Chapter 07

0Shares

“நீ என்ன பண்ற.. இதுக என்ன பண்ணுதுக..”

எரிச்சலடைந்தான்.. வர்ஷா தொலை நோக்குத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கிறவளைப் போல தொலை தூரத்தில் பார்த்து வைக்க, அவளது தோழியர் குழாம் வினோத்தைப் பார்த்துச் சிரித்து, கையசைத்து, தலையைச் சாய்த்து என்று பல்வேறு விதங்களில் சம்பாஷிக்க முற்பட்டார்கள்..

“இதுக பண்ற அட்ராசிட்டி இருக்கே..” அலுத்துக் கொண்டான் ரமேஷ்.

பதில் சொல்லாமல் மெனு கார்டைப் புரட்டியபடி வர்ஷாவின் பக்கமாக பார்வையை வீசிக் கொண்டிருந்தான் வினோத்.. திரும்பும் உத்தேசம் இல்லாமல் அவள் புறமுதுகைத் தொடர்ந்தாள்.. அவளது தோழிகள் மூவரும் அவள் பக்கமாகச் சரிந்து தாழ்ந்த குரலில் விவாதித்தார்கள்.. வினோத்தின் பார்வை கூர்மையானது.

“அதுக என்னடா பேசிக்குதுக..?”

“ம்ம்ம்.. கருவாட்டுக் குழம்பு வைக்கிறது எப்படின்னு பேசிக்கிறாங்க..”

“என்னது..?”

“பின்னே என்னடா.. ஹோட்டலுக்கு வாரவங்க என்ன பேசிக்குவாங்க..? வாழ்க்கைக்கு அதி முக்கியமானது எதுன்னு பேசிக்குவாங்களா..? வயிற்றுக்கு எதை ஈயனும்னு பேசிக்குவாங்க.. காலக் கொடுமைடா.. ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு உன்கூட வந்துட்டு நான் படற லோல் இருக்கே.. அப்பப்பா..”

“ரொம்பத்தான் அலுத்துக்காதே.. அதான் நீ சைட்டடிக்கத் தோதா பிகர்க மாட்டியிருக்குதுகளே..”

“இந்தக் கொடுமையை வெளியில சொல்லிராதே.. நான் அதுகளை சைட்டடிச்சா.. அதுக உன்னைச் சைட்டடிக்குதுக.. தேவைதானா எனக்கு..?”

“வேற என்னதான் தேவை உனக்கு..?”

“பிரியாணிதான் தேவை.. வாங்கிக் கொடுக்க முடியுமா.. முடியாதா..? இரண்டில் ஒன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்.. அதோ பேரரே வந்தாச்சு.. ஆர்டர் கொடு..”

“பொறுடா.. இந்த வர்ஷா ஏண்டா இப்படி இருக்கா..?”

“அவ எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்.. நீ முதல்ல பிரியாணிக்கு வா..”

“ச்சே..! பிரியாணி.. பிரியாணி.. கொஞ்சமாச்சும் என்னோட  ஆதங்கத்தைக் காதில போட்டுக்கறியா..? நீயெல்லாம் என் நண்பன்..! வெறுத்துப் போகுதுடா..”

“பசி நேரத்தில நட்புப் பயிரை வளர்க்காதே..”

“நண்பனாடா நீ..?”

“லுக் வினோத்.. நான் நட்புன்னு வந்தா எதையும் பார்க்க மாட்டேன்.. விட்டு விளாசித் தள்ளிருவேன்.. எனக்கு நட்புத்தான் முக்கியம்.. நான் உன் தளபதிடா..”

“அஃது..”

“அட் தி ஸேம் டைம்.. பிரியாணி.. அதுவும் மட்டன் பிரியாணின்னு வந்தா நட்பையே பார்க்க மாட்டேன்.. மொக்கித் தள்ளிருவேன்.. அப்ப எனக்குப் பிரியாணிதான் முக்கியம்.. நான் சாப்பாட்டு ராமன்டா..”

“அடிங்.. ஙொய்யாலே..”

வினோத் சிரித்தபடி மெனுகார்டை புரட்டி ரமேஷ் விரும்பிய உணவுப் பதார்த்தங்களுக்கு ஆர்டர் கொடுத்தான்.. பேரர் நகர்ந்த பின்னால் வர்ஷாவைப் பார்த்தான்..

