Chapter 04
“இவங்க நம்ம கெஸ்ட் சாவித்திரியம்மா..”
மூர்த்தி முறுவலித்தான்.. மாளிகை போன்ற அவனது பங்களாவில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் இருக்கிறாள் என்பதில் பாதுகாப்புணர்வு கொண்டவள் சாவித்திரியை நிம்மதியுடன் நோக்க அவள் இவளைப் பார்த்து..
“வாம்மா..” என்றாள்..
“மாடியில் கெஸ்ட் ரூமைக் காட்டுங்க.. ஹீட்டரைப் போட்டு விடுங்க.. இவங்க உடனடியா நனைஞ்ச டிரஸ்ஸை மாத்தியாகனும்.. குளிரிலும் பனியிலும் மழையிலும் நனைஞ்சு விறைச்சுப் போயிருக்காங்க.. சூடா சாப்பிட ஏதாவது செய்து கொடுத்து சாப்பிட வைங்க.. அப்புறம் இவங்களுக்குத் துணையா கெஸ்ட் ரூமில் நீங்களும் படுத்துங்க.. வாக்கிங் போனப்ப வழியில் பார்த்தேன்.. கொடைக்கானலுக்கு புதிதாம்.. யாரோ ஒரு பிரண்டைத் தேடி வந்திருக்காங்க.. அவங்க இல்லைன்னதும் எங்கே போகிறதுன்னு தெரியாம நின்றுக்கிட்டு இருந்தாங்க.. இந்த மிட்நைட்டில் யங்லேடி தனியாய் நிற்கிறது ஸேஃபில்லைன்னு எடுத்துச் சொல்லி அழைத்துக்கிட்டு வந்தேன்.. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆணுடன் வரமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தாங்க.. வலுக்கட்டாயமா இழுத்து வந்திருக்கேன்.. தனியாப் படுக்க விட்டா சந்தேகத்திலேயே தூங்க மாட்டாங்க..”
அவன் சொல்லச் சொல்ல சாவித்திரி அவளைத் திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.. வீட்டில் வேலை செய்யும் பெண்மணியிடம் இவ்வளவு விளக்கம் சொல்கிறானே என்று மனதுக்குள் வியந்தாள் அவள்..
“சாவித்திரியம்மா என் அம்மாவின் ஊரைச் சேர்ந்தவங்க.. என்னைப் பார்த்துக்கனும்னு அம்மா நான் பிறந்த போதே அழைத்து வந்தவங்க.. அம்மாவோட ரெப்ரசென்டேட்டிவ் ஸோ… நான் தும்மினாலும் இவங்களுக்கு விளக்கம் சொல்லியாகனும்.. ஹா.. ஹா.. என்ன சாவித்திரியம்மா.. அப்படித்தானே..?” அவள் மனதைப் படித்ததைப் போலப் பதில் சொல்லிவிட்டு அவன் சிரித்தான்..
அவன் சிரிப்பதைக் கனிவுடன் பார்த்த சாவித்திரியின் கண்கள் கலங்கின.. காணாததைக் கண்டு விட்டதைப் போன்ற நெகிழ்ச்சியுடன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.. மூர்த்தி மாடியேறி விட்டான்.. வேலை முடிந்தது என்று விட்டு விட்டுச் செல்பனைப் பின் தொடர முடியாமல் அவள் தயங்கி நின்றாள்..
“வாம்மா..” சாவித்திரி அழைத்தபடி மாடியேறினாள்.
மூர்த்தி வைத்து விட்டுச் சென்றிருந்த லெதர் பேக்கை எடுத்துக் கொண்டவள் சாவித்திரியைப் பின் தொடர்ந்தாள்.. மாடியில் நடு மையமாக அகன்ற ஹால் நீண்டிருக்க இரு பக்கமும் அறைகள் இருந்தன.. ஓர் அறையைத் திறந்து விட்ட சாவித்திரி அறையின் ஹீட்டரை ஆன் பண்ணி விட்டாள்..
