Chapter 08
“ஐ லவ் முரளிதரன்..”
வர்ஷாவின் குரல் நடுங்கியது.. துடிக்கும் இதழ்களைப் பற்களால் கடித்து அடக்கிக் கொண்டிருந்தாள்.. அவளது விரல்கள் நடுங்கின..
“ரிலாக்ஸ்..” என்றான் வினோத்.
“ஐ ஹேட் யு.. டோன்ட் டிஸ்டர்ப் மி..” கோபத்துடன் சொன்னாள் வர்ஷா..
“ஸோ வாட்..? ஐ லவ் யு.. அது மாறாது.. உன்னைப் போல சேலன்ஜீக்கு நான் காதலிக்கலை.. மனதாரக் காதலிக்கிறேன்..” ஊடுறுவும் பார்வையுடன் சொன்னான் வினோத்.
வர்ஷாக்குத் தூக்கி வாரிப் போட்டது.. இது எப்படி இவனுக்குத் தெரியும் என்ற அதிர்ச்சியுடன் வினோத்தை முறைத்தாள்..
ஒருவகையில் அது உண்மைதான்.. பிறந்தது முதல் அவளது அழகைப் பார்த்தவர்கள் விழி விரித்து ‘ஆ’வென வாய் பிளப்பதைத் தான் வர்ஷா பார்த்திருக்கிறாள்.. முதன் முதலாக அவளைக் கல்லையும் மண்ணையும் போலப் பார்த்தவன் முரளிதரன் ஒருவன்தான்..
முதலாமாண்டு மாணவியாக அந்தக் கல்லூரியில் கால் வைத்த கணத்திலிருந்து அந்தக் கல்லூரியின் அழகுராணியாக மாறிப் போனாள் வர்ஷா..
அவளது அழகை பிரமிப்புடன் பார்த்த சக மாணவிகள் அவளிடம் தோழமை கொள்ளப் போட்டி போட்டனர்.. ராகிங்கிலிருந்து அவள் கேட்காமலே விடுதலை கிடைத்தது.. பிரின்ஸி முதல் லெக்சரர்கள் வரை அவளுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுத்தார்கள்.. காலேஜே அவளைக் கொண்டாடிய போது ஒரே ஒருவன் மட்டும் அவளைக் கண்டு கொள்ளாமல் புறக்கணித்தான்.. அவள் பக்கமே திரும்பாமல் உதாசீனம் செய்தான்.
அந்த ஒன்றே அவனை ஊன்றிக் கவனிக்க வைத்ததில் வர்ஷா முரளிதரனைப் பற்றியே பேச ஆரம்பித்தாள்..
“அவர் அப்படித்தாண்டி.. செம இண்டலிஜென்ட்… அருமையா கவிதை எழுதுவார்.. அழகா பாட்டுப் பாடுவார்.. கைப்பிள்ளைக்குக் கூடப் புரியறதைப் போல லெக்சர் கொடுப்பார்… இவரோட சப்ஜெக்ட்டில் கிளாஸ் மொத்தமும் எய்ட்டிபெர்சண்டேஜீக்கு மேலேதான் வாங்கும்ன்னா பார்த்துக்கயேன்..”
தோழியின் விளக்கம் அவனைத் தூக்கி வைத்தது.. அது உண்மையென்பதை நாளடைவில் புரிந்து கொண்ட வர்ஷாவுக்கு அவன்மீது அபிமானம் வந்தது. அவனுடன் பேசிப் பழக ஆசை கொண்டாள்.. தேடிப் போய் பேசினவளை..
“போ.. போ.. கிளாஸில் நான் கொடுக்கிற லெக்சரைக் கவனி.. அது போதும்.. அதை விட்டுட்டு கிளாஸ் டயத்தில புத்தியை புல் மேய விடாதே.. அப்பப் புரியாதது இப்ப மட்டும் புரிஞ்சிருமா..?” என்று விரட்டி விட்டான் அவன்.
