Chapter 01

0Shares

ஆசிரியர் கடிதம்…

மனம் விட்டுப் பேசலாமா..?

என் பிரியத்துக்குரிய வாசக.. வாசகிகளே..!

ஏதேனும் பேரம் பேச நேரும் போது இதை வாங்க வந்திருக்கிற மூஞ்சியைப் பாரு என்ற சொற்றொடரைக் கேட்க நேரிடும் அல்லவா..? அதைப் போன்ற ஒரு சொற்றொடரை என் அம்மா அடிக்கடி என்னைப் பார்த்து பிரயோகிப்பார்.. அது என்ன சொற்றொடர் என்று கேட்கிறீர்களா..?

“வேலைக்கு ஆள் வைத்துக்கிற மூஞ்சியைப் பாரு..” என்பதுதான் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற சொற்றொடர்..!

ஆமாங்க.. என் மூஞ்சி அப்பேற்பட்ட மூஞ்சிதான்.. எனக்கு வேலை வாங்கத் தெரியாது என்ற மிகப் பெரும் பலவீனத்தை இங்கே நான் ஒப்புக் கொள்கிறேன்.. மற்ற வீடுகளில் 500/- ரூபாய்க்கு மாடாய் உழைக்கும் வேலைக்காரப் பெண்மணிகள் என்னிடம் மட்டும் 5000/- ரூபாய் வாங்கிக் கொண்டு.. கால் மீது கால் போட்டு சோபாவில் பேனுக்கு அடியில் உட்கார்ந்து டிவி பார்த்தபடி ஜீஸ் குடித்து விட்டு வேலை செய்யாமல் ‘டிமிக்கி’ கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்..

(பி.கு.. அந்த ஜூஸையும் நான்தான் அவர்களுக்குப் போட்டுக் கொடுப்பேன் என்ற ஊரறிந்த ரகசியத்தை யாரிடமும் நீங்க வாய் விட்டு விடக் கூடாதுப்பா..)

வியர்வையுடன் வருகின்றவர்களிடம் உடனடியாக வேலை சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கும்.. காற்றாட பேன் போட்டு உட்கார்ந்து குளிர்ச்சியாக எதையாது குடித்து விட்டு வேலையை ஆரம்பியுங்கள் என்பேன்.. சிரமப் பரிகாரம் செய்து கொள்பவர்கள் என் வீட்டில் வேலை செய்ய மிகவும் சிரமப் பட்டுப் போவார்கள்.

இந்த இரக்க குணத்தை ‘ஈனா, வானா’ குணம் என்பார் என் அம்மா.. இதனாலேயே திண்டுக்கல்லில் அம்மா வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தவரை என் வீட்டுக்கென தனி வேலையாள் வைத்துக் கொள்ள அம்மா அனுமதித்தே இல்லை.. அம்மா வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வார இறுதியில் வந்து வீட்டைச் சுத்தம் பண்ணித் துடைத்து விட்டுப் போவார்.. சாப்பாடும் அம்மா வீட்டிலிருந்து வந்து விடும்.

அம்மாவின் சிறகுக்கடியிலிருந்து விடுபட்டு தனித்து பாண்டிச்சேரியில் குடியேறிய பின்பு தனித்து வேலையாள்களை நியமிக்கும் மிகப் பெரும் சோதனை என்தலைமீது விழுந்தது.

அப்பப்பா..! ஒவ்வொரு கதையும் ஒரு விதம்.. சென்னைக்கு வந்த பின்பு அதிக அளவில் இடங்களைச் சந்திக்கிறேன்.

ஒரு தம்ளர் அரிசிக்கு எத்தனை தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும் என்று தெரியாத சமையல்காரப் பெண்மணி..! வீடு கூட்டும் பெருக்குமாறை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று தெரியாத வேலைக்காரப் பெண்..! இருவருக்கும் வேலை சொல்லிக் கொடுக்கப் போக கடைசியில் சமையல்காரம்மா சோபாவில் உட்கார்ந்து டிவி பார்க்க நான் சமைத்து முடித்து அவர்களுக்கான சாப்பாடை கேரியரில் வைத்துக் கொடுத்து விட்டேன்.. வேலைக்காரப் பெண் ஒன்றும் அறியாத அப்பாவியாய் தெருவில் நின்று கதைபேச நான் வீட்டை பெருக்கிக் கொண்டிருந்தேன்..