“பாத்ரூம் ஹீட்டரைத் தேவையானப்ப போட்டுக்க.. இப்பக் குளித்து டிரஸ் மாத்திக்க.. உனக்குச் சாப்பிட சூடா உப்புமாக் கிளறிக் கொண்டு வரேன்..” நகரப் போனாள்..
“நீங்க சாரோட அம்மா அனுப்பி வைத்தவங்கன்னு சார் சொன்னாங்களே.. சாரோட அம்மா இங்கே இல்லையா..?” என்ற அவளது கேள்வி சாவித்திரியை தடுத்து நிறுத்தியது..
அது எதற்கு உனக்கு என்பதைப் போல சாவித்திரி பார்த்த பார்வையில் இவளது முகம் மாறிவிட்டது..
“ஐ ஆம் ஸாரிங்க.. இந்த மிட்நைட்டில் சார் என்னைப் பார்த்தினாலேதான் எனக்கு ஹெல்ப் கிடைத்தது.. அதே சமயத்தில இந்த மிட் நைட்டில பனியிலயும் குளிரிலயும் கொட்டற மழையிலயும் நனைந்துக்கிட்டு யாராவது வாக்கிங் போவாங்களா..? நான் தெரியாம மாட்டிக்கிட்டேன்.. சார் தெரிந்தே இதைச் செய்திருக்கிறாரே.. அதனாலதான் கேட்டேன்…” சங்கடத்துடன் சொன்னாள்..
சாவித்திரி பெருமூச்சு விட்டாள்.. நீண்ட, நெடிய, துயரம் நிரம்பிய பெருமூச்சு அது..
“மனசில புழுக்கம் இருந்தா இப்படித்தான், பனியிலயும் குளிரிலயும் மழையிலயும் நனைந்துக்கிட்டுக் கால்போன போக்கில் போகத் தோணும்..” தன் போக்கில் சொல்லி விட்டுப் போய் விட்டாள்..
நனைந்திருக்கும் உடையை மாற்றிக் கொள்ளும் சிந்தையின்றி அப்படியே நின்று விட்டாள் அவள்.. மரத்தடியில் அவள் பனியிலும் மழையிலும் நனைந்து உடல் நடுங்க வெடவெடத்தபடி நின்றிருந்தபோது அவ்வளவுதான் என்று நினைத்தாளே.. சில நிமிடங்களுக்கு முன்னால் நகர்ந்த அந்த மணித்துளிகள் அவளது கண்முன் சுழன்றன.. இடியும் மின்னலுமாக கொட்டிய மழைத் தாரைகளின் இடையே அவளைக் காக்க வந்த ரட்சகனாக அவன் வெளிப் பட்டானே.. கடவுள் அனுப்பி வைத்த தூதன் என்று அவனை நினைத்தாளே.. அவன் மனதில் புழுக்கம் இருக்கிறதா..? அந்த மனவெம்மையைத் தணிக்கும் மார்க்கமின்றி அவன் பனி பொழியும் நள்ளிரவில் கொட்டும் மழையில் கொடைக்கானலின் சாலைகளில் உலாவக் கிளம்பி வந்தானா..?
‘அவன் மட்டும் அப்படி வந்திருக்காவிட்டால் என் நிலைமை என்னவாகியிருக்கும்..?’
அவள் மனதில் நன்றி பெருக்கெடுத்தது.. அறையைப் பார்த்தாள்.. அதன் பட்டோடபம் அவளை பயமுறுத்தியது.. அதுபோன்ற அறைகளை அவள் திரைப்படங்களிலும், டிவியில் வரும் விளம்பரங்களிலும் தான் பார்த்திருக்கிறாள்.. நேரடியாகப் பார்ப்பாள்.. அங்கே தங்குவாள் என்று நினைத்தும் பார்த்ததில்லை..
‘எதைத்தான் நினைத்துப் பார்த்தேன்..?’
துயரச் சுமையில் மனம் கனத்தது.. அடக்கி வைத்திருந்த கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.. தன்னை யாரேனும் பார்க்கிறார்களோ என்ற பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள்.. சாவித்திரி போகும் போது அறைக்கதவைச் சாத்திவிட்டுப் போயிருந்ததினால் அறையில் அவள் மட்டும் தனித்திருப்பதை உணர்ந்து கொண்டவள் அவசரமாக கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்..
