Chapter 22
காலையில் காபிக் கோப்பையுடன் முகுந்தனின் அறைக்குள் வந்த கோதாவரி அதிர்ந்து பின் வாங்கினாள்..
புகுந்த வீட்டிற்கு போவதற்கு தயாராகியிருந்த மாதங்கி.. விடைபெற்றுக் கொண்டு போவதற்கு முன்னால்.. சற்று நேரம் சங்கரன் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருப்பதுதான் மரியாதை என்று சொல்லி கணவனையும் அழைத்துக் கொண்டு அங்கே வந்திருந்தாள்..
“நிவேதா எங்கே..” என்ற நித்தியானந்தனின் கேள்விக்கு.. அவள் சங்கரனின் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாக பதில் வந்ததால்.. தங்கையை எழுப்பி அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணத்துடன் நித்தியானந்தனும்.. தட்டாமல் அவள் கூட வந்திருந்தான்..
கோதாவரி.. பதறிப் பின் வாங்கிய வேகத்தைக் கண்ட சங்கரன் முகத்தில் கேள்விக் குறியுடன் ஹாலில் இருந்த சோபாவிலிருந்து எழுந்து கொள்ள.. அவருடன் பேசிக் கொண்டிருந்த நித்தியானந்தனும்.. மாதங்கியும்.. அதே கேள்விக் குறியுடன் அவரைப் பின் தொடர்ந்தார்கள்…
“என்னடி..?”
“என்ன ஆன்ட்டி..?”
“என்னங்கம்மா..?”
மூவரும் ஒரே கேள்வியை வேறுவேறு தினுசில் கேட்டபடி அறைக்குள் எட்டிப் பார்த்தார்கள்.. கோதாவரிக்கு ஏற்பட்ட அதே அதிர்வை அவர்களும் வாங்கினார்கள்..
“என்னடி இது..?”
புது மனைவியை முதன் முறையாக ‘டீ’ போட்டு அழைத்து அதட்டினான் முகுந்தன்..
“எனக்குத் தெரியலைங்க..” மாதங்கியின் விழிகளில் பயரேகை.. படர்ந்தது..
விவரம் தெரிந்தால் கல்யாணி அவளைக் கூறு போட்டு விடுவாள் என்ற நிச்சயத்தில் அவள் நடுங்கிப் போனாள்..
வளர்த்த மகளின் பயத்தைக் கண்டு கோதாவரிக்கு மனம் பொறுக்கவில்லை..
“நீயேம்மா பயப்படறே.. நீயென்ன செய்வ.. இதுக ரெண்டும் இப்படியொரு காரியத்தைப் பண்ணினதுக்கு நீயும் நானும் என்ன பண்ணுவோம்..?”
அது சங்கரன் – கோதாவரியின் வீடு.. நித்தியானந்தனின் அடுத்த தாக்குதல் தங்களை நோக்கித் தான் வரும் என்பதைப் புரிந்து வைத்திருந்த கோதாவரி முன்ஜாக்கிரதையாக வார்த்தைகளைப் பிரயோகித்து வைத்துக் கொண்டாள்.
நித்தியானந்தனின் புருவங்கள் மேலேறின…
முகுந்தனின் மார்பில் தலை வைத்துப் படுத்திருந்த நிவேதாவின் முகத்தில் அமைதியும் சொந்தமும் தெரிந்தன..
அவள் மேல் அவளாகப் படர விட்டிருந்த முகுந்தனின் கரங்கள்.. இயல்பாக அவளை அணைத்திருந்ததில் நெடுநாளைய நெருக்கம் தெரிந்தது..
அதற்குள்ளாக மாதங்கியின் செல்ஃபோன் அழைப்பில் சாரங்கபாணியும்.. வாசவியும் பதறியடித்துக் கொண்டு அங்கே ஓடிவந்தார்கள்..
“என்னடி மாதங்கி.. என்ன ஆச்சு..?”
“என்னத்தைன்னு நான் சொல்லுவேன்.. நீங்களே வந்து.. அந்தக் கன்றாவியைப் பாருங்க..”
எந்தக் கன்றாவி என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அறைக்குள் வந்த சாரங்கபாணியும்.. வாசவியும்.. அதிர்ந்து போய் பின்வாங்கினார்கள்..
“பார்த்திங்கள்ல..”
“இவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படியொரு காரியத்தைப் பண்ணுவான்..?”
“சத்தம் போடாதே சாரு.. அக்கம் பக்கத்தில் கேட்டு விடப் போகுது..”
“இப்போ மூடி மறைச்சால் மட்டும்.. எல்லாம் சரியாகிவிடுமா..? சம்பந்தகாரம்மா வாயை நினைச்சால் எனக்குக் குலை நடுங்குதுடா சங்கரா.. இனிமேல்பட்டு என் மகள் எப்படி அந்த வீட்டில் நிம்மதியாக வாழ்வா..?”
“ஹலோ.. மாமா.. நீங்க உங்க மகளைப் பத்தி மட்டும் நினைக்கறிங்களே தவிர.. உங்க மகனால் என் தங்கையின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருச்சு.. அதைப் பத்தி பேசவே மாட்டேங்கறிங்களே.. ஏண்டி.. இதுக்கா நான் உன் கழுத்தில் தாலியைக் கட்டினேன்..?”
“ஐயையோ.. எனக்கு எதுவும் தெரியாதுங்க…”
“மாப்பிள்ளை.. என்மகள் அறியாக் குழந்தை..”
“என் தங்கையும் அப்படித்தான் அத்தை..”
“நிவேதாவாகத்தான் இங்கே படுக்கப் போகிறதா சொல்லிக்கிட்டு வந்தாளாம்..”
“உங்களை நம்பித்தானே நான் என் தங்கையைக் கூடக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்.. அவளைப் பக்கத்து வீட்டில் தூங்க விடுவீங்களா..?”
நித்தியானந்தன் ருத்ர அவதாரம் எடுத்தான்.. அதுவரை அவனின் இனிமையான சுபாவத்தை மட்டுமே அறிந்திருந்த மாதங்கி விதிர்த்து நடுங்கினாள்..
இதையறியாமல் முகுந்தன் தூக்க மாத்திரையின் உபயத்தில் தூக்கத்தை தொடர.. விடியும் வரை விழித்திருந்து கண்ணீர்விட்ட அயர்வினால் நிவேதாவும் சோர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்..
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.