இந்த சோதனைகள் போதாது என்று முன் பணமாக 5000 முதல் 10,000 வரை கேட்பார்கள்.. முடியாது என்று மறுக்க முடியாது.. கொடுத்தவுடன் வேலைக்குக் கடுக்காய் கொடுத்து விட்டுக் காணாமல் போய் விடுவார்கள்.. பணத்தையும் இழந்து நான் அடுத்த வேலையாளைத் தேட வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்.. என் அம்மா சொல்லும் சொற்றொடர் சரியானதுதானே..?

மனம் விட்டுப் பேச இன்னொரு நிகழ்வும் இருக்கிறதுப்பா.. சென்னையில் வீடு வாங்கி குடியேறி விட்டோம்.. புது வீட்டில் குடியேறி விட்ட சந்தோசத்தை வீட்டைக் கட்டிக் கொடுத்த பில்டர் இல்லாமல் செய்து விட்டார்.. மனம் முழுவதும் பாரம் நிரம்பியிருக்கிறது.. மனிதர்களின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்திருக்கிறது.. கடவுளிடம் பிணங்கி விலகி நிற்கிறேன்.

குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி அது.. பெயர் வேண்டாம்.. என்னால் அந்தக் கம்பெனி பாதிப்படைந்ததாக இருக்கக் கூடாது.. அவர்களிடம் நிலம் வாங்கி கட்டிடம் கட்டித் தர அவர்களையே ஒப்பந்தம் செய்திருந்தோம். ஒப்புக் கொண்ட தொகை அனைத்தையும் கொடுத்து பத்திரப் பதிவு செய்து முடித்தோம்.. வீடு முழுமையடையும் முன்னர் கிரகப் பிரவேசமும் செய்து குடியேறி விட்டோம்.. நாங்கள் குடியிருந்த ‘பேய்’ வீட்டைக் காலி செய்து கொடுக்க வேண்டியிருந்தது.. அது பற்றி மற்றொரு ஆசிரியர் கடிதத்தில் மனம் விட்டுப் பேசுகிறேன்.. முழுமையடையாத வீட்டை முடித்துக் கொடுக்காமல் மேற்கொண்டு லட்சக் கணக்கில் பணம் கேட்டுத் தகராறு செய்து விட்டார் பில்டர்.. கடப்பாக் கல்லைப் போட்டு எனக்கு ஒரு புத்தக அலமாரியை அமைத்துத் தந்தாராம்.. பத்தாயிரம் கூட பெறுமானமில்லாத வேலையைப் பொய் காரணம் காட்டி லட்சக் கணக்கில் எங்களை செலவளிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.. பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், கொத்தனார் என்று ஆள் தேடி வீடு முழுவதும் தூசியும்,  தும்புமாக அவதிபட்டுக் கொண்டிருக்கிறேன்.. இதில், என் கணவரும், மகனும் இல்லாத சமயத்தில் வீட்டுக்கு ஆள்களுடன் வந்து மிரட்டி நான் 100-க்கு கால் பண்ணி அவசர போலிஸை உதவிக்கு அழைத்தது கொடுமையிலும் கொடுமையான வன் கொடுமை.. 

அமைதியில்லாத சூழலில் பேனா பிடிக்க முடியாமல் வெகுவாக சிரமப் படுகிறேன்.. எட்டு பாக நாவலான ‘எண்ணியிருந்தது ஈடேற..’ கதையில் ஆறு பாகம்தான் வெளிவந்திருக்கின்றன.. மீதம் இரண்டு பாகமும் என் மனதிலேயே தங்கியிருக்கின்றன.. வெளிப்படுத்துவதற்கான நிம்மதி என் வசமில்ல..

‘சிரிப்பது போல முகமிருக்கும்..

சிரிப்புக்குப் பின்னால் விசமிருக்கும்..’

இவை சத்தியமான வார்த்தைகள்.. அடுத்த ஆசிரியர் கடிதத்தை எழுதும் போதாவது எனக்கு அமைதி கிடைத்திருக்குமா..?

– நட்புடன் –

முத்துலட்சுமி ராகவன்

கவிதை சொல்லவா..?

நிலா நிலா ஓடி வா.. 

சாட்சி சொல்ல ஓடி வா..!

களங்கமில்லா பெண் நிலா

கானகத்தில் தொலைந்த நிலா

காவல் தேடிப் பரிதவித்ததற்கு,

கடவுள் தேடி ஓடியதற்கு

நிலவே நீ சாட்சி!

