Chapter 05
வீரப்பனால் லீலாவதியிடமிருந்து மீள முடியவில்லை.. குற்ற உணர்வில் அபிராமியின் முகம் பார்க்க முடியாமல் தவித்தார்.. பெருந்தன்மை மிக்க
அபிராமி கணவரின் துரோகம் குறித்து எந்தவிதக் கேள்வியும் கேட்டு அவரைச் சங்கடப்படுத்தவில்லை.. மௌனமாக அவரது துரோகத்தைச் சகித்துக் கொண்டாள்.. மனைவியின் அந்தக் குணம் வீரப்பனின் மனதை வாள் போட்டு அறுத்தது..
இப்படி இருதலைக் கொல்லி எறும்பிடம் சிக்கிக் கொண்டதைப் போலத் தத்தளித்த கணவர்மீது கருணை கொண்டவளாய் அவருக்கு விடுதலை கொடுப்பதைப் போல அபிராமி இறந்து விட்டாள்.. நெஞ்சை வலிக்கிறது என்று சரிந்த மனைவி மருத்துவ மனைக்குச் செல்வதற்குள் உயிர் துறந்து விட்ட அதிர்ச்சியில் உறைந்து போனார் வீரப்பன்..
“அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு வீரப்பன்.. இவங்க ஹார்ட் பேசண்ட்டுன்னு உங்களுக்குத் தெரியாதா..?”
டாக்டர் கயல்விழி ‘பாதகா’ என்றொரு பார்வை பார்த்தாள்.. வீரப்பனின் மனம் நொறுங்கியது..
“என்னிடம்தான் அவங்க ரெகுலரா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறாங்க.. உங்க ஹஸ்பெண்டையும், மகளையும் அழைத்துக்கிட்டு வாங்கன்னு ஆயிரம் தடவை அவங்களுக்குச் சொல்லியிருப்பேன்.. இதோ, அதோன்னு சாக்குப் போக்குச் சொல்லிட்டு தானாய் தன்னுயிரைக் குறைத்துக்கிட்டாங்க.. ம்ப்ச்.. என்ன மாதிரியான மனுசன் நீங்க..?”
வீரப்பனுக்கு புரிந்து விட்டது.. வாய் விட்டு எதையும் கேட்காமல் மனதளவில் அவரை விட்டு விலகி நின்று உயிர் துறந்து விட்டாள் அபிராமி..
“இவங்க மனது கஷ்டப்டும்படி எதையும் பேசாம, அதிக வேலைப்பளு கொடுக்காம கண்ணாடிப் பாத்திரம் போல நீங்க பத்திரமா கவனித்திருந்தா இப்படி ஆகியிருக்காது..”
வீரப்பனின் துரோகம் அவரது மனைவியின் இளகிய இதயத்தை செல்லரித்து மரணப்பாதையில் அழைத்துச் சென்று விட்ட துயரத்தில் மூழ்கியிருந்தவரைத் தேடி வந்த லீலாவதி உறவினரின் முன்னிலையில் அவர் சட்டையைப் பிடித்து உலுக்கி..
“என் வயிற்றில் வளரும் உங்க குழந்தைக்கு என்ன பதில்..?” என்று நியாயம் கேட்டாள்..
‘குழந்தையா..?’
வெறுமனே போய் வந்த மறைவு வாழ்க்கையென்று லீலாவதியுடன் இருந்த இருப்பிற்கு அவர் பெயர் சூட்டியிருக்க அடுத்த காயை சாதுர்யமாக நகர்த்தி அவரை வெட்டி வீழ்த்தி விட்டாள் லீலாவதி..
திட்டம் போட்டு அவள் காய் நகர்த்தி சதுரங்க விளையாட்டை விளையாடி விட்டதை தாமதமாகப் புரிந்து கொண்ட வீரப்பனுக்கு அவளுக்குத் தாலி கட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை..
லீலாவதிதான் அபிராமியின் காரியத்திற்கு வந்திருந்த உறவினர்களின் முன்னிலையில் வீரப்பனின் சட்டையைப் பிடித்து நியாயம் கேட்டு விட்டாளே.. அவரது குழந்தை அவள் வயிற்றில் வளர்கிறது என்பதைக் கேட்ட உறவினர்கள் அவர் முகத்தில் காறி உமிழாத குறையாக பேசித் தீர்த்து விட்டார்கள்..
