Chapter 15

0Shares

தாய்மை! அந்த அன்புக்கு நிகரேது. மூவுலகை அளந்த பெருமாள் பாலகனாய் கை கட்டி நின்றது யசோதையின் தாய்மையிடத்தில் தானே! நீ எது செய்தாலும் மன்னிப்பேன் என்பது தாய்மையின் மகத்துவமல்லவா..? அடி படும்போதும், உயிர் பிரியும்போதும், ஏன் உலகில் ஜனிக்கும் போதும் ‘அம்மா’ என்று தானே மனித ஜீவன் அலறுகின்றது. தொப்புள் கொடி பந்தமல்லவா அது..? அந்த அகிலாண்ட ஈஸ்வரியை ‘அன்னை’யென்றுதானே அகிலமே கொண்டாடுகின்றது. மனம் சோர்வடையும் போது தாயின் மடியைத் தானே ஊராளும் ராஜாவாக இருந்தாலும் தேடுவார்கள்..? அந்த தாய்மையின் வழித்தோன்றல் தானே பர்வதம்..?

கோபமாய் பேசினாலும் தாய்மையின் குணத்தில் அவள் இமயம். மென்மையாய்ப் பேசத் தெரியாவிட்டாலும் மகளின் தன்மை அறிந்த தாய் அவள். பொத்திப்பொத்தி வளர்த்த மகளைச் சென்னையில் படிப்புக்காக விட அவளுக்கு மனமே இல்லை. பின்னாளில் உயிரோடு மகளை உறவின்றிப் பிரியப் போகிறோமென்பதை அந்தத் தாயின் உள்ளம் அன்றே அறிந்ததோ என்னவோ, மிகக் கடுமையாகப் போராடினாள். ஆனால் படிப்பு ஒரு வருடம் வீணாகப் போகிறதென்று ராமநாதன் கண்டிப்பாய் கூறி சென்னையிலேயே படிக்க வைத்தார். இன்று அந்த மகளின் எதிர்காலம் குறித்து அந்தத் தாயின் மனம் என்ன பாடுபடுமென்பதை அறிய முடியாதவளா மங்களம்..? அவளும் தாய்தானே. இனம் இனமறியும். தாய்மையின் பாசம் அவளுக்குப் புரிந்தது. அவள் அசோகனைத் திரும்பிப் பார்த்தாள். அவனோ உன்மத்தம் பிடித்தவன் போல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“அசோக் வண்டியை கொஞ்சம் ரோட்டோரமாய் நிறுத்துப்பா. நீ நிதானத்தில் இல்லை. கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பலாம்.”

ரோட்டின் ஓரமாக காரை நிறுத்தியவன் அப்படியே ஸ்ட்டேரிங்கில் முகம் புதைத்து குமுறி அழுக ஆரம்பித்தான். மங்களம் அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டாள். கொஞ்சம் கண்ணீர் அடங்கியதும் நிமிர்ந்தவனைப் பார்த்துக் கனிவாக.

“எதுக்குப்பா இந்த அழுகை..? சொல்லியழுக இந்த அம்மா பக்கத்தில் இருக்கும்போது உனக்கு ஏண்டா தம்பி இவ்வளவு வேதனை..?” என்று கேட்டாள்..

“ஒண்ணுமில்லைம்மா..”

“ஒண்ணுமில்லாததுக்கா இப்படிப் பேய் போல வண்டியை ஓட்டிக்கிட்டுப் போவ.? உன்னை சரி பண்ணிக் கிட்டு வண்டியை எடுப்பா.. இல்லாட்டி கட்டாயம் ஆக்ஸிடெண்ட் தான் பண்ணிருவ. உன் நிலைமையைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு. அதனால் பார்த்து நிதானமான பின் வண்டியை ஓட்ட ஆரம்பி..”

பதில் சொல்லாமல் கண்ணீரோடு வெளியே வெறித்துக் கொண்டிருந்தவனிடம். “ஏன்டா கண் கலங்கிக்கிட்டே இருக்க. காவ்யாவோட அப்பா கண்டபடி மரியாதை குறைவாய் பேசிட்டாரேன்னு கஷ்டமா இருக்கா..?” என்று பரிவு காட்டினாள்..