“அவ உன்னைப் பார்க்கல..” என்றான் ரமேஷ்.

அவன் சொல்லிக் கொண்டிருந்த அதே நொடியில் வர்ஷா வினோத்தின் பக்கம் பார்த்து வைக்க வினோத் சொக்கிப் போனான்.. அடர்ந்த விசிறி போன்ற அவளது இமைகள் மூடித் திறந்ததில் வெளிப்பட்ட வசீகரத்தில் அவன் மனம் சிக்கி சின்னாப் பின்னமானது.. அவளது இமைகளின் வீச்சில் கட்டுண்டான் வினோத்.

அவனது ஆழ்ந்த பார்வையில் சலனப்பட்ட வர்ஷா முகத்தைத் திருப்பிக் கொள்ள பெருமூச்சு விட்டான் வினோத்.

“இதெல்லாம் வேஸ்ட்.. அந்த முரளிதரனை மூணு மொத்து மொத்தி ஊரை விட்டுத் துரத்தினன்னு வைய்யி.. உன் காதல் ஜெயிக்க சான்ஸ் இருக்கு..” என்றான் ரமேஷ்.

“இது கூட நல்ல ஐடியாதான்.. அந்த மூணு மொத்தை நீயே போய் போட்டுட்டு வாயேன்..” வழி சொல்லிக் கொடுத்தான் வினோத்..

“நானா..?” அதிர்ச்சியடைந்த ரமேஷின் தொண்டைக் குழியில் பிரியாணி சிக்கிக் கொண்டது.

“விக்.. விக்.. விக்..”

கண்களில் நீர் அரும்பப் புரையேறித் தவித்தவனின் பக்கம் தண்ணீர் தம்ளரை நகர்த்தி வைத்த வினோத்..

“என்னாச்சு நண்பா..?” என்று ஏதுமறியாதவனைப் போலக் கேட்டு வைத்தான்.

“நண்பனாடா நீ..? எனிமி..! பிரியாணியை வாங்கிக் கொடுத்துட்டு ஆளையே குளோஸ் பண்ணப் பார்க்கறியே..”

“நானா..?”

“நீதான்..”

“நான் என்னடா பண்ணினேன்..?”

“அந்த முரளிதரன் லேசா ஒரு தட்டு தட்டினாலே புத்தூர்ல போய் அட்மிட் ஆகனும்.. நீ மொத்தவே சொல்றியே.. பதிலுக்கு அவன் என்னைப் பின்னிப் பெடலெடுத்திர மாட்டானா..?”

“தெரியுதில்ல.. அப்புறம் எந்தத் தைரியத்தில அவரை மொத்தச் சொன்ன..?”

“ஹி.. ஹி..”

“சகிக்கலை.. பிரியாணியை கண்டினியூ பண்ணு.. இதை விட்டுட்டு ஐடியா கொடுக்கிறேன்னு சேதாரப்பட்டுக்காதே..”

“அதுசரி.. அதுசரி..”

பிரியாணியை மொக்கியபடி வர்ஷாவின் தோழிகளில் ஒருத்தியை உன்னிப்பாகப் பார்த்தான் ரமேஷ்.. இவன் பார்வையைக் கண்டதும் அவள் கடுப்பாகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

“பெரிய கிளியோபாட்ரா..” என்றான் ரமேஷ்.

“அடிவாங்கப் போற.. நீயேண்டா அந்தப் பெண்ணை உத்து உத்துப் பார்த்து வைக்கிற..?” அதட்டினான் வினோத்.

“அடேய் வினோத்து.. இந்தப் பொண்ணுதான் அந்தப் பொண்ணான்னு பார்த்தேன்..”

“எந்தப் பொண்ணு..?”

“போனவாரத்தில ரிலேட்டிவ்ஸ் கல்யாணம் ஒன்னு நடந்துச்சுல்ல..?”

“ஆமாம்.. அதில் தலையைக் காட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனவன் மூணுநாள் கழிச்சுத்தானே திரும்பி வந்த..”

“இப்பல்லாம் கல்யாணம் ஒரு நேர டிபனோட முடிஞ்சிருதுடா.. காலையிலே ஆறு டு ஏழு முகூர்த்தம்.. எட்டு டு பத்து காலை டிபன்.. பணிரெண்டு மணிக்கு மண்டபமே காலியாகிரும்.. ஒரு ஈ, குருவி இருக்காது..”