வர்ஷாவினால் அந்தக் தோல்வியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. அவள் ஒரு பார்வை பார்க்க மாட்டாளா என்று அந்தக் கல்லூரியின் கதாநாயகனான வினோத்தே ஏங்கி நிற்கிறான்.. அப்பேற்பட்ட பேரழகியின் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்காமல் முரளிதரன் விரட்டி விடுகிறான்.. இது வர்ஷாவுக்கான தோல்வி அல்லவா..?
“நீயென்ன.. அந்த தேவலோக ரம்பையே இறங்கி வந்து அவர் முன்னாலே நின்னாலும் முரளிதரன் சார் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.. ஆனானப்பட்ட அந்த விசுவாமித்திரரே மேனகைகிட்ட மயங்கிக் காதலிக்க ஆரம்பிச்சுட்டார்.. நம்ம முரளிதரன் சார் விசுவாமித்திரருக்கும் மேலே.. எந்த மேனகை வந்தாலும் அவர் தவத்தைக் கலைக்க முடியாது..”
வர்ஷாவின் அழகில் பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த சக மாணவிகளின் ஒருமித்த இந்தக் கருத்துத்தான் வர்ஷாவின் மனதை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது.
“ஐ லவ் ஹிம்..” என்று சொல்லி விட்டாள்..
“அவரையா..? அவர் ஹேண்ட்சம்தான்.. ஆனா மாநிறத்துக்கும் குறைவான நிறம்.. சிடுசிடுன்னு நெருஞ்சி முள்ளாக் குத்துவார்.. வினோத் செக்கச் செவேல்ன்னு சுண்டி விட்டா ரத்தம் வருகிற நிறத்தில ஆளை அசத்தறான்.. உனக்கு மேட்ச் அவன்தாண்டி..”
“பட்.. நான் முரளிதரனைத்தான் காதலிக்கிறேன்..”
என்னவோ முரளிதரனுக்கு வரம் கொடுப்பதைப் போல இறுமாப்பான குரலில் சொன்னாள் வர்ஷா.. தோழிகள் வியந்து போகாமல் கேலியாக நகைத்தார்கள்.. அது அவளை உசுப்பேற்றிக் கோபம் கொள்ள வைத்தது.
“எதுக்குடி சிரிக்கறிங்க..?” கோபமானாள்..
“இல்ல.. நீ அவரைக் காதலிச்சாப் போதுமா..? அவர் உன்னைக் காதலிக்க வேண்டாமா..?”
“ஏன் காதலிக்க மாட்டார்..? இப்ப நான் அவருக்கு ஸ்டூடண்ட் மட்டும்தான்.. அதான் விரட்டறார்.. அவர்கிட்ட என் காதலைச் சொன்னதும் அசந்து போய் என்கிட்ட மண்டி போடறாரா இல்லையான்னு பாரேன்..”
“அவரா..? உன்கிட்டயா..? மண்டி போடறதா..? நெவர்..”
தோழிகளின் சிரிப்பில் உடலில் தீப்பற்றியதைப் போன்ற எரிச்சலை அடைந்தாள் வர்ஷா.. அன்று மாலையே முரளிதரனின் அறைக்குப் போனாள்.. அவளைக் கண்டதும்.
“லெக்சரைக் கவனி… லெசனில் சந்தேகம் கேட்க டிபார்ட்மெண்ட் ரூமுக்கு என்னைத் தேடியெல்லாம் வரக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா..?” என்று மேலே விழுந்து கடிக்காத குறையாக எரிந்து விழுந்தான் முரளிதரன்.
வர்ஷாவுக்கு பயத்தில் கைகால்கள் வெடவெடக்கத் தொடங்கின.. தொண்டைவறண்டது.. தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு எச்சில் விழுங்கியபடி ஒரு வழியாக..
“ஐ லவ் யு..” என்று சொல்லி விட்டாள்.
