Chapter 02
ஒரு மரத்தடியில் அவள் நின்றிருந்தாள்.. மழைக்கு ஒதுங்கியிருக்க வேண்டும்.. ஆனால் கொடைக்கானல் போன்ற மலைபிரதேசத்தில் இரவு நேரத்தில் மழையில் நனையாமலிருக்க மரத்தடியில் ஒதுங்கக் கூடாது.. பனியில் நனைந்திருக்கும் மரத்தின் இலைகள் மழைநீருடன் பனித்துளிகளையும் சேர்த்துக் சொட்டும்.. அதீத குளிரில் விறைத்துப் போய்விடும் அபாயம் உண்டு..
‘இவள் வெளியூர்வாசியாக இருக்க வேண்டும்..’ என்று நினைத்துக் கொண்டான்..
அவனுடைய கணிப்பை மெய்ப்படுத்துதல் போல அவளருகில் லெதர்பேக் இருந்தது.. கொட்டும் மழைக்கும் உடலைத் துளைக்கும் குளிருக்கும் தடுப்புக் கவசம் போல சேலை முந்தானையை இழுத்துப் போர்த்தியிருந்தாள். அடிக்கும் மழைக்கும் கொடைக்கானலின் குளிருக்கும் தடுப்புக் கவசம் போட்டு விட முடியுமா..? கனத்த உல்லன் ஸ்வெட்டரையும் மீறி உள்ளிறங்கும் குளிர் பனி காலத்தில் அதிக வேகத்துடன் இருக்கும் என்பதை அறியாதவளாய் கோழிக் குஞ்சைப் போல கை, கால்கள் வெட வெடக்க நின்றிருந்தவளைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.. நள்ளிரவைத் தொடும் அந்த நேரத்தில் கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசத்தில் பனி பெய்யும்
குளிர் மழையிரவில் மழையில் நனைந்தபடி அவள் தன்னந்தனியாக நிற்பது பாதுகாப்பானதல்ல என்று இவளுக்குத் தெரியாதா என்ற கோபம் அவனுக்குள் எழுந்தது..
மூர்த்தி பெண்களிடம் அதிகமாக பேச மாட்டான்.. தவிர்க்க முடியாமல் பேசும் நேரங்களில் எதிரியை முறைப்பதைப் போல முறைத்தபடி அவன் பேசும் பேச்சில் பயந்து போகும் பெண்குலம் ஒரு மணி நேரத்துக்கு நீடிக்க வேண்டிய அதி முக்கிய உரையாடலைக்கூட ஒரிரு வார்த்தைகளில் முடித்துக் கொண்டு தலை மறைவாகி தப்பித்து விடும்… கல் போன்ற கடின முகமும்.. இடுங்கிய கண்களும், கோபப் பார்வையுமாக இருப்பவனிடம் மனுஷி பேசுவளா என்று தமக்குள் பேசிக் கொள்வார்கள்…
பகலிலேயே பெண்களிடமிருந்து பத்தடி தள்ளி நிற்பவன் நள்ளிரவைத் தொடும் அகால வேளையில் தனித்து நிற்கும் பெண்ணிடம் பேசி விடுவானா என்ன..?
‘இவள் யாராயிருந்தால் எனக்கென்ன..? கொடைக்கானலுக்கு மிட்நைட்டில் வருகிறவ எப்படிப்பட்டவளா இருப்பா..?’
எரிச்சலுடன் கடந்து செல்ல முயன்றான்.. அவனது நினைவு தவறு என்பதைப் போல அவள் மருண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தாள்.. காட்டன் புடவையும், நீண்ட பின்னலும், கண்ணியமாக அவள் உடையுடுத்தியிருந்த நேர்த்தியும், தூண்டில் போடாத இறைஞ்சலுடன் கூடிய பார்வையும் அவனுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தின..
‘ச்சை..! இதென்ன பெருந்தொல்லை..!’
அவனுக்கு வெறுப்பாக இருந்தது.. அவள் மீதான இரக்கம் அவன் கால்களைத் தடை போட்டதில் அவன் கோபம் கொண்டான்.. கொடைக்கானலில் பிறந்து வளர்ந்தவனுக்கு கொடைக்கானலின் குளிர் இரவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நன்கு தெரியும்.. அது மலைவாசஸ்தலம்..! பனி பொழியும் குளிர் பிரதேசம்..! வீடுகளைவிட ரிசார்ட்டுகளும் ஸ்டார் ஹோட்டல்களும் இருக்கும் ஊர்.. உள்ளூர்வாசிகளை விட சுற்றுலா வரும் வெளியூர்காரர்கள்தான் அங்கே அதிகமாக நடமாடுவார்கள்.. மதுவின் போதையோடு இரவில் ஊரைச் சுற்றும் கயவர்களின் கண்களில் அவள் பட்டு விட்டால் என்ன ஆகும் என்பதுகூடத் தெரியாத சிறு பிள்ளையா இவள் என்று பல்லைக் கடித்தான்..
