Chapter 09
“நான் அப்பவே நினைச்சேன். ரௌடி மாதிரி இருக்கானே. இவன் கூட வந்து நிற்கிறாளேன்னு அவன் கொலைக்காரனா..! தெய்வமே..! என் பெண்ணுக்கு எந்தக் கெடுதலும் வராம பத்திரமாக் கொண்டு வந்து சேர்த்திட்டயே காந்திமதியம்மா, நெல்லையப்பா!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் பர்வதம்.
“வெளி ஸ்டேன்ரன்ஜஸ்! ஒரு கொலைகாரன்கூட என் தங்கை தனியாக காரில் வந்திருக்கிறாள்.” என்று அதிர்ச்சியுடன் முணுமுணுத்தான் ஆனந்தன்.
ராமநாதன் வாயையே திறக்காமல் மகளை வெட்டிப் போடுவது உசிதமா..? இல்லை உயிரோடு புதைப்பது உசிதமா..? என்பது போல் காவ்யாவைப் பார்வையில் எரித்துக் கொண்டிருந்தார். அசோகன் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது கேட்டவுடன் தளர்ந்து சரிந்தவள் தந்தையின் எரிக்கும் பார்வையிலிருந்து தப்பிக்க முழங்கால்களுக்கு இடையில் முகம் புதைத்தாள். குனிந்த தலையை நிமிரவே இல்லை. தியாகராஜன் எரிச்சலாகி விட்டான்.
“சும்மா அவனை கொலைகாரன், கொலைகாரன்னு சொன்னால் எனக்குக் கெட்ட கோபம் வந்திடும். அவன் கொலை செய்ததை நீங்கள் யாராவது பார்த்தீங்களா..? உங்க வீட்டுப் பெண்ணை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி கூட்டி வந்திருக்கிறான். அதே ராத்திரியில் அங்கே சென்னையில் கொலை நடந்திருக்கிறது. இங்கே திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தவன் சூப்பர் மேன் மாதிரி பறந்து போய் கொலை பண்ணி விட்டு வந்தானா..? சார்! அவன் கொலை செய்யவில்லை என்பதற்கு உங்கள் பெண் மட்டுமே சட்சி.. அவங்க வந்து ஒரு வார்த்தை சொன்னால் போதும். அசோகன் வெளியே வந்திடுவான்..”
“என்னப்பா சொன்னே..? என் பொண்ணு வந்து சாட்சி சொல்லணுமா..? என்னன்னுப்பா சொல்லணும்..? ‘நேற்று ராத்திரி பூராவும் நான் இவன் கூடத்தான் இருந்தேன்’னு சொல்லணுமா..” என்று ஆணியடித்தாற் போல் கேட்டார் ராமநாதன்.
“அப்பா!” என்று அலறி தலை நிமிர்ந்தாள் காவ்யா.
“என்னை அப்பான்னு கூப்பிட உனக்குத் தகுதி இல்லை. தரம் கெட்டத் தனமாய் காரியம் செய்து விட்டு அப்பாவாம் அப்பா..” என்று கோபமாய் கத்தினார் ராமநாதன்.
அவரது வார்த்தைகள் தகிக்க விக்கித்துப் போய் வாய் மூடினாள் காவ்யா.
“சார். நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்..” என்று மன்றாடிய தியாகராஜனை இடை மறித்தான் ஆனந்தன்.
“திஸ் இஸ் தி லிமிட் மிஸ்டர் தியாகராஜன். என் தங்கை போலீஸ் ஸ்டேசன் வாசலைக் கூட மிதிக்க மாட்டாள். அவள் கல்யாணம் ஆக வேண்டிய பெண்.. கொலைக்காரன் கூட சகவாசம் என்றால் நாளைக்கு யார் அவளைக் கல்யாணம் செய்து கொள்வார்கள்..? தவிர நீங்கள் சொல்வது போல் அவனோடு தனியாக காரில் வந்தேன் என்பதை எங்கள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.”
“என் நண்பன் கொலைகாரனல்ல ஆனந்தன். அவன் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நிரபராதி தண்டிக்கப் படலாமா..?”
“அது உங்கள் பிரச்னை..”
