Chapter 08

0Shares

“நீங்கள் யார்..? காவ்யாவோட அட்ரஸ் உங்களுக்கு எதுக்கு..?” மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு கேட்டாள் அந்தப் பெண்கள் கல்லூரி விடுதியின் வார்டனம்மாள்.

‘என்ன சொல்வது..?’ என்று யோசித்தான் தியாகராஜன். ‘காதல் கோட்டை’படம் கை கொடுத்தது.

“மேடம்! திருநெல்வேலி தான் என் சொந்த ஊர். நேற்று திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன். டிரெயினில் நான் ஏறிய கம்பார்ட் மென்டில் ஒரு லேடிஸ் ஹேண்ட் பேக் இருந்தது.. யாருடையதுன்னு தெரியவில்லை. திறந்து பார்த்தேன். உள்ளே பணமும், சின்ன நகைப் பெட்டியும் இருந்தது.. ஒரு நோட் புக்கில் காவ்யா பி.எஸ்ஸி மூன்றாம் வருடம் என்று எழுதி உங்கள் காலேஜ் பெயர் எழுதியிருந்தது.. திருநெல்வேலி பொண்ணோன்னு மனசில் தோணுச்சு. மண்  வாசனை பாருங்கள். சொந்த ஊர் பெண்ணாக இருந்தால் நாளைக்குத் திருநெல்வேலி போனதும் நேரிலேயே கொடுத்து விடுவேன். இல்லையென்றால் பரவாயில்லை. இந்த பேக்கை போலீஸில் கொடுத்து விடுகிறேன்.” என்று சரளமாக சரடு விட்டான்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்..?”

“நாள் ஒரு லாயர் மேடம். ஒரு கேஸ் விசயமாகத்தான் நான் சென்னைக்கு வந்தேன். வந்த வேலை முடிந்து விட்டது. இன்று இரவே நான் திருநெல்வேலிக்குப் போக வேண்டும். அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன்.”

வார்டனம்மாள் அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பார்ப்பதற்கு மிகக் கண்ணியமான தோற்றம் கண்களில் பொய்யில்லை. ‘லாயர்’என்று வேறு சொல்லியிருக்கிறான். முகவரியைக் கொடுத்து விட்டாள்.

ஒரு நூல் முனை கிடைத்தால் போதும். கோடு போட வேண்டிய இடத்தில் ரோடே போட்டு விடுவான். தியாகராஜன். காவ்யா விசயத்திலும் அப்படித்தான் நடந்தது. அசோகன் அறியாமல் அவள் முகவரியைக் கண்டு பிடித்தே விட்டான்.

அன்று இரவே அவனது கார் திருநெல்வேலி நோக்கிப் பாய்ந்தது.. விடியற்காலையில் திருநெல்வேலியை அடைந்தவன் ஓட்டலில் ரூம் போட்டு குளித்து உடை மாற்றியவுடன் காவ்யாவின் வீட்டிற்குப் போனான். அவளது முகவரியைக் கண்டு பிடிப்பது எளிதாகவே இருந்தது. காலிங்பெல்லை அழுத்தியவுடன் கதவைத் திறந்த ஆனந்தன்,

“நீங்கள் யார்..?” என்று கேட்டான்.

“உள்ளே போய் பேசலாமா..?” என்று கூறியவாறு உள்ளே செல்ல முயன்றான் தியாகராஜன்.

“முதலில் நீங்கள் யாருன்னு சொல்லுங்கள். உங்களை உள்ளே விடுவதா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணி விட்டுச் சொல்கிறேன்..” என்றான் ஆனந்தன் வழியை அடைத்தவாறு நின்றபடி,

‘அசோகன் சொன்னது சரியாகத்தானிருக்கு..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட தியாகராஜன்.

“உங்கள் தங்கை விசயமாய் பேச வந்திருக்கிறேன்.” என்று கூறினான்.

