Chapter 37
சந்தோஷ்.. மேடையேறிய வாசவியைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்து.. கால் மேல் கால் போட்டுக் கொண்டான்..
‘இவளுக்குப் பாடத் தெரியுமா..?’ அவனுக்குள் எதிர்பார்ப்பு அலையடித்தது..
“அத்தான்.. என் அத்தான்..
அவர்.. என்னைத்தான்..
எப்படிச் சொல்வேனடி..”
வாசவி அவனைப் பார்த்து இதழோரம் சுழித்த பிரத்யேகமான ரகசியப் புன்னகை ஒன்றை உதிர்த்தபடி.. பாட ஆரம்பித்தாள்..
“ஏனத்தான்.. என்னைப் பாரத்தான்..
கேளத்தான்.. என்று சொல்லித்தான்..
சென்ற பெண்ணைத்தான்..
இழுத்தான்.. வளைத்தான்.. அணைத்தான்..
எப்படிச் சொல்வேனடி..
அத்தான்.. என் அத்தான்..”
ஒரே ஒரு முறை ‘அத்தான்’ என்று தன்னை அழைக்கச் சொல்லி அவன் கெஞ்சினான்.. இப்போதோ.. அவள் வார்த்தைக்கு வார்த்தை.. ‘அத்தான்..’ என்று அழைத்துப் பாடலையே பாடிவிட்டாள்..
காதல் ஒரு நதி போன்றது.. அதைப் பார்ப்பதும் சுகம்.. அதோடு பழகுவதும் சுகம்.. கால் நனைப்பதும் சுகம்.. கைகளால் அளைவதும் சுகம்.. அதில் மூழ்கித் திளைப்பதும் பரம சுகம்..
காதல் என்ற நதியின் ஒவ்வொரு சொட்டையும் உணர்வு பூர்வமாய் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந் தான் சந்தோஷ்..
திருமண வரவேற்பு முடிந்து.. மணமக்களை.. மணமகனின் இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டு.. சுகந்தியின் பெற்றோரும்.. சந்தோஷின் பெற்றோரும் கிளம்பினார்கள்..
“நாங்கள் கிளம்புகிறோம், சம்பந்தி..”
“ம்ம்.. போய் விட்டு வாங்க..”
மயில்வாகனம்… காளிதாஸிடம் விடைபெற்றுக் கொண்டிருந்த போது.. பரிமளம்.. சுகந்தியின் தலை கோதி ஆதரவாகக் கூறினாள்..
“சுமதி இங்கிருக்கிறாள் சுகந்தி.. பயப்படாதே..”
‘அவள் இங்கிருப்பதற்குத்தான் நான் பயப்பட வேண்டும்..’ என்று மனதிற்குள் அலுப்பாக நினைத்துக் கொண்டு வெளியே தன்மையாய்த் தலையாட்டினாள் சுகந்தி..
வாசலில் இருந்த கொய்யாமரத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தான் சந்தோஷ்.. வாசவியை வரச் சொல்லிச் சைகை செய்து விட்டுத்தான் வந்திருந்தான்..
மெலிதான கொலுசின் ஒலி காதுகளில் ஒலித்தது.. அவசரமாய்த் திரும்பிப் பார்த்தான்… மல்லிகையின் நறுமணத்தைத் தன்னைச் சுற்றிப் பரப்பியபடி.. வாசவி வந்து நின்றாள்..
“ம்ஹா..” மலரின் நறுமணத்தை ஆழ்ந்து முகர்ந்த படி.. ரசித்தான் சந்தோஷ்..
“என்னமாய்.. வாசனையாய் இழுக்கிறாய்டி..”
“ஏன் வரச் சொன்னீங்க..?”
“ம்ம்.. உன் அண்ணனும்.. அண்ணியும் முதலிரவு கொண்டாடப் போகிறாங்க.. நாம் எப்போது அதைக் கொண்டாடுவதுன்னு கேட்கத்தான்..”
வாசவி.. தாழ்ந்திருந்த கொய்யாமரத்தின் கிளையொன்றில் சாய்ந்து நின்று கொண்டாள்.. சந்தோஷ் தாபத்துடன் அவளை அழைத்தான்..
“வாசவி..”
“ம்ம்..”
“என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லையே..”
“என் படிப்பு முடிய வேண்டாமா..?”
“அதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்குதே…”
“ஆமாம்..”
“அதுவரையில் யார் பொறுப்பது..?”
“அதற்காக..? படிப்பைப் பாதியில் நிறத்த முடியுமா..?”
“உன்னை யார் நிறுத்தச் சொன்னாங்க..? கல்யாணம் பண்ணிக் கொண்டு படி.. யார் வேண்டாம்ன்னு சொன்னது..?”
“அடேங்கப்பா.. ரொம்பத்தான் வேகம்..”
“ஏய்ய்.. என் பிரச்சனை எனக்குத்தான் தெரியும்..”
“அப்படி என்னவாம்.. மலை போலப் பிரச்சனை..?”
“உன் அண்ணன் கல்யாணத்தைச் சாக்காய் வைத்து இந்த இரண்டு நாளும்.. இணை பிரியாமல் இருந்து விட்டோம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் காரில் ஏறிப் போய் விடுவேன்.. அடுத்து எப்போது பார்க்க முடியுமோ.. பார்த்தாலும் இந்த அளவுக்கு நெருக்கத்துடன் பேச முடியுமா..?”
சந்தோஷ் பேசிக் கொண்டே போக.. வாசவியிடம் இருந்து எந்த விதப் பதிலும் வரவில்லை..
“வாசவி.. ஏய்ய்.. வாசவி..”
அவனது அழைப்பிற்கு.. விம்மல் ஒலிதான் பதிலாக வந்தது.. சந்தோஷ் ஒரே எட்டில் அவளை அணுகி.. தன்னுடன் இறுக்கிக் கொண்டான்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.