Chapter 42
“வாம்மா.. வா..” திலகம் வரவேற்க.. காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் வந்தாள் சரஸ்வதி..
“அப்பா வீட்டிற்கு வந்தேன்… சுகந்தியின் கல்யாணத்திற்கு என்னால் வர முடியவில்லை.. ஏழெட்டு மாதங்கள் ஓடிப் போய்விட்டன.. பார்த்து விட்டுப் போக வந்தேன்..”
“அதற்கென்ன.. இது உன் தங்கையின் வீடு…”
வழக்கமான நலம் விசாரித்தலுக்குப் பின்.. சரஸ்வதியை அழைத்துக் கொண்டு மாடியேறினாள் சுகந்தி.
“நீ முதலிலேயே என்னிடம் பேசியிருக்க வேண்டும் அக்கா..”
“சுமதியின் மனதில் இந்த அளவுக்கு விசம் இருப்பது எனக்குத் தெரியாமல் போய் விட்டது சுகந்தி..”
“வாசவி.. சிரிப்பெல்லாம் போய் ஒடுங்கி விட்டாள்.. இதுதான் காரணம்ன்னு எனக்குத் தெரியாமல் போய் விட்டதே..”
“மனதிற்குள் காதலைப் புதைத்துக் கொண்டு வெளியில் சொல்லாமல் மறுகிக் கொண்டு இருக்கிறாள்..”
வாசவியின் அறைக்குள் சென்ற சுகந்தி..
“வாசவி.. இது என்னுடைய அக்கா சரஸ்வதி..” என்று அறிமுகப்படுத்திவிட்டு வெளியே போய்விட்டாள்..
அறைக் கதவை மூடி சரஸ்வதி தாழிடுவதைக் குழப்பத்துடன் பார்த்தாள் வாசவி..
“நான் சந்தோஷின் அக்கா..” என்று அவள் கூறியதும் வாசவிக்கு விளங்கி விட்டது..
“இதோ பார் வாசவி.. மனிதர்களில் சஞ்சலமில்லாத மனது உடைய மனிதர் யார் இருக்கிறார்கள்.. நீயே சொல்லு.. ஆஷாவை சந்தோஷ் நினைத்தது தவறு
தான்.. சரி.. இப்போது உன் கல்யாணப் பேச்சை உன் வீட்டில் ஆரம்பித்து விட்டார்கள்.. சந்தோஷை மறந்து.. இன்னொருவனை உன்னால் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியுமா..?”
வாசவியின் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டது..
“சந்தோஷினால் முடியாது என்று சொல்லி விட்டான்.. இதிலிருந்து உனக்கு அவன் மனது புரியவில்லையா வாசவி..? ஆஷாவை உண்மையிலேயே அவன் காதலித் திருந்தால்.. அவளை மறந்து உன்னை அவன் நினைத் திருப்பானா..? அப்படி உண்மையாய் உன்னை அவன் காதலிப்பதால்தான் உன்னை மறந்து இன்னொருத்தியை நினைக்க அவனால் முடியவில்லை.. ஆஷாவின் தவறை அவன் மன்னிக்கவில்லை.. உன்னிடம் அவன் தவறு கண்ட போதும்.. உன்னைத் தேடி வந்தான்.. உன்னிடம் விளக்கமும் கேட்டான்.. அவன் மனதில் நீ இருக்கிறாய் வாசவி.. நீ மட்டும்தான் இருக்கிறாய்..”
அதுவரை தன் மனதில் தானே சிறைப்பட்டிருந்த வாசவி.. மனச் சிறையிலிருந்து வெளியே வந்து குலுங்கி அழுதாள்..
“அழாதே வாசவி… கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கவா..”
“ம்ம்ம்…”
சுமதி என்னதான் பாடுபட்டு.. பொய் சொல்லி சந்தோஷைத் தூண்டி விட்டுப் பார்த்தும்.. சந்தோஷ்.. வாசவியின் திருமணம் நடந்தே விட்டது..
அவள் வயிற்றெரிச்சலுடன் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் பொய்க் காரணம் கூறி வீட்டில் இருந்து கொண்டாள்..
கணவன் என்ற உரிமையுடன தனிமையில் அவளைச் சந்திக்கும் வரை.. அவளிடம் பேசவோ.. நெருங்கவோ.. முயற்சி செய்யாத சந்தோஷ்.. கழுத்தில் புது மஞ்சள் கயிறு மின்ன நின்று கொண்டிருந்தவளை.. உரிமையுடன் நெருங்கித் தொட்டான்..
“என்னைத் தொட வேண்டாம்..”
“அதை.. இனிமேல் நீ சொல்ல முடியாது..”
“ஏனாம்..”
“ஏன்னா.. இனி உன் உடலும்.. மனமும் உனக்குச் சொந்தமில்லை.. எனக்குச் சொந்தமானது..”
அவன் கரத்தினில் விருப்பத்துடன் அடங்கிய வாசவியின் மனம் அமைதி கொண்டது.. அவள் நேசித்தாள்.. அந்த நேசத்தை மட்டும் நெஞ்சினில் சுமந்தாள்.. உண்மையான நேசம்.. என்றுமே ஜெயிக்கும்.. அவளது நேசமும் கடைசியில் ஜெயித்து விட்டது.
– முற்றும் –
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.