Chapter 23
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது கடல்.. மதியத்து சூரியன் தனது கதிர்களை உக்கிரமாக கடற்கரையின் மணலில் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.. அந்த மணல் வெளியில் மல்லாந்து படுத்து சூரியனை முறைத்துக் கொண்டிருந்தான் முரளிதரன்..
“இந்தக் கொடுமையைப் பாருடா.. உச்சி வெயிலில பீச்சாங்கரை மணலில எந்தக் கிறுக்கனாவது படுத்திருப்பானா..? இந்தக் கிறுக்கன் படுத்திருக்கான்..” என்று சொல்லி விட்டு வினோத்திடம் மொத்து வாங்கினான் ரமேஷ்..
“அவன், இவன்னு சொன்ன.. பிச்சுப்புடுவேன் பிச்சு..”
“அதெப்பெடிடா வினோத்.. இந்த மனுசன் பீச்சாங்கரைல தான் படுத்திருப்பார்ன்னு கரெக்டா கண்டு பிடிச்ச..?”
“அதென்ன பீச்சாங்கரை.. பீச்சுன்னு சொல்லித் தொலையேன்.. நீ பீச்சாங்கரைன்னு சொல்கிறது பீச்சாங்கையின்னு காதில விழுந்து தொலைக்குது.. ச்சை..”
“உச்சி வெயில்ல சுடு மணலில கிடக்கிறது அந்த மனுசன்.. நீ அவரை விட்டுட்டு என்னைக் காய்ச்சறது நியாயமில்லைடா வினோத்.. கொஞ்சமாச்சும் மனச்சாட்சி இருக்கணும்..”
“யாருக்கு..?”
“உன் காதலிக்குத்தான்.. அவளாலதானே லோலு படறோம்..? இருந்திருந்து அவளைப் போய் காதலிக்கிறயே..”
வினோத் பதில் சொல்லாமல் முரளிதரனை அணுகினான்.. மல்லாந்து படுத்திருந்த முரளிதரனின் முகத்திற்கு மேலே இவன் முகம் குடை போல வந்ததில் இமைகளைச் சுருக்கின முரளிதரன்..
“கெட் லாஸ்ட்..” என்று கத்தினான்..
“டேய்.. அவரே கெட்லாஸ்ட்டுன்னு சொல்லிட்டாருடா.. வாடா.. ஓடிப் போயிரலாம்…” உற்சாகமானான் ரமேஷ்..
“சாரையும் சேர்த்து இழுத்துக்கிட்டு ஓடலாம்டா..” என்ற வினோத்..
“கமான் சார்..” என்று கை நீட்டினான்..
“குதிரையைக் கூப்பிடறதைப் போலவே கூப்பிடறான் பாரு.. சும்மாவே இந்த ஆளு கடிப்பான்.. இப்பக் குதறப் போறான்..” முணுமுணுத்தான் ரமேஷ்..
அவன் முணுமுணுத்தைப் போலவே முரளிதரன் பயங்கரமாகக் கத்த ஆரம்பித்தான்.. துள்ளிக் குதித்த ரமேஷ் பத்தடி தூரத்துக்குத் தள்ளிப் போய் நின்றபடி வினோத்தை ஓடிவந்து விடும்படி நச்சரித்தான்.. வினோத் நகரவில்லை.. நிதானமாக முரளிதரனைப் பார்த்து..
“பாரதி மேமைக் காப்பாத்தனும்ங்கிற எண்ணம் உங்களுக்கில்லையா சார்..? இவ்வளவுதானா உங்க காதல்..?” என்று கேட்டான்..
“வாட்..?” முரளி எழுந்து உட்கார்ந்து விட்டான்..
‘பாரதியைப் பற்றிய பேச்சுக்கு இவ்வளவு சக்தியா..?’ ரமேஷ் வாய் பிளந்தான்..
“உச்சி வெயில்ல எதையும் பேச வேணாம் சார்.. காருக்கு வாங்க.. ஏஸியில உக்காந்து பேசலாம்..” வினோத் மறுபடியும் கை நீட்டினான்..
“எதைப்பத்தி..?” வினோத்தின் கையைத் தட்டி விட்டுக் கம்பீரமாக எழுந்து நின்றபடி கேட்டான் முரளிதரன்..
“பாரதி மேம் உங்களுக்காகவே வாழ்கிறாங்கங்கிறதைப் பத்தி..”