“இதையெல்லாம் மனசில போட்டு மருகி மருகித்தான் உன் பொண்டாட்டி நெஞ்சுவலி வந்து செத்துப் போயிட்டா போல.. கல்யாண வயசில உனக்கு
ஒரு மக இருக்கா. .நீ என்னடான்னா உன் மகளுக்கு மாப்பிள்ளை தேடறதை விட்டுட்டு உனக்கு இன்னொரு பெண்டாட்டியைத் தேடி வாழ்ந்திருக்க.. நல்லா இருக்குடா வீரப்பா.. உன்னை நல்லவன்னு நினைச்சோம்.. நீ இப்படிக் கேடு கெட்டவனா இருக்கியே..”
அத்தனை வருடங்களாய் வீரப்பன் கட்டிக் காத்து வந்த மரியாதையும், கௌரவமும் காற்றில் பறந்து விட்டன.. இது அபிராமி கொடுக்கும் தண்டனையென்று வாய் திறவாமல் சகித்துக் கொண்ட வீரப்பன் லீலாவதியின் கழுத்தில் மூன்று முடிச்சை வேண்டா வெறுப்பாகப் போட்டுத் தொலைத்தார்.. அடுத்த நிமிடமே அவரது வீட்டிற்கு எஜமானியாக மாறினாள் லீலாவதி..
“நீ உன் வீட்டுக்குப் போ..” பல்லைக் கடித்தபடி தாழ்ந்த குரலில் சீறினார் வீரப்பன்.. பதிலுக்கு..
“என்னது..? என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்றீங்களா…? பேருக்குத்தான் தாலி கட்டினீங்களா..? ஐயோ, ஐயோ.. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா..? இவரைக் கட்டிக்கிட்ட இந்த வயித்துப் பிள்ளைக்காரி எங்கே போவேன்..? பொண்டாட்டின்னும் பார்க்காம இந்த மனுசன் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தப் பார்க்கிறாரே..” என்று அவள் உரத்த குரலில் பிலாக்கணம் வைத்ததில் வீரப்பன் அடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்..
‘அடப்பாவி மனுசா..’ என்று ஒட்டு மொத்த உறவினர் கூட்டமும் வீரப்பனைச் சாடிய சாடலில் அவரது வாய் மூடிக்கொள்ள லீலாவதி அபிராமியின் இல்லத்துக்கு அரசியானாள்..
‘லீலாவதி கெட்டிக்காரி..’
கசப்புடன் முகம் சுளித்தாள் அவள்.. காலிங்பெல் ஒலித்தது.. திறந்தாள்.. மூடப்பட்ட பெரிய டிரேயுடன் உள்ளே வந்த சாவித்திரி அவளைப் பார்த்து..
“உட்காரும்மா..” என்றாள்..
தயக்கத்துடன் சோபா நுனியில் உட்கார்ந்தவளைப் பார்த்து..
“நல்லா உட்காரும்மா.. விழுந்துரப் போற..” என்றவள் அவள் முன்னால் டீப்பாயை நகர்த்தி வைத்து..
“சாப்பிடு..” என்று டிரேயை வைத்தாள்..
வேண்டாம் என்று மறுக்க முடியாமல் பசி வயிற்றைக் கிள்ளியது.. காலையில் பஸ் ஏறுமுன் சாப்பிட்டது.. அன்று முழுவதும் சாப்பிடாமல் அலைந்து திரிந்து மழையில் நனைந்து ஓய்ந்து போயிருந்தவளுக்கு பசி மறந்து போயிருந்தது.. கண் முன் இருந்த உணவு டிரேயைக் கண்டதும் மறந்திருந்த பசி வயிற்றில் சுரக்க டிரேயை மூடியிருந்த தட்டை எடுத்துப் பார்த்தாள்..