அவள் யாரோ, அவன் யாரோதான்.. ஆனாலும் அந்த குளிர் மழையிரவில் தனித்து நிற்பவளைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல அவனால் முடியவில்லை.. மனதுக்குள் குற்றவுணர்வு எழுந்தது.. கொடைக்கானலுக்கு அந்தக் குளிர் மழையீல் கும்மாளம் போட வரும் தடிமாடுகளின் தேவை என்னவாக இருக்கும் என்பதை அறிந்திருந்தும் அதைப் பற்றிய கவலையில்லாமல் எப்படிக் கடந்து செல்வது..? இது உத்தமர்கள் வாழும் உலகமல்லவே.. நிச்சயமாக அவளது பத்திரத்திற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லையெனும் போது எனக்கென்ன என்று எப்படி அவன் போவது..? கண்டு கொள்ளாமல் அவன் சென்று விட்ட பின்பு அவளுக்கு ஏதாவது பாதகம் நிகழ்ந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் ஒர்விதமான குற்றவுணர்வு அவனைத் துரத்துமே.. அவன் நிம்மதியான தூக்கத்தைத் தொலைத்து விடுவானே..
மூர்த்தி முரடன்தான்.. மூர்க்கன்தான்.. கோபக்காரன்தான்.. ஆனால் நல்லவன்.. மிகவும் நல்லவன்.. பலாப்பழத்தைப் போன்றது அவனது இரக்க குணம்.. முள் போன்ற அவனது கடுமையான குணாதிசயம் அவனது இரக்க குணத்தை மறைத்து நின்றது.. கல்லுக்குள் ஈரம் இருப்பதை யாரறிவார்..? பாறையிலும் பூ முளைக்கும் என்பதை எவர் உணர்வார்..?
வானத்தில் வெளிச்சம் பரவியது.. இரவைப் பகலாக்கும் மின்னல் வெட்டியது.. அடுத்த நொடியில் பலமான இடிச் சப்தம் எழுந்ததில் அவள் பதறித் துடித்துக் காதுகளைப் பொத்திக் கொண்டு..
“அம்ம்ம்.. மா..” என்று அலறினாள்..
என்னவோ அவனையே அவள் அம்மா என்று அழைத்து விட்டதைப் போல மூர்த்தி ஒரு கையில் அவளைப் பற்றி மறுகையில் லெதர்பேக்கை எடுத்துக் கொண்டு மரத்தடியை விட்டு வெளியே இழுத்து வந்தான்..
அறியாத ஆண்மகன் கையைப் பிடித்து இழுக்கிறானே என்று பயந்து நடுங்கியவள் விடுபட போராடியபடி..
“விடு.. என்னை விடு..” என்று கத்தினாள்..
“முதல்ல உன் திருவாயை மூடறியா..? நீ பெரிய அழகின்னு கையைப் பிடித்து இழுக்கலை.. மின்னல், இடியோடு மழை கொட்டறப்ப மரத்தடியில எந்த முட்டாளும் நிற்க மாட்டாங்க..”
எதனால் அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான் என்பதை அவன் அறிவுறுத்தியதில் அவள் உதட்டைக் கடித்தபடி..
“ஐ ஆம் ஸாரி..” என்றாள்..
“இது ஒன்றைக் கண்டுபிடிச்சு வைச்சிருக்கீங்க.. எதற்கெடுத்தாலும் ‘ஸாரி’ சொல்லிக்கிட்டு..” அவன் முகத்தைச் சுளித்தான்..
“மழை கொட்ட ஆரம்பித்ததும் என்ன செய்யறதுன்னு தெரியலை.. அவசரத்தில மரத்தடியிலே ஒதுங்கி நின்னுட்டேன்..” மெல்லிய குரலில் அவள் விளக்கம் சொன்னது வீணையின் நாதம் போல ஒர்விதமான லயத்துடன் ஒலித்தது..
‘தேன் குரல்..!’ இப்படித்தான் அவனுக்குத் தோன்றியது..
கொட்டும் மழையில் நனைந்திருந்த அந்த நிலையிலும் அவள் வெகு அழகான தோற்றத்துடன் மிளிர்ந்தாள்.. நெஞ்சத்தைக் கிள்ளும் மென்மை கொண்ட அழகு அவளழகு..
‘இவ போய் இந்த நடுராத்திரியில கொடைக்கானல் ரோட்டில் நின்று தொலைக்கிறாளே.. அறிவுங்கிறது சுத்தமா இல்லையா..?’ அவனுக்குக் கோபம்தான் வந்தது..