முரளியின் பதிலை எதிர் பார்க்காமல் வினோத் நடந்துவிட ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் எதிர் கேள்வியைக் கேட்காமல் அவனைப் பின் தொடர்ந்தான் முரளி..
“ஒரு சிங்கம் முயலான கதையை இப்போத்தாண்டா பார்க்கிறேன்..” சிலாகித்தான் ரமேஷ்..
வினோத்தின் காரில் முன் சீட்டில் வினோத் உட்கார, பின் சீட்டில் முரளிதரன் உட்கார்ந்தான்..
“டெர்ரர் பக்கத்தில உட்காரச் சொல்லிராதேடா..” கெஞ்சலாக முணுமுணுத்தபடி முன்சீட்டிற்கு பாய்ந்து விட்டான் ரமேஷ்..
“இப்பச் சொல்லு.. எனக்காகவே வாழ்கிறவ அவளோட ஹஸ்பெண்ட் வந்துக்கிட்டு இருக்கார்ன்னு எப்படிச் சொல்லுவா..?”
“ஹஸ்பெண்டா..? ஹ..” என்ற வினோத் முரளியைப் பார்த்து..
“கல்யாணம் ஆனாத்தானே ஹஸ்பெண்ட் வர முடியும் சார்..? அவங்களுக்குத்தான் கல்யாணமே ஆகலையே..” என்றான்..
முரளியின் முகத்தில் ஒரு கோடி சூரியன்கள் வலம் வந்தனர்.. அவனது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் தெரிவதைப் போல இருக்கிறது என்று வினோத்தின் காதைக் கடித்தான் ரமேஷ்.. இல்லை.. எல்லையற்ற அமைதியிருக்கிறது என்று நிறைவுடன் முணுமுணுத்தான் வினோத்..
“பாரதியை திரும்பவும் பார்ப்பேன்னே நான் நினைக்கலை வினோத்.. திடிர்ன்னு வந்து நின்னவளைப் பார்த்தாலே போதும்ன்னு இருந்தது எனக்கு.. அவள் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சேன்.. தனியாத்தான் இருக்கேன்.. உங்ககூட வாழ்ந்தாத்தான் வாழ்வு.. அதுக்காகத்தான் வந்திருக்கேன்னு சொன்னா.. அதைப்பத்தி பேசனும்.. நேரில வாங்கன்னு சொன்னா.. ஆவலாப் போனவன் கிட்ட அவளோட ஹஸ்பெண்ட் வந்துக்கிட்டு இருக்கார்.. அவரோட வாழ்கிறதுதான் வாழ்வுங்கிறா வினோத்..”
“பொய் சொல்லியிருக்காங்க..”
“எதுக்காகப் பொய் சொல்லனும்..?”
“நீங்க வருகிறதுக்கு முன்னாடி வர்ஷா அவங்களைப் பார்க்க வந்திருக்கா சார்.. உங்க சிஸ்டரும் வர்ஷாவைப் பத்திப் பேசியிருக்காங்க.. ஸோ, பாரதி மேம் விலகிப் போக டிசைட் பண்ணிப் பொய் சொல்லிட்டாங்க.. ஆக்சுவலா சார்.. மேமோட கல்யாண ரிசப்சன் அன்னைக்கு நைட்ல அவங்க கல்யாண மண்டபத்தை விட்டுத் தப்பிச்சு ஓடிட்டாங்க..”
“ஆர் யு ஷ்யூர்..?”
கண்கள் ஜ்வலிக்கக் கேட்டான் முரளிதரன்.. அவனுடைய காதலி அவனை ஏமாற்றி விடவில்லை.. அவனுக்காக திருமண மண்டபத்தை விட்டே ஓடியிருக்கிறாள் என்பதில் அவனுக்குள் ஆனந்தம் வந்தது..
