Chapter 03

0Shares

‘நினைத்து யார்..? நான்தானா..?’

உதட்டை மடித்துக் கடித்தபடி அவளை உறுத்துப் பார்த்தான்.. தவத்தைக் கலைக்க வந்த தேவலோக ஆடலரசியை முனிவன் முறைப்பதைப் போல அவன் பார்த்த பார்வையில் அவள் என்ன தவறு செய்தேன் என்று நடுங்கிப் போனாள்..

“ப்ளீஸ்.. என்னைத் தப்பா நினைச்சிராதீங்க..” கெஞ்சினாள்..

“நான் எப்போங்க உங்களைத் தப்பா நினைச்சேன்..?” அவனுக்கு கேபாம் வந்து விட்டது..

இது தேவையற்ற வேலையென்று நினைத்தான்.. வழியோடு போகிறவன் வழியில் சந்திப்பவர்களிடம் வாய் வளர்க்க நின்றால் இப்படித்தான் ஆகும் போல..

“கோபப்படறிங்களே..” பற்கள் கிடுகிடுக்கச் சொன்னாள்..

‘எதனால் இந்த அளவுக்கு நடுங்குகிறாள்..?’ அவனது கோபம் தணிந்தது..

அவளது அந்த நடுக்கம் அவனது கோபத்தைக் கண்ட பயமாகவும் இருக்கலாம்.. ஆனாலும் பனி கொட்டும் மழையிரவில் கொடைக்கானலில் ஈரப் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டிருப்பவள் உடல் நடுங்கப் பற்கள் கிடுகிடுக்கத்தானே பேசுவாள்..?

அவளை அந்த நிலையில் பார்க்கும் போது கோபம் வந்து தொலைக்கவில்லை.. இரக்கம்தான் வந்து தொலைத்தது.. அவளுக்கு உலர்ந்த ஆடைகளையும் கம்பளிளையும் கொடுத்துக் கணப்பருகில் உட்கார வைத்து பசிக்குச் சுடச்சுட உணவளிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது..

சுமக்க விரும்பாத சுiதான் என்றாலும் அகதி போல நடுரோட்டில் நிர்கதியாய் நிற்பவளை அம்போ என விட்டு விட்டு நடக்க முடியவில்லை.. அந்த ஓர் இரவில் எதுவும் நடக்கலாம்.. அவளுக்கு உடனடித் தேவை குளிர் தாக்காத மழை நனைக்காத ஒர் கூரை..!

“கோபப்படலை.. நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க..”

அவனது நிதானத்தில் அமைதி கொண்டவளாக அவள்..

“எனக்கு அப்பாம்மா இல்லைங்க..” என்றாள்..

“ஓ..” அவனுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது..

‘அதுதானே பார்த்தேன்.. பெத்தவங்க எப்படி மகளை வீட்டை விட்டுத் துரத்துவாங்க..?’

அவனது இரக்கமான பார்வையில் அவள் இமைகளைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்க முயன்றாள்.. அவளது லெதர் பேக்குடன் கிளம்பினான்.. அவள் பதறினாள்..

“அது என்னோட பேக்குங்க..”

“நானும் என்னுடையதுன்னு சொல்லலையே.. வாங்க..” அவன் முன்னால் நடந்தான்..

“எங்கே..?” அவள் பதட்டத்துடன் அவனிடமிருந்த லெதர் போக்கை பறிக்க முயன்றாள்..

“என் வீட்டுக்கு..” அவன் பேக்கைக் கொடுக்க வில்லை..

“உதவி செய்ய நினைப்பதற்கு நன்றி.. பட்.. முன்னே பின்னே தெரியாதவங்க வீட்டுக்கு இந்த மிட்நைட்டில எப்படி வரமுடியும்..?”

“காலால் நடந்து வாங்க..”

இலகுவான அவனது கேலிக்கு சிரிக்க முடியாத சோர்வோடு அவனைப் பார்த்தாள்.. கை கூப்பினாள்..

