Chapter 05
மெல்லிளம் தூறலாக பெய்து கொண்டிருந்த மழை வலுக்கத் தொடங்கியது.. குடை பிடிக்காமல் சாரலில் சிலிர்த்தபடி நடந்து கொண்டிருந்த முரளிதரனை மழை தொப்பலாக நனைக்கத் துவங்கியது.. தலைமுடியை நனைத்து முகத்தில் வழிந்த நீர் கண்பார்வைக்க திரையிட்டதால், முகத்தில் வழிந்த நீரைத் துடைத்து எறிந்தபடி நடையை விரைவாக்காமல் நிதானமாகவே நடந்தான் அவன்.. கொட்டும் மழைநீரின் குளுமை அவன் மனதில் நுழையவில்லை.. மழைநீரைத் துளைக்கும் அவன் பார்வை கார்மேகங்களையும் தாண்டி தொலைதூரத்தில் ஒளிர்ந்திருந்த தொடுவனைத் தேடுவதைப் போல வெறித்தபடி இருந்தது.
சாலையின் நடுவே வெள்ளம்போல மழைநீர் ஓடிக் கொண்டிருந்தது.. இருபக்க பிளாட்பாரங்களும் மழை நீருக்கான கரை போலத் தென்பட்டன.. முரளிதரனைப் போல அங்கொருவர்.. இங்கொருவர் தென்பட்டாலும் அவர்கள் குடையின் பாதுகாப்பில் மழையில் நனையாமல் விரைந்து கொண்டிருந்தனர்.. மற்றவர்கள் ஆங்காங்கே கிடைத்த இடங்களில் மழைக்கு ஒதுங்கியிருந்தார்கள்.. முரளிதரனை ஒட்டினாற் போல வந்த கார் ஒன்று மழைநீரை வாரியிறைத்தபடி.. ‘சர்ரக்’ கென பிரேக் அடித்து நின்றது..
“சார்..”
கார் கதவைத் திறந்து விட்டான் வினோத்..
“ஏறிக்கங்க சார்.. உங்க வீட்டிலே டிராப் பண்றேன்..”
கையிலிருக்கும் குடையை விரித்துப் பிடிக்காமல் மழையில் நனைந்து கொண்டிருந்தவனை வினோதமாகப் பார்த்தான் ரமேஷ்.. முரளிதரனின் நனைந்த தோற்றமும், சிவந்த விழிகளும் அவனுக்குள் திகிலை உற்பத்தி செய்தன..
“இவன் சும்மாவே முரடன்.. மழையில வேற தொப்பல் தொப்பலா நனைஞ்சிருக்கான்.. வில்லங்கத்தை ஏண்டா வீட்டில டிராப் பண்றேன்னு காருக்குள்ள ஏத்திக்கப் பார்க்கிற..?”
சன்னக்குரலில் முணுமுணுத்தான்..
“ஷட் அப்..” பதிலுக்கு முணுமுணுத்தான் வினோத்..
“லுக்.. கார் உன்னோடதா இருக்கலாம்.. பட்.. காருக்குள்ள நானும் இருக்கேன்.. சன்டேஸை என்ஜாய் பண்ணலாம்ன்னு ஆசைகாட்டி காருக்குள்ள தூக்கிப் போட்டுட்டு வந்து மோசம் பண்ணப் பார்க்கிறயேடா.. இது நியாயமா..?”
“அடச்சீ.. அடங்கு..”
“இந்த மனுசன் மட்டும் காரில ஏறினான்னு வைய்யி.. நீ அதட்டவே வேணாம்.. ஆட்டோமேடிக்கா நானே அடங்கிருவேன்.”
முரளிதரன் சும்மா பார்த்தாலே ரமேஷ் மிரண்டு விடுவான்.. இப்படிக் கையிலே இருக்கிற குடையை விரித்துப் பிடிக்கும் எண்ணமில்லாமல்.. சிவந்த விழிகளும், ரௌத்ர தோற்றமுமாக இருந்தால் எப்படி அமைதியாக இருப்பான்..
“வேண்டாம்டா வினோத்.. இந்த மனுசன் பார்வையைப் பார்த்தாலே அடிவயிறு கலங்குது.. ஓடிப்போயிரலாம்டா..”
ஜீரம் வந்தவன் பினாத்துவதைப்போல அவன் பினாத்திக் கொண்டிருக்க.. அவன் பினாத்துவதைத் துளிக்கூட லட்சியம் செய்யாமல் வினோத் முரளிதரனை வற்புறுத்திக் காரில் ஏற்றிக் கொள்ளும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்..