உடனே படக்கென்று விலகி வழி விட்ட ஆனந்தன், தியாகராஜன் பேசிய வார்த்தைகள் யார் காதிலும் விழுந்து விட்டதோ..? என்று பயந்தவனாய் பக்கத்து வீடு, எதிர் வீடுகளைப் பார்த்தான். ‘அந்த வீடுகளின் வாசல்களில் நல்ல வேளையாக யாருமில்லை’யென்று நினைத்துக் கொண்டவனாய் தியாகராஜன் உள்ளே வரவும் கதவை அடைத்தவன்.

“என் தங்கை விசயமாய் என்ன பேசப் போகிறீர்கள்..? நீங்கள் யார்..?” என்று கேட்டான்.

“உட்கார்ந்து பேசலாமே..” என்ற தியாகராஜன் அங்கிருந்த சேரில் தானாய் அமர்ந்து கொள்ளவும் கடுப்பாகி விட்டான் ஆனந்தன். உள்ளே திரும்பி, “அம்ம்ம்ம்ம்மா!” என்று அலறினான். அவன் போட்ட அலறலில் அவசரமாய் பர்வதம் ஓடி வந்தாள்.

“உங்க அருமை மகள் என்னவோ செய்துட்டு வந்திருக்கிறாள். இவர் என்ன என்னவோ சொல்கிறார்..” என்று அவன் கூற,

“ஐயோ! என்னலே சொல்றே.. என் மகளா..? இருக்காதுலே அவள் அப்படிப்பட்டவ இல்லை. என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டான்னு சொன்னால் நான் நம்ப மாட்டேன்..” என்று தாய் பதறினாள்.

தியாகராஜன் திகைத்துப் போய் விட்டான்.

“பொறுங்கள்..” என்று கையமர்த்தியவன்.

“இப்போது நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க..? நான் வந்த விசயத்தை இன்னும் சொல்லவே இல்லையே. நீங்களாக எதுவும் கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள்..” என்று கூறினான்.

“நீங்கள் புதுசா என்ன சொல்லப் போறீங்க.. உங்களை முன்னே பின்னே எங்களுக்குத் தெரியாது. உங்கள் வயதில் ஒருவர் திடீரென்று வந்து என் தங்கை விசயமாய் பேச வேண்டுமென்றால் அது என்ன விசயமாக இருக்கும்ன்னு எங்களுக்குத் தெரியாதா..?” என்றான் ஆனந்தன்.

“அப்பவே தலை தலையா அடிச்சுக்கிட்டேன். என் மகள் என் கூடவே இருக்கட்டும். காணாத தேசத்தில் கண் காணாம படிக்க வைக்க வேண்டாம்ன்னு எவ்வளவு சொன்னேன். என் பேச்சை இந்த வீட்டில் ஒரு ஈ, எறும்பாவது  கேட்டதா..? சொல்லச் சொல்ல மூணு வருசம் மெட்ராஸ் காட்டில் படிக்க விட்டுட்டு இப்ப ஐயோ, அம்மான்னு அடித்துக்கிட்டால் அதற்கு யார் பொறுப்பு..?” என்று பர்வதம் எரிச்சலுடன் கூறினாள்.

“ஆமாம்மா.. தப்பெல்லாம் என் மேல் தான். ஒரு வருசம் வீணாப் போனாப் போகுதுன்னு அப்பவே நான் நினைச்சிருக்கணும். படித்தால் திருநெல்வேலியில் படி இல்லைன்னா படிப்பே வேண்டாம்ன்னு உன் மகள் காலை முறித்துப் போட்டிருக்கணும். நல்லா படிக்கிற பெண் படிப்பு கெடப் கூடாதுன்னு பார்த்தேன் பார். என்னைத்தான்ம்மா சொல்லணும்.”

“ஆமாம்டா.. ஆன்னா ஊன்னா அவ கையை ஒடிக்கிறதிலும், காலை முறிக்கிறதிலும் அலை. அவ என்னலே செய்வா..? அவளை ஏன்லே குத்தம் சொல்றே.”

