Chapter 31
வாசவி அடிக் கண்ணால் மற்றவர்கள் தங்களைக் கவனிக்கிறார்களா என்று கவனித்தாள்..
‘நல்லவேளை.. யாரும் பார்க்கலை..’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள்.. அவனை முறைத்தாள்.. அவன் ரகசியமாய்ச் சிரித்தான்..
‘திருட்டு ராஸ்கல்..’
அவள் மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.. சாப்பிட்டு விட்டு எழுந்து சந்தோஷ் சென்றுவிட.. கை கழுவிக் கொண்டு.. மண்டபத்தின் முன் ஹாலுக்கு வந்தாள்.. அவனைக் காணவில்லை..
‘எங்கே போயிருப்பான்..’ என்ற யோசனையுடன் அவள் விழிகளைச் சுழற்றியபோது.. மேலேயிருந்து ஒரு பூ வந்து அவள் மேல் விழுந்தது.. அவள் அண்ணாந்து பார்த்தாள்.. மாடி ஹாலின் கைப்பிடி வளையத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த அவன் விழி சிமிட்டி.. ஏழு விரல்களைக் காட்டினான்..
அவள் பல்லைக் கடித்தாள்.. கோபத்துடன் மாடிப் படிகளில் தாவி ஏறினாள்.. அவனருகில் மூச்சிரைக்கச் சென்று நின்றாள்..
“உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக் கறீங்க..?”
“உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..”
அவள் மனதில் பூ மலர்ந்தது.. முகம் மென்மை யானது.. அவசரமாய் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்..
‘இவன் சாகஸக்காரன்.. இவனுடைய சாகசத்தில் மயங்கி விடக் கூடாது..’
“இதோ பாருங்கள்..”
“பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்..”
அவன் மீண்டும் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு,
“எட்டு..” என்றான்..
“இது என்ன திருட்டுத்தனம்..?”
“எது..?”
“கண்சிமிட்டுவது.. எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..”
“யாரைப் பிடிக்கவில்லை.. என்னையா..?”
அவன் குறும்பாகக் கேட்டான்.. அவள் சிணுங்கலுடன் அவன் முகத்தை நோக்கினாள்.. பின்.. சேலையின் முந்தானையை விரல்களால் திருகிக் கொண்டே முணுமுணுத்தாள்..
“பிடிக்காமலா.. மண்டப வாசலில் நின்று கொஞ்சினார்கள்..”
“கொஞ்சினார்களா.. யார்.. யார் கொஞ்சினது..?”
அவன் ஏதும் அறியாதவன் போல வினவினான்.. அவள் சுற்றுப்புறத்தை உணர்ந்தவளாய் அடிக்குரலில் சீறினாள்..
“கொழுப்பா..?”
“ஏய்ய்.. நீ சொன்னதற்குத்தானே சந்தேகம் கேட்டேன்..”
“சந்தேகம்..? வரும்.. ஏன் வராது..?”
“பார் வாசவி..”
“உம்.. பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்.. இன்னும் நீங்கள் என்னவெல்லாம் சேட்டை செய்வீர்கள்ன்னு யோசித்துக் கிட்டும் இருக்கிறேன்..”
“எங்கே நீ என்னைப் பார்த்தாய்..? வாசலில் நின்று என் தோளில் சாய்ந்து கொண்டிருந்ததை ஒரு மணி நேரத்திற்குள் மறந்து விட்டு.. சேலையை வரிந்து கட்டிக் கொண்டு.. என்னிடம் மல்லுக்கு நிற்கிறாய்.. இதுதான் நீ என்னைக் காதலிக்கும் லட்சணமா..?”
“பேச்சை மாற்றாதீங்க சந்தோஷ்..”
“ஏய்ய்.. உன்னை விட நான் வயதில் பெரியவன்.. என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவாயா..?”
“வேறு எப்படிக் கூப்பிடுவது..?”
“அத்தான்.. என்று கூப்பிடு..”
“ஹை.. அதற்கு வேறு ஆளைப் பாருங்கள்..”
“அப்படியா..? நீயே சொல்லிவிட்டாய்.. உன் பேச்சைத் தட்டவும் கூடாது.. ஊம்.. கொஞ்சம் நகரு..”
அவள் குழப்பத்துடன் நகர.. சந்தோஷ் தன் நாடியில் ஆள்காட்டி விரலால் தட்டிக் கொண்டே யோசித்தான்..
“அந்த மஞ்சள் தாவணி ஓகேயா, சொல்லு..”
வாசவி அவசரமாயத் திரும்பி.. கீழே பார்த்தாள்.. திருமண மண்டபத்தின்.. மண மேடையின் திட்டில் சாய்ந்து நின்று கொண்டு மஞ்சள் தாவணி அணிந்திருந்த அவளுடைய பெரியம்மாவின் பெண் கனகா.. பேசிக் கொண்டிருந்தாள்..
கோபம் கொப்புளிக்கும் விழிகளுடன் சந்தோஷைப் பார்வையாலேயே எரித்தாள் வாசவி..
“சந்தோஷ்..”
“என்ன வாசவி.. ஏன் இவ்வளவு கோபம்..? நீதானே வேறு ஆளைப் பார்க்கச் சொன்னாய்..”
“நான் என்ன சொன்னேன்.. நீங்கள் என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கிறீங்க..”
“அப்போ.. நீ சொன்னதற்கு அர்த்தம் இது இல்லையா..? போ வாசவி.. அந்த மஞ்சள் தாவணி உண்மையிலேயே அழகு..”
வாசவிக்கு அழுகையே வந்துவிட்டது.. கண்ணில் நீர்திரள.. அவனை உறுத்துப் பார்த்தாள்..
“ஏய் பைத்தியம்.. விளையாட்டுக்குச் சொன்னால் இதற்குப் போய் அழுகலாமா..?”
“இதுவா விளையாட்டு..? இனி என்னோடு போசாதீங்க..”
வாசவி.. வேகமாய் அங்கிருந்து ஓடி விட்டாள்.. அவளுடைய கண்ணீர் சந்தோஷைப் பாதித்து விட்டது..
‘இவள்.. இவ்வளவு பொஸஸிவ்வா..?’
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.