“வாட்..?”
அவன் கண்கள் தீம்பிழம்பாக ஜொலித்து விட்டன.. மிகப் பயங்கரமாக அவன் முகம் மாறியதில் மிரண்டு போனாள் வர்ஷா.. அவளை அடிக்க ஓங்கி விட்ட அவன் கையைப் பார்த்தவள் செவிப்பறை கிழியப் போகிறது என்ற அச்சத்துடன் கண்களை இறுக மூடி விட்டாள்.. கன்னத்தில் அறை விழுகாததில் கண்களைத் திறந்து பார்த்தவளை நோக்கிக் கை நீட்டிக் கத்தினான் அவன்..
“ஓடிப் போயிரு..”
“சார்..”
“என்ன தைரியமிருந்தா பாடம் சொல்லிக் கொடுக்கிற லெக்சரர் கிட்ட வந்து ‘ஐ லவ் யு’ன்னு சொல்லுவ..? உன் வயசென்ன.. என் வயசென்ன..? இப்பத்தான் பிளஸ் டூ முடிச்சுட்டு வந்திருக்கிற ரெண்டும் கெட்டான் நீ.. உனக்கு காதல் கேட்டுதா..?”
“காதல் வயது வித்தியாசம் பார்க்காது சார்..”
“அடிச்சுக் கொன்னு இந்த காலேஜ் பிளேக்ரவுண்டில புதைச்சிருவேன்.. ஒழுங்காப் பேசிப் பழகு.. இனியொருதரம் இதுபோல பினாத்திக்கிட்டு வந்தேன்னு வைய்யி.. பாவம்
பார்க்க மாட்டேன்.. அடிச்சுத் தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போயி உன் பேரண்ட்ஸ் கால்ல தள்ளி விட்டுருவேன்.. பிரின்ஸிகிட்ட நான் ஒரு வார்த்தை சொன்னாப் போதும்.. எந்தக் காலேஜிலயும்
நீ கால் வைக்க முடியாதபடி டி.ஸியில ரிமார்க் பண்ணி டிஸ்மிஸ் பண்ணிருவார்.. ஜாக்கிரதை..” முரளிதரனின் கண்கள் கனலைக் கக்கின..
வர்ஷா ஓடியே வந்து விட்டாள்.. அவளுக்கு மாத்துக் கிடைத்ததை மறைந்திருந்து பார்த்தத் தோழிகளின் கேலியில் அடைந்தால் முரளிதரன்.. இல்லையென்றாலும் முரளிதரனேதான் என்று சூளுரைத்தாள்..
கல்லூரியில் அவனை அணுக முடியாது என்று அவன் வீட்டை முற்றுகையிட்டாள் பாடத்தில் சந்தேகம்.. டியூசன் சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கதை பினைந்தவளின் கன்னத்தைப் பழுக்க வைக்க அவன் கையை ஓங்க அவனது மொத்தக் குடும்பமும் வர்ஷாவை அரவணைத்து உறவு கொண்டாடியது.
அவனைப் பற்றிய செய்திகளை அவள் கறக்க முற்பட்டபோது.
“நீயின்னு இல்லைம்மா.. எந்தப் பேரழகி வந்தாலும் அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.. அவன் ஏறெடுத்துப் பார்த்தது ஒரே ஒருத்தியைத்தான்..” என்று அறிவித்து வர்ஷாவின் மனக் கோட்டையை ஆட்டிப் பார்த்தாள் அபிராமி..
அவள் சொன்ன விவரங்களில் ஆடிப் போயிருந்த வர்ஷாவை மேலும் ஆட்டிப் பார்த்தது வினோத்தின் கேள்வி..
அவள் அழகிதான்.. அவளையே அசைத்துப் பார்க்கும் பேரழகன் வினோத் ஆயிற்றே.. அவனிடம் அவள் தோற்றுப் போவதா..?
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.