Chapter 06
“மேம்…”
அருகில் நின்ற காரைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்திலிருந்த அமைதி விரவிய அழகைப் பார்த்தவனுக்கு அப்படித்தான் கூப்பிடத் தோன்றியது.. ஒரு துறவியின் பற்றற்ற தன்மையுடன் கூடிய பார்வையைப் பார்த்தபடி அவள் நின்றிருந்தாள்.. அவளது விழிகளின் தீட்சண்யத்தில் வினோத்தின் மனதில் மரியாதை தோன்றியது.. அவள் முகத்தில் தெரிந்த தேஜஸ் வணக்கத்திற்குரியதாக இருந்தது.. எல்லோரையும் எகத்தாளம் பேசும் ரமேஷ் கூட வாயடைத்துப் போனவனாக ஆகி விட்டான்.
“யெஸ்..”
மிருதுவான குரலில் பதில் கொடுத்தாள் அவள்.. யாழின் ஸ்வரம் பிசகாத இசைபோல வழுக்கி வந்தது வார்த்தை..
“ஸ்வீட் வாய்ஸ்..” ரமேஷ் முணுமுணுத்தான்..
வினோத் ஆட்சேபமாக அவனை முறைத்தான்.. தப்புத்தப்பு என்ற பாவனையில் ரமேஷ் கன்னத்தில் போட்ட பின்புதான் பார்வையை விலக்கி அந்தப் பெண்ணைப் பார்த்தான்..
“மழை கொட்டுது.. குடைதான் கையில இருக்கே.. விரிச்சுப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமே..”
மனது கேட்காமல் சொல்லி விட்ட வினோத்தை ஆச்சரியம் கலந்த காருண்யத்துடன் பார்த்தாள் அவள்.. அவளது உடலோடு ஒட்டியிருந்த பட்டுப்புடவை மழைநீரால் அவளது அழகு வெளிப்பட்டு விடாதவாறு காத்து நின்றது.. அவள் மென்மையாக முறுவலித்தாள்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட்னெஸ்..”
அவளது நன்றியில் ரமேஷ் வாய் திறந்து முணுமுணுத்தான்..
“பரவாயில்லையே.. என் இஷ்டம்.. நான் நனையறேன்.. உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போன்னு அந்த முரளிதரன் முகத்தில அடிச்சதைப் போலச் சொன்னமாதிரி இவங்க சொல்லாம தேங்க்ஸ் சொல்றாங்களே..”
வினோத்தின் மனதிலும் அந்த எண்ணம்தான் வந்தது.. ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண் அவனை ஈர்த்தாள். முரளிதரனுக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையெனினும், ஏனோ அவன் மனம் ரமேஷைப் போலவே முரளிதரனுடன் அவளை ஒப்புமைப் படுத்திப் பார்த்தது..
“தேங்க்ஸ் சொல்கிறதுக்குப் பதிலா குடையை விரிச்சுப் பிடிச்சுக்கிட்டு நடந்தீங்கன்னா நான் சந்தோசப்படுவேன்..”
“ஒருவேளை ‘குடைக்குள்ள மழை’ கண்டிசனில குடை இருக்குதோ என்னவோடா..”
நண்பனின் பேச்சை இடை மறித்துப் பேசிய ரமேஷின் பேச்சில் அவளது புன்னகை விரிந்தது.. முன்பின் பார்த்தறியாத இளைஞர்களிடம் அவள் காட்டிய நட்பில் வியந்து போனான் ரமேஷ்..
“ஏங்க.. என்கிட்ட எந்தப் பெண்ணும் இவ்வளவு பிரண்ட்லியாச் சிரிச்சதில்லைங்க..”
அவனது வெளிப்படையான பேச்சில் அவள் பல்வரிசை தெரியச் சிரித்தாள்.. மழையில் நனைந்தபடி சிரித்த அவளது முகம் பனியில் குளித்த மலரைப் போல இருந்தது.. சுடர் விட்ட அவளது அழகு அகல்விளக்கின் அமைதியோடு அலாதியானதாக இருந்தது.. ஆளை அயர வைக்கும் அழகைப் போல இல்லாமல் அமைதிப் படுத்தும் அழகாக அவளது அழகு இருப்பதை உணர்ந்தான் வினோத்.