“இல்லைம்மா அதனால் இல்லை..”

“நாம இவ்வளவு பெரிய ஆள். பணத்தாலயும், பலத்தாலயும் உயர்ந்தவன். நம்மைப் போய் இந்தாளு இவ்வளவு பேசும் படியாயிருச்சேன்னு வருத்தப் படறியோ..?”

மங்களம் அறிவாள் அந்த முரட்டு மனிதனின் மென்மையான மனதை. ஒரு தாயின் வேதனை கண்ட தவிப்பில் அவன் கரைகிறான். இது அவளுக்குத் தெரியும். அதை அவன் வாயிலிருந்து வரவழைக்கத் தூண்டில் வீசினாள். அவன் வார்த்தை மீன்களோடு அதில் சிக்கினான்.

“காவ்யாவோட அம்மா பதறுவதைப் பார்த்தால் என் மனசு தாங்கலையே..”

“அவங்களைப் பார்த்தா உன் மனசு வருத்தப்படுது..? என்னப்பா நீ. அவங்க பாட்டுக்கு அவங்க மகள் உன்னால் தான் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவங்க மகள் இன்னைக்கு நாதியத்துப் போனதுக்கு நீதான் பொறுப்புன்னு பேசினாங்க..”

“உண்மைதானே அம்மா. காவ்யாவை இன்னைக்கு உயிரோடு சமாதி வைத்த பாவி நான்தானேம்மா. அவ என்னால் தான்ம்மா வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவங்க குற்றச்சாட்டில் பொய் யில்லையேம்மா..”

“இது என்னடா தம்பி நியாயம்..? நீ அவளைக் காப்பாத்தின. பதிலுக்கு அவ உன்னைக் காப்பாற்றி இருக்கிறாள். இதுக்கு நீ எப்படிடா தம்பி பொறுப்பாவே..?”

“நான் அவளைக் காப்பாத்தினதில் எனக்கு எந்த இழப்புமில்லை அம்மா. ஆனால் அவள் என்னைக் காப்பாத்தினதில் குடும்பத்தையில்ல இழந்து விட்டு நிற்கிறாள்..?”

“அசோகா! இப்ப நான் ஒன்னு கேட்கிறேன். உன் மனச்சாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லு. அவ இழப்பை உன்னால் ஈடு செய்ய முடிஞ்சா செய்வியா..?”

“என்னம்மா இப்படிக் கேட்கிறீங்க..? என் உயிரைக் கொடுப்பேன்ம்மா.. அவ இழப்பை ஈடு செய்வது என் உயிராக இருந்தாலும் கொடுப்பேன்.”

“உயிரைக் கொடுக்க வேணாம்டா கண்ணா! உன்னைக் கொடு போதும்.”

“புரியலைம்மா. நீங்க என்ன சொல்றீங்கன்னு விளங்கவில்லை.”

“இதில் புரியாமல் போக என்னடா இருக்கிறது..? நீ காவ்யாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடு. இதுதான் அவ இழப்புக்கு ஈடாக இருக்க முடியும்..”

“அம்மா.. என்னம்மா இப்படிச் சொல்றீங்க..”

“என்னடா.. என்னவோ சொல்லக்கூடாததை நான் சொன்னதுபோல் கேட்கிற.. காவ்யாவோட அம்மா பேசினதை கேட்டயில்லை. அந்தப் பொண்ணு உனக்காகத் தான் வீட்டை விட்டு வெளியே வந்தாள்ன்னு சொன்னாங்களே அது பொய்யா..?”

“இல்லைம்மா.. காவ்யா எனக்காகத்தான் வீட்டை விட்டு வெளியில் வந்தாள்..”

“அவளை ஒழுங்கா வைத்து வாழ்வியா இல்லை கொன்னு புதைச்சிருவியான்னு கேட்டாங்களே.. நினைவிருக்கா..”

“கேட்டுட்டாங்களேம்மா என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே..”

“அவங்க சொல்வதை உண்மையாக்கப் போறியா..?”

“அம்மா. காவ்யாவை கொல்கிறவனா நான்..? நீங்களும் இப்படிப் பேசலாமா..?”

“அவ கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி அவளை ஒழுங்கா வாழவைக்கப் போறியா..? இல்லை அவளை இப்போது போலவே அநாதையாய் நிற்க வைக்கப் போறியா..?”