“ப்ளீஸ்.. என்னை பஸ்ஸ்டாண்டில விட்டு விட்டால் போதும்..”

“விடிவதற்குள் விறைந்து விடுவீங்க… கொடைக்கானலின் குளிரையும் மழையையும் இதுவரை நீங்க தாங்கி நின்றதே அதிசயம்.. பேசாம வாங்க..”

“இல்லைங்க.. வேண்டாம்..”

பிடிவாதமாக மறுத்தவளை நின்று தீர்க்கமாக பார்த்தான்.. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்..

“எனக்கும் இது தேவையில்லாத தொல்லைதாங்க.. லேடிஸ்ன்னாலே எனக்கு அலர்ஜி..”

“உங்க அம்மான்னாலும் அலர்ஜியா..?”

“என் அம்மா விதி விலக்குங்க.. இதையெல்லாம் உணக்கையாப் பேசத் தெரிஞ்சவங்களுக்கு இந்த மையிருட்டில பாதுகாப்பில்லாம தனியா நிற்கக் கூடாதுன்னு மட்டும் தெரியலையே..”

“பஸ்ஸ்டாண்டுக்கு வழி கேட்டேனே..”

“நான் பஸ்ஸ்டாண்டுக்குத்தான் கூப்பிட்டுக்கிட்டுப் போவேன்னு என்ன நிச்சயம்..?”

“ஒரு நம்பிக்கைதாங்க..”

“எதை வைத்து என்னை நம்பறிங்க..?”

“இந்த இடத்திலும் நாம தனியாத்தான் நிற்கிறோம்.. மிஸ்பிஹேவ் பண்ணனும்னு நினைத்தா இங்கேயே ஸ்டார்ட் பண்ணியிருப்பீங்களே.. ஏமாற்றித் தனியிடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லையே.. இங்கே நான் கத்தினாலும் கதறினாலும் ஏன்னு கேட்க ஆளில்லையே..”

“அட.. நீங்களே எடுத்துக் கொடுக்கறிங்களே..”

அவன் விசமமாகச் சொன்னதில் அவள் பயந்து போனாள்.. 

“பயப்படாதீங்க..” சிரித்தான் அவன்..

மழை விட்டபாடாக இல்லை.. நனைந்த உடையுடன் இருந்தவளை அதி விரைவாக வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட வேண்டுமென்று அவனது அறிவு துரிதப்படுத்தியது..

“இந்த நம்பிக்கையை என் வீட்டுக்கு வருவதிலும் காட்டுங்க.. உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறேன்..”

“ஆனாலும்..”

“அதோ.. என் வீடு வந்து விட்டது..”

அவன் சுட்டிக் காட்டிய திசையில் விளக்குகளின் ஒளிச் சிதறலில் பார்த்தவள் பிரமித்துப் போனாள்..

அது வீடல்ல.. மாளிகை..!

மழைத்தாரைகளின் ஊடே தெரிந்த மாளிகையின் பிரம்மாண்டத்தில் அவளுக்குள் பயம் வந்தது..

“நீங்க யார்..?” என்றாள்..

“நான் மூர்த்தி..” அவன் நடையை எட்டிப் போட்டான்..

அவனது பங்களா வாசலில் இருந்த செக்யூரிட்டிகளுக்கான கூண்டு போன்ற அறையைக் கண்டவள் தேங்கி நின்றாள்..

“ஏன் நின்னுட்டிங்க..? வாங்க..”

“இல்லைங்க.. உங்க செக்யூரிட்டி முன்னாலே நாம் ஆர்கியூ பண்ண வேண்டாம்.. அது நல்லாயிருக்காது..”

“உங்களுக்கே அது நல்லாயிருக்காதுன்னு தெரியுதில்ல.. அப்புறமும் ஏன் அதைச் செய்யனும்னு அடம் பிடிக்கறிங்க.. கமான்.. லெட்’ஸ் கோ..”