“ஹலோ..! மே மாதத்திலேயே இங்கே பனி கொட்டும்.. இது டிசம்பர் மாதம்.. மழை கொட்டறதைவிட அதிகமா பனி கொட்டற ஊர் இது.. இந்த பனி விழும் இரவில கொட்டற மழையில ஸ்வெட்டரும் குடையும் இல்லாம சொட்டச் சொட்ட நனைந்துக்கிட்டு நிற்கறிங்களே.. குளிர் காய்ச்சலிலே விழுந்தா என்ன செய்வீங்க..? இது விசக்குளிர்.. கவலையேயில்லாம நிற்கறிங்க..?” அதட்டினான்..
“இப்படியாகும்ன்னு எனக்குத் தெரியாதுங்க..” அவளுக்குக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது..
முகத்தில் வழிந்த மழைநீருடன் கலந்த கண்ணீர் மழைத்தாரையுடன் தாரையாக கலந்து அவள் முகம் நனைத்தது.. பனியில் நனையும் ரோஜாவைப் போல மாசு மறுவற்ற அவளது முக வடிவில் அவனது பார்வை லயித்தது..
‘சூது வாதில்லாத முகம்..’
இது போன்ற முகங்களைப் பார்ப்பதென்பது அரிது.. கபடம் தவழும் முகங்களைப் பார்த்தேப் பழக்கப்பட்டவனுக்கு அவளிடம் பொய்யில்லை என்று தோன்றியது..
“தெரியாதுன்னா என்ன அர்த்தம்..?” கோபம் குறையாமலே கேட்டான்..
“இங்கே என் பிரண்ட் ஒருத்தி இருக்கிறா.. நான் அவ வீட்டுக்கு வந்தேன்.. வந்து பார்த்தா வீடு பூட்டிக் கிடக்கு.. அக்கம் பக்கத்தில விசாரித்தா அவர்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க.. கொடைக்கானலுக்கு நான் வந்து இறங்கறப்பவே இருட்டிருச்சு.. அவ வீட்டு அட்ரஸைக் கண்டு பிடிக்க நேரமாகிருச்சு.. அவ இல்லைன்னதும் பஸ் ஸ்டாண்டுக்குத் திரும்பிடலாம்ன்னு வந்துக்கிட்டு இருக்கிறப்ப மழை பிடிச்சுக்குச்சு.. மரத்தடியில ஒதுங்கினேன்..” திக்கித் திணறிப் பேசினாள்.
“ஓ..” அவன் யோசனையுடன் தாடையைத் தடவினான்..
“ஆட்டோ, கால் டாக்ஸின்னு எதுவும் இந்தப் பக்கம் வரலே.. ஆள் நடமாட்டமும் இல்ல..” அவள் பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள்..
“இது என்ன உங்க ஊரா..? இருட்டின் பின்னாலே ஷாப்பிங், சினிமான்னு வெளியே போகிறதெல்லாம் உங்க ஊரில்தான்.. இது கொடைக்கானல்.. ஈவினிங் டைமிலேயே பனி கொட்ட ஆரம்பிச்சிரும்.. இருட்ட ஆரம்பிச்சதும் வீட்டைப் பூட்டி இழுத்துப் போர்த்திக்கிட்டு கணப்பைப் போட்டுக்கிட்டோ இல்லை ஹீட்டரை ஆன் பண்ணிட்டோ பதுங்கிக்குவாங்க..”
அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி அவன் பேசப்பேச அவள் விழிகளில் பயம் நிரம்பியது.. குளிரில் நடுங்கியபடி வெடவெடத்தவள்..
“இப்ப நான் என்ன செய்யட்டும்..?” என்று மழலையாகி அவனிடமே யோசனை கேட்டாள்..
இதை எக்குத்தப்பானவர்களிடம் இவள் கேட்டு வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கவலை யோடு..
“இந்த ஊரில் உங்களுக்கு வேறு யாரையும் தெரியாதா..?” என்று கேட்டான்..
அப்படி எவர் முகவரியையாவது அவள் சொன்னால் அங்கே அவளைப் பத்திரமாகச் சேர்த்து விடலாமே என்ற எண்ணம் அவனுக்கு..
“தெரியாதே..” அவள் மிரண்டு விழித்தாள்..
“தெரியாதா..?” வேறு என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை.. அவளை அம்போ என நடுரோட்டில் விட்டு விட்டுச் செல்லவும் தயக்கமாக இருந்தது..
“நைட் ஆகிருச்சே..” நடுங்கினாள்..
“வெறும் நைட்டில்லை.. மிட்நைட்..” அவன் அறிவுறுத்தினான்..
“ஆமாமில்ல..” அவள் இன்னும் அதிகமாக நடுங்கினாள்..