இரவோடு இரவாக நிழலோடு நிழலாக

தொடராமல் தொடர்ந்து சென்றான்

இடர் நேராமல் சுடர்கொடுத்தான்

சுடர் கொடுத்த வள்ளலுக்கு

இடர் கொடுத்த மனிதர்களுக்கு

நிலவே நீ சாட்சி!

– முத்துலட்சுமி ராகவன்


அமைதியாய் கண்களை மூடிப் பரவசத்துடன் வேண்டிக் கொண்டிருந்தாள் காவ்யா. கைகளைக் குவித்து வணங்கிக் கொண்டு இருந்தவளை “பிரசாதம் வாங்கிக் கோங்க..” என்ற அர்ச்சகரின் குரல் கண்களைத் திறக்க வைத்தது. லட்சுமி தேவியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு பிரசாதத்திற்குக் கை நீட்டினாள். பூவும் குங்குமமும் இணைந்து வந்தது. 

பக்கத்தில் நின்று கொண்டிருந்த வயதான அம்மாள். “லட்சுமி பூவும் பொட்டும் கொடுத்திருக்கும்மா. உனக்கு யோகம்தான்..” என்று சிரித்துக் கொண்டே கூறினாள். பதிலுக்கு மரியாதையுடன் சிரித்த காவ்யா, ஹரிதாவுடன் வெளியே வந்தாள். அலைகள் கொஞ்சும் கடலோரம் அமைந்துள்ள வெண்மை நிற அஷ்டலட்சுமி கோவில், தூரத்தில் தெரிந்த கடலருகில் சென்று மணலில் அமர்ந்து கொண்டபோது மனம் எதிரே தெரிந்த அலைகடலாய் ஆடியது. யானையின் தந்தம் போல் வெந்நிறக் கடைசலுடன் கூடிய அஷ்டலட்சுமி கோவிலை திரும்பப் பார்த்த காவ்யா பெருமூச்சு விட்டாள்.

“என்ன காவ்யா! ஏக்கமா பெருமூச்சு விடறே. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அஷ்டலட்சுமிகளை தரிசனம் பண்ண வந்திடுவே. நாளைக்கு ஊருக்குப் போயிட்டால் அது முடியாதேன்னு வருத்தமா..?” என்றாள் ஹரிதா..

“ஆமாம் ஹரிதா! நேற்றுப் போல் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து வந்து நான் சென்னையில் காலேஜில் சேர்ந்தது. ஆச்சு. கண்ணை மூடித் திறக்கறதுக் குள்ளே காலம் எவ்வளவு வேகமாய் ஓடுது பார்த்தாயா..? அதுக்குள்ள மூன்று வருசம் ஓடியே போய்விட்டது. இன்னையோட ஃபைனல் எக்ஸாமும் முடிந்து விட்டது. நாளைக்கு நீயும், நானும் ஆளுக்கொரு திசையில் பிரியணும்.”

“மூன்று வருடங்கள் சேர்ந்தே இருந்திட்டோம். நாளையோட நம்ம பிரண்ட்சிப் கட்டாயிடும் அப்படித்தானே…?”

“தெரியலை ஹரிதா.. எதையும் உறுதியாச் சொல்ல முடியலை. ஆண்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் நட்பை வாட விடாமல் காத்து வருகிறார்கள். பெண்கள் ஆசாபாசங்களை விடுவதைப் போல் நட்பையும் ஒரு ஸ்டேஜில் துறக்கத்தான் வேண்டியிருக்கிறது.”

“பசங்களோட உலகமே தனி காவ்யா. ஏதாவது ஒரு பாலத்தைக் கடக்கும்போது அதன் பக்கச் சுவர்களில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு அரட்டையடிக்கும் பசங்களைப் பார்க்கும்போது நம்மால் இப்படி உட்கார்ந்து அரட்டை அடிக்க முடியுமான்னு ஏக்கமாயிருக்கும் தெரியுமா..?”

“உன் வீட்டில் உனக்குச் சுதந்திரம் அதிகம் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் ஹரிதா. உனக்கே இப்படியென்றால் எங்கள் வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம். எனக்கு எப்படியிருக்கும் சொல்லு..?”

“மேலே என்ன செய்யப் போகிறே காவ்யா..? பி.ஜி. பண்ணப் போகிறாயா..? இல்லை வேலை தேடப் போகிறாயா..?”