“இப்படி நடுராத்திரியில் ஒரு பெண்ணை நீங்க அழைத்துக்கிட்டு வந்தா உங்க வீட்டில் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க..?”

“எது நினைத்தாலும் அதை என்னிடம் கேட்க மாட்டாங்க..”

“எனக்குச் சங்கடமாக இருக்கும்..”

“இருக்கட்டுமே.. பஸ்ஸ்டாண்டில் பாதுகாப்பில்லாம குளிரிலும் மழையிலும் நனைந்து விறைத்துப் போகிறதுக்கு இது பெட்டர்..”

அவன் நிற்காமல் நடந்து கொண்டே பேசினான்.. போடா என்று தேங்கி நிற்க முடியாமல் அவள் திணறினாள்.. அவன் கையிலிருந்த லெதர்பேக்கில் அவளது துணிகளும் அவள் படித்த படிப்பிற்கான சான்றிதழ்கள் அடங்கியிருந்த ஃபைலும் கொஞ்சம் பணமும் இருந்தன.. அவைதான் அவளின் வாழ்வாதாரம்..!

வேறு வழியின்றி அவனைத் தொடர வேண்டிய நிர்பந்தத்தை அவன் உருவாக்கி விட்டதில் அவள் சினமடைந்தாள்.. அவன் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கக் கூடும் என்று அவள் நினைக்கவில்லையே… அவன் உயர்ந்த நிலையில் இருக்கும் பெரும் பணக்காரன் என்பது அவளை அச்சுறுத்தியது.. நள்ளிரவில் அவளுக்குத் துணைநின்ற உதவி அழைத்து வருபவன் மிகப்பெரும் பணக்காரனாக இருப்பது அவள் எளிதாக கடக்கக் கூடிய ஒன்றல்ல..

“நீங்க யார்ன்னு கேட்டேனே..” அழுத்தமாக அவள் கேட்டாள்..

“விசாரணையெல்லாம் பலமா இருக்கு..” அவன் பலமாகச் சிரித்துவிட்டு..

“நான் மூர்த்தின்னு சொன்னேனே..” என்று நினைவுறுத்தினான்..

“பெயரைச் சொன்னால் மட்டும் போதுமா..? அதை மட்டும் வைத்து உங்கள் வீட்டுக்கு வந்துவிட முடியுமா..?” சட்டமாக கேட்டாள்..

“நீங்க அதையும் சொல்லலைங்க.. பெயரைக் கூடத் தெரிந்துக்காம உங்களை என்வீடு வரைக்கும் அழைத்துக் கிட்டு வந்திருக்கேன் பாருங்க.. இதுக்கே எனக்கு நீங்க காம்ளிமெண்ட் கொடுக்கனும்.. தெரியுமா..?” என்றான் மூர்த்தி..

“உங்களை யாருங்க கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னது..?” கோபத்துடன் கேட்டவள் அவன்..

“என் மனச்சாட்சி..!” என்று சொன்னதும் விக்கித்து விட்டாள்..

அவனது அந்தப் பதில் அவளது அந்தராத்மாவைத் தொட்டு அசைத்தது.. கண்கள் கலங்க..

“மனச்சாட்சி..!” என்று விரக்தியுடன் சொன்னாள்..

“ம்ம்ம்.. மனச்சாட்சிதான்..?” அழுத்தமாக அவன் சொன்னான்..

“இப்போதெல்லாம் மனச்சாட்சியோடு யார் இருக்கிறாங்க..? எல்லோரும் சட்டையைக் கழட்டி ஆணியில் மாட்டி வைப்பதைப் போல மனச்சாட்சியைக் கழட்டி கடாசிட்டு வாழறாங்களே.. சட்டையையாவது கழட்டி ஆணியில் மாட்டி வைத்துட்டு திரும்பவும் எடுத்துப் போட்டுக்கறாங்க.. கழட்டிக் கடாசின மனச்சாட்சியை மட்டும் யாருமே தேட மாட்டேங்கிறாங்களே..” குமுறினாள்..