“நீ கல்யாணத்துக்குப் போனியா.. இல்லை.. குருவி விரட்டப் போனியா..?”

“அதுக்கில்லடா வினோத்.. இதுவும் அப்படி குருவி விரட்டற கல்யாணமா இருக்கும்ன்னு நினைச்சுத்தான் போனேன்.. அங்கே என்னடான்னா அந்தக் காலத்துக் கல்யாணம் போல மூணுநாள் கல்யாண விருந்து போடறாங்க..”

“நீ இருக்கியே..”

“சும்மா சொல்லக் கூடாதுடா வினோத்.. வெஜிடேரியன் அயிட்டத்திலயும் இத்தனை வெரைட்டி இருக்கும், டேஸ்ட் இருக்கும்ன்னு அந்தக் கல்யாணத்திலதான் பார்த்தேன்.. பாட்டு, டான்ஸ், சிரிப்புன்னு குதூகலமா இருந்துச்ச..”

“இவ்வளவும் இருந்தா உன்னைப் பிடிக்க முடியாதுதான்..”

“அந்தக் கல்யாணத்திலதான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன்.. நம்ம காலேஜ் மேட் போல இருக்கேன்னு பின்னாடியே சுத்தினேன்.. அகப்படலை.. வேற ஒருத்தனும் என்னைப் போலவே இவ பின்னாடியே சுத்தினான்..”

“அங்கே சிக்கிட்டாளாக்கும்..”

மிகச் சரியாக மோப்பம் பிடித்து விட்டான் வினோத்..

“அந்தக் கோராமையை ஏண்டாக் கேட்கிற.. அந்தக் கல்யாணத்துக்கு வந்தப்ப இவள் யாரோ.. அவன் யாரோ.. அடுத்த நாள் என்னடான்னா கல்யாண மண்டபம் முழுக்க இவகூட அவன் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கான்.. ரிசப்சன்ல கச்சேரி நடந்தா இதுக ரெண்டும் மேடைக்குக் கீழே ரொமாண்டிக்கா டான்ஸ் ஆடுதுக.. அதுக்கு கைதட்டல் வேற காதைப் பிளக்குது.. என்னதான் நடந்துச்சு.. எப்படிப் பழகினாங்க.. ஒன்னுமே தெரியலைடா வினோத்.. நினைக்க, நினைக்க வயிறு எரியுது..”

“ஐஸ்கிரிம் கொண்டு வரச் சொல்லவா..?”

சம்பந்தமில்லாமல் பேசின நண்பனைக் குழப்பத்துடன் பார்த்த ரமேஷ்.

“இப்ப எதுக்குடா ஐஸ்கிரிமை கொண்டு வரச் சொல்ற..? உருகி வழியறதுக்கா..?” என்றான்.

“இல்ல.. உன் வயிறு எரியுதுன்னு சொன்னியே.. அது குளுகுளுன்னு ஆகட்டும்ன்னுதான்..” விளக்கம் சொன்னான் வினோத்..

“உர்ர்..”

உறுமிவிட்டு பிரியாணியில் கண்ணானான் ரமேஷ்.. வர்ஷா மீது கண்ணானான் வினோத்.. இவனைப் பார்க்காமல் அவள் நாசுக்காக உணவுப் பதார்த்தங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்..

“வைரச்சிலை போல இருக்காடா..?” ஜொள்ளினான் வினோத்..

“அவளுக்குக் கருங்கல்சிலை மேலதான் காதல்..?” இரக்கமில்லாமல் சொன்னான் ரமேஷ்..

“இப்ப உன்கிட்டக் கருத்துச் சொல்லுன்னு நான் கேட்டேனா..?” வினோத் முறைத்தான்..

“உள்ளதைச் சொன்னா உடம்பு எரியுதாக்கும்..?”

சமயம் பார்த்துப் போட்டுத் தாக்கி விட்ட திருப்தியுடன் பக்கத்து டேபிளில் இருந்த பெண்கள் வாய் வளர்ப்பதை ஒட்டுப் கேட்டான் ரமேஷ்..