“தெரியலை ஹரிதா..”

“ஏண்டி..? பிரண்ட்சிப் கட் ஆயிடுமான்னு கேட்டால் தெரியலை என்றாய் சரி. ஆனால் எதிர்காலத் திட்டம் என்னன்னு கேட்டால் அதற்கும் தெரியலைன்னு சொல்கிறாயே..?”

“உண்மையாகவே தெரியாது ஹரிதா. நான் மேலே என்ன செய்யணும்னு அம்மா, அப்பா, அண்ணாதான் முடிவெடுக்கணும்.”

“நீயாய் எதையும் யோசிக்க மாட்டாயா..?”

“யோசிச்சுப் புண்ணியமில்லை ஹரிதா. என் முடிவு என் வீட்டிற்குப் பிடிக்காமல் போய் விட்டால் பிரளயமே வந்து விடும். அது தேவையான்னு நான் என்னைப் பத்தி எதுவுமே யோசித்ததில்லை. அவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குவேன். எனக்குன்னு தனிப்பட்ட எதிர்பார்ப்பு களை வைத்துக் கொண்டதில்லை.”

“போடி, பூம்பூம்மாடு! இப்படியொரு பெண் இந்தக் காலத்தில் இருப்பாளா..? சுயசிந்தனையில்லாத பெண்ணாக எப்படியடி உன்னால் இருக்க முடிகின்றது..? வகுப்பில் ‘புத்திசாலி’ ன்னு பெயர் வாங்கியிருக்கிறாய். முதல் ரேங்கில் மார்க் வாங்குகிறாய். அப்புறம் ஏண்டி இப்படிச் சொதப்புற..?”

“அது அப்படித்தான். குடும்பம் போர்க்களமாகக் கூடாது என்றால் நாம் ஜீரோவாக தாராளமாக இருக்கலாம். தப்பில்லை. குடும்ப அமைதிதான் முக்கியம். சரி என்னை விடு. நீதான் சுயமாய் முடிவெடுக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறவளாயிற்றே. நீ என்ன செய்யப் போகிறாய்..?”

“மேலே.. மேலே.. படித்துக் கொண்டே இருப்பேன் காவ்யா. எனக்கு இந்த பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. பட்ட மெல்லாம் போதாது, ஐ.ஏ.எஸ். பண்ண வேண்டும். கலெக்டர் ஆக வேண்டும். அதுதான் என் லட்சியம். ஆனால் காவ்யா.. நீ என்னை விட அதிகம் மார்க் வாங்குகிறவள். உனக்கு இந்த மாதிரி லட்சியம் எதுவும் இல்லையா..?”

“நான்தான் சொல்லுகிறேனே. ஒரு பெண்ணிற்கு இந்த அளவுப் படிப்பு போதும் என்று வீட்டில் சொல்லுவார்கள். பி.எஸ்ஸி. படிக்க விட்டதே கல்யாண மார்க்கெட்டில் வெறும் +2 என்றால் மதிப்பில்லை என்றுதான். இதற்கு மேல் படிக்க வைக்க மாட்டார்கள்.”

“இதுவரை ஒரு தடவை கூட உன் மனம் சொன்னபடி நீ நடந்து கொண்டது இல்லையா..?”

“இல்லை – என் வீட்டில் என்ன சொல்வார்களோ அதைத்தான் செய்வேன்..” என்று பதில் சொன்னாள் காவ்யா, எதிர்காலத்தில் அவளது இந்த வார்த்தைகள் பொய்த்துப் போகப் போவதை அறியாதவளாய்.

“என்னமோ போடி. உன்னோடு நான் ஒரே ரூமில் மூன்று வருடம் கழித்து விட்டேன். உன்னை மாற்றவே முடியலை. ஆமாம். உன்னை ஒண்ணு கேட்கணும்.”

“ஏன் இரண்டு கேட்க மாட்டாயா..?”

“ஜோக்கா..? ஹாஹா.. போதுமா.. சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கிறாயா..?”

“என் காதை உன்னிடம் எப்படியடி கொடுக்க முடியும்..?”

“கடவுளே! இவள் ரோதனை தாங்க முடியவில்லையே.”

“சரிசரி சொல்லு..” என்று சிரித்தாள் காவ்யா.

“நேத்து சாயந்திரம் வினோத் என்கிட்ட வந்து பேசினான்.”

