Chapter 07
ஒருவழியாய் மாதங்கியை ஹாலுக்கு அழைத்து வந்து விட்டார்கள்…
அவளிடம் ஒருவித அமைதியும், மென்மையும் தென்படுவதைக் கல்யாணி கூர்ந்து கவனித்தாள்..
‘பொண்ணு சாதுவாகத்தான் இருக்கா.. படிச்சிருக்கா.. வேலைக்குப் போகலை… அதனால் கைக்குள்ள அடங்கியிருப்பா.. பிரச்சினை இல்லை…’
கல்யாணியின் மாமியார் மனது கணக்குப் போட்டது.. அவளின் மனதிலிருந்த திருப்தி முகத்தில் வெளிப்படாமல் துடைத்து விட்டதைப் போல – உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத முகத்துடன் அவள் இருந்தாள்…
அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மேகநாதனுக்கும் நிவேதாவிற்கும்.. ‘அப்பாடி..’ என்று நிம்மதியாக இருந்தது..
கல்யாணியின் மனோபாவம் அவர்களுக்கு அத்துபடியான ஒன்று…
அவள் என்றுமே நிறைவை முகத்தில் வெளிப்படுத்த மாட்டாள்.. ஆனால்.. குறையிருந்தால் உடனடியாக முகத்தில் அதைப் பிரதிபலித்து விடுவாள்..
அதிருப்தியை அவளது முகம் பிரதிபலிக்கவில்லை என்பதை உணர்ந்த தந்தையும்.. மகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்..
அதுவரை பார்த்த பெண்களையெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கல்யாணி தட்டிக்கழித்து வந்தாள்…
இதில் தவறாமல் அடிக்கடி –
“எங்க நித்தியாவிற்கு ஒரு பெண்ணும் தோதா அமையல..” என்று வேறு சொல்லி புலம்பிக் கொள்வாள்..
அந்த வீட்டிலிருந்த மற்ற மூன்று ஜீவன்களுக்கும் தெரியும்.. பார்த்து வந்த பெண்களெல்லாம் கல்யாணிக்கு மருமகளாக வரத்தான் தோதுபடாமல் நிராகரிக்கப் பட்டார்கள் என்பது…
இந்த இடத்தில் அப்படி நிகழ்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மேகநாதன்.. பெண்ணைப் பார்த்தார்..
மாதங்கியின் முகத்திலிருந்த அறிவுக்களை அவரைக் கவர்ந்தது.. அவளது அமைதியையும் தாண்டிய புத்திசாலித்தனம் அவரது கவனத்தை ஈர்த்தது…
‘பொண்ணு கெட்டிக்காரியா இருப்பா போல.. அம்மாவின் முந்தானைக்குள்ள இருக்கிற என் மகனுக்கு அதையும் தாண்டி வாழ்க்கையை உணர்த்த இந்தப் பெண்தான் தோதானவள்…’
அவருக்கு அடுத்ததைக் காட்டும் பளிங்கைப் போன்ற முகம்…
அதில் திருப்தி உடனடியாகப் பிரதிபலிக்க.. அதை திருப்தியுடன் பார்த்தாள் நிவேதா…
‘அம்மாவுக்கு நோ அப்ஜெக்சன்.. அப்பாவுக்கு ட்ரிபிள் ஓ.கே.. இனி அண்ணன் மட்டும்தான்…’
நிவேதா கவலைப்பட இடம் கொடுக்காமல் நித்தியானந்தன் மாதங்கியை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்தான்…
அவன் அதற்கு முன்னால் அப்படிப் பெண்களைப் பார்த்து வைத்தவன் அல்ல..
தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தாய் சொல் மிக்க மந்திரமில்லை.. தாய்.. தாயே.. அன்பின் எல்லை.. என்று அன்னையே அனைத்துமாக வளர்ந்தவன் அவன்..
‘அம்மாவுக்கு தெரியாதா..’ என்ற நினைவோடு பெண் பார்க்கும் நிகழ்ச்சிகளில் பெண்ணின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து விடுவான் அவன்…
அவனுக்கு பெண்ணைப் பிடித்துத் தொலைத்து- கல்யாணிக்கு பெண்ணைப் பிடித்துத் தொலைக்கா விட்டால் வம்பு வந்து சேர்ந்து விடும் என்பதால்.. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் ஆவன்..