“ப்ளீஸ் சார்.. மழை கொட்டுது..”
“அது இந்த ஆளுக்குத் தெரியலைன்னா நினைக்கிற..? நீயும், நானும்தான் காருக்குள்ள ஷேஃபா உக்காந்துக்கிட்டு இருக்கோம்.. இந்த மனுசன் மழையில ஊறிப் போய் நின்னுக்கிட்டு இருக்கான்..”
“டேய்ய்.. அவன், இவன்னு பேசாதே.. இவர் நம்ம லெக்சரர்..”
“அது மட்டுமில்லடா.. உன் லவ்வருக்கு லவ்வர்..”
ரமேஷ் எடுத்துக் கொடுக்க, கடுப்பான வினோத் இப்போது ரௌத்ரமாகி ரமேஷை முறைத்தான்.
“பாத்தியா.. இந்த ஆள் அங்கே நிக்கும் போதே அவன் கடுப்பு உனக்கும் தொத்திக்குச்சு.. காரைக் கிளப்பு வினோத்.. இந்த ஆளோட காத்தடிக்காத தூரத்துக்கு ஓடிப் போயிருவோம்..”
“நீ ஓடிப் போறதிலேயே குறியாய் இரு.. ஓடறதா இருந்தா சொப்னாவை இழுத்துக்கிட்டு ஓடு.. என்னை இம்சைபண்ணாதே..”
“நானாடா மாட்டேங்கிறேன்..? அவதான் என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டாளே..”
“எவன் கூட..?”
“அதிலெல்லாம் அவ நல்லவடா.. தனியாத்தான் ஓடியிருக்கா.. லவ் பிரேக் ஆகியிருச்சுன்னு இதுக்குன்னே காத்திருந்த கபோதிப் பயலுக புரோபஸ் பண்ணியிருக்கானுக.. இவ திரும்பியும் பார்க்கலையே.. ‘நோ’ன்னு சொல்லிட்டாளே..”
ரமேஷின் முணுமுணுப்பில் பெருமை பொங்கி வழிந்தது.. வழியும் மழைநீரை சட்டைசெய்யாமல் முறைத்துக் கொண்டிருந்த முரளிதரனிடம் கெஞ்சுதலாகப் பேசியபடி நண்பனிடமும் முணுமுணுத்தான் வினோத்..
“அவ ‘நோ’ சொன்னான்னு உனக்கெப்படி தெரியும்..?”
“டவுட்டு..? என்னை யாருன்னு நினைச்ச..? ஸ்பை வைச்சு அவளைக் கண்காணிக்கிறேனில்ல..”
“அடப்பாவி..! அப்புராணியாய் வேசம் போட்டுக்கிட்டு ஸ்பை வைக்கிற அளவுக்கு கலக்கிறயா..?”
“பின்னே.. என் மூச்சிக்கு ஒருத்தி மாட்டுறதே பெரிய கஷ்டம்..”
“யாருக்கு..?”
“அவளுக்குத்தான்.. எனக்குன்னா சொல்வேன்..? எனக்கு ரொம்ப ரொம் இஷ்டம்டா மச்சான்..”
“அதானே பார்த்தேன்..”
வினோத் காரை விட்டு இறங்கப் போனான்.. வேண்டாம் என்று கையசைத்து தடுத்தான் முரளிதரன்..
“இப்பக்கூட வாயைத் திறக்கிறானான்னு பாரு..” எரிச்சல் பட்டான் ரமேஷ்..
அதைக் கண்டு கொள்ளாமல் முரளிதரனிடம் மன்றாடினான் வினோத்..
“நனைஞ்சிட்டிங்க சார்.. காரில ஏறுங்க..”
“டோன்ட் டிஸ்டர்ப் மி வினோத்.. நனையறதும், நனையாததும் என் இஷ்டம்.. எனக்குப் பிடிச்சிருக்கு.. மழையில நனையறேன்.. உன் வழியில நீ போ.. எனக்கு ஹெல்ப் பண்றேன்னு தேவையில்லாம இண்டர்பியர் ஆகாதே.. ஐ டோன்ட் லைக் இட்..”
