Chapter 04

0Shares

“காலிங் பெல் அடிக்குது.. காலிங்பெல் அடிக்குது..”

துள்ளிக் குதிக்காத குறையாகச் சொன்னான் சந்தான கிருஷ்ணன்.. தற்காலிகப் போர் நிறுத்தம் செய்த மாளவிகா..

“வீட்டுக்கு வாங்க.. உங்களைப் பேசிக்கறேன்..” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியபடி வாசலில் யாரென்று பார்க்கப் போனாள்..

“ஹாய்..!”

உற்சாகக் கூவலுடன் கைவிரல்களை விரித்துக் காட்டி அசைத்த வர்ஷாவைக் கண்டதும் மாளவிகாவின் கோபம் பறந்து விட்டது. வர்ஷாவின் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள..

“ஹாய்.. வர்ஷா..” என்று பதிலுக்குக் கூவினாள்..

“சன்டேயில நீங்க வந்திருப்பீங்கன்னு தெரிஞ்சு கரெக்டா ஆஜராகிட்டேன் பார்த்தீங்களா.. எப்படி..?”

மாளவிகாவுடன் பேசியபடி வீட்டுக்குள் வந்த வர்ஷாவின் பார்வை முரளிதரனைத் தேடியது.. அதை இனம் கண்டு கொண்ட மாளவிகா..

“ஆமாமாம்.. நீ என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிற.. நான் நம்பிட்டேன்..” என்று கேலியாக சிரித்தாள்..

“உண்மைங்க.. நீங்க நம்பித்தான் ஆகனும்..”

மாளவிகாவிடம் பேசியபடி விஸ்வநாதனுக்கு கை குவித்து வணக்கம் சொன்னாள் வர்ஷா.. அவர் பிரியமாக தலையை அசைத்தார்..

“எப்படி இருக்கீங்க ஆண்ட்டி.. போன வாரத்துக்கு இந்த வாரம் இளைச்சுத் தெரியறிங்களே.. நேரா நேரத்துக்கு சாப்பிட மாட்டிங்களா..?” உரிமையுடன் அபிராமியிடம் கரிசனம் காட்டினாள்..

“அப்படியெல்லாம் இல்லைம்மா.. மனக் கவலைதான் உடம்பை உருக்குது.. நீ உட்கார்..” அவளுக்கு டிபன், காபி எடுத்து வர எழுந்தாள் அபிராமி..

“எனக்கு ஒன்னும் வேணாம்.. நீங்க உட்காருங்க சொல்றேன்..”

அவள் கைபிடித்துத் தடுத்து உரிமையுடன் பக்கத்தில் உட்கார்ந்து வாயடிக்க ஆரம்பித்தாள் வர்ஷா..

சந்தானகிருஷ்ணனுக்கு பொறாமையாக இருந்தது… அப்பட்டமான பொறாமை அவன் விழிகளில் தெரிந்ததில் மாளவிகா அவனை உறுத்துப் பார்த்தாள்.. அவளது பார்வையின் கூர்மையில் தன் பொறாமையை மறைத்துக் கொண்ட சந்தானகிருஷ்ணன்..

“பாவம்..” என்று வர்ஷாவுக்காக பரிதாபப்பட்டான்..

இவளுக்கு என்ன வேற ஆண்பிள்ளையே கிடைக்க வில்லையா..? துரத்தித் துரத்திக் காதலிக்க இந்த முத்தின கத்தரிக்காய்தான் கிடைத்தாளா..? சிடுமூஞ்சி முரளிதரனுக்காக இந்த அழகான பெண் இத்தனை தூரத்துக்கு மெனக்கெட வேண்டுமா என்பதைப் போன்ற ஆயிரம் அர்த்தங்கள் அந்த ஒற்றைச் சொல்லில் ஒளிந்திருந்தன..

“எதுக்கு இவளைப் பார்த்துப் பாவம் போடறிங்க..?” சந்தேகத்துடன் முணுமுணுத்தாள் மாளவிகா..

அவளுக்கா கணவனின் புத்தியைத் தெரியாது..?

‘இவர் காரணமில்லாம இவளைப் பாவம்ன்னு சொல்ல மாட்டாரே..’

அந்தக் காரணமும் வில்லங்கம் நிறைந்த காரணமாக இருக்கடும் என்பதைத் தெளிவாக கணித்து வைத்திருந்தாள் அவள்..

“பாவம்தாண்டி.. உன் அண்ணன் மேல எம்புட்டுக் காதலிருந்தா வீடு வரைக்கும் வந்த உறவு கொண்டாடும்.. இப்பேற்பட்டக் காதலை வைத்திருக்கிற பெண்ணை உன் அண்ணன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்ங்கிறாரேன்னு பரிதாபமா இருக்கு மாளவிகா..” புளுகினான் சந்தான கிருஷ்ணன்..

“அண்ணன் ஏறெடுத்துப் பார்க்கலைன்னா என்ன..? நீங்க ஏறெடுத்துப் பாருங்களேன்..” ஒரு தினுசான குரலில் சொன்னாள் மாளவிகா..

அவள் விரிக்கும் கண்ணியில் சந்தான கிருஷ்ணனா மாட்டிக் கொள்வான்..? ஒரு வருடம், இரண்டு வருடமா..? ஆறு வருடங்கள்..! அவளோடு வாழ்ந்து குப்பை கொட்டியிருக்கிறான்.. அவளது பார்வைக்கே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்போது வார்த்தைகளில் எத்தனை அர்த்தங்கள் ஒளிர்ந்திருக்காது..?

ஏறெடுத்துப் பார்க்கச் சொல்லி அவளே சொல்லி விட்டாளென்று ஆஹா என்று மகிழ்ந்து போய் வர்ஷாவின் பக்கமாக அவன் சிறுபார்வை பார்த்தாலும் என்ன கதியாவான் என்று அவனுக்குத் தெரியாதா என்ன..?