“ஷ்யூர் சார்.. மேமே இதைச் சொன்னாங்க.. இந்தியாவில இருந்தா எப்படியும் அவங்களோட பேரண்ட்ஸ் கண்டு பிடிச்சுருவாங்கன்னு லண்டனுக்குப் போயிட்டாங்களாம்.. நீங்க இந்தியாவில இருக்கிறதாலே அவங்களும் இந்தியாவிலேதான் இருப்பாங்கன்னு மேமோட பேரண்ட்ஸ் இங்கேயே ஸ்டே பண்ணிட்டாங்களாம்.. இத்தனை வருசமா அவங்க உங்களைப் பார்க்க வரலைன்னதும் மேமோட பேரண்ட்ஸ் அமெரிக்காவுக்குப் போயிட்டாங்களாம்.. அங்கேயிருந்த டிவி சேனல்களில மேம் அவங்களோட காதலரை கல்யாணம் பண்ணிக்க அப்ஜெக்ட் பண்ண மாட்டோம்ன்னு பேட்டி கொடுத்து மேமைத் திரும்பி வரச் சொல்லிக் கெஞ்சினாங்களாம்.. மேமோட பேரண்ட்ஸ் அமெரிக்கா வந்துட்டதினால மேம் இந்தியாவுக்கு வந்தாங்களாம்.. தாத்தா, பாட்டி கிராமத்துக்கு போயிட்டதால தனியா வீடெடுத்து தங்கினாங்களாம்.. நம்ம காலேஜில லெக்சரர் போஸ்ட் காலியாய் இருந்ததினால அப்ளை பண்ணினாங்களாம்.. உங்களுடன் வேலை பார்க்கிறது பியூச்சருக்கு நல்லதுன்னு பிளான் பண்ணினாங்களாம்.. அவங்க நினைத்ததைப் போல வேலையும் கிடைத்து உங்களையும் பார்த்துட்டாங்களாம்.. கூடிய சீக்கிரத்தில எனக்கும் முரளிக்கும்மான கல்யாண இன்விடேசனைக் கொடுப்பேன்னு சொன்னாங்க சார்.. இந்த வர்ஷா ஊடே புகுந்து குட்டையைக் குழப்பிட்டா..”
“அவளை..”
பல்லைக் கடித்தான் முரளிதரன்.. உதட்டைக் கடித்தான் வினோத்..
“வேண்டாம் சார்..” என்றான்..
“இப்படிப்பட்ட வேலையைச் செய்திருக்கிறவளை எப்படிச் சும்மா விடறது வினோத்..? உனக்குத் தெரியாதுப்பா.. அவ ரொம்பவும் லிமிட்டைத் தாண்டறா..”
“எனக்குத்தெரியும் சார்..”
“தெரிந்துமா வேண்டாம்ங்கிற..?”
“ஐ லவ் ஹெர் சார்..”
வேதனையுடன் சொன்னான் வினோத்.. அவன் முகத்தைப் பார்த்த முரளிதரன் மௌனமானான்.. சில சந்தர்ப்பங்களில் பேச முடியாது.. இது அது போன்றதொரு சூழலைக் கொண்டது..
“நீங்க மேமைப் பார்க்கப் போங்க சார்.. நான் வர்ஷாவைப் பார்க்கப் போறேன்.. அவ செஞ்சு வைச்சிருக்கிற வேலையைப் பத்தி அவளுக்குப் புரிய வைக்கனும்..”
எதுவோ செய் என்பதைப் போல தோள்களைக் குலுக்கிய முரளிதரன் கார் கதவைத் திறந்து இறங்க யத்தனித்தான்.. என்ன நினைத்தானோ வினோத்தைப் பார்த்துப் பரிவுடன் புன்னகைத்தான்..
“அப்படியே டைனோசர் சிரிக்கிறதைப் போலவே இருக்கு..” ரமேஷ் முணுமுணுத்தான்..
“ஐ லவ் யு வினோத்..” முரளிதரன் வினோத்தைக் கட்டியணைத்து தோள்களைத் தட்டிக் கொடுத்து விட்டுப் போனான்..
“என்னடா ராசி உன் ராசி..? இப்படியா உன் ராசி இருக்கனும்..? வர்ஷா ஐ லவ் யு ன்னு சொல்லிக் கட்டிப் பிடிப்பான்னு பார்த்தா டெர்ரர் ‘ஐ லவ் யு’ சொல்லிக் கட்டிப் பிடிச்சுட்டு போறாரு.. முடியலைடா..”
“அடங்குடா..”
காரைக் கிளப்பிக் கொண்டிருந்த முரளிதரனை அன்புடன் பார்த்தான் வினோத்.. வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல முரளிதரனின் கார் சீறிப் பாய்ந்தது.. இனி பாரதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமிருக்காது என்ற நிம்மதியுடன் இவனும் காரைக் கிளப்பினான்..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.