Chapter 24
“வாங்கண்ணா.. வாங்கண்ணி.. நீங்கள்ளாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து நின்னிருக்க வேணாமா..? சரியா முகூர்த்த நேரத்துக்கு வர்றீங்களே..”
குறைபடுவதைப் போலப் பேசிய அபிராமியின் முகத்தில் விரிந்த சிரிப்பு இருந்தது.. வயதை மறந்து பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள் அவள்.. மனைவிக்குக் குறையாத சுறுசுறுப்புடன் திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்..
“விட்டா உன் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவாரு போல.. இளமை திரும்பியிருக்குடி..” மாமனாரை கிண்டலடித்தான் சந்தான கிருஷ்ணன்..
“எங்கம்மா விட மாட்டாங்க..” பதிலடி கொடுத்தாள் மாளவிகா..
“அப்படியே உன்னைப் போலன்னு சொல்லு..” மண்டபத்தில் இங்கும் அங்குமாக நடைபயின்று கொண்டிருந்த டீன் ஏஜ் பெண்களை பார்வையிட்டபடி சொன்னான் சந்தான கிருஷ்ணன்..
“அங்கேயென்ன பார்வை வேண்டிக் கிடக்கு..” சிடுசிடுத்த மாளவிகா..
“இவனைப் பிடிங்க..” என்று நவினை சந்தான கிருஷ்ணனின் தோளில் ஏற்றி விட்டுப் போய் விட்டாள்..
அதுவரை சந்தானகிருஷ்ணனின் கள்ளப் பார்வைக்கு கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்த டீன் ஏஜ் பெண்ணொருத்தி நவினைத் தூக்கிக் கொண்ட சந்தான கிருஷ்ணனிடம் வந்து..
“தம்பி என்ன கிளாஸ் படிக்கிறான் அங்கிள்..?” என்று கேட்டு அவன் இதயத்தில் அணுகுண்டை வீசினாள்..
“நான் அங்கிள்..? இவன் உனக்குத் தம்பி..?” பல்லைக் கடித்தபடி நகர்ந்து விட்டான் சந்தான கிருஷ்ணன்..
“அவ முகத்தில தெரியற சந்தோசத்தைப் பார்த்தியா..? இந்த சந்தோசம் நீங்க ரெண்டு பேரும் பார்த்து வைச்ச மாப்பிள்ளை பக்கத்தில நிற்க வைச்சப்ப இருந்துச்சா..?”
மருமகளிடம் நறுக்கென்று நான்கு கேள்விகளைக் கேட்டு முரளிதரனுடனான பாரதியின் திருமணத்தைப் பேசி முடிவு செய்ய வைத்திருந்த பாகீரதி.. ஐந்தாவது கேள்வியைக் கேட்டாள்..
“இல்லைதான் அத்தை..” பாரதியின் அம்மாவான அனுபமா நலிந்த குரலில் சொன்னாள்..
“மனம் போல மாங்கல்யம்ன்னு சொல்லுவாங்க.. அது கட்டிக்கப் போகிற மாப்பிள்ளை, பெண்ணோட மனங்களைச் சொன்னது.. கட்டிக் கொடுக்கிற பெத்தவங்களோட மனங்களைப் பத்திச் சொன்னதில்ல..” அடுத்ததாக மகனை ஓர் பிடி பிடித்தாள் பாகீரதி..
“தப்புத்தான்ம்மா..” காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடாத குறையாக தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் பாரதியின் அப்பா பரத்குமார்..
“போதும் பாகி.. நம்ம மகனும் மருமகளும் செஞ்ச தப்புக்குத் தண்டனையா இத்தனை நாளா பாரதியைப் பிரிஞ்சிருந்துட்டாங்க.. இனியும் அவங்க தப்பைச் சொல்லிக் காட்டக் கூடாது..” பாரதியின் தாத்தாவான சடகோபன் மனைவியைக் கண்டித்தார்..
“மனசு ஆறலைங்க..” பாகீரதி பட்டுச் சேலையின் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
“பாரின்லேயே பிறந்து வளந்தவளுக்கு இந்தியாவில பிறந்து வளர்ந்த மாப்பிள்ளை தோதுப்படாதுன்னு நினைச்சிட்டோம் அத்தை..” தன்னிலை விளக்கம் கொடுத்தாள் அனுபமா..