வினோத்தை சட்டை செய்யாமல் முரளிதரன் நடந்து விட்டான்.. அடித்து ஊற்றும் மழையை சட்டை செய்யாமல் நடந்து போகிறவனை யோசனையுடன் பார்த்தபடி காரில் அசையாமல் உட்கார்ந்திருந்தான் வினோத்.. அவனது நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்திருந்தன..
“அரிஸ்ட்டாட்டில் கூட இம்புட்டு ஆழமா திங்க் பண்ணியிருக்க மாட்டாருடா.. நீ அவரையும் மிஞ்சிட்ட..”
கிண்டலாகச் சொன்னான் ரமேஷ்.. சிந்தனை மாறாமல் நண்பனைப் பார்த்த வினோத்..
“இவர் ஏண்டா இப்படி இருக்காரு..?” என்று கேட்டான்..
“எப்படி இருக்கான்..?”
“கையில குடையிருந்தும் அதை விரிச்சுப் பிடிக்காம மழையில நனைஞ்சுக்கிட்டு இருக்காரு..”
“அவனே பெக்குலியர் கேஸ்.. திராட்டில விட்டுட்டுப் போவியா.. அதை விட்டுட்டு காரை நிறுத்தி ஏறுங்க சார்ன்னு கெஞ்சிக்கிட்டு இருக்க.. ஆஹான்னு மகிழ்ந்து போய் அந்த மனுசன் காரில ஏறினானா..? போடா.. நீயுமாச்சு.. உன் காருமாச்சுன்னு மழையில நனைஞ்சுக்கிட்டே நடையைக் கட்டிட்டான்..”
“ம்ப்ச்.. அவன், இவன்னு பேசாதே..”
“ஆனாலும் நீ இம்புட்டு நல்ல்ல்ல்.. லவனா இருந்து தொலைக்கக் கூடாது.. நீ துரத்தித் துரத்திக் காதலிக்கிற வர்ஷா இவனைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறா.. இவன் வீடு வரைக்கும் கார்னர் பண்றா.. நீ என்னடான்னா இவன்மேல் ரெஸ்பெக்டைக் கொட்டற..”
“ஏய்ய்.. அவதான் இவரைத் துரத்தறா.. இவர் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கறதில்ல..”
“ஐ திங்க் வினோத்.. அதனாலதான் உனக்கு இந்த மனுசன் மேலே சாப்ட் ஹார்னர் உண்டாகுதோ..? ஐ மீன்.. நன்றியுணர்ச்சி..!”
“அடிச்சேன்னா பாரு.. வாய் வெத்தலை பாக்கு போட்டிரும்..”
“அதை ஏதாச்சும் நான்வெஜ் ஹோட்டலுக்குக் கூப்பிட்டுட்டுப் போயி.. வெரைட்டி, வெரைட்டியா வாங்கிக் கொடுத்து திங்க வைச்சுட்டுக் கொடுக்கலாமில்ல..? நான் வெஜ் சாப்பிட்டவுடன் வெத்தலை பாக்கு போட்டுக்கிறது பரம சுகம்..”
“நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன்..? நீ என்ன பேசற..?”
“இந்த மழைக்கு காரசாரமா நான்வெஜ் சாப்பிட்டா பெட்டரா இருக்கும்ன்னு நீதானேடா சொன்ன..? இப்ப வார்த்தை தவறுகிற பார்த்தியா..?”
அழமாட்டாத குறையாய் நண்பன் பேசிய விதத்தில் வினோத்துக்கு சிரிப்பு வந்து விட்டது.
“சொப்னாகிட்டக் கூட இப்படி நியாயம் கேட்டிருக்க மாட்டேடா..” சிரித்தபடி காரைக் கிளப்பினான்.
“அப்பாடி.. ஒருவழியாக் காரைக் கிளப்பிட்ட..” நெஞ்சைப் பிடித்தபடி ஆசுவாசமானான் ரமேஷ்..
“தெரியாமத்தான் கேட்கிறேன்..”
“தெரிஞ்சே கேளு.. தப்பில்லை..”
“இந்த வாய்க்கொன்னும் குறைச்சலில்லை..”
“வேற எதிலடா குறைச்சலா இருக்கேன்..?”
“அதை சொப்னாகிட்டத்தான் கேட்கனும்..”
குறும்பாகச் சொன்ன நண்பனை முறைத்தான் ரமேஷ்.. அதில் ஆனந்தமாகி..
“ஹா.. ஹா..” என்று உரக்கச் சிரித்தான் வினோத்..