“ஊஹீம்..? அப்பேற்பட்ட ஆளா நீங்க..? பெண்களைப் பயமுறுத்தி வைச்சிருக்கீங்களா..?”
குறும்புக்காரக் குழந்தையிடம் வினவும் தாய்மையுடன் வினவினாள் அவள்.. ரமேஷின் மனம் நெகிழ்ந்தது.. இது போலக்கூட ஓர் இளம்பெண்ணினால் பேச முடியுமா..?
“நானாங்க பயமுறுத்தறேன்..? அதுகளா பயந்து ஓடுதுக.. என் முகராசி அப்படிங்க..” அங்கலாய்த்தான்..
“நீங்களா அப்படி நினைச்சுக்கறிங்க.. பெண்கள்கிட்டப் பிரண்ட்லியாப் பேசித்தான் பாருங்களேன்.. அதுக்கப்புறமும் அவங்க பயந்து ஓடினா உங்க முகராசியைப் பத்தி யோசிக்கலாம்..” அவள் வழி சொல்லிக் கொடுத்தாள்.
“அப்படிங்கறிங்க..?”
முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதைப் போல இல்லாமல் வெகு இயல்பாக.. அதுவும் கொட்டும் மழையில் நனைந்தபடி அவள் பேசிய விதம் ரமேஷின் மனதை வருடியது.. வினோத்துக்கும் அப்படித்தான் என்பதை அவன் கண்களில் மின்னிய வாத்சல்யம் காட்டிக் கொடுத்தது.. அவன் பிரியத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
“இவ்வளவு தெளிவாய் பேசறவங்க மழையில நனையலாமா..?” இதமாகக் கேட்டான்..
“தெளிவில்லாதவங்கதான் மழையில நனைவாங்கன்னு யார் உங்களுக்குச் சொன்னது.?”
சிரித்தபடி கேள்வி கேட்டவள் ஓர் சிநேகிதப் புன்னகையுடன் நடந்து விட்டாள்.. அவள் மீதான மதிப்பை அது அதிகரித்தது.. வலிய வந்து பேசியவர்களை அவள் உதாசீனம் செய்யவில்லை.. அதே சமயத்தில் கிடைத்தது வாய்ப்பென்று அவர்களிடம் வாய் வளர்த்தபடி நிற்கவுமில்லை.. அவர்கள் வழிய இடம் கொடுக்கவுமில்லை..
“வாட் எ வுமன் ஷி இஸ்..!”
வியந்தான் வினோத்.. அதியசமாக நண்பனின் வார்த்தைகளை ஆமோதித்து தலையாட்டினான் ரமேஷ்.. அது அழகான மழைக் காலமென்று வினோத்துக்கு தோன்றியது.. முதலில் முரளிதரனைப் பார்க்காமலிருந்தால் அதை ஒப்புக் கொண்டிருப்பானென ரமேஷ் கூறினான்.. அப்படி அந்த முரளிதரன் ரமேஷீக்கு இழைத்த தீங்குதான் என்ன என்று வினவினான் வினோத்.. அவன் ரமேஷீக்கு விரிவுரையாளனாக வாய்த்ததை விடப் பெரிய தீங்கு இருக்க முடியுமா என்று பதிலுக்கு வினவி வைத்தான் ரமேஷ்..
“அதுசரி..” என்றான் வினோத்..
“பின்னே என்னடா..? வெறும் பேப்பரைக் கொடுத்தால் ஜீரோதான் வரும்.. அதைச் சத்தம் போடாம கையில கொடுக்கிறதை விட்டுப்புட்டுக் காட்டுக் கத்தலா கத்திக்கிட்டே கொடுக்கறாண்டா அந்த ஆள்.. கேர்ள்ஸ் மத்தியிலே என் இமேஜ் ஸ்பாயில் ஆகுதில்ல..?”
“இமேஜா..? உனக்கா..? இருக்கா..? ஹா..ஹா..”