“போனதை விடு அனு.. அங்கே பார்.. நம்ம பொண்ணு சந்தோசமா மணவறையிலே உட்கார்ந்திருக்கிறா..”
பரத்குமார் மணமேடையைச் சுட்டிக் காட்டினார்.. முகமெல்லாம் சிரிப்பாக முரளிதரனை நொடிக்கொருதரம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி.. எவருக்கும் தெரியாமல் அடிக்கடி அவளிடம் இமை சிமிட்டி முகத்தை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் முரளிதரன..
“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..”
எவேரா குரல் கொடுக்க நாதஸ்வரம் உரத்து ஒலித்தது.. மாங்கல்யத்தை எடுத்து பாரதியின் கழுத்தில் கட்டினான் முரளிதரன்.. இமை மூடி நிதரிசனத்தை அனுபவித்தாள் பாரதி..
‘இது நடக்கும்ன்னு நினைத்தேனா..?’
எத்தனை நாள்கள்..? மாதாங்கள் வருடங்களாகி ஓட.. இவளும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தாள்.. ஒரு வழியாய் மறைவிடத்தை விட்டு வெளிப்பட்டு முரளியைத் தேடி வந்தபோது முரளி அவளுக்காகவே காத்திருந்தான்.. என் முரளியென அவனுடன் கலந்து விட முடியாமல் வர்ஷா குறுக்கே வந்தாளே..
‘அன்னைக்கு மட்டும் முரளி சரியான சமயத்தில வரலைன்னா..’
பாரதியின் மனம் நடுங்கியது.. வர்ஷா வந்து போனவுடன், முரளி வந்து போனான்.. சோர்ந்து சரிந்திருந்தவளைப் பார்க்க வந்த வினோத்தும் ரமேஷீம் வெளியேறியவுடன் கொஞ்ச நேரம் தொய்ந்து படுத்திருந்தவள் ஒரு முடிவுடன் எழுந்து தூக்க மாத்திரைப் பாட்டிலை எடுத்தாள்.. அதன் மூடியைத் திறந்து மாத்திரைகளை வாயில் கொட்ட முயன்றபோது முரளியின் கரம் அதைத் தட்டி விட்டது..
“முரளி..” அவன் முகம் பார்த்துத் திகைத்து விம்மினாள்..
வேகத்துடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்ட முரளிதரன் அவளைப் பேச விடவில்லை..
“எல்லாம் எனக்குத் தெரியும்.. என்னோடு வா..” என்று அவன் வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டான்..
“அம்மா.. என் பாரதி கல்யாணம் பண்ணிக்கல.. எனக்காக இத்தனை நாளா தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்திருக்கா.. இப்ப என்னைத் தேடி வந்துட்டா.. எப்படி..? நீங்க பெரியவங்கள்ளாம் கலந்து பேசி எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறிங்களா.. இல்லை நாங்களாவே கல்யாணம் பண்ணிக்கட்டுமா..?”
விவரம் அறிந்த மாளவிகா பாரதியிடம் மண்டி போட்டு மன்னிப்புக் கேட்டு கண்ணீர் உகுத்தாள்.. பாரதியின் தாத்தாவும் பாட்டியும் ஓடி வந்தார்கள்.. அமெரிக்காவிலிருந்த மகனையும் மருமகளையும் வரவழைத்தார்கள்.. இரு வீட்டாரும் ஒன்றுபட்டுக் கல்யாண நாள் பார்த்து முகூர்த்தம் குறித்தார்கள்..
“முதல்நாள் ஈவினிங் ரிசப்சன்..” பரத்குமார் விவரிக்க.
“ஊஹீம்.. தாலி கட்டி முடிச்ச ஈவினிங்தான் ரிசப்சனை வைக்கனும்..” என்று மறுத்து விட்டான் முரளிதரன்..
பாரதியின் முந்தைய கல்யாண ஏற்பாடு ரிசப்சனுடன் நின்று விட்டதை மனதில் கொண்டு பரத்குமாரும் முரளிதரனின் மனம் போல மறுநாள் மாலையில் ரிசப்சன் என்று மாற்றியமைத்து விட்டார்..