அறையில் பரவியிருந்த ஹீட்டரின் வெப்பத்தில் நனைந்திருந்த உடை சற்று உலர்ந்திருந்தது.. லெதர் பேக்கைத் திறந்தவள் உள்ளேயிருந்த மாற்றுடைகளை எடுத்துக் கட்டிலின் மீது வைத்தாள்.. லெதர் பேக் என்பதினால் மழைநீர் பேக்கின் வெளிப்புறத்தை மட்டுமே நனைத்திருந்தது.. உள்ளே ஈரம் தாக்கவில்லை..
அந்த அறையின் பரப்பளவுதான் அவளுடைய வீடு என்பதில் அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது.. முன்புறம் ஆர்ச் போல வளைவு கொடுத்து சுவரையொட்டி வளைவாக சோபா செட் போடப்பட்டிருந்தது.. ஒருபக்க சுவரை அடைத்து ‘டிவி..’ இருந்ததில்..
‘சினிமாத் தியேட்டர் போலவே இருக்கே..’ என்று அயர்ந்து போனாள்..
எவ்வளவுதான் பிரமிப்பது.. அவளது வாழ்க்கைத் தரத்தில் எல்.ஈ.டி வாங்குவதே ஒரு பெருங்கனவு போல இருந்த நிலையில் இங்கே சுவரை அடைத்து சோனி டி.வி.
வரவேற்பறை போல தோற்றமளித்த அறையின் முன்புறத்திலிருந்த ஆர்ச்சைத் தாண்டி உள்ளே பார்த்தால் அங்கும் சோபா செட்கள் இரண்டிரண்டாக அணி
வகுத்து ஜன்னல்களின் ஓரமாகப் போடப் பட்டிருந்தன.. அறையின் விட்டத்தில் ஆரம்பித்துத் தரையைத் தொடும் ஜன்னல்களின் கண்ணாடி கதவுகளை கனத்த திரைச்சீலைகள் மறைத்துத் தொங்கிக் கொண்டிருந்தன.
‘இதுக்கு எதுக்கு ஜன்னலை வைக்கனும்..?’
அவளுக்கு என்ன தெரியும்..? பகல் பொழுதில் திரையை விலக்கி ஜன்னலோரமாக போடப் பட்டிருக்கும் சோபாவில் உட்கார்ந்து பார்த்தால் கொடைக்கானலின் இயற்கையழகு கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் தெரிந்து மனதை கொள்ளை கொள்ளும் என்பது.. அவள் பாவம் சாத்தூரில் பிறந்து வளர்ந்தவள்.. கொடைக்கானல் எந்தத் திசையில் இருக்கிறது என்றுகூட அவளுக்குத் தெரியாது.. இது போன்ற மாளிகைகளும் இருக்கின்றன.. என்பதை இப்போதுதானே நேரில் பார்க்கிறாள்..?
அறையின் மூலையில் வேலைப்பாடுகளுடன் கூடிய மர டேபிளில் கம்யூட்டர் பொருத்தப்பட்டிருந்தது.. அறையின் மையத்தில் நான்கு நபர்கள் கை, கால்களைப் பரத்தி விரித்துப் படுத்து உறங்கும் அளவில் மிகப் பெரிய கட்டில்.. அதில் நுரை மெத்தை, தலையணைகளுடன் புத்தம் புதிய விரிப்புக்களை உடுத்தி அவளை ஓய்வெடுக்க ‘வா’ என்று அழைத்தது..
சுவரோடு ஒட்டிய கதவொன்றைத் திறந்தால் நீண்ட உடை மாற்றும் அறை இருபக்கமும் மர அலமாரிகளுடன் அசத்தியது.. மையத்தில் சுவரை அடைத்ததைப்
போலக் கண்ணாடி.. அதன் முன் குஷன் பதிக்கப்பட்ட நாற்காலி..
உடை மாற்றும் அறையிலிருந்த கதவைத் திறந்தால் அதையொட்டி குளியலறை இருந்தது.. தனித்த பெரிய அறையைப் போலிருந்த குளியலறையில் இருந்த பாத் டப்பின் பளிங்கு வெண்மையில் மயங்கிப் போனாள்..