“சேச்சே.. என்னடி பேசற..? உன் அண்ணனை கணக்குப் பண்ண நினைக்கிற பொண்ணு எனக்குத் தங்கை மாதிரிடி..” மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிடித்தமில்லாமல் வர்ஷாவிடம் தங்கை உறவு கொண்டாடினான் அவன்..

“தங்கை மாதிரியில்லை.. தங்கையேதான்..” அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தி விட்டு வர்ஷாவின் பக்கமாகத் திரும்பி வாய் வளர்க்க ஆரம்பித்தாள் மாளவிகா..

வர்ஷா தடுக்கத் தடுக்கக் கேட்காமல் அவளுக்கு உளுந்த வடையையும் காபியையும் கொண்டு வந்து கொடுத்தாள் அபிராமி..

“செம டேஸ்ட் ஆண்ட்டி..” சப்புக் கொட்டியபடி சாப்பிட்டு விட்டுப் பாராட்டினாள் வர்ஷா..

விஸ்வநாதன் பாடத்தைப் பற்றிக் கேட்டார்.. அவருக்கு மரியாதையாக பதில் சொன்னாள்.. அபிராமி வர்ஷாவின் வீட்டைப் பற்றி விசாரித்தாள்.. பவ்யமாக பதில் சொன்னாள்.. மாளவிகா சினிமா.. விளையாட்டு என்று பேசினாள்.. கலகலப்பாக வர்ஷாவும் பேசித்தள்ளினாள்.. மனைவியின் முறைப்புக்குப் பயந்து சந்தான கிருஷ்ணன் எதையும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு திருட்டு விழி விழித்தபடி உட்கார்ந்திருந்தான்.. அவனை அவள் திரும்பியும் பார்க்கவில்லை.. நவினைத் தூக்கி மடியில் வைத்தபடி அவனிடம் கம்யூட்டர் கேம்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்..

நேரம் நகர்ந்தது.. சந்தானகிருஷ்ணன் நாசுக்காக கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வர்ஷாவைப் பார்த்து வைத்தான்.. அவள் கண்டு கொள்ளவே இல்லை.. குறிப்பறியாத மண்டூகம் அவளென நம்ப சந்தானகிருஷ்ணன் தயாராக இல்லை..

அவனுக்குத் தெரியும்.. முரளிதரனைப் பார்க்காமல் வர்ஷா அந்த இடத்தை விட்டு நகர மாட்டாள்..

கார் சப்தம் கேட்டதும் வர்ஷா பரபரப்பானாள்.. அவளை ஜாடையாய் பார்த்தபடி..

“அண்ணன் வந்துருச்சு..” என்று எழுந்து போனாள் மாளவிகா..

அவள் கேட்டைத் திறந்து விட்டதும் முரளிதரனின் கார் உள்ளே வந்தது.. மாளவிகா கேட்டை மூடி விட்டு போர்டிகோவுக்கு வந்து நின்றாள்.. காரிலிருந்து இறங்கிய முரளிதரன்..

“எப்போ வந்த மாளு..?” என்றான்..

“காலையிலேயே பிரேக் பாஸ்ட்டுக்கு வந்துட்டோம்.. நீ அதுக்கு முன்னாலேயே எஸ்கேப் ஆகிட்ட.. லன்ச்சுக்கும் வரலை.. ஏன் அண்ணா இப்படிப் பண்ற..?”

“என்ன பண்றேன்..?”

சடைத்துக் கொண்ட மாளவிகாவிடம் சின்னதாய் சிரிப்பைச் சிந்தியபடி வாசல் படியில் ஏறிய முரளிதரன் வர்ஷாவின் காரைப் பார்த்து விட்டான்.

“யார் வந்திருக்கிறது..?” அவன் முகம் கடுமையானது..

“வர்ஷாவோட கார்ன்னு உனக்குத் தெரியாதா..?” அழுத்தமாகக் கேட்டாள் மாளவிகா..

“திஸ் இஸ் நாட் பெய்ர் மாளு.. ஸ்டூடண்ட்ன்னா அது காலேஜோட நிற்கனும்.. பாடத்தில சந்தேகம் கேட்கிறேன் பேர்வழின்னு அவ என் வீட்டுக்குள்ள நுழையக் கூடாது.. அம்மாகிட்ட எவ்வளவுதான் சண்டை போட்டாலும் காதில வாங்கிக்க மாட்டேங்கிறாங்க.. அவளை என்கரேஜ் பண்றாங்க..”

“அது ஏன்னு உனக்குத் தெரியாதா..?”

ஆழ்ந்த குரலில் கேட்ட மாளவிகாவை இமைக்காமல் பார்த்தான் முரளிதரன்.. அவனது கண்கள் சிவந்து விட்டன.. மாளவிகா கண் கலங்கினாள்..

“உன்னை நேசிக்கிற பெண்ணை என்கரேஜ் பண்ணாம எப்படின்னா எங்களால இருக்க முடியும்..?” கம்மிய குரலில் கேட்டாள்..

“நேசிக்கிற பெண்..!”

வெறி பிடித்தவனைப் போல உரக்கச் சொல்லிய முரளிதரன் புயலைப் போல வீட்டுக்குள் புகுந்து ஹாலில் இருந்த வர்ஷாவைத் திரும்பியும் பார்க்காமல் மாடியேறி விட்டான்..

‘இவளாலே என்னையும் வான்னு கேட்காம போறானே..’ மைத்துனன் தன்னை ‘வா’ என்று கேட்கவில்லை என்பதில் நொந்து போனான் சந்தானகிருஷ்ணன்..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link