“ஏன் சொல்ல மாட்டீர்கள். உங்கள் தங்கையை நடுக்காட்டில் ஒரு அயோக்கியன் துரத்தியபோது அது உங்கள் தங்கையின் பிரச்னையென்று அவன் போகாமல் உங்கள் தங்கையை முழுதாக உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறானே. நீங்கள் பேச மாட்டீர்களா. நன்றாகப் பேசுங்கள்..”
“என் தங்கையை காப்பாற்றினால் ஒரு கொலை காரனுக்கு சாட்சி சொல்ல என் தங்கை வர வேண்டுமா..?”
“திரும்பத் திரும்ப அவன் கெலைகாரனென்று சொல்லாதீர்கள். அவன் நல்லவன். நல்ல குடும்பத்தில் பிறந்தவன்.”
“அதுதான் முகரையில் எழுதி ஒட்டியிருக்கே. கன்னங்கரேல்னு ஒரு நிறமும் நெத்தியில் தழும்பும்.. ஒரு தடவை அவன் வீட்டுக்குள் வந்து போனதுக்கே ஊர் பூரா பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு..” என்று பர்வதம் தோள் பட்டையில் இடித்துக் கொள்ள,
“கண்ணன் நிறம் கருப்புத்தான்ம்மா.. ஆனால் அந்தக் கண்ணன் தான் துயரம் தீர்க்கும் வள்ளல். யார் துன்பத்தையும் பொறுக்காத என் நண்பனும் அந்தக் கண்ணன் போல் தான்ம்மா.. நெற்றியில் தழும்பிருந்தால் அவன் ரௌடியா..? அவன் மனதால் குழந்தைம்மா..” என்று தியாகராஜன் தொண்டை அடைக்கக் கூறினான்.
“உன் நண்பன் எப்படிப்பட்டவனாயிருந்தால் எங்களுக்கென்ன நீ முதலில் இடத்தைக் காலி பண்ணு..” என்றார் ராமநாதன்.
“கடைசியாய் கேட்கிறேன். என்னதான் சொல்கிறீர்கள். உங்கள் பெண்ணை சாட்சி சொல்ல அனுப்ப முடியுமா முடியாதா..?”
“என் மகள் நீ சொல்லச் சொல்லும் சாட்சியை ஒரு நாளும் சொல்ல மாட்டாள். நீ இனிமேல் இந்த மாதிரி பினாத்திக்கிட்டு என் வீட்டுப் பக்கம் வருகிற வேலையை விட்டுவிடு. இனி ஒரு தரம் உன்னை இந்த வீட்டுப் பக்கம் பார்த்தால் நடக்கிறதே வேறு..” என்று உறுமினார் ராமநாதன்.
“அப்போ சாட்சி சொல்ல உங்கள் பெண்ணை அனுப்ப மாட்டீர்கள்..?”
“ஏண்டா! நான் தமிழில்தானே சொன்னேன். உனக்குப் புரியாத பாஷையிலா சொன்னேன். இல்லை உன் காதுதான் செவிடா..?”
“என் காது செவிடா என்ற உங்கள் சந்தேகம் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் பெண்ணின் காது என்ன செவிடா..?”
காவ்யா லேசாக தலை நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே தியாகராஜனைப் பார்த்தாள். தியாகராஜனின் கண்கள் கனல் கக்கின.
“சொல்லுங்க மிஸ் காவ்யா! இங்கேயென்ன நாடகமா நடந்துக்கிட்டு இருக்கு..? வாயைத் திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் மாட்டியிருந்தீர்கள் என்பதை உங்களால் மட்டும் தான் உணர முடியும். மற்றவர்களுக்கு அது ஒரு சம்பவம். கதை. உங்களுக்கு..? தப்பிப் பிழைத்தது நீங்கள் தான். அன்று இரவு மட்டும் என் நண்பன் உங்களைக் காப்பாற்றாமல் நீங்கள் இப்போது வேடிக்கை
பார்த்துக் கொண்டிருப்பது போல் வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போயிருந்தால் இந்தச் சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டிருக்காது. அந்த இரவுக்கு சாட்சி தேடி அலைந்திருக்க மாட்டோம். ஹோட்டல், டீக்கடைப் பையன், டாக்ஸியில் வந்த வாடகைச் சவாரி, சினிமான்னு ஆயிரம் சாட்சி காட்டி நிரூபித்திருப்பான். நீங்கள்தான் அந்த துன்பம் மிகுந்த இரவை உங்களுக்கு சொந்தமாக்கி என் நண்பனை ஊசலாட வைத்து விட்டீர்களே. இன்று அந்த இரவுக்கு ஒரேயொரு சாட்சி நீங்கள் மட்டும்தான்..” என்று அவள் முகம் பார்த்துப் பொரிந்தான் தியாகராஜன்.
