Chapter 31

0Shares

“உன் காதலில் எனக்கு சந்தேகமில்லை ரூபிணி… உன் மேல் நம்பிக்கை இல்லாமல் நான் அப்படிப் பேசவில்லை.. ஆனால் உனக்கு சமூகத்தைப் பற்றிய பயம் உண்டு.. என் மேல் உயிராய் இருந்தவள்.. உன் தோழிகளின் பேச்சுக்கும் கட்டுப்பட்டாய்… என்னை விட்டு விலகி நிற்கத் துணிந்தாய்… தோழிகளின் பேச்சுக்கே அவ்வளவு மதிப்புக் கொடுத்த நீ.. பெற்றவர்களின் பேச்சிற்கு எவ்வளவு மதிப்பு கொடுப்பாய்..?”

“அப்படியென்றால் உங்களை மறந்து… இன்னொரு வனை மணந்து கொள்வேனா…?”

“இல்லைடி… நான் அப்படிச் சொல்லவில்லை.. அன்று ஜமுனாவின் ரிசப்ஷனில் நீ பாடிய போது உன்னிடமிருந்து வெளிப்பட்ட வேதனையை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.. மீண்டும் என்னைப் பிரிய வேண்டிய நிலை வந்தால் நீ உயிரோடு இருக்க மாட்டாய்.. அது எனக்கு நிச்சயமாய் தெரியும்.. இந்த ஹரிஹரன் ஒரு நாளும் அதை நடக்க விட மாட்டான்…”

“ஹரி…” ரூபிணி அழுது விட்டாள்..

“அழாதே.. என்னுடன் தான் நீ உன் பெற்றோரைப் பார்த்துப் பேச வேண்டும்.. அவர்கள் சம்மதித்தால் அவர்கள் சம்மதத்தோடு நம் கல்யாணம் நடக்கும்…”

“சம்மதிக்கா விட்டால்…”

“அப்போதும் ஊரையே அழைத்துப் பிரம்மாண்டமாய் கல்யாணம் நடத்தி பகிரங்கமாய்த்தான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன்…”

ரூபிணி மௌனமானாள்.. அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது.. மெள்ள அவன் பக்கம் நெருங்கி அவன் தோள் மேல் தலை சாய்த்துக் கொண்டாள்..

ஹரிஹரனின் மனம் நிம்மதியாகி விட்டது.. ‘இவள் பூஞ்சை மனம் கொண்டவள். என் மேலிருக்கும் காதல் பெரிதா… பெற்று வளர்த்தவர்களின் பாசம் பெரிதா என்ற கேள்வி இவள் முன் எழுந்து விடக்கூடாது.. இவள் அதைத் தங்கி நிற்க மாட்டாள்.. உயிரை விட்டு விடுவாள்.. இரண்டில் எது வேண்டும்..? என்ற கேள்வியையே தவிர்த்து விட வேண்டும்.. இது மட்டும்தான்.. என் காதல் மட்டும்தான் என் காதல் மட்டும்தான் உனக்கு… வேறு எதுவும்… எந்தவித பந்த பாசமும்.. நினைவும் உன் மனதில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டு சிறைப் படுத்தினால்தான் இவளைக் காப்பாற்றி கை பிடிக்க முடியும்…’

திருச்சியில் ஹோட்டலின் முன் காரை நிறுத்தினான்..

“வா… சாப்பிடலாம்..”

“எனக்குப் பசியில்லை ஹரி…”

“எனக்குப் பசிக்கிறதே.. நீ சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேனே…”

அவள் பதில் பேசாமல் இறங்கினாள்.. அவன் முகத்தில் இளநகை அரும்பியது.. இவள்தான் சில மணி நேரங்களுக்கு முன்னால் உனக்கும்… எனக்கும் என்ன சம்பந்தமென்று கேட்டாள்.. இப்போது அவனது பசிக்காக அவளுக்கு தேவையில்லாவிட்டாலும் சாப்பிட வருகிறாள்.. இவளுக்கு ஊடலும் தெரிகின்றது… கூடலும் இயல்பாய் வருகின்றது.. இவளில்லாத வாழ்வை நினைக்கவே முடியாதே…

“என்ன சாப்பிடுகிறாய்…?”

“உங்களுக்குப் பிடித்ததை ஆர்டர் கொடுங்கள்…”

“உனக்கு என்னடி பிடிக்கும்…”

‘எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்…’ மனதில் நினைத்துக் கொண்டவளின் முகத்தில் புன்னகை வந்தது.. அருகில் சர்வர் இருந்ததால்… விரல் நீட்டி ‘நீ’ என்று ஜாடை காட்டினாள்.. அவன் அவளை இமைக்காமல் ஒரு கணம் பார்த்தான்.. பின்னர் சர்வரிடம் தேவையானதை சொல்லிவிட்டு அவளருகே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்..

“என்னடி ஜாடை காட்டினாய்…?”

“ஏன்… புரியவில்லையா…?”

“உன் வாயால் சொல்லேன்…”

“உங்களுக்குத்தான் நான் வாய் திறந்தால் பிடிக்காதே..”

அவன் டேபிளுக்கு அடியிலிருந்த அவளது முழங்கையில் கிள்ளினான்.. அவள் சிரித்துக் கொண்டே தலை சரித்து அவனைப் பார்த்துச் சிரித்தாள்.. அவன் மயங்கிப் போனான்..

“வரிசையாய் நெருக்கிக் கட்டப்பட்ட முத்துச் சரம் போல் உன் பல் வரிசை என்னை மயக்குதுடி… சிரித்தே மயக்கு…”

“ரொம்பவும் மயங்கினவர்தான்… மயங்கியவர் பேசிய பேச்சைத்தான் காலையில் கேட்டேனே…”

“இந்த மாதிரியான நேரத்தில் எதை நினைவு படுத்துகிறாய் பார்… உன்னை…”

அவன் பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தான்.. அவனது கோபத்தை ரசித்தவள் விஷமப் புன்னகையுடன் கூறினாள்..

“அப்பா… கோபத்தைப் பாரேன்.. மூக்கு நுனியில் கோபத்தை வைத்திருப்பீர்களா..? முசுட்டு ஹரிஹரன்..”

“என்னடி பட்டப் பெயர் வைக்கிறாயா..?”

“அப்படித்தான்… போங்களேன்.. ஆனால் ஒன்று ஹரி…”

“என்னடி…?”

“நான் சிரித்துத்தான் உங்களை மயக்குகிறேன்.. நீங்கள் முறைத்தே என்னை மயக்கி வைத்திருக்கிறீர்கள்..”

ஹரிஹரனின் கண்கள் மின்னின… அவளது கரத்தை இறுகப் பற்றி அதில் யாரும் கவனிக்காமல் இதழ் பதித்தான். அப்போது அவனது செல்போனின் மணியொலித்தது.. எடுத்துப் பேசினான்..

“ம்ம்… ஓகே… ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி விடு.”

செல்போனை அணைத்துப் பாக்கெட்டில் போட்டவன் சர்வர் கொண்டு வந்து வைத்திருந்த உணவு வகைகளை அவள் பக்கமாய் தள்ளினான்..

“சாப்பிடு…”

“யாருக்கும் உடம்பு சரியில்லையா…?”

“ஆமாம்… உன் ஆபிஸில் வொர்க் பண்ணும் மூர்த்தி ஒரு ஆக்ஸிடெண்டில் மாட்டி ரோட்டில் கிடக்கிறானாம்.. ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணச் சொன்னேன்… நீ சாப்பிடு…”

அவன் நிதானமாய் ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தான்..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link