“சிரிடா.. சிரி.. எனக்குன்னு இப்படி ஆகுதில்ல.. உனக்குச் சிரிப்பாத்தான் இருக்கும்..” மூக்கைச் சிந்தாத குறையாக புலம்பினான் ரமேஷ்..
“இது சுய பச்சாதாபம்..” காரை ஓட்டியபடி தோளைக் குலுக்கினான் வினோத்..
“உன்கென்னடா மச்சான்.. உன் ஆள் அந்த முரளிதரனைத் துரத்தினாலும் அவன் உன் ஆளைத் திரும்பியும் பார்க்கலைங்கிறதில ஷேஃபா இருக்க.. எனக்கு அப்படியா..? எப்படா நாங்க பிரிவோம்ன்னு கண்ணில விளக்கெண்ணையை விட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்த சோமாறிப் பசங்க தினமும் அவகிட்ட ரெட்ரோஸை நீட்டி மண்டி போடறானுகளேடா..”
“அவதான் ‘நோ’ சொல்லிட்டாள்ல..”
“இப்ப ‘நோ’ சொல்றா.. எப்ப ‘யெஸ்’ சொல்லிரு வாளோன்னு மனசு கிடந்து பதக், பதக்குன்னு அடிச்சுக்குதுடா மச்சி..”
ரமேஷ் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டான்..
“நீ வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கனும்..”
“சும்மா இல்லாம அவளுக்கு ‘கிஸ்’ஸா கொடுத்தேன்..?”
“கொடுத்ததே இல்லையா..?” ஆச்சரியமாகக் கேட்டான் வினோத்..
“எங்கேடா.. அதுக்குள்ளதான் அவ கவிதை எழுதின பேப்பரைக் குறுக்காலே நீட்டி ‘தடா’ போட்டிருவாளே..” பெருமூச்சு விட்டான் ரமேஷ்..
“பாவம்டா நீ..” போலியாக பரிதாபப் பட்டான் வினோத்..
“ஏண்டா சொல்ல மாட்டா.. மத்தவனுக்கு ஒன்னுன்னா ஈஸியா சொல்லிருவடா.. உனக்கா பிரச்னை வந்து சேருது..? தேடிப் பிடிச்சு எனக்குன்னுள்ல வந்து சேருது..?”
“நீயா இழுத்து விட்டுக்கற..”
“ஆமாண்டா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால மழையில நனைஞ்சுக்கிட்டு வழியோட போன பிரச்னையை ‘வா,வா’ன்னு நீ காருக்குள்ள ஏறிக்கச் சொல்லி நீ கூப்பிட்டதைப் போல, நான் வாசலில நின்னு கையாட்டி பிரச்னைக்கு வெற்றிலை பாக்கு வைச்சு விருந்தோம்பல் பண்ண அழைச்சேன்.. நீ சொல்ல வந்துட்ட.. போடா போ.. நீ வலியக்க கூப்பிட்டாலும் பிரச்னை வருவேனான்னு அடம் பிடிச்சுக்கிட்டு விலகி ஓடுது.. நான் விலகி ஓடினாலும் பிரச்னை என் வீடு தேடிவந்து கதவைத் தட்டுது.. ம்ஹீம்.. உன்ராசி இப்படி.. என்ராசி அப்படி..” மறுபடியும் பெருமூச்சை விட்டான் ரமேஷ்.
“பெருமூச்சு விட்டே ஒரு வழியாகிற..”
நண்பனிடம் பேசியபடி காரை ஓடித்துத் திருப்பிய வினோத் சாலையோரமாக நடந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான்.. அவன் கவனத்தை ஈர்த்தது அவள் கையிலிருந்த விரிக்கப்படாத குடைதான்.. குடையை விரித்து மழைக்கு மறைவாகப் பிடிக்காமல் கொட்டும் மழையில் நனைந்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்..
“இங்கே பாரு.. இன்னொரு பெக்குலியர் கேரக்டர்.. அந்த முரளிதரனைப் போல இந்தப் பொண்ணும் குடையை வைச்சுக்கிட்டு மழையில நனையுதுடா வினோத்..”
வினோத்தின் மனதிலிருந்ததை வாய் விட்டுச் சொன்னான் ரமேஷ்.. ஏனோ தெரியவில்லை.. வினோத்துக்கு அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் போல இருந்தது.. மழையில் நனைந்தபடி தன் போக்கில் சென்று கொண்டிருந்தவளின் அருகே காரை நிறுத்தினான் அவன்..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.