“ஏண்டி.. காலேஜ் பஸ்ல போனாத்தான் அந்த டிரைவர் ஜொள் மன்னன்னு நாம தெரிஞ்சுக்கனுமா..? அதான் நம்ம கேர்ள்ஸ் கதை, கதையாய் சொல்றாங்களே.. பசங்க அவனோட பக்கத்து சீட்டில உக்காந்தா கட்ட வண்டியப் போலப் பஸ்ஸை உருட்டுவானாம்.. அதுவே பொண்ணுக பக்கத்தில உட்கார்ந்தா, ஜெட் வேகத்தில பறந்து, முன்னாடி போற லாரி மேல டிராவல் பண்ணிப் பிய்ச்சு உதறிருவானாம்..”

அந்தப் பெண் கையை ஆட்டி ஆட்டிக் கதை பேச மற்ற பெண்கள் ரசித்துச் சிரித்தார்கள்..

“இதுக பேசறதைக் கேட்டியா..?” என்றான் ரமேஷ்..

“அதான் ஒட்டுக் கேட்க நீ ஒருத்தன் பிறந்திருக்கியே.. போதாதா..” வினோத் தோள்களைக் குலுக்கினான்.

வர்ஷா குருப் எழுந்து கொண்டது.. வினோத்தும் எழுந்து கொள்ளப் போனான்..

“அடப்பாவி..” என்று அலறினான் ரமேஷ்..

கேள்வியாகப் பார்த்த வினோத்திடம் டேபிளில் இருந்த பதார்த்தங்களைச் சுட்டிக் காட்டியவன்..

“இதையெல்லாம் அம்போன்னு விட்டுட்டு வரச் சொல்றியா..?” என்று முறையிட்டான்.

“இன்னுமாடா மொக்கல..? அவ சாப்பிட்டுட்டா பாரு..”

“அவளையும், என்னையும் கம்பேர் பண்ணாதே.. சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடனும்.. கொறிக்கக் கூடாது..”

“நீ உலக மகா ரசிகன்தான்..”

வினோத் ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்டில் கையை விட்டுப் பர்ஸை எடுத்து டேபிளில் வைத்தன்..

“இன்னும் என்னென்ன வேணுமோ.. ஆர்டர் பண்ணி மொக்கிட்டு பில்லைப் பே பண்ணிட்டு வந்து சேரு.. நான் ஹோட்டல் வாசலில் வெயிட் பண்றேன்..”

“அதாவது வர்ஷாகிட்டக் கடலை போடப் போறேங்கிற..?”

“இப்பப் பர்ஸ் வேணுமா.. வேணாமா..?”

வினோத் தன் பர்ஸை எடுத்துக் கொள்வதைப் போலப் பாவ்லா செய்ய, ரமேஷ் அதைப் பாய்ந்து கைப்பற்றினான்..

“உன்னை நம்பி வெறுங்கையோட கிளம்பி வந்துட்டேண்டா..”

“அந்த நினைப்பிருந்தா வாயைத் திறப்பியா..?”

“வாயைத் திறக்காம எப்படிடா பிரியாணியை உள்ளே தள்ளரது..?”

“அதுக்கு மட்டும் வாயைத் திற..”

எச்சரித்து விட்டு வர்ஷாவைத் தொடர்ந்தான் வினோத்.. இவனது நோக்கம் புரிந்தவர்களாக வர்ஷாவின் தோழிகள் தங்களுக்குள் எதையோ பேசுவதைப் போலப் பின் தங்கி நின்றுவிட.. வினோத் வர்ஷாவை நெருங்கினான்..

“வர்ஷா..”

இதமான அவனது அழைப்பில் கட்டுண்டாலும் அந்தக் கட்டை நொடியில் அறுத்துத் தள்ளி விடுபட்ட வர்ஷா..

“ம்ம்ம்..” என்று கடுகடுத்தாள்..

“ஐ லவ் யு..”

“ஐ டோன்ட் லவ் யு..”

வினோத்தின் முகம் பார்க்காமல் வர்ஷா சொல்லியதில் அவன் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.. ஒரு குழந்தையின் பிடிவாதத்தோடு அடம் பிடித்தவளைக் காதலுடன் பார்த்தான்.

“நிஜமாவே நீ முரளிதரன் சாரை லவ் பண்றியா..?” என்று கேட்டான்.. சட்டென அவனைப் பார்த்த வர்ஷாவின் விழிகளில் திடுக்கிடல் இருந்தது..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link