அவளது குமுறலில் அவன் அவளை ஆழ்ந்து நோக்கினான்.. புரிதலுடன் கூடிய தோழமையுணர்வு அவன் மனதில் உதயமானது.. இதுபோன்ற புரிதல் உணர்வும் இணக்கமும் ஒரு பெண்ணிடம் அவனுக்கு உண்டாகியிருப்பதில் வியப்புக் கொண்டான்..

“இந்த வயசில் இப்படியொரு பிலாசபியா..?” என்று கேட்டான்..

“ம்ப்ச்.. வயசுக்கும் தத்துவத்துக்கும் என்னங்க சம்பந்தம்..? போதி மரத்தடியைத் தேடி புத்தர் அலைந்தப்ப அவருக்கு என்ன தடியூண்டும் வயதா ஆகியிருந்தது..?”

அவளது கேள்வி அவனது ஆச்சரியத்தை அதிகப் படுத்தியது.. இந்த இளம்வயதில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருந்தால் இப்படிப் பேசுவாள்..?

மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்த சேலை அவளது யௌவனத்தின் அழகைத் தெள்ளத் தெளிவாகக் காட்டத் தேவலோகத் ரம்பையைப் போல நின்றிருந்தவளின் கவர்ச்சிகரமான வசீகரம் மிக்கப் பேரழகு அவனைத் தாக்கியது..

‘புத்தரைப் பற்றிப் பேசும் வயதா இவளுக்கு..?’

தாய், தகப்பனில்லாமல் வளர்ந்தவள் எவர் வீட்டில் தங்கியிருந்தாள் என்ற கேள்வி அவனுள் எழுந்தது.. அதை அவனது விழிகளில் படித்தவள்..

“என்ன..?” என்றாள்..

“உங்களை வீட்டை விட்டு வெளியேற்றிட்டாங்கன்னு சொன்னீங்களே.. யார் வீட்டில் தங்கியிருந்தீங்க..?” என்று கேட்டான் மூர்த்தி..

“என் வீட்டில்தாங்க..” அமைதியான அவளது பதில் அவனைக் குழப்பியது..

“மழையிலும் பனியிலும் நனைந்தா மூளை சில்லுன்னுதான் ஆகும்ன்னு சொல்வாங்க.. இங்கே நேர்மாறா உங்க மூளை சூடாகிருச்சு போல இருக்கே.. குழப்பறிங்க..” என்றான்..

“குழப்பலைங்க.. உண்மையைத்தான் சொல்றேன்.. அது என் பெயரில் இருக்கிற வீடுதான்..” தெள்ளத் தெளிவாக அவள் சொன்னாள்..

“உங்க வீட்டைவிட்டு உங்களை யாரால் வெளியேற்ற முடியும்..?”

“என் சித்தியால் முடியுமே..”

“சித்தியா..?”

“ஆமாங்க.. என் அப்பாவின் இளைய தாரம்.. என் சித்தி..”

“உங்க அப்பா உங்களை சப்போர்ட் பண்ணலையா..?”

“அம்மா முதலில் இறந்துட்டாங்க.. அப்பா ரீமேரேஜ் பண்ணிக்கிட்டார்.. என் சித்திக்கு மகன் பிறந்த மறுவருடம் அவரும் இறந்து விட்டார்..”

மூர்த்திக்கு எதுவும் விளங்கவில்லை.. அதற்குள் செக்யூரிட்டி அவசரமாக கேட்டைத் திறந்து விட்டான்.. அவர்களுக்காக கேட்டைத் திறந்து விட்ட செக்யூரிட்டி தடிமனான ரெயின் கோட்டை அணிந்திருந்தான்.. தலையோடு போர்த்தப் பட்டதைப் போல இருந்த அந்த ரெயின் கோட் மழையோடு குளிரும் அவனைத் தாக்காமல் கவசம் போல அவனைக் காத்து நின்றது.. அவனைக் கண்டதும் அவள் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்..

