Chapter 13
“ஏன் சுகந்தி.. உன் நாத்தனார் என்னை லேட்டாகப் பார்த்து விட்டோமென்று வருத்தப்படுவது போல் தெரிகிறதே.. இது எனக்கு முன்னமே தெரியாமல் போய் விட்டதே..”
அவன் வம்பிழுக்கும் வகையில் பேசினான்.. திருமணம் பண்ணிக் கொள்ளும் முறையில் உள்ள உறவினர்கள் இதுபோல் கேலி பேசுவது.. அவர்களது உறவு வட்டாரத்தில் இயல்பான விசயம் என்பதால்.. பிரசன்னா மௌனமாய்க் குறுநகையுடன்.. தங்கை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதை அறிந்து கொள்ள வேடிக்கை பார்த்தான்..
“அடடா.. உங்களுடைய அண்ணன் இதற்குப் போய் இவ்வளவு வருத்தப்படுகிறாரா..? ஏன் அண்ணி.. இது முன்னமே தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாராம்..?”
“பெங்களூரில் இருக்கிற என் அக்கா வீட்டிற்கு.. அம்மா.. அப்பாவுடன் நானும் போகாமல் தேங்கி நின்றிருப்பேன் என்று சொல், சுகந்தி..”
“தேங்கி நின்று என்ன சாதித்திருப்பாராம்..?”
“இதுவரை வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்திருப் பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனால்.. அது எதுவும் சாதனையில்லை.. நீ சாதிக்க வேண்டிய மிகப் பெரிய சாதனை ஒன்று பாக்கியிருக்கிறது என்று வாழ்க்கை என்னிடம் இப்போதுதான் சொல்லியிருக்கிறது..”
“ஓ…” என்று விழிகளை வேண்டுமென்றே அகல விரித்துச் சுகந்தியைப் பார்த்தாள் வாசவி..
“நானும் பார்த்தாலும் பார்த்தேன்.. உங்கள் அண்ணனைப் போன்ற தற்பெருமை மன்னனைப் பார்த்ததே இல்லை.. ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஏ.ஆர் ரஹ்மான் கூட அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.. ஆனால் இவர் அலட்டிக் கொள்ளும் அலட்டலில் இந்த ஜவுளிக் கடையே குலுங்கி விட்டது.. அண்ணி.. அப்படி என்ன தான் உங்கள் சாதனையாளர்.. திருவாளர்.. மேன்மைமிகு அண்ணன் சாதித்திருக்கிறார்ன்னு நீங்கள் சொன்னால்.. தேவலை..”
இந்தக் கேள்வியைச் சுகந்தியைப் பார்த்துக் கேட்ட வைத்த வாசவி.. ‘ஏன்டா வாயை விட்டோம்..’ என்று நொந்து போய் விட்டாள். சுகந்தியின் முகத்தில் உற்சாகம் கரை புரண்டோடியது.. அவள் மிகவும் ஆர்வத்துடன் கையை ஆட்டி.. ஆட்டிப் பேச ஆரம்பித்து விட்டாள்..
“என்ன வாசவி இப்படிச் சொல்லிட்ட..? அண்ணன் பாரின் போய்ப் படித்துவிட்டு வந்திருக்கிறார்..”
“நம்ம ஊரில் இல்லாத படிப்பா பாரினில் இருக்கிறது..?”
“எங்கள் பெரியப்பா சின்னதாக மெஸ் ஒன்றை நடத்தி வந்தார்.. அண்ணன் அதைப் பெரிது பண்ணி.. ஸ்டார் ஹோட்டல் ரேன்ஜிற்குக் கொண்டு வந்து விட்டார்.. இப்போது பொள்ளாச்சியில் நம்பர் ஒன் ஹோட்டல் அண்ணனுடையதுதான். சினிமா ஷூட்டிங்கிற்கு யார் வந்தாலும்.. அண்ணனுடைய ஹோட்டலில்தான் ரூம் புக் பண்ணுவார்கள்.. தெரியுமா..?”
“இதுவரை தெரியாது அண்ணி.. இப்போது தெரிந்து கொண்டு விட்டேன்..”
“இனியாவது என் அண்ணன் என்ன சாதித்தார்ன்னு கேட்காமல் இருப்பாயா..?”
“கேட்கவே மாட்டேன்.. நான் ஏன் அண்ணி வாயைத் திறந்து அந்தச் சந்தேகத்தைக் கேட்கப் போகிறேன்..? நான் வாயைத் திறக்கப் போக.. நீங்க ஒரு மணி நேரத்திற்கு.. வாய் மூடாமல் உங்கள் அண்ணனின் பெருமைகளை அள்ளி வீசுவீங்க… தேவையா எனக்கு…? இவரின் பெருமையைக் கேட்டு.. எனக்கு என்ன ஆகப் போகிறது..?”
அவளது பேச்சை ரசித்துச் சிரித்தான் சந்தோஷ்…
‘இவனுக்குக் கோபம் வரவில்லையா..?’ யோசனை யுடன் அவன் சிரிப்பைப் பார்த்தாள் வாசவி..
“சுகந்தி.. எதையுமே நமக்குத் தேவையில்லைன்னு அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது.. இன்றைக்குத் தேவையில்லைன்னு நாம் நினைப்பது.. பின்னாளில் நமக்கு உயிர் வாழத் தேவையான இன்றியமையாத ஒன்றாக மாறி விடலாம்.. அதனால் உன் நாத்தனாரிடம் உடனே எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாமென்று சொல்லு…” சந்தோஷ் விசமமாகப் புன்னகைத்தான்..
“நான் என் கருத்தை எப்போதுமே மாற்றிக் கொண்ட தில்லை, அண்ணி..”
“மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது, சுகந்தி..”
“ஹ.. பெரிய தத்துவத்தைக் கண்டு பிடித்து விட்டார்..”
“இது பெரிய தத்துவம்தான்.. சுகந்தி.. வாழ்க்கையின் மாறுதல்களைப் பற்றிய தத்துவம்.. இதை நான் கண்டு பிடிக்கவில்லை.. பெரிய.. பெரிய.. அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்..”
“ஆமாம்… சொன்னார்கள்… சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னார்கள்.. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு சொன்னதைப் போலச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள்..”
“எது எப்படியோ சுகந்தி.. உன் நாத்தனாருக்குக் குரங்கிலிருந்துதான் தான் வந்தோம்கிற உண்மையை மட்டும் ஒப்புக் கொள்ளும் பெரிய மனம் இருக்கிறது.. அந்த மட்டிலும் பரவாயில்லை..”
சந்தோஷின் நோக்கம் சுகந்திக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது.. அவள் யோசனையுடன் தமையனை நோக்கினாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.