Chapter 10
பிரசன்னாவிற்குத் தாயைப் பார்க்கப் பாவமாக இருந்தது.. அவன் தாயைச் சமாதானப்படுத்த முனைந்தான்..
“இப்ப என்னம்மா.. வாசவி புடவை கட்டிக்கணும்.. அவ்வளவுதானே..”
“அண்ணா.. நீ பாட்டுக்கு அம்மாவிடம் வாக்குக் கொடுத்துவிடாதே.. எனக்குப் புடவை கட்டிக்கத் தெரியாது..”
“நான் கட்டி விடுகிறேன்டி..”
“நீங்க கட்டி விடுவீங்க.. சரி.. ஆனால் சேலை கட்டிக் கொண்டு.. கால் தடுக்கி விழப் போவது யார்..? நான் தானே..”
“அம்மா.. இவள் சொல்வதும் சரிதானே.. சேலை கட்டிப் பழக்கமில்லாதவள்.. கால் தடுக்கி விழுந்து வைத்து விட்டால் என்ன செய்வது..?”
“ஏன்டா.. நீயும் அவளுக்குப் பின்பாட்டுப் பாடுகிற..? அது எப்படி ஒரு பெண் பிள்ளை அடக்க.. ஒடுக்கமாய் நடந்தால் கால் தடுக்கும்..? உன் தங்கைக்குத் தான்.. காலிரண்டும் தரையில் படவே படாதே.. ஓடிக் கொண்டிருந்தால் கால் தடுக்கத்தான் செய்யும்..”
“பாரு வாசவி.. அம்மாவின் ஆசைக்கு முகூர்த்த நாள் அன்றைக்கு மட்டும் சேலை கட்டேன்..”
“அப்படிச் சொன்னால் பரவாயில்லையே.. நான்கு சேலைகள் எதுக்குன்னு கேட்கிறேன்..”
“ஏன்டா.. நிச்சயத்தப்போ இவள் உடுத்திக் கொள்ள புதுச் சேலை வேண்டாமா..?”
“அப்புறம்.. மற்ற சேலைகளுக்கும் என்ன அண்ணா கணக்கு..?”
“ம்ம்.. பெண்ணழைக்கப் போகும்போது ஒரு சேலை..”
“வெரிகுட்.. கல்யாணப் பெண் புதுச் சேலையில் இருக்கிறாங்களோ.. இல்லையோ.. நான் புதுச்சேலையில் இருக்கனும்.. அப்புறம்..?”
“அப்புறம் மறுநாள் காலையில் முகூர்த்தத்தின் போது ஒரு சேலை.. மாலையில் வரவேற்பின் போது ஒரு சேலை..”
“கேட்டுக் கொண்டாயா அண்ணா..”
“அவன் கேட்டுக் கொள்வது இருக்கட்டும்.. நீ முதலில் இதைக் கேட்டுக் கொள்..”
“ஏம்மா.. கல்யாணப் பெண்ணுக்கு முகூர்த்தச் சேலை வாங்கி விட்டிங்களா.. இல்லையா..?”
“அது தனியாய் வாங்க வேண்டும்டி.. இதையெல்லாம் இன்றைக்கே போய் வாங்கி வந்து விடலாம்..”
“ஏன்.. அது மட்டும் தனியாய்ப் போய் வாங்க வேண்டுமாம்..?”
“முகூர்த்தச் சேலை எடுக்கப் பெண் வீட்டிலிருந்து ஆள் வர வேண்டாமா..? அவங்க வீட்டிலிருந்து அவங்களை வரச் சொல்லி நாமும் சேர்நது போய் எடுக்கனும்..”
“அண்ணிக்கு எத்தனை சேலை எடுப்பீங்க..?”
“அதுவும் நான்கு சேலைகள்தான்..”
“பரவாயில்லையே.. மகளைப் போல் மருமகளையும் நினைக்கறீங்க போல..”
“எனக்கு மருமகளும்.. ஒரு மகள்தான்..”
பிரசன்னா பெருமையுடன் தாயைப் பார்த்துக் கொண்டான்.. வாசவி.. அவனைப் பார்த்துக் கண் ஜாடை காட்டி விட்டு மேலும்.. திலகத்தின் வாயைக் கிண்டினாள்.
“அந்தச் சேலைகளும் எப்போது கட்டிக் கொள்ள வேண்டும்கிற.. கணக்கு இருக்குமே..”