வர்ஷாவைத் தேடிப் போன வினோத் அவள் கன்னத்தில் ஆத்திரம் தீர இரண்டு அப்பு அப்பினான்..
“நீ யார் என்னை அடிக்க..?” என்று ஆத்திரப்பட்டவளிடம்..
“உன் வருங்கால ஹஸ்பெண்ட்..” என்று அதட்டினான்..
“கனவு காணாதே.. நான் அந்த முரளிதரனைக் கல்யாணம் பண்ணிக் காண்பிப்பதாக சேலன்ஜ் பண்ணியிருக்கேன்..” திமிறினாள் வர்ஷா..
“நீதாண்டி கனவு கண்டுக்கிட்டு இருக்க.. உன் சாயம் வெளுத்துப் போயிருச்சு.. முரளிசாருக்கு உண்மை தெரிஞ்சுருச்சு..”
“என்ன..? பாரதி காட்டிக் கொடுத்துட்டாங்களா..?”
“அவங்க காட்டிக் கொடுக்கலை.. அவங்க கதை தெரிஞ்ச நான்தான் காட்டிக் கொடுத்தேன்.. அவங்களைப் பத்தி உனக்கென்னடி தெரியும்..?”
வினோத் பாரதியின் கடந்த காலத்தைப் பிட்டுப் பிட்டு வைத்ததில் நிலை குலைந்து போனாள் வர்ஷா..
“காட்..! எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது வினோத்.. அவங்க மேரிட் வுமன்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..”
“இல்லை.. அவங்க முரளிக்காக வாழ்கிறவங்க.. இப்பச் சொல்லு.. அவங்க வாழ்க்கையில நீ இண்டர்பியர் ஆகப் போறியா..?”
“மாட்டேன்..” தலையசைத்த வர்ஷா..
“ஐ லவ் யு..” என்று வினோத்தின் மார்பில் சாய்ந்தாள்..
“உனக்கு நான், எனக்கு நீன்னு விதி முடிவு பண்ணியிருக்கப்ப நீ என்ன சதி பண்ணினாலும் என்னை விட்டு ஓட முடியாதுடி..” வினோத்தின் கைகள் அவளைப் பிணைத்துக் கொண்டன..
முரளிதரன், பாரதியின் திருமண ரிசப்சனில் வினோத்தும் வர்ஷாவும்தான் முன்னால் நின்று வேலை செய்தார்கள்.. கல்லூரியே அங்கு கூடியிருந்ததில் ரிசப்சன் களை கட்டியது.. மெல்லிசைக் கச்சேரி இன்னொரு மேடையில் நடந்து கொண்டிருக்க.. கையில் மைக்குடன் ரிசப்சன் மேடையில் ஏறிய வர்ஷா.. மெல்லிசைக் கச்சேரியை சற்று நேரம் நிறுத்தி வைக்கும்படி மைக்கில் சொன்னாள்..
“லேடிஸ், அண்ட் ஜென்டில்மேன், நம்ம முரளிசாரும் பாரதி மேமும் லவ்வர்ஸா இருந்து ஹஸ்பெண்ட் அண்ட் வொய்பா ஆகியிருக்காங்க.. நம்ம முரளிசாரை மேம் என்ன பாட்டுப் பாடிக் கவுத்தாங்கன்னு உங்களுக்குத் தெரிய வேணாமா..?”
வர்ஷா மைக்கில் கேட்டாள்.. கூட்டம்..
“தெரியனும்..” என்று ஆர்ப்பரித்தது..
“பாடுங்க மேம்..” வர்ஷா மைக்கை பாரதியிடம் கொடுத்தாள்..
“நேற்று இந்த நேரம்..
ஆற்றங்கரை ஓரம்..
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்களே..”
பாரதி காதலுடன் முரளிதரனைப் பார்த்தபடி பாடினாள்.. முரளி கள்ளுண்ட சிங்கமாக சொக்கினான்.. வர்ஷாவை லேசாக அணைத்துக் கொண்ட வினோத்தின் மனம் லேசானது..
– முற்றும் –
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.