Chapter 20
‘அதோ அந்த வீடாத்தான் இருக்கனும்..’
மகிழம்பூ மரத்தை அடையாளமாக வைத்து பாரதியின் வீட்டை எளிதாக அடையாளம் கண்டு கொண்ட வர்ஷா காரை மரத்தடியில் நிறுத்தி விட்டு இறங்கினாள்..
“பாரதி வசதியான வீட்டில பிறந்தவம்மா.. பெத்தவங்க அமெரிக்காவில இருந்தாங்க.. இவ என்ஜினியரிங் படிக்க இந்தியாவுக்கு வந்தா.. தாத்தா, பாட்டி வீட்டில தங்கி படிச்சா.. என் மகன் அவ மேல பைத்தியமா இருந்தான்.. ஒரே ஒருத்தியைத்தான் அவன் ஏறெடுத்துப் பார்த்தான்னு சொன்னேனே.. அது இவதான் வர்ஷா.. பாரதி தான் முரளியின் உயிர்.. அவளும் இவன் மேல பிரியமாத்தான் இருந்தா.. ஆனா அமெரிக்க சிட்டிசனாகியிருந்த வர்ஷாவைப் பெத்தவங்களுக்கு இவளோட காதலைப் பிடிக்கலை.. அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருத்தனை இவளுக்காக நிச்சயம் பண்ணியிருந்தாங்க.. என்ன சொன்னாங்களோ.. ஏது சொன்னாங்களோ.. அவ ஒருநாள் அவளோட கல்யாணப் பத்திரிக்கையை இவன் கிட்ட நீட்டிட்டா.. இவனும் வெட்கம் கெட்டு அவளோட கல்யாண ரிசப்சனுக்குப் போய் நின்னான்.. அவளைப் பெத்தவங்க போலிசை விட்டு இவனை வெளியேத்திட்டாங்கம்மா..”
“காட்..! கேட்கவே கஷ்டமாயிருக்கு ஆண்ட்டி..”
“அவ நினைப்பிலேயே இவன் தாடி வைச்சுக்கிட்டு சுத்திக் கிட்டு இருந்தான்.. வெளிநாட்டில இருக்கிறவங்கதான் உசத்தின்னு பாரதியைப் பெத்தவங்க நினைச்சிட்டாங்களேங்கிற ஆத்திரத்தில மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனியில பார்த்துக்கிட்டு இருந்த வேலையை விட்டுட்டு லெக்சரராகிட்டான்.. எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாலும் தாடி மீசையோட சுத்தமா ஏதோ ஒரு வேலையில செட்டிலாகிட்டான்னு நிம்மதியா இருந்தேன்.. மகராசி அந்த நிம்மதியில மண்ணை அள்ளிப் போட வந்திட்டாளா..? அதான் எவனோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ல..? அப்படியே அமெரிக்கா பக்கம் தொலையறதுக் கென்ன..? எதுக்காக மறுபடியும் என் மகனின் கண்களில் படறா..?”
அதை நேரில் கேட்டு விட வேண்டுமென்றுதான் பாரதியைத் தேடி வர்ஷா வந்திருக்கிறாள்..
மகிழம்பூ மரத்தை அண்ணாந்து பார்த்தவளுக்கு பாரதிக்கு மரப்பித்துப் பிடித்திருக்கிறது என்று தோன்றியது.
‘காலேஜிலயும் மரத்தடி.. வீடும் மரத்துக்குப் பக்கத்தில.. இவளோட பேரண்ட்ஸ் மரமேறியா இல்லாம அமெரிக்கன் சிட்டிசன்ஸ்.. ஆச்சரியம்தான்..’
காலிங்பெல்லை அழுத்தினாள்.. திறந்த பாரதியின் முகத்தில் அடையாளம் தேடும் பாவனை தெரிந்ததில்..
‘அதானே.. உனக்கு என்னை எப்படி நினைவிருக்கப் போகுது..? முரளின்னா நினைப்பில இருக்கும்..’ என்று எரிச்சல் கொண்டாள் பாரதி..
அதற்குள் பாரதி வர்ஷாவை அடையாளம் கண்டு கொண்டவளாய்..