‘கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலத்தில் பனி விழும் குளிர் இரவில் கொட்டும் மழையில் நனைந்தபடி தெளிவான மனநிலையில் இருப்பவன் உலாவப் போவானா..? இவனை நம்பி இவன் பின்னால் போகிறேனே..’ அவளுக்கு பதக் பதக் என்று இருந்தது.. மனதுக்குள் பயந்தாள்..

முன்னால் நடந்து சென்றவனின் கம்பீரத் தோற்றம் அப்படியில்லை என்று அடித்துச் சொன்னது..

‘இது இவனோட நேச்சர்ன்னா.. இப்படி நட்ட நடுராத்திரியில் பெண்களை வீட்டுக்கு அழைத்துக்கிட்டு வருவதும் இவனுடைய நேச்சரா இருக்குமோ..’ அவளுக்கு படபடப்பாக இருந்தது..

கேட்டை மூடிக் கொண்டிருந்த செக்யூரிட்டி விழிகள் தெறித்து விடுவதைப் போல வியப்புடன் அவளை ‘ஆ’ வென்று பார்த்த பார்வையில் அவள் நிம்மதியானாள்..

‘ஊஹீம்.. இது போலப் பெண்கள் யாரும் இதுவரை இங்கே வந்ததில்லை போல.. இல்லைன்னா முதலாளி அழைத்துக் கொண்டு வரும் பெண் என்ற பயமின்றி இந்த செக்யூரிட்டி இப்படிக் கண்ணை முழிச்சுக்கிட்டு ‘ஆ’ன்னு ஆச்சரியமா பார்க்க மாட்டான்..’

கேட்டிலிருந்து வீட்டிற்கு முன்னாலிருந்த அகன்ற போர்டிகோவுக்குச் செல்லும் பாதை சலவைக்கற்கள் பதிக்கப்பட்டு பளபளப்பாக இருந்தது.. பாதையின் இருபக்கமும் தோட்டமிருக்க.. சிறிய அளவில் கைபிடிச் சுவர் தோட்டத்தை ஒட்டிக் கட்டப்பட்டிருந்தது..

பதினைந்து கார்கள் நிற்குமளவிற்கு மைதானம் போலப் பரந்து விரிந்திருந்த போர்டிகோவில் கரும்பச்சை வண்ணத்தூண்கள் இருந்தன.. இரண்டு நபர்கள் இருபக்கமும் நின்று கைகளை விரித்துத் தொட்டுக் கொள்ளும் அளவில் அவற்றின் சுற்றளவு இருந்ததில் அவள் அந்தத் தூண்களில் ஒன்றைத் தொட்டுப் பார்த்தாள்..

நீண்ட சலவைக்கற்கள் வரிசை கட்டிப் போடப் பட்டிருந்ததைப் போன்ற படிக்கட்டுகளில் மூர்த்தி தாவி ஏறினான்.. தயக்கத்துடன் நின்றவளைத் திரும்பிப் பார்த்து..

“கம்..” என்றான்..

காலிங் பெல்லின் ஓசையில் கதவைத் திறந்த பெண்மணி ஐம்பதைத் தொடும் வயதில் இருந்தாள்.. எளிமையான நூல் புடவையும், மெல்லிய தங்கத்தாலி சரடும், நெற்றியில் பெரிய அளவிலான மெரூன் வண்ண ஸ்டிக்கர் பொட்டுமாக இருந்தவள் மரியாதையுடன் ஒதுங்கி விழிவிட்டதில் அவள் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணியாக இருக்க வேண்டும் என்று இவள் யூகித்தாள்.. அந்தப் பெண்மணி மூர்த்தியின் பின்னால் வந்த இவளை படு ஆச்சரியத்துடன் பார்த்தாள்..

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link