“மிட் நைட்டில எந்த பஸ்ஸீம் கிளம்பாது.. விடியனும்..”
“அதுவரைக்கும் எங்கே தங்கறதுன்னு தெரியலையே.. ஹோட்டலில் தங்க பயமாயிருக்கு..”
எதற்கு பயம் என்று அவன் கேட்கவில்லை.. இதுவாவது தெரிகிறதே என்ற நினைவோடு..
“இங்கே அதிக நேரம் நின்றுக்கிட்டு இருக்க முடியாது… இந்தப் பனியையும் மழையையும் எப்படித் தாங்கிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியலை.. குடைதான் எடுத்துக்கலை.. கொடைக்கானல் குளிருக்கு ஸ்வெட்டரையாவது போட்டுக்கனும்னு தோணலையா..?” என்று கடிந்து கொண்டான்..
“இல்லைங்க.. திடிர்ன்னு கிளம்ப வேண்டியதா கிருச்சு.. எங்கே போகிறதுன்னு தெரியாம வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.. பஸ் ஸ்டாண்டில உட்கார்ந்து யோசிச்சப்ப எதிரே கொடைக்கானல் போகிற பஸ் நின்றுக்கிட்டு இருந்தது.. இங்கே என் பிரண்ட் ஒருத்தி இருக்காங்கிற நினைவு வந்ததும் சட்டுன்னு பஸ்ஸில ஏறிட்டேன்..”
அவனுக்கு என்னடா இது என்று ஆகிவிட்டது.. அவள் இப்படியொரு விளக்கம் சொல்வாள் என்று அவன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை..
“காதலா..?” ஒரு தினுசான குரலில் வினவினான்..
“காதலா..?” விரக்தியுடன் அவள் கேட்டுவிட்டு..
“அதுக்கெல்லாம் நேரமில்லைங்க..” என்று தோளைக் குலுக்கினாள்..
காதலிக்க நேரமில்லை என்று சொல்பவளை விசித்திரமாக பார்த்து வைத்தவனுக்கு இவள் புரியாத புதிர் என்று தோன்றியது.. பனிவிழும் அந்த மழையிரவில் கெடைக்கானலின் சாலையில் நின்று கொண்டு இது போன்ற உரையாடலை ஒரு பெண்ணுடன் அவன் உரையாடுவான் என்று எவர் ஆருடம் கூறியிருந்தாலும் அவன் நம்பியிருக்க மாட்டான்.. விசித்திரமான வகையில் அதுபோன்ற சூழலில் அப்படியொரு உரையாடலை அவன் உரையாடிக் கொண்டிருந்தான்..
“எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வரலாமா..?”
“நானா வெளியே வரலைங்க.. வெளியேற்றப் பட்டேன்..”
அவள் சொன்ன பதிலில் அவன் திகைத்துத்தான் போனான்.. இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறாளோ என்ற நினைவுடன்..
“உங்க அப்பாம்மாவுக்கு உங்க மேல என்ன கோபம்ங்க..?” என்று புருவங்களைச் சுருக்கினான்..
அவனுக்கு அவனுடைய பங்களா நினைவுக்கு வந்தது.. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களிடமிருந்து பிரிந்து அவன் தனித்து வெளியேறிய போது அவனைப் பெற்றவர்கள் தடுத்தார்கள்.. அவனுடைய அப்பா கோவிந்தராஜன் அவன் கையைப் பிடித்துக் கெஞ்சினார்.. அம்மா வசுந்தரா கால்களைப் பிடிக்கப் போனாள்.. அவன் கோபத்துடன் தடுத்து..
“இவங்க வாய் வார்த்தையிலே என்னைப் பாவின்னு சொன்னாங்க.. நீங்க நிஜமாவே பாவியாக்கப் பார்க்கறீங்களேம்மா..” என்று சப்தம் போட்டதில் கைகளைக் குவித்து ‘போகாதே..’ என்று அழுதாள்..
அப்பழுக்கற்ற பாசம் பெற்றவர்களின் பாசம்.. அந்த பாசம் அவளுக்கு அணை போடவில்லையா..? சிறகுகளுக்கு அடியில் பாதுகாப்பதை விடுத்து வெளியே போ என்று தாய்பறவை சொல்லுமா..? அப்படி வெளியேற்றும் அளவிற்கு அவள் என்ன தவறு செய்தாள்..? காதலும் காரணமில்லை, காதலிக்க நேரமே இல்லை என்கிறாள்.. பொதுவாக காதலைத்தானே பெற்றவர்கள் கடும் தவறு என்று சாடுவார்கள்..?
‘காதலிக்க நேரமிருந்திருந்தால் இவள் காதலித்திருப்பாளா..?’ மனதில் எழுந்த கேள்வியில் அவன் திடுக்கிட்டான்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.