“ம்ம்.. நிச்சயதார்த்தத்திற்கு ஒன்னு.. முகூர்த்தப் பட்டு ஒன்னு.. சாயந்திர ரிசப்ஷனுக்கு ஒன்னு.. அப்புறம்..”
திலகம் மேலே சொல்லாமல் நிறுத்திவிட.. வாசவி தூண்டினாள்..
“அப்புறம்..”
“அப்புறம்.. கிப்புறம்தான்.. போடி.. போய் வேலை எதுவும் இருந்தால் பாரு..”
பிரசன்னாவிற்குத் தெரியும்.. அந்த நான்காவது சேலை எதற்கு என்று.. அது.. முதலிரவின் போது கட்டுவதற்காக வாங்குவது.. அவன் மனம் கிளர்ச்சியுற்றது.. எழுந்து தன் அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டான்.. செல்போனை உயிர்ப்பித்தான்..
“ஹலோ..” என்றது மறுமுனையில் சுகந்தியின் குரல்.
“என்ன செய்து கொண்டிருக்கிற..?” அவன் தாபத்துடன் வினவினான்..
“உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்..!” அவள் காதலுடன் கவிதையாய் கூறினாள்..
“இங்கே புடவை எடுக்க லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறாங்க..”
“ம்ம்.. எப்போது நம் கல்யாண நாள் வரும்..?”
“இன்விடேசனில் போட்டிருக்கிற நாளில் வரும்..”
“நிச்சயதார்த்தத்தை.. கல்யாணத்திற்கு முதல் நாளிலேயே மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாமுன்னு சொல்லிட்டிங்க..”
“ஏன்.. அதனால் என்ன..?”
“இல்லை.. முதலிலேயே எங்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தால்.. உங்களைப் பார்க்க முடிந்திருக்கும் இல்லையா..?”
“ஏன்.. இப்போது மட்டும் என்ன.. ஏதோ வேலை இருப்பது போல நாளைக்கு நான் பொள்ளாச்சிக்கு வரவா..?”
“வேண்டாம்.. வேண்டாம்..”
“ஏன்..?”
“அப்பா.. அம்மா கண்டு பிடித்து விடுவார்கள்..”
“கண்டு பிடித்தால் என்ன..? நான்தானே உன்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன்.. நான் உன்னைப் பார்க்க வந்தால் ஆகாதா..?”
“ப்ளீஸ்.. எனக்குச் சங்கடமாக இருக்கும்..”
“சரி.. சரி.. நான் வரவில்லை.. பயப்படாதே.. ஆனால் முகூர்த்தச் சேலை எடுக்கும்போது நான் வருவேன்..”
“நீங்க வராமல்.. உங்களுக்குப் பிடித்த சேலையை நான் எப்படி எடுக்க முடியும்.. நீங்க வந்துதானே ஆக வேண்டும்..”
“கட்டிக் கொள்ளப் போகிறவள் நீ.. உனக்குப் பிடித்த கலரில் பிடித்த சேலையாய்ப் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.. அதற்கு நான் எதற்கு..?”
“நான் கட்டிக் கொண்டால்.. அதைப் பார்த்து ரசிக்கப் போகிறவர் நீங்கள்தானே.. உங்களுக்குப் பிடித்த கலரும்.. டிசைனும் எதுன்னு நீங்க சொல்லுங்க.. நான் அதையே செலக்ட் செய்கிறேன்..”
பிரசன்னாவிற்குள் உணர்வுகள் கரை மோதின.. என்ன மாதிரியான உணர்வு இது.. எங்கோ பிறந்து வளர்ந்த ஒருத்தி இத்தனை வருடங்களாக அவளுக்கென்று இருந்த விருப்பங்களைத் துறந்து.. அவனுக்கு விருப்பமானதை விரும்புகிறவளாக மாறிப் போனது எப்படி..? தன் சுயத்தை மறந்து.. எல்லாமே அவனாக ஆகிப் போனவளின் அன்பு அவனை ஈர்க்க.. அவன் மௌனமாகிப் போனான்..
“என்ன.. எதுவும் பேச மாட்டேன்கறீங்க..”
“சில நேரம்.. பேச்சு வராது சுகந்தி.. பேச வராது.. இது அந்த மாதிரியான நேரம்..”