‘கெஸ்ட் ரூமே இப்படின்னா அவன் ரூம் எப்படியிருக்கும்..?’
வழியில் பார்த்தவளை வீட்டுக்கு அழைத்து வந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமே தோற்றுப் போகும் அளவில் டென் ஸ்டார் ஹோட்டல் ரூம் போன்றதொரு அறையில் தங்க வைத்திருக்கும் அந்த தயாளன் எப்பேற்பட்ட கோடிஸ்வரனாக இருப்பான்.. அவன் அவளை மதித்துத் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி என்று சொன்னானே..
கடவுள் கருணையற்றவர் என்று நினைத்தாளே.. இதுபோன்ற ஈர மனம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்று அவளுக்கு அடையாளம் காட்டிய கடவுள் கருணை மனம் படைத்தவர்தான்..
குளியலறையிலிருந்த வெந்நீர் குழாயைத் திருகி விட்டு ஷவரின் அடியில் நின்றபடி ஈர உடைகளைக் களைந்தவளுக்கு உயிர் வந்ததைப் போல இருந்தது.. கொதிக்கும் வெந்நீரில் குளித்து, உடைமாற்றி ஈரத் துணிகளை அலசிப் பிழிந்து பக்கெட்டில் போட்டவளுக்கு அவற்றை எங்கே காய வைப்பது என்று தெரியவில்லை.. குளியலறையிலிருந்த வாஷிங் மெஷினைப் பார்த்தவள் துணிகளை அதில் போட்டு டிரையரை ஆன் பண்ணினாள்.. கணப்பொழுதில் துணிகள் உலர்ந்து விட்டதில் அவளுக்கு கண்ணைக் கட்டியது..
‘கெஸ்ட் ரூமின் பாத்ரூமில் டிரையருடன் இருக்கும் வாஷிங்மெஷினா..?’
இப்படிப்பட்ட வசதிகளுடன் கூடிய மாளிகையில் அவள் உறங்கி எழ ஓர் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை.. கனவோ என்ற மலைப்பு ஏற்பட்டது.. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டாள்.. தெளிவாக காட்சி தெரிந்ததில் அவள் காண்பது கனவல்ல என்று நிச்சயமானது..
விலை குறைந்த வாஷிங்மெஷின் ஒன்றைத் தவனை முறையில் வாங்க முன்பணம் கட்ட அவள் ஒராண்டு பணம் சேர்க்க வேண்டியிருந்தது.. ஒரு வழியாகப் பணம் சேர்த்து தவணை முறையில் வாஷிங் மெஷினை வாங்கியவள் அந்தத் தவணையைக் கட்டி முடிப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டாள்.. என்னதான் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டினாலும் தவணை கட்ட பணம் மீதமாகவில்லை..
‘எப்படி மீதமாகும்..? வாயையும் வயிற்றையும் நான் கட்டினால் மட்டும் போதுமா..?’ கசப்புடன் நினைத்துக் கொண்டாள்..
“வினய் நெய்யில்லாமல் சாப்பிட மாட்டான்ம்மா.. அதனால நெய்யைக் கட் பண்ண வேணாம்.. ஒன்னு செய்யேன்.. நீ காலையிலும் சாயந்திரமும் உன் ஆபிசில் காபி குடிப்பியே.. அதைக் கட் பண்ணிவிடேன்.. கணக்கு சரியாவரும்..”
கணக்குப் போட்டுக் காய் நகர்த்திக் காரியமாற்றுவதில் அவளது சித்தி லீலாவதி கெட்டிக்காரி.. சாலையோரக் குடிசையொன்றில் தாய், தகப்பனில்லாமல் தனித்து வாழ்ந்த கூலித் தொழிலாளி அவள்.. கட்டிடங்களில் சித்தாள் வேலை கிடைத்தால் மட்டுமே சோறு கிடைக்கும்.. ஓலையால் மறைக்கப்பட்ட குடிசையில் மழைகாலம் வந்து விட்டால் தங்க முடியாது.. வெள்ளம் ஓலைக் குடிசையை அடித்துச் செல்ல இவள் பாதி கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றிக் கொள்வாள்… அப்போதுதான் கொத்தனார் வேலை செய்த வீரப்பனுடன் அவளுக்கு நெருக்கம் ஏற்பட்டது.. அவருடன் மட்டுமல்ல.. அவளுக்கு பலருடன் நெருக்கம் இருந்தது என்பது வீரப்பனுக்குத் தெரியாது..
