Chapter 21

0Shares

நிவேதா உறக்கமின்றி கண் மூடி படுத்திருந்தாள். சங்கரனும்.. கோதாவரியும் பேசிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தபோது.. அவர்கள் தன்னைத் தேடாதிருக்க வேண்டுமே என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்..

“கிச்சனில் கேஸை மூடிட்டயா..?”

“ம்ம்.. நீங்க பாத்ரூமில் குழாயை மூடிட்டிங்களா..?”

“ம்ம்ம்..”

“அப்பா.. என்ன அலுப்பு..! பெண்ணைக் கட்டிக் கொடுத்து அனுப்பறதுன்னா இப்படி மலையேறுகிறதைப் போல கஷ்டப்படணுமா…”

“மாதங்கியை வளர்த்தியே.. அவளுக்காக கஷ்டப்பட வேணாமா..?”

“அதனால என்ன..? முகுந்தனுக்கு பெண் வீட்டில் சீர் செஞ்சு அனுப்புவாங்களா.. இல்லியா.. அதை பதிலுக்கு வாங்கிட்டுப் போறேன்..”

பேச்சுக் குரல்களின் கலவையொலி மெல்ல குறைந்து நிசப்தம் நிலவ ஆரம்பித்தது.. ஹாலில் இருந்த சுவர் கடிகாரத்தின் டிக்.. டிக்.. ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்க.. நிவேதா மெல்ல.. முகுந்தன் படுத்திருந்த கட்டிலின் அடியிலிருந்து வெளியே வந்தாள்..

விடிவிளக்கின் மெல்லிய ஒளியில் சீரான சுவாசத்துடன் தூங்கிக் கொண்டிருந்த முகுந்தனின் முகம் பார்த்தாள்… அருகில் அமர்ந்து.. அவனது கை விரல்களோடு.. தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டாள்..

அவள் தொட்டுக் கொண்டிருப்பதை உணர முடியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் முகுந்தன்..

சூடாக அவனுக்கு பாலை ஆற்றி வைத்து விட்டு.. சாரங்கபாணியின் குரலுக்கு ஏனென்று கேட்பதற்காக வாசவி சமையலறையை விட்டுச்சென்ற போது.. அதில் ஒன்றுக்கு இரண்டாக தூக்க மாத்திரைகளை போட்டு விட்டிருந்தாள் நிவேதா…

கணவனுக்கு பதில் சொல்லிவிட்டு திரும்பிவந்த வாசவி.. கனகாரியமாக அந்தப் பாலை மகனிடம் கொடுத்து அருந்தச் செய்வதை ஓரவிழிப் பார்வையிலே கண்காணித்தபடி.. அறியாக் குழந்தையைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.. அவன் கொட்டாவி விட ஆரம்பித்தபோதே.. இவள் கோதாவரியிடம் சாவியை வாங்கிக் கொண்டு வந்து.. கதவுகளை விரியத் திறந்து வைத்துவிட்டு.. முகுந்தன் படுக்கும் கட்டிலின் அடியினில் புகுந்து விட்டாள்..

தூக்க மாத்திரையின் வீரியத்தால் தள்ளாடியபடி வந்த முகுந்தன் கட்டிலில் விழுந்து உறங்க ஆரம்பித்து விட்டான்..

கைவேலையில் உதவப் போன சங்கரனும் கோதாவரியும் திரும்பி வந்து.. வேலையின் அயர்வில் உறங்க ஆரம்பித்து விட்டனர்.

உறக்கமின்றி விழித்திருந்தது நிவேதா மட்டும் தான்.

அவளுக்கு.. அவள் செய்யப் போகும் காரியத்தின் பின்விளைவுகளைப் பற்றி நான்றாகத் தெரியும்.

ஒரு கோட்டிலே.. பாதை மாறாமல் பயணிக்கிறவள் அவள்.. அந்தப் பாதை மாறாமலிருக்க வேண்டுமானால் இந்தப் பழியை அவள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்..

குருஷேத்திர யுத்த களத்தில் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, தர்மர், ‘அசுவத்தாமன்’ என்ற யானையைக் கொன்றுவிட்டு.. ‘இறந்தான் அசுவத்தாமன் என்ற யானை’ என்று அறிவித்தார்.

இதில் ‘இறந்தான் அசுவத்தாமன்’ என்று பலமாகவும் ‘என்ற யானை’ என மிக மெதுவாகவும் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது தன் ‘பாஞ்ச சன்யம்’ எனப்படும் சங்கை எடுத்து ஊத ஆரம்பித்து விட்டார் கிருஷ்ணனர்.

அசுவத்தாமன், துரோணாச்சாரியாரின் மகன்.