“உங்க மகள் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்க எனக்கு மட்டும் ஆசையா..? அன்றைக்கு என்னன்னா யாரோ கார்காரன் காப்பாத்தினான். கூட வந்தேன்னு வந்து நிற்கிறாள். இன்னைக்கு வேற யாரோ ஒருத்தன் வந்து உன் தங்கை விசயமாய் பேசணும் நீ என்ன சொல்றேன்னு வந்து நம்ம வீட்டுக்குள்ள சட்டமா உட்கார்ந்திருக்கிறான். இந்த இழுவையை இழுத்து விடுகிற உன் மகளை கொஞ்சவா முடியும்..? அறைஞ்சு பல்லைப் பேக்கத்தான் முடியும்.”

தாய், மகன் இரண்டு பேரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்த தியாகராஜனின் தலை சுற்றியது. ‘என்ன மாதிரிக் குடும்பம்டா இது..?’ என்று திணறியவன் உள்ளேயிருந்து வந்த பெரியவரைக் கண்டதும் ஆசுவாசமானான். ‘இவர் காவ்யாவின் அப்பாவாக இருக்கும். குடும்பத் தலைவர். இவரிடம் நியாயம் கிடைக்கும்..’ என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்.

“என்னடா ஆனந்தா..! என்ன சத்தம்..? உங்க அம்மா குணம்தான் உனக்குத் தெரியுமில்ல. யாரோ ஒரு புது மனிதன் முன்னால் சத்தம் என்ன வேண்டிக் கிடக்கு..?” என்று அதட்டி தியாகராஜனின் வயிற்றில் பாலை வார்த்தார். அவர் தலையில் கட்டுப் போடப்பட்டிருக்க முகம் சோர்வாக இருந்தது. அவர் பின்னாலேயே கண்களில் கேள்விக் குறியோடு தியாகராஜனை அறிமுகமற்ற பார்வை பார்த்த படி காவ்யா வந்தாள். முதல் பார்வையிலேயே அவளது அழகான தோற்றம் கண்டு அசந்து போன தியாகராஜன் ‘அசோகன் சொன்னது போல் இவள் நிலவு போல் அழகாகத்தானிருக்கிறாள். இந்தப் பெண் நிலவு அவனைக் காப்பாற்ற சாட்சி சொல்ல வரவேண்டுமே..’ என்று மனதிற்குள் கலைவப்பட்டுக் கொண்டான்.

“அப்பா நீங்கள் ஏன் இங்க வந்தீர்கள்..? டாக்டர் ஸ்ரெயின் பண்ணிக்கக் கூடாது. முழு ரெஸ்டில் இருக்கணும்னு சொல்லியிருக்காரா இல்லையா..?” என்று பதறிய படி அவசரமாய் அவர் உட்கார ஒரு சேரை இழுத்துப் போட்டான் ஆனந்தன். அதில் அமர்ந்தவர் தியாகராஜனை ‘நீ யார்..?’ என்பது போல் பார்க்க,

“வணக்கம் சார். என் பெயர் தியாகராஜன். சென்னை யில் லாயராக இருக்கிறேன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அவன்.

“அந்த ராமாயணமெல்லாம் வேண்டாம். நீங்கள் என்ன விசயமாய் வந்திருக்கிறீர்கள் என்பதை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்கள்..” என்றார் ராமநாதன். காவ்யாவின் அப்பா.

மலைத்துப் போனான் தியாகராஜன். ‘விருந்தோம் பலில் மகனுக்கு தந்தை கொஞ்சம் கூட சளைத்தவரில்லை’ என்று எண்ணிக் கொண்டவன் ஆனந்தன் குணத்தில் தந்தையைக் கொண்டு வளர்ந்திருக்க வேண்டும் என்பதை உடனே புரிந்து கொண்டான்.

“இரண்டு நாள்களுக்கு முன்னால் உங்கள் பெண்ணைக் காப்பாற்றி, காரில் ஊர் வரைக்கும் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனானே அசோகன். அவனுடைய நண்பன் நான்.”

“அதற்கென்ன இப்போது..? அதற்குள் என் மகளைப் பெண் கேட்க அனுப்பி விட்டானா அந்தத் தடி ராஸ்கல்..? என் மகளென்ன கடைச்சரக்கா..? வர்றவன், போறவ னெல்லாம் பெண் கேட்க..?” அவர் குரல் கோபத்தில் உயர்ந்தது.