“ஓகோ. இதைச் சொல்லத்தான் இவ்வளவு பீடிகையா..? வா போகலாம்..” என்று காவ்யா எழுந்திருக்க முயல ஹரிதா அவளை தோளைப் பிடித்து அழுத்தி அமர வைத்தாள்.

“பொறுடி. அவன் என்ன பேசினான்னு கேட்டுட்டு எழுந்திரு.”

“அவன் உன்கிட்டப் பேசினது உன் சொந்த விசயம். அதை நான் ஏன் கேட்கணும்..?”

“இதுதானே வேணாம்கிறது. அவன் உன்னிடம் உன்னைத் திருமணம் பண்ணிக்கணும்னு விரும்பிக் கேட்டானாம். நீ மறுத்திட்டியாமே..?”

“ஆமாம். அது முடிந்து போன விசயமாச்சே.. இன்னும் ஏன் அவன் அதைப் பேசிக் கொண்டு திரிகின்றான்.”

“ஏண்டி. உன் வீட்டில் சம்மதிக்க மாட்டாங்கன்னு நினைக்கறியா..? அவங்க மாட்டேன்னு சொல்லவே மாட்டாங்களே. வினோத் பணக்காரன். படிப்பை முடித்ததும் அவனோட கம்பெனியின் எம்.டி. உன் இனம்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி முறைப்படி பெண் கேட்டு வரேன்னு தவமிருக்கிறான். ஏன் வேண்டாம்கிற.”

“சும்மாயிரு ஹரிதா. உனக்கு ஒண்ணும் தெரியாது. பணம் இருந்தால் போதுமா..? குணம் வேண்டாமா..?”

“அவன் குணத்திற்கு என்னடி குறைச்சல்..? அவனுக்காக எத்தனை பெண்கள் ஏங்குகிறார்கள் தெரியுமா..?”

“ஆமாம் உன்கிட்ட எல்லாப் பெண்களும் வந்து நாங்க ஏங்குகிறோம்ன்னு சொன்னாங்க. நீ கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்கிற.. ஏண்டி…? இப்படிப் பெண்களை அசிங்கப்படுத்தறே.. ஊரில் இருக்கிற பெண்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் இவனை நினைத்துக்கிட்டு இருக்கிறது போல இருக்கு உன் பேச்சு..”

“சரி சரி.. நான் பெண்களைத் தப்பாச் சொல்ல வில்லை. அவன் பெண்கள் விரும்பும் ஹீரோன்னு சொன்னேன் அவ்வளவுதான். என்னைக் காய்ச்சியது போதும். அவன் கண்ணில் தண்ணி விடுகிறான் தெரியுமா..?”

“நீ அதில் படகு விடு. இப்போ நான் எழுந்து ஓடா விட்டால் அந்த பஸ்ஸை விட்டு விடுவேன். வாயை மூடிக்கிட்டு என்னோடு ஓடி வந்தா அந்தப் பஸ்ஸைப் பிடித்து விடலாம். என்ன சொல்கிறாய்..?” என்று கேட்டவாறு காவ்யா எழுந்து விரைய ஹரிதா ஓட்டமும் நடையுமாய் அவளைப் பின் தொடர்ந்தாள். இருவரும் ஹாஸ்டல் வந்து சேர்ந்த பின்னர் இரவு வெகுநேரம் வளவளத்துக் கொண்டு இருந்து விட்டு விடியும்போது உறங்கிப் போனார்கள்.

மறுநாள் காலையிலிருந்து மாணவிகள் தனியாகவும் அவர்களை அழைத்துப் போக வந்திருந்தவர்களுடனும் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தனர்.

“என்னடி காவ்யா இரண்டு பெட்டிகள் மட்டும்தானா..?” என்று ஹரிதா கேட்டாள்.

“பக்கெட்டை கூட்டுகிற முனியம்மாவிடம் கொடுத்து விட்டேன். போர்வை தலையணையை வாட்ச்மேன் தாத்தாவிடம் கொடுத்து விட்டேன். டிரஸ்ஸையெல்லாம் போன செமஸ்டர் லீவில் ஊருக்குப் போனபோது முக்கால் வாசி கடத்திக் கொண்டு போய் வைத்து விட்டு வந்து விட்டேன். திருநெல்வேலி வரை டிரெய்னில் போகணும். அதிக சுமை எதற்கு..? எனக்கு உன்னைப்போல் சுமந்து போக காரா வரப்போகுது..?” என்றாள் காவ்யா.

“ஐடியா மன்னிதான் போ.”