“நீ தேர்ட் இயர் வர்ஷால்ல..?” என்றபடி கதவை விரியத் திறந்தாள்..
“இந்த இயர்தான் தேர்ட் இயர்.. நெக்ஸ்ட் இயர், நெக்ஸ்ட் நெக்ஸ்ட் இயர்ல்ல இந்த ஐடென்ட்டி மாறி வேற ஐடெண்ட்டி வந்திரும்.. இப்ப மிஸ் வர்ஷாவா இருக்கிறவ மிஸஸ் வர்ஷாவா மாறிடப் போறதைப் போல.. ஸோ.. வர்ஷான்னு மட்டும் கூப்பிடுங்க..”
பாரதியின் முகத்தில் வந்த அதிர்வலைகளை ரசித்தபடி அலட்சியமாக வீட்டுக்குள் நுழைந்தாள் வர்ஷா.
‘ஹௌ இஸ் திஸ்..? இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும்..? ஒருத்தி மூணு வருசமா பட்டுப் போய் கிடந்த மரத்துக்கு தண்ணி பாய்ச்சி ஓய்ஞ்சுக்கிட்டு இருப்பா.. அலுங்காம குலுங்காம எங்கிருந்தோ பழைய காதலின்னு முளைச்சு வந்து நீ துளிர்க்க வைக்கப் பார்ப்பியா..? பட்டதெல்லாம் நான்.. கிரெடிட்டெல்லாம் உனக்கு.. என்னையென்ன ஏமாளின்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா..? நான் வர்ஷா..’
வர்ஷாவின் பார்வையில் குரூரம் கொப்பளித்தது.. என்ன முயன்றும் பாரதியால் இயல்பாக இருக்க முடியவில்லை.. பேயறைந்ததைப் போல வெளிறிப் போய் இருந்தாள்.. அதைப் பார்க்கப் பார்க்க வர்ஷாவின் ஆத்திரம் பெருகியது.. ‘உனக்கு ஏன் இத்தனை காண்டு..? அதான் எவனோ ஒருத்தனை மேரேஜ் பண்ணிக்கிட்டல்ல..? அப்புறமும் எதுக்காக முரளியை கார்னர் பண்ற..? என்னவோ நேற்றுத்தான் பார்த்து இன்றைக்குத்தான் பழகுகிறவங்களைப் போல கொஞ்சிக் குழாவிக்கறீங்க.. என்ன..? உன் ஹஸ்பெண்ட்டை விட்டுப் பிரிஞ்சுட்டியா..? டைவர்ஸ் பண்ணிட்டு முரளியை ரீமேரேஜ் பண்ணிக்கப் பிளான் பண்றியா..? அதுக்குத்தான் இந்தியாவுக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கியா..?’
வர்ஷாவின் மனதில் ஓடிய கேள்விகளை அறியாதவளாய் சோகையாய் சிரிக்க முயன்று தோற்ற பாரதி..
“என்ன சாப்பிடற..? கூல் ஆர் ஹாட்..?” என்று உபசரிக்க ஆரம்பித்தாள்..
“நோ தேங்க்ஸ் மேம்.. எனக்கு எதுவும் வேணாம்..” மறுத்தாள் வர்ஷா..
“முதன் முதலா வீட்டுக்கு வந்திருக்கிற.. எதுவும் வேணாம்ன்னா எப்படிம்மா..? கூல்டிரிங்காவது குடி..”
“இல்லை மேம்.. நான் வந்திருக்கிறது முக்கியமான மேட்டருக்காக.. உங்க வீட்டில பச்சைத் தண்ணியைக் குடித்தாலும் நான் உங்ககிட்டக் கடன்பட்டவளா ஆகிருவேன்.. அதுக்கப்புறம் நான் கேட்க நினைக்கிறதைக் கேட்க முடியாது..”
பாரதியின் முக மாறுதலை ஊன்றிக் கவனித்தபடி சொன்னாள் வர்ஷா.. பாரதியின் முகம் முன்னிலும் அதிகமாக வெளுத்தது.. வர்ஷாவுக்குத் திருப்தியாக இருந்தது..
“என்ன மேட்டர்..? இன்டர்னல் மார்க் எதுவும் குறைஞ்சிருச்சா..? அதுக்காக வந்திருக்கிறயா..?”