“அவளிடம் என்ன பேச்சு..?” என்று ஆட்சேபித்தார் ராமநாதன்.
“அவர்கள் மேஜர் சார். எனக்குப் பதிலை அவர்களே சொல்லட்டும். அவர்கள் வாயைத் திறந்து நான் சாட்சி சொல்ல வரமாட்டேன்னு சொல்லட்டும். நான் போய் விடுகிறேன்.” என்றான் தியாகராஜன்.
“அவள் சாட்சி சொல்ல மாட்டாள். நீ இப்போ போகப் போகிறாயா..? இல்லையா..?”
“அதை உங்கள் பெண் அவங்க வாயாலே சொல்லட்டும். சொல்லுங்க காவ்யா. எனக்கு உங்கள் பதில் வேண்டும். மனச்சாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருந்தால் பதில் சொல்லுங்க. இன்றைக்கு அவனிருக்கிற நிலைமைக்கு நீங்கள்தான் காரணம்ங்கறதை புரிந்துக் கிட்டு எனக்கு ஒரு பதில் சொல்லுங்க..” தியாகராஜனின் பார்வை காவ்யாவின் மீதே படர்ந்திருக்க அவள் முடியை கொத்தாகப் பிடித்து எழுப்பிய ராமநாதன்.
“உள்ளே போ. இங்கே ஷோ கேஸ் பொம்மை மாதிரி இருந்துக்கிட்டு என் உயிரை வாங்காதே.. சாட்சி சொல்லணுமாம் சாட்சி. அப்படியொரு சாட்சியை நீ சொல்றதை அனுமதிக்கிறதைவிட உன்னை உயிரோடு புதைத்து சமாதி எழுப்பிடுவேன் உள்ளே போ..” என்று அதட்டினார். காவ்யா உள்ளே போகவில்லை. கோபமடைந்த ராமநாதன் அவளைப் பிடித்து உள்ளே தள்ள அந்த வேகத்தில் அவள் உள்ளறையில் தரையில் விழுந்தாள்.
“ஐயோ..” என்று அலறியபடி பர்வதம் மகளருகில் ஓட ராமநாதன் தியாகராஜன் பக்கம் திரும்பினார்.
“கெட் அவுட். வெளியே போன்னு சொல்றேனில்ல. காதில் விழுகலை..? நீயா போறியா.. இல்லை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவா. ஆனந்தா..! என்னடா பார்த்துக்கிட்டு சும்மா நிற்கிற.. அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுடா..” என்று ராமநாதன் கத்த ஆனந்தன் தியாகராஜன் பக்கம் திரும்பினான்.
“வெல். அநாகரிகத்தின் உச்சத்தில் உங்க குடும்ப மிருக்கு. சுயநலத்தின் முழு உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள். நான் இப்போது போகிறேன். ஆனால் நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்கள் மனச்சாட்சி உங்களை கேள்வி கேட்டால் மயிலாப்பூர், பாரதி காலனி, ஆறாம் நம்பர் வீட்டுக்கு வாங்க என் நண்பனை கொலைப் பழியிலிருந்து காப்பாற்றுங்க..” என்று படபடவென்று பேசிவிட்டு விர்ரென்று வெளியேறி விட்டான் தியாகராஜன்.
தோற்றுப் போனவனாய் சென்னை திரும்பினான் தியாகராஜன். நண்பன் சொன்னதில் தவறில்லை. அந்தக் குடும்பம் அவளை சாட்சி சொல்ல அனுமதிக்காது.. அவளும் அவர்களை மீறிச் செயல்படுகிறவளாய் தெரியவில்லை. அப்படியென்றால் அசோகனின் நிலை என்ன ஆகும்..? அந்த இரவுக்கு சாட்சியாக வானத்தில் முழு நிலவும் பூமியில் காவ்யாவும் மட்டுமே இருக்கிறார்களே. விண் நிலவு சாட்சி சொல்ல வராது. இந்தப் பெண் நிலவு சாட்சி சொல்ல வருமா..? வராதா..? ஏக்கத்தில் தவித்தது அவன் உள்ளம்.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.