ஆனால் அன்று மட்டும் அவனது செவிகளில் விழுந்த மெல்லிய கொலுசின் ஒலி அவனை நிமிர்ந்து பார்க்க வைத்தது…
பார்த்தவன் திகைத்துப் போய் விட்டான்…
அப்போதுதான் விழியுயர்த்தி அவனைப் பார்த்த மாதங்கியின் பார்வையைச் சந்தித்ததும் அவனது உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற அதிர்வு ஏற்பட்டு விட்டது…
அதற்குள் விழிகளைத் தாழ்த்திக் கொண்ட மாதங்கியின் வெட்கம் அவனை ஆணென்ற பெருமிதம் கொள்ளச் செய்ய, அவன் கல்யாணியை மறந்து மாதங்கியைப் பார்வையிட ஆரம்பித்து விட்டான்..
‘அண்ணன் விழுந்துட்டான்…’
நிவேதா திருப்தியுடன் கல்யாணியைப் பார்க்க.. அவள் மனதிலும் அதே நினைவுதான் என்பதை அவளது விழிகளில் தெரிந்த அதிருப்தி கூறியது…
‘போச்சுடா.. இனி போட்டி ஆரம்பமாகிருமே..’ நிவேதா கவலைப்பட ஆரம்பித்து விட்டாள்…
“பொண்ணு அழகாயிருக்காள்லம்மா..?”
“குடும்பம் நடத்த அழகு எதுக்குடி..? அழகா வந்து சோறு போடப் போகுது..?”
கல்யாணியின் பதிலில் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டாள் நிவேதா…
“எங்களுக்கு ஆண் ஒண்ணு.. பொண் ஒண்ணுன்னு இரண்டே பசங்க…”
சாரங்கபாணி பேச்சை ஆரம்பிக்க.. மாதங்கி உள்ளே போய் விட்டாள்…
‘அப்படிங்களா..’ என்று சொல்ல நினைத்தார் மேகநாதன். அதற்குள் அவருக்கு பேச இடம் கொடுக்காமல் கல்யாணி முந்திக் கொண்டாள்…
“எங்க வீட்டிலயும் ஏழெட்டு பசங்க இல்ல.. இதே போல.. ஆண் ஒண்ணு பெண் ஒண்ணுதான்..”
எதிரிக்காரர்களிடம் பேசுவதைப் போல.. பெண் வீட்டாரிடம் கல்யாணியால் மட்டும்தான் பேச முடியும்…
சாரங்கபாணியும் சங்கரனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
“இவன்தான் என் மூத்த மகன் முகுந்தன்..”
சமாளித்துக் கொண்டு.. அப்போதுதான் வீட்டுக்குள் வந்து நின்ற முகுந்தனை அறிமுகம் செய்து வைத்தார் சாரங்கபாணி…
“வணக்கம்..” என்று பொதுவாக கைகுவித்த முகுந்தனின் விழிகளில் நிவேதா தென்பட.. அவனது விழிகளில் ஆயிரம் கோடி மின்னல்கள் தெரிந்தன…
அவனது உடலில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை நிறைவுடன் கண்டாள் நிவேதா…
அது.. அவளுடைய முகுந்தன் அவளை மறந்து விடவில்லை என்பதற்கான அடையாளம்..
‘இது போதும் தெய்வமே..’ மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்…
அவளது காத்திருப்புக்கும்.. தேடலுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது…
அவளுடைய உயிரானவன் அவளை மறக்கவில்லை..
“தம்பி என்ன செய்கிறார்..?”
இயல்பாக மேகநாதன் விசாரிக்க, முகுந்தன் முகம் கருத்தான்.. அதை ஒரு மனவலியுடன் கண்டாள் நிவேதா..
இதற்காகத்தான்-உலகத்தின் இந்த கேள்விக்- கணைக்காகத்தான்.. அவள்.. அவனை ஒரு வேலையில் ஒட்டிக் கொள்ளச் சொன்னாள்..
அவன் தான் அவளைப் புரிந்து கொள்ள வில்லையே…
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.