‘சரியாப் போச்சு. குடும்பம் மொத்தமே வக்கரித்த குணம் போல. இந்தப் பெண் காவ்யா எப்படிப்பட்டவள்ன்னு தெரியலையே. அதையும் பேசிப் பார்த்து விடலாம்..’ என்று நினைத்துக் கொண்ட தியாகராஜன்.

“சார்! உங்கள் மகளைப் பெண் கேட்குமளவிற்கு என் நண்பன் பழகவில்லை. உங்கள் மகளை அவன் முன் பின் பார்த்து அறியாதவன். அன்றைக்கு இரவு உதவி செய்த போதுதான் உங்கள் மகளை முதன் முதலாய் பார்த்திருக்கிறான்..” என்று எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.

“போதும் போதும்.. அதையே எத்தனை தடவை சொல்லுவ..? என் கூறு கெட்ட தங்கை கண்டவன் கூட காரில் ஏறி வந்ததும் போதும், இப்போது யார் யாரோ உள்ளே வந்து உரிமை கொண்டாடிக்கிட்டு கதை சொல்றதும் போதும். எல்லாம் உன்னால் வந்தது..” என்று ஆனந்தன் காவ்யாவை திட்ட பர்வதம்,

“ஏண்டா அவள்தான் தெரியாமல் ஏறி வந்திட்டாள். அந்தத் தடியன் அதை சலுகையாய் எடுத்துக்கிட்டு பின்னாடியே ஆளனுப்புவான் என்று அவள் கனவா கண்டாள்..?” என்று மகளுக்கு ஆதரவாய் பேச,

“ஏம்மா, இவள் ஏறப்போய்த்தானே இவன் வந்திருக்கிறான். இவள் காரில் ஏறாமல் பஸ்ஸிலோ, டிரெயினிலோ வந்திருந்தால் நமக்கு ஏன்ம்மா இந்தத் துன்பம் வந்திருக்கப் போகிறது..” என்று ஆனந்தன் பதிலுக்குக் கத்த.

“கொஞ்சம் நிறுத்தறீங்களா..” என்று தியாகராஜன் சேரைவிட்டு எழுந்து சத்தம் போட்டான்.

“நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். ஆளுக்கு ஆள் நியாயம் பேசுகிறீர்களேயொழிய என்னை ஒரு வார்த்தை பேச விடுகிறீர்களா..? மிஸ்டர் ஆனந்தன்.. நீங்கள் சொன்னது சத்தியமான வார்த்தை. உங்கள் தங்கை பஸ்ஸில் வந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு என் நண்பனை வற்புறுத்தி அவனை திருநெல்வேலிக்கு வரவைத்தது மிகப் பெரிய தவறு.”

“என்னது. என் தங்கையைக் கொண்டு வந்து விட்டது அவன் குற்றமில்லை. என் தங்கை தான் ‘வாவா’வென்று அவனை அழைத்து வந்தாள் என்று பழி போடுகிறாயா..? கேட்டாயா காவ்யா. நான் சொன்னால் அண்ணன் கொடுமைக்காரன் என்பாய். காது குளிரக் கேட்டுக் கொள்.”

காவ்யாவின் உடல் நடுங்கியது. ‘என்ன நடந்திருக் கிறது..? இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது..?’ அவளது உள்மனம் எதுவோ நடந்து விட்டிருக்கின்றது என்பதை உணர்த்த அவள் தியாகராஜனை அச்சத்துடன் பார்த்து வினவினாள்.

“என்ன நடந்தது..?”

“என்ன நடந்ததா..? குடி முழுகிப் போய் விட்டது. மிஸ் காவ்யா! நீங்கள் பயந்ததால் உங்களைக் காரில் கொண்டு வந்து விட வந்ததால் அவன் மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.

“ஆபத்தா..? என்ன ஆபத்து..?”

“அவன் கொலைக் குற்றச் சாட்டில் மாட்டியிருக் கிறான்ம்மா..”

“என்னது கொலையா..?” என்று ஆனந்தன், பர்வதம், ராமநாதன் மூன்று பேரும் ஒரே குரலில் அலற காவ்யா நிற்க முடியாமல் தளர்ந்து சரிந்தாள்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link