“ஊஹீம்.. இது படிப்பு சம்பந்தமான மேட்டரில்ல மேம்.. என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது..”
“உன் வாழ்க்கைக்கும் எனக்கும் என்னம்மா சம்பந்தம்..?”
ஈனஸ்வரத்தில் கேட்டாள் பாரதி..
‘உனக்கா தெரியாது..?’ உள்ளூர சிரித்துக் கொண்டாள் வர்ஷா. இதுவாக இருக்கக் கூடாது என்று பாரதியின் மனம் துடிப்பதை அவள் அறிய மாட்டாளா என்ன..?
மனதின் எண்ணங்களை மறைத்தவளாய் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டவள் மூக்கை வேறு உறிஞ்சிக் கொண்டாள்.. இல்லாத கண்ணீரை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தாள்..
“எல்லாம் என் தலைவிதி மேம்.. காலம் யாருக்காகவும் காத்திருக்காதும்பாங்க.. என் காலம் எனக்காக காத்திருக்கலை.. எதிர்காலத்தை விட்டுட்டு அது கடந்த காலத்தைத் தேடிப் போயிருவேமான்னு பயமாய் இருக்கு..” விம்மினாள் வர்ஷா..
“என்னன்னு சொல்லும்மா..” பாரதி அவளைத் தேற்றினாள்..
“என்னன்னு சொல்லுவேன் மேம்.. முரளியும் நானும் உயிருக்குயிராய் காதலிக்கிறோம்.. அவர் உடனே மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னார்.. இரண்டு பேமிலியும் ஓகேன்னு சொன்னாங்க.. அவர் சொன்ன டேட்டில மேரேஜை பிக்ஸ் பண்ணியிருந்தா இந்நேரம் நாங்க ஹஸ்பெண்ட் அண்ட் வொய்பா இருந்திருப்போம்.. பாவி.. நான்தான் வேணாம்.. என்ஜினியரிங்கை முடிச்சுக்கறேன்.. அதுக்கப்புறமா மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்.. அது இப்போ நடக்காது போல இருக்கு..”
கேவுவதைப் போல பாவனை செய்தபடி அடிக் கண்ணால் பாரதியின் முகத்தை ஆராய்ந்தாள் வர்ஷா.. வெளுத்திருந்த முகம் இருண்டிருந்தது..
‘மகளே..! இதுதாண்டி உனக்கு நிரந்தரம்..’ மனதுக்குள் கருவியவள் தாக்குதலைத் தொடர்ந்தாள்..
“நான் என்ஜினியரிங்கை முடிச்சுத்தான் ஆகனும்னு என்ன கட்டாயம் மேம்..? என் டாடி இண்டஸ்ட்ரியலிஸ்ட்.. என்பேரண்ட்ஸீக்கு நான் ஒரே வாரிசு.. கம்பெனியும் கோடிக்கணக்hன சொத்தும் எனக்காக காத்திருக்க, பைத்தியம் போல நான் மேரேஜைத் தள்ளிப் போடலாமா..? இப்பப் பாருங்க.. பழைய காதலின்னு நீங்க வந்து நிற்கறிங்க.. முரளியின் மனசில குற்ற உணர்வு வந்திருச்சு.. பாரதி ஹஸ்பெண்ட், குழந்தைன்னு சந்தோசமா இருக்கிறான்னு தெரிகிற வரைக்கும் மேரேஜைத் தள்ளிப் போடலாம்ன்னு முரளி சொல்றார்.. என்னை விட்டுட்டு உங்க பின்னால ஒருநாளும் அவர் வரமாட்டார் மேம்.. அது எனக்குத் தெரியும்.. பட்.. உங்க ஃபேமிலி லைஃப் நல்லாயில்லைன்னு தெரிஞ்சா குற்ற உணர்வில மருகுவார்.. நீங்க கஷ்டப்படறப்ப நாங்க சந்தோசமா வாழ முடியுமா..?”
அழுகையில்லாத முகத்தைக் கைக்குட்டையால் பொத்தியபடி பாரதியிடம் நியாயம் கேட்டாள் வர்ஷா.. பாரதி ஏறக்குறைய செத்திருந்தாள்..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.