Chapter 14
சந்தோஷ் அவ்வளவு எளிதாக யாரிடமும் பேசிவிட மாட்டான்.. அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையை வரவழைக்க எதிரிலிருப்பவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.. அவதுவும் பெண்களிடம் அவன் பேசியதே இல்லை.. விலகிச் சென்று விடுவான்..
அப்படிப்பட்டவன் இன்று வாசவியிடம் வளவள வென்று பேசியது சுகந்தியை யோசிக்க வைத்தது.. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியுமென்று சுகந்தியின் உள் மனது கூறியது..
சந்தோஷ் பேச்சை வளர்க்க விரும்புகிறான்.. வாசவியின் ரோசத்தைத் தூண்டி விடுவதன் மூலம்.. அவளைப் பேச வைத்து ரசிக்க விரும்புகிறான்.. அப்படியெனில்.. அவனுடைய மனம் வாசவியுடன் உரையாடுவதை விரும்புவதாகத்தானே அர்த்தம்..
சந்தோஷிற்குப் பெண் கொடுக்க.. கோயம்புத்தூரில் உள்ள பெரிய புள்ளிகள் விரும்பியதைச் சுகந்தி நன்கு அறிவாள்.. சந்தோஷ் இதுவரை திருமணத்தைத் தவிர்த்து வந்திருக்கிறான்.. இதுவரை சந்தோஷிற்குப் பெண் கொடுக்க வந்த பெரும் புள்ளிகளின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுகையில்.. காளிதாஸின் வாழ்க்கைத் தரம் குறைந்ததுதான்..
அத்தோடு.. வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு வந்த சந்தோஷ் எப்படி.. இன்னும் பட்டப் படிப்பைக் கூட முடிக்காத வாசவியின்பால் வசீகரிக்கப்பட்டான் என்பதும் சுகந்திக்கு விளங்கவில்லை..
மயில்வாகனத்தின் பெரியப்பாவின் மகனான ராமகிருஷ்ணன் பொள்ளாச்சியில்.. ‘செட்டிநாடு மெஸ்’ என்று சாதாரண அசைவ ஹோட்டல் ஒன்றைத்தான் நடத்திக் கொண்டிருந்தார்..
ஆனால்.. அவருடைய ஹோட்டலில் தயாராகும் அசைவ உணவு வகைகளின் கைமணம் பல நிரந்தர வாடிக்கையாளர்களைத் தேடித்தர.. ஹோட்டல் தொழில் நல்ல லாபகரமாகவே ஓடிக் கொண்டிருந்தது..
மூத்த பெண் சரஸ்வதியைப் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியருக்கு நிறைய சீர்வரிசை செய்து திருமணம் செய்து வைத்தார்.. அடுத்தவன் சந்தோஷ்.. வெளிநாட்டில் படிக்கக் கிளம்பி விட்டான்.. அவனது படிப்பை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குத் திரும்பியவன்.. பொள்ளாச்சியிலிருந்து தகப்பனாரின் ஹோட்டலைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்..
என்ன செய்தான், ஏது செய்தான்.. என்று யாருக்குமே புரியவில்லை.. சாதாரணச் செட்டிநாடு மெஸ்ஸாக இருந்த சிறு கட்டடம்.. ‘ஹோட்டல் ஜாஸ்மின்’ என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டலாக உருமாறி.. உயர்ந்து நின்றது..
இரவு பகலாக அவன் உழைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும்.. செட்டிநாடு மெஸ்ஸின் பக்கவாட்டில்.. இரவு நேர கார்டன் ரெஸ்டாரெண்டைக் கொண்டு வந்தான்.. அதில் செயற்கைக் குளத்தை உருவாக்கி.. நிஜமான அன்னப் பறவைகளை நீந்த விட்டான்.. பச்சைப் புல்வெளி பாத்திகளைப் பதிக்க வைத்து.. அதில் முயல் குட்டிகளை ஓடி விளையாட விட்டான்.. செயற்கை அருவியொன்றைக் கட்டி அதனருகே.. வட்ட வடிவமான டேபிள்களையும்.. அதைச் சுற்றி நாற்காலிகளையும் போட வைத்தான்..
ராமகிருஷ்ணன் கை மணத்தை மட்டுமே நம்பி ஹோட்டலை நடத்தியவர்.. நாவுக்குச் சில ருசிகள் தேவைப்படுவது போல.. மனதிற்கும் சில சூழல் மாற்றங்கள் தேவைப்படும் என்பதை அவர் புரிந்து வைத்திருக்க வில்லை..
ஆனால்.. சந்தோஷ் அதைப் புரிந்து வைத்திருந்தான். எளிதாய்.. உணவுப் பிரியர்களை இயற்கைச் சூழலில் உண்பதற்குச் சாரி.. சாரியாய் அவன் ஹோட்டலைத் தேடி வர வைத்தான்.. பண வருமானம் அதிகரித்தது.. சுற்றிலும் இருந்த கட்டடங்களை.. அவன் ஏன் விலைக்கு வாங்குகிறான் என்பது ராமகிருஷ்ணனுக்குப் பிடிபட வில்லை.. அதே சமயம்.. மகன் தலையெடுத்து விட்டான்.. இனி அவனுடைய பொறுப்பில் எல்லாமும் இருக்கட்டும்.. அவனுடைய முடிவுகளில் நம் தலையீடு இருக்கக் கூடாது என்ற தீர்மானமும் அவரிடம் இருந்தது..
ஒருநாள்.. கார்டன் ரெஸ்டாரெண்டைத் தவிர.. மற்றக் கட்டடங்களை அவன் இடித்துத் தரைமட்ட மாக்கினான்..
“டவுனில் சென்டர் பகுதியில் இருக்கிற கட்டடங்கள் எல்லாவற்றையும் வாடகைக்கு விட்டால்.. உட்கார்ந்து சாப்பிடலாம்.. ஏன் இப்படிச் செய்கிறான்னு தெரியலையே..” மனைவி ஜானகியிடம் புலம்பினார் ராமகிருஷ்ணன்..
“ஏன்.. நீங்கள் அவனிடம் கேட்க வேண்டியது தானே..” ஜானகி கணவனிடம் வினவினாள்..
“தப்புடீ.. இனி எல்லாமும் அவன் சொத்துத்தான்.. இன்னும் சொல்லப் போனால்.. ஹோட்டல் பொறுப்பு அவன் கைக்கு மாறியிருக்கிற இந்த ஆறு வருசத்தில் தான் அவன் இந்தக் கட்டடங்களையெல்லாம் வாங்கிப் போட்டான்.. அது எல்லாமே அவனுடைய சொந்த உழைப்பில் வந்தது.. அதில் உரிமை கொண்டாடி.. யோசனை சொல்லி நான் தலையிடக் கூடாதுடி ஜானு.. அது நியாயமில்லை..”
ராமகிருஷ்ணன் விலகி நின்று வேடிக்கை பார்க்க.. சந்தோஷ் அந்த இடங்களில் மிகப் பெரிய ஹோட்டல் வளாகத்தை உருவாக்கினான்.. அதைக் கண்ட ராம கிருஷ்ணன் பிரமித்து நின்று விட்டார்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.