“இவன் ஒருத்தன்.. பிரண்டா இருந்துக்கிட்டே நான் விழறதுக்கு பள்ளம் வெட்டுவான்.. உன்னைப் போல ஒரு பிரண்ட்.. வேண்டாம், வேண்டாம்.. நீ ஒருத்தனே போதும்டா.. எனக்கு இமேஜ்ன்னு ஒன்னு இருந்தாலும் அது உன்னைப் பார்த்ததும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்ன்னு தலை தெறிக்க ஓடிரும்..”
சடைத்துக் கொண்ட நண்பனின் தோளில் கை போட்டு..
“ஓகே.. ஓகே.. லீவ் இட் மை டியர் பிரண்ட்..” என்றபடி காரை நட்சத்திர ஹோட்டலின் வளாகத்துக்குள் செழுத்தினான் வினோத்.
“அங்கே பாரு கதையை..”
ரமேஷ் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தவனின் விழிகள் மின்னின.. அவனுக்கு முன்னால் சென்ற காரிலிருந்து அலைபாயும் கூந்தலை படு ஸ்டைலாக தலையைக் குழுக்கிப் பின்னுக்குத் தள்ளியபடி இறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷா.. கூடவே ஒட்டு புல்லாகத் தொற்றியபடி நான்கு தோழிகளும் இருந்தார்கள்..
“இவளுக ஏண்டா எங்கே போனாலும் உன் ஆளு கூடவே ஒட்டிக்கிட்டு வர்றாளுக..”
வர்ஷாவுடன் வந்த தோழிகளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி கேட்டான் ரமேஷ்.. வர்ஷாவை பார்வையிட்டபடி..
“அவங்ககிட்டேயே போய் கேட்டு உன் டவுட்டைக் கிளியர் பண்ணிக்கிட்டு வா..” என்றான் வினோத்..
“ஆர் யு ஷ்யூர் வினோத்..?”
கிடைத்தது வாய்ப்பென்று வினோத் காரை நிறுத்துவதற்கு முன்பே கதவைத் திறந்து குதித்த ரமேஷ் வர்ஷாவின் பக்கத்திலிருந்து பெண்களிடம்..
“ஹாய்..” என்றான்..
பதிலுக்கு ‘ஹாய்’ சொல்லாமல் அவர்கள் முறைத்தார்கள்.. அதற்குள் வினோத் காரை ஹோட்டலின் பணியாளிடம் ஒப்படைத்து விட்டு வர்ஷாவைப் பார்த்தபடி நடந்து வந்தான்..
வர்ஷாவைப் பார்த்த வினோத்தை அவள் அலட்சியமாகப் பார்க்க, அவளுடைய தோழிகள் ஆர்வமாக பார்த்தார்கள்.. அவர்கள் விழிகளில் வினோத்திடம் பேசும் ஆவல் தெரிந்தது..
“ஹாய் வினோத்.. எங்கே இந்தப் பக்கம்..?” என்றாள் ஒருத்தி..
“இங்கே சினிமாப் பார்க்கலாம்ன்னு வந்தோம்..” வினோத்துக்குப் பதில் ரமேஷ் சிரிக்காமல் பதில் சொன்னான்..
வாயே திறக்காமல் வர்ஷாவை பார்வையிட்டுக் கொண்டிருந்த வினோத்தின் புறக்கணிப்பில் கேள்வி கேட்டவளின் முகம் வாடி விட்டது.. வர்ஷாவோ புருவங்களை உயர்த்தித் தோள்களைக் குலுக்கி விழிகளைச் சுழற்றி என்று பல்வேறு பாவனைகளைச் செய்து வினோத்தின் காதல் பார்வையை அவள் ரசிக்கவில்லை என்பதை உயர்த்தினாள்..
நீ என்ன வேண்டுமானாலும் சேஷ்டைகளை செய்து கொள்.. எனக்கொன்றுமில்லை.. என்ற அழுத்தத்துடன் வர்ஷாவையே ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்..
அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அலை பாய்ந்த வர்ஷா..