வீரப்பன் ஐம்பதைக் கடந்த வயதில் இருந்தார்.. லீலாவதிக்கோ இருபது வயது.. பசியும், வாழ்க்கை நடத்துவதற்கான போராட்டமும் அவளை வீழ்த்தி விட்டது.. வயதைப் பற்றி அவள் யோசிக்கவில்லை.. அவளுக்குத் தேவை, இருக்க இடமும், உடுக்க உடையும் மட்டுமே…
என்னதான் லீலாவதியின் இளமையில் வீரப்பன் மயங்கி மோகம் கொண்டாலும் அவளுக்கு மனைவியென்ற உரிமையைக் கொடுக்க மறுத்தார்.. லீலாவதியின் கசடுகள் அவருக்குத் தெரிந்திருந்தது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் அவரது மனைவி அபிராமியின் மீதான காதலும் மகளின் மீதான பாசமும் அவருக்கு அணை கட்டி தடுத்து நிறுத்தியிருந்தன..
“உனக்குத் தனிவீடு வாடகைக்கு எடுத்துத் தர்றேன்.. நீ சித்தாள் வேலைக்கு வரவேணாம்.. மாசாமாசம் செலவுக்குப் பணம் கொடுக்கிறேன்.. மளிகை ஜாமான் வாங்கிப் போடறேன்.. இது போதாதா உனக்கு..?”
வீரப்பன் கேட்ட கேள்வியில் ஒன்றிக் கொள்ள இடமும் வயிற்றுக்கு உணவும் உடுத்திக் கொள்ள மாற்றுடைகளும் இல்லாமல் இருந்தவள்தானே நீ என்ற கேள்வியும் சேர்த்துப் பொதிந்திருந்தது..
இவற்றுக்காகத்தானே நீ என்னிடம் வந்தாய் என அவர் சொல்லாமல் சொல்லியதில் லீலவாதி ஒன்றும் துடித்துப் போய் விடவில்லை.. அவற்றுக்காகத்தான் அவள் அவரிடம் வந்தாள் என்பதுதான் உண்மை.. இப்போதைக்கு இது.. இதை விடப் பெரிய இடம் கிடைத்தால் அப்போது கை மாறிக் கொண்டால் போயிற்று என்ற அலட்சியத்துடன் அவளும் வீரப்பனின் ஏற்பாட்டிற்கு சம்மதித்தாள்..
வீரப்பனின் இந்த மறைவு வாழ்பு பற்றி அபிராமி அறிந்த போது அவள் கணவரிடம் சண்டை போடவில்லை.. ஆழ்ந்த துயரத்துடன் ஓர் பார்வை பார்த்தாள்.. அந்தப் பார்வையில் துடித்துப் போன வீரப்பன் லீலாவதியின் வீட்டுப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காமல் ஒதுங்கி கொண்டார்..
தூண்டில் போட்டு அவரைத் தன் பக்கம் இழுத்துத் தனிவீடு வாடகைக்கு எடுத்துக் குடி வைக்கம் அளவிற்குக் கொண்டு போன லீலாவதி அவ்வளவு எளிதாக அவரை ஒதுங்க விட்டு விடுவாளா என்ன..?
குளிர்காய்ச்சல் என்று தகவல் அனுப்பி அவருக்குப் பரிதாபத்தை வரவழைத்து அவளைத் தேடிவர வைத்தாள்.. நலம் விசாரிக்க வந்தவரைக் குளிருக்குப் போர்வையாக்கிக் குளிர் காய்ந்து தன் வலையில் மறுபடியும் சிக்க வைத்தாள்..
சாகசம் தெரிந்தவர்களுக்கு எல்லாமே கை வந்த கலை..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.