சிறிது நேரம் இருவரும் பேசினார்கள்.. யார் என்ன பேசினார்கள் என்ற நினைவே இல்லாமல்.. எதையாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசப்பட்ட பேச்சுக்கள்.. முக்கியமானது என்பது பேச்சில் இல்லை… பேசிக் கொண்டிருப்பதே முக்கியமானதாய்.. பேசுவதே முக்கிய மானதாய் அவர்கள் பேசிக் கொண்டார்கள்..
பிரசன்னா மிக இனிமையாக உணர்ந்தான்.. வாழ்வின் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் அந்தத் தருணத்தை எதிர்நோக்கி அவன் மனம் தவித்தது.. விடிகின்ற ஒவ்வொரு விடியலும்.. அவனைப் புத்துணர் வோடு எழ வைத்தது..
முகூர்த்தப் பட்டு எடுப்பதற்காக.. பொள்ளாச்சிக்கு பிரசன்னாவின் குடும்பத்தார் காரில் சென்றார்கள்..
“எங்கேப்பா முகூர்த்தப் பட்டு எடுக்கப் போகிறோம்..?” என்ற வாசவியின் கேள்விக்குப் பதில் சொன்னார் காளிதாஸ்..
“ஒருவேளை அண்ணியுடைய அப்பாவின் ஜவுளிக் கடையில் பட்டு எடுப்பீங்களோன்னு நினைத்தேன்..”
“சேச்சே.. அங்கேயெல்லாம் எடுக்கக் கூடாது..”
“ஏம்பா.. அப்படி ஒரு ‘அட்டு’ ஜவுளிகளாய் அங்கே இருக்குமா..?”
காளிதாஸிற்குச் சிரிப்பு வந்தது.. திலகமோ.. கணவனை முறைத்து விட்டு மகளைக் கடிந்து கொண்டாள்..
“ஏன்டி.. யாராச்சும் சம்பந்தம் பண்ணப் போகிற வீட்டில் போய் ஜவுளி எடுப்பாங்களா..?”
“எடுத்தால் என்ன..?”
“அவங்க நம்மகிட்ட பணம் வாங்குவாங்களா..?”
“வாங்கா விட்டால் நமக்கு மிச்சம்தானேம்மா..”
“உன் புத்தி ஏன்தான் இப்படிப் போகிறதோ.. தெரிய வில்லை.. முகூர்த்தச் சேலை நாம்தான் வாங்கனும்.. புரிந்ததா..?”
“கொஞ்சம் கூடப் புரியவில்லை..”
“புரியாவிட்டால் வாயை மூடிக் கொண்டு வா..”
இப்போது பிரசன்னா சிரித்தான்..
“ஏன்டா சிரிக்கறே..?”
“ஏம்மா.. வாயை மூடிக் கொண்டிருப்பது.. வாசவிக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு உங்களுக்குத் தெரியாதா..? அவளால் அது எப்படி முடியும்..?”
“அண்ணா.. வேண்டாம்.. சந்து கிடைத்ததுன்னு சிந்து பாடாதே.. அப்புறம் நான் என் வேலையைக் காட்டி விடுவேன்..”
“என்ன செய்வாய்..?”
“உன் ஆபிஸில்.. பக்கத்து சீட் லேடிகிட்ட நீ கடலை போட்டாய்ன்னு.. அண்ணியிடம் ஒரு ‘பிட்’டைப் போட்டு விட்டு வந்து விடுவேன்.. ஜாக்கிரதை..”
“அடிப்பாவி… பிரசன்னா.. உனக்கு நல்லா வேண்டும்டா.. தங்கை.. தங்கைன்னு தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினாயில்லையா.. நன்றாகப் படு..”
“ஏன் வாசவி.. இது உனக்கே நியாயமாய் இருக்கா..? என் பக்கத்து சீட்டில் இருப்பது மீனாட்சி சுந்தரம்.. என் பெஸ்ட் பிரண்ட்.. அவனிடம் நான் பேசினால்.. அது கடலை போடுவதாக ஆகிவிடுமா..?”
“அது என்னவோ எனக்குத் தெரியாது.. நான் அண்ணி யிடம் சொல்லத்தான் போகிறேன்..”
“என்ன சொல்வாய்..?”
“எதையோ சொல்வேன்.. அது உனக்கு எதற்கு..?”
முகூர்த்தப் பட்டு எடுக்கும் வேலையை மறந்து விட்டுத் தங்கையைக் கவலையோடு நோக்கினான் பிரசன்னா..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.