“வாங்கடி.. போகலாம்..” என்று ஹோட்டலுக்குள் விரைந்து விட்டாள்..
தோழிகள் வினோத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி அவளைப் பின் தொடர்ந்து விட்டதில் ஏமாற்றமடைந்த ரமேஷ்..
“இப்படியாடா பட்ஷிகளைப் பற்றி விடுவ..?” என்று சண்டைக்கு வந்தான்..
“பறந்து போன பட்ஷிக ஹோட்டலுக்குள்தான் மொக்கிக்கிட்டு இருக்கும்.. வா.. நாமும் அங்கே போய் சங்கமிக்கலாம்..” என்றபடி படியேறினாள் வினோத்..
“அவங்ககூட ஜாயின் பண்ணிக்கப் போறோமா..?” ஆவலுடன் கேட்டான் ரமேஷ்..
“ஜாயின் பண்ணிக்க எனக்கும் ஆசைதான்.. அவ ஒப்புக்க மாட்டாளே.. சண்டித்தனம் பண்ணுவா.. எதுக்கு வம்பு..? அவ வேற டேபிள்.. நாம வேற டேபிள்ன்னு உட்கார்ந்துட்டு வருவோம்..” வழி சொன்னான் வினோத்.
“அவ்வளவுதானா..?” சோகமாகி விட்டான் ரமேஷ்..
“ஆல்ரெடி உனக்கொரு காதலி இருக்காடா ரமேஷ்..”
“இருந்தான்னு சொல்லு..”
“என்னவோ ஒன்னு.. அதுக்கப்புறமும் ஏண்டா ஃபிகர்கள்கிட்ட வழியனும்னு பறக்கிற..?”
“வள்ளுவரே சொல்லியிருக்காருடா..”
“அடப்பாவி..! உன் சேட்டைக்கு அவரை ஏண்டா வம்புக்கு இழுக்கிற..? எனக்குத் தெரிஞ்சு அவர் சொன்ன எந்த அறத்திலும் ஃபிகர் அறம் வரவேயில்ல..”
“அவரோட குறளில வராட்டி என்ன..? நாம வர வைப்போமில்ல..”
“எங்கே.. வர வை.. பார்க்கலாம்..”
“கேட்கலாம்ன்னு சொல்லு..”
“விதிடா.. கேட்டுத் தொலைக்கிறேன்..”
“ஃபிகர்களிடம் வழிந்து, வழிந்து வாழ்வோனே வாழ்வான் மற்றவரெல்லாம் வழிவதற்கான சான்ஸ் தேடி அலைபவரே..”
“கருமம்..”
தலையில் அடித்துக் கொண்ட வினோத், வர்ஷா அண்ட் குருப் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று விழிகளால் துழாவினான்.. அவன் வருகிறானா என்று நோட்டமிட்டபடி மையப் பகுதியில் அவளும், அவளது குழாமும் அமர்ந்திருந்தனர்.
“டெவில்ஸ் ஆர் தேர்..” சுட்டிக் காட்டினான் ரமேஷ்.
“உதைபடப் போற.. என் ஆளென்ன டெவிலா..?”
“இல்லேங்கறியா..?”
“இல்லை..”
“ஓகே.. கூட வந்திருக்கிற பிரெண்ட்ஸை டெவில்ஸ்ன்னு சொன்னேன்னு வைத்துக்க..”
“நீ பிழைச்ச..”
வர்ஷாவின் டேபிளுக்கு பக்கத்து டேபிளில் உட்கார்ந்து வினோத் அவளைப் பார்ப்பதற்குத் தோதாக சேரை திருப்பிப் போட்டு உட்கார்ந்தான்.. உடனடியாக அவள் அவளது சேரைத் திருப்பிப் போட்டு அவனுக்குப் புறமுகுது காட்டி உட்கார, அவளது தோழிகள் வினோத்தைப் பார்ப்பதற்கு தோதாக அவர்களது சேரைத் திருப்பிப் போட்டு உட்கார்ந்தார்கள்.. ரமேஷ் வினோத்தை மௌனப்பார்வை பார்த்தான்.
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.