சங்கின் ஒலியில் இரண்டாவது வார்த்தை துரோணரின் காதினில் விழாமல் போக.. தன் மகன் இறந்துவிட்டான் என்று அதிர்ச்சியுற்ற அவர், மனம் தளர்ந்து தன் கையிலிருந்த வில்லைக் கீழே போட்டு விட்டு யுத்த களத்தில் கண்மூடி அமர்ந்து விட்டார்..

பகை முடிக்கப் பிறந்து வந்திருந்த திரௌபதியின் அண்ணன் திருஷ்டத்துயமன்.. அவரை வெட்டிச் சாய்த்தான்..

பின்னால்.. விவரம் அறிந்த தர்மர் பதைத்து புலம்பிய போது.. பழி அவரைச் சேராது.. தன்னைத் தான் சேரும் என்று சொன்னான் புருசோத்தமன்..

தர்மம் ஜெயிப்பதற்காக.. பாண்டவர்களுக்கு பல வழிகளை அறிமுகப்படுத்திய அந்தத் கண்ணன் காட்டிய பாதையில் தன் காதல் ஜெயிப்பதற்காக இந்த வழியைத் தேர்ந்தெடுத்து பழியேற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டாள் நிவேதா..

இரவு நேர வியாபாரம் முடிந்து சென்று கொண்டிருந்த சோன்பப்டிக்காரனின் கைவண்டியிலிருந்து எஃப். எம்.. ஒலித்தது..

“தூங்காத கண்ணென்று ஒன்று..

துடிக்கின்ற சுகமென்று ஒன்று..

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே.. நீயென்னைக் கண்டு..”

நிவேதா கண்ணீர் வழிய.. குனிந்து.. முகுந்தனின் நெற்றியில் முத்தமிட்டாள்.. கலைந்திருந்த அவனது முடியில் விரல்விட்டு.. இன்னும் கலைத்தாள்.. அவனது முகத்தோடு முகம் வைத்து கண்மூடிக் கொண்டாள்..

“முற்றாத இரவொன்றில் நான்வாட..

முடியாத கதையொன்றை நீபேச…

உற்றாரும் காணாமல்..

உயிரொன்று சேர்ந்தாட..

உண்டாகும் சுவையென்று ஒன்று…”

அவனது மார்பில் சொந்தத்துடன் தலை வைத்துக் கொண்டவள்.. மறுநாளின் விடியலை நினைத்துக் கொண்டாள்..

அது எப்படி விடியும்..? அவளைப் பெற்றவர்களும் கூடப்பிறந்தவனும் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்..?

அவள் உடல் தூக்கிப்போட்டது.

ஆனால்..? இவன் அவளுக்கு வேண்டுமே.. இன்று அவனைப் பிடித்து நிறுத்தாவிட்டால்.. என்றுமே.. அவன் அவளுக்குக் கிடைக்காமல் வெகு தூரத்திற்கு விலகிப் போய் விடுவானே.. அவள் முகம் நிமிர்த்தி.. தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பிடிவாதக்காரனின் முகம் பார்த்தாள்.

அவனது ரோமம் படர்ந்த உறுதியான.. வலுவான கைகளை வருடி.. அதில் முகம் புதைத்துக் கொண்டாள் நிவேதா..

இவனை விட்டுக் கொடுப்பதா..?

“வெகு தூரம் நீ சென்று நின்றாலும்.. உன்

விழி மட்டும் தனியாக வந்தாலும்..

வருகின்ற விழியொன்று…

தருகின்ற பரிசென்று..

பெறுகின்ற சுவையென்று ஒன்று…”

அவளுக்காக அவளுடைய பெற்றோர் பார்த்த வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் பட்டியலை நினைத்துப் பார்த்தாள்..

அவர்களின் பெயரைக் கூட அவள் கேட்க விருப்பப் படவில்லை.. கல்யாணி அதட்டிச் சொல்லிப் பார்த்து விட்டாள்.. மேகநாதன் தன்மையாக எடுத்துச் சொல்லிப் பார்த்து விட்டார்.. நித்தியானந்தன் தோழமையாக பேசிப் பார்த்து விட்டான்.

யார் என்ன சொன்னாலும்.. அது அவள் செவியினில் ஏறவே இல்லை…

“யார் என்ன சொன்னாலும் செல்லாது..

அணைபோட்டுத் தடுத்தாலும் நில்லாது..

தீராத விளையாட்டு..

திரைபோட்டு விளையாடி..

நாம் காணும் உலகென்று ஒன்று..”

அவனருகே ஒட்டிப் படுத்தவள்.. அவன் மார்பில் தலை வைத்துப் பின்னிப் பிணைந்து கொண்டாள்.. விட்டால் அவன் பிரிந்து விடுவானோ.. என்ற பயத்துடன் கைகளால் அவனை இறுக்கிக் கொண்டு.. கண்மூடி ஒருவித அமைதியுடனும்.. தெளிவுடனும் உறங்க ஆரம்பித்தாள்..

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link