“மன்னியா..? உனக்கு அண்ணனில்லையே. ஒத்தைக் காட்டு ரோஜாவாச்சே நீ..? அப்புறம் மன்னின்னு கூப்பிடுகிறே..?”

“வாஹ்ரே வா! இங்கே பாருடா.. ஊமை கூட வாயடிக்கிறது. என்ன மேடம்..? அண்ணனிருந்தா மன்னியாக ரெடியாக்கும். சரி எனக்குத்தான் அண்ணனில்லை. உனக்கு இருக்கிறாரே. நான் மன்னியாக… இல்லையில்லை.. உன் அண்ணியாக வரவா..?”

“நீ செய்தாலும் செய்வாய்டி. நீதானே மன்னின்னு சொன்னே..?”

“மன்னனுக்குப் பெண்பால் மன்னிதானே.. ஐடியா மன்னனுக்குப் பெண்பால் ஐடியா மன்னிதானே..”

“என்ன ஒரு தமிழ்ப்புலமை. புல்லரிக்கிறது போ.. தமிழ் அகராதியை உன்னைக் கேட்டு எழுதாமல் போய் விட்டார்களே..”

“இப்போ என்னடி கெட்டுப் போய் விட்டது..? நான் மாற்றி எழுதி விடுகிறேன்.”

“நீ செய்தாலும் செய்வேடிம்மா.. இந்த ஐடியா எனக்குச் சொந்தமில்லை.. என் அண்ணனுக்குத்தான் சொந்தம்.”

“அதுதானே.. நீயாவது சுயமாய் யோசித்துச் செய்வதாவது..?”

“சரிதான் போடி.. எனக்கும் சேர்த்து நீ இரு சுயம்மாய்.”

இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த போது ஹரிதாவின் அப்பா வந்துவிட ஹரிதா கவலைப்பட்டாள்.

“என்னடி காவ்யா.. அப்பா வந்து விட்டார். இன்னும் உன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையே.”

“அண்ணன் கட்டாயம் வந்து விடுவார். ஏன் லேட்டுன்னு தெரியலை. நீ கிளம்பு ஹரிதா. நான் அண்ணன் வந்ததும் போய்க் கொள்கிறேன்.”

பெங்களூர் போக வேண்டிய ஹரிதாவை அனுப்பி விட்டு காவ்யா யோசனையாய் நின்றபோது,

“காவ்யாம்மா.. உனக்குப் போன் வந்திருக்கு..” என்ற முனியம்மாவின் சத்தம் கேட்டது. காவ்யா விரைந்து சென்று தொலைபேசியை எடுத்தாள்.

“ஹலோ! காவ்யா..! அண்ணன் பேசுகிறேன்ம்மா.. இங்கே கிளம்பும் போது அப்பாவுக்கு சின்ன ஆக்ஸி டெண்ட்ம்மா.. தலையில் அடிபட்டிருக்கு. ஆஸ்பிடலில் அட்மிட் பண்ண வேண்டியதாப் போச்சு.. நான் வந்து உன்னைக் கூட்டி வர முடியாது. நீ உடனே கிளம்பி வந்து விடு. என்ன சரியா..?” என்றான் ஆனந்தன். காவ்யாவின் அண்ணன்.

“அப்பாவுக்கு என்னன்னா ஆச்சு. அடிபலமா..?” என்று பதறினாள் காவ்யா.

“அப்படியில்லைம்மா. லேசான காயம்ன்னு அலட்சியமா இருக்கக் கூடாதில்லை. அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விட்டார். இரண்டு நாளில் வீட்டுக்கு வந்திடுவார். நீ கவலைப்படாதே. நானும் அம்மாவும் பார்த்துக் கொள்வோம். நீ மட்டும் பத்தரமாய் கிளம்பி வா..” என்றான் ஆனந்தன்.

“சரிண்ணா..” என்று கூறிவிட்டுப் போனை வைத்த காவ்யா ஹாஸ்டலில் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு வாட்ச்மேன் தாத்தா பிடித்து வந்த ஆட்டோவில் ஏறினாள்.

“எக்மோருக்குப் போங்க..” என்றாள் காவ்யா ஆட்டோ டிரைவரிடம்,

ஆட்டோ அரை வட்டமடித்துத் திரும்பிச் சென்றது ரயில்வே ஸ்டேசனுக்குப் போகும் திசைக்கு எதிர் திசையில்..

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link