரிஹரன் அவளை முரட்டுத் தனமாய் இழுத்து அணைத்துக் கொண்டான்.. அவனது காதலின் தீவிரம் அதில் தெரிந்தது…

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link