சூடான ரவா கிச்சடியும் தொட்டுக் கொள்ளத் தேங்காய் சட்னியும் இருந்தன.. சின்னஞ்சிறு பிளாஸ்க்கில் என்ன இருக்கிறது என்று திறந்துப் பார்க்கக்கூட முடியாத வேகத்தோடு கிச்சடியை சாப்பிட்டு முடித்தாள்..
‘பாவம்.. செம பசியில இருந்திருக்கா..’ சாவித்திரியின் முகத்தில் காருண்யம் வழிந்தது..
“சூடா பாலைக் குடிம்மா.. தெம்பா இருக்கும்.. தூக்கமும் நல்லா வரும்..” பிளாஸ்க்கில் இருந்த பாலை தம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள்..
அந்த உபசரிப்பில் கண்கலங்கி விட்டாள் அவள்.. அபிராமி இருந்த போது இதுபோன்ற கவனிப்பும் உபசரனைகளும் அவளுக்குக் கிடைத்தன.. அவள் போன அன்றே அவையனைத்தும் அபிராமியுடன் சேர்ந்தே போய் விட்டனவே..
‘தாயில்லாத பிள்ளைக்கு சீரில்லை..’ மனம் கனத்தது..
சீர் என்பதை கவனிப்பு, பாசம், கனிவு, என்ற பலபொருள்களில் எடுத்துக் கொள்ளலாம்.. தாயின் பெருமையை உணர்த்தும் முதுமொழி எத்துனை உண்மையானது..
“ஏம்மா கண் கலங்கற..?” சாவித்திரி இதமாக வினவினாள்..
“எங்கம்மா ஞாபகம் வந்துருச்சு..” பால் தம்ளரை அவள் வாங்கிக் கொண்டாள்..
“உங்கம்மா எங்கே இருக்கிறாங்க..?” யதார்த்தமாகத்தான் சாவித்திரி கேட்டாள்..
“சாமிகிட்ட இருக்கிறாங்க..” அவள் குரல் கம்மக் கூறியதில் அதிர்ச்சியாகி அவள் முகத்தைப் பார்த்தாள்..
“அப்பா..?”
“அவரும் இல்லைங்க..”
‘ஐயோ.. பாவம்..’ வாய் விட்டுச் சொல்லாமல் மௌனித்தாள் சாவித்திரி.. சில சமயங்களில் இரக்கம் கூட ஒருவருக்கு தாழ்வுணர்வை உண்டு பண்ணி விடும்.. அதனால் ஓர் பெருமூச்சுடன் அதைத் தவிர்த்தவள்..
“உன் பெயர் என்னம்மா..?” என்று வினவினாள்..
“அர்ச்சனா..!”
அவள் அர்ச்சனைப் பூக்களைப் போல வெகு அழகாக இருந்தாள்.. பசி நீங்கிய முகத்தில் ஓர்விதத் தெளிவும் மலர்ச்சியும் ஏற்ப்பட்டிருந்ததில் அப்பொழுதுதான் மலர்ந்த நறுமலரை நினைவு படுத்தினாள்.. தலையோடு நனைத்து வெந்நீரில் குளித்து உலர்ந்த உடைக்கு மாறித் தலை முடியை விரித்து விட்டிருந்ததில் அது தோகை போல தரையில் புரண்டு கொண்டிருந்தது.. கொடி போன்ற உடலமைப்பு.. சந்தனத்தை அரைத்துப் பூசியதைப் போல ஒரு நிறம்.. வட்ட முகத்தில் இருந்த பெரிய கண்களில் சோகம் நிரம்பியிருந்தது..
‘இந்த வயசில் தாய், தகப்பனில்லாம அநாதையா நின்னா சோகம் வராம என்ன செய்யும்..?’
சாவித்திரி அவள் சாப்பிட்ட டிரேயை எடுக்க முயல அர்ச்சனா தடுத்துத் தன் கையில் டிரேயை எடுத்துக் கொண்டு எழுந்தாள்..
“நான் கொண்டு வர்றேங்க..”
“நீ தூங்கும்மா.. நான் போய் இதுகளைக் கிச்சனில் வைத்துட்டு வர்றேன்..”
“அதுக்கு நானும் கூட வர்றேனே..”
பிடிவாதமாக வந்த அர்ச்சனாவிடம் இருந்த பண்