“அம்மா அவள் தங்கம். நான் தகரம்ன்னு கூட அவங்க சொன்னாங்க.”

“ஐயோ.. மறக்கலைப்பா. அதை நான் மறக்கலை. அத்தோடு அவ தரம் தெரிந்து குடும்பம் நடத்துவியான்னும் கேட்டாங்களே அதையும் மறக்கலை, அசோகா. அவங்க அம்மா முடிவே பண்ணிட்டாங்க. நீதான் காவ்யாவின் மாப்பிள்ளைன்னு. அதை உண்மையாக்கி அவங்களோட கண்ணான மகளை நீ கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி னாலே போதும். அந்தத் தாயின் மனம் குளிர்ந்து விடும்.”

அசோகன் யோசனையாய் காரை விட்டு இறங்கினான். சிறிது நேரம் ரோட்டோரம் மெதுவாக நடந்துவிட்டு வந்தான். வந்தவன் முகம் ஒரு தீர்மானத்துடன் தெளிவாய் இருந்தது.

“என்னப்பா முடிவு பண்ணிட்டயா..?”

“அம்மா.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சும் பாங்க. உங்க கண்ணுக்கு என் கிட்ட இருக்கிற குறை தெரியாது. ஆனால் நான் இதைச் சொல்லித்தான் ஆகணும்.”

“மயிலுக்கும் தன் குஞ்சு அழகுதாண்டா. நீ சொல்லு.”

“காவ்யா ரொம்ப அழகானவள் அம்மா. அவ நிழல் பக்கத்தில் நிற்கக்கூட எனக்கு தகுதியில்லைம்மா. இப்ப அவ நிராதரவா நிற்கிற நிலையை நான் யூஸ் பண்ணிக்கிட்டதா ஆயிடக் கூடாது. அதனால்…”

“அதனால்…?”

“அவளிடம் சம்மதம் கேளுங்க.. அவ என்கிட்ட மனப்பூர்வமா சம்மதம் சொன்னால் உடனே அவள் கழுத்தில் தாலி கட்ட நான் ரெடி. ஆனால் அவள் லேசாத் தயங்கினாலும் நீங்க அவளை வற்புறுத்தக் கூடாது. இந்த உறுதிமொழியை எனக்கு நீங்க தரணும்.”

“சரிப்பா நான் உறுதி தரேன்.”

“அத்தோடு இதையும் அவளிடம் சொல்லிடுங்க. என்னைக் கல்யாணம் பண்ணினால்தான் என் சொத்துக்கள் அவளுக்கு சொந்தம்ன்னு நினைக்க வேண்டாம்னு சொல்லுங்க. என்னோட கடைகளையும் வீடுகளையும் அவள் யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் பேரில் தான் நான் எழுதி வைப்பேன்னு சொல்லுங்க.”

“அதனால் என்னப்பா.. அவ வாங்கிக்க தயார்ன்னா நீ கொடு. அப்புறம்..?”

“அவள் மனதுக்கு பிடித்த நல்ல மாப்பிள்ளையாய் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன்னு சொல்லுங்க.”

“உன்னை விட நல்ல மாப்பிள்ளை உலகத்தில் யார் இருக்காங்கடா..?”

“நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேன் உங்க கண்ணுக்கு நான் ஒசத்திதான்னு..”

“காவ்யா கண்ணுக்கும் நீ உசத்தியாத்தாண்டா தெரிவாய்..”

“அதை அவள் வாயால் சொல்லட்டும். நம்புகிறேன். நீங்க வற்புறுத்தக் கூடாது.”

தீர்மானம் செய்தபின் அமைதியாய் வண்டியை ஓட்ட அசோகனால் முடிந்தது. அவன் மனமும் அலைகடலாய் கொந்தளித்து சமனப்பட்டிருந்தது. எது வந்த போதும் இறுதி வரை காவ்யாவிற்கு துணை நிற்க வேண்டும் என்ற உறுதி நெஞ்சில் நிலை கொண்டிருந்தது. அவள் தன் பொறுப்பு என்ற உறுதியை நெஞ்சில் நிறுத்தி சென்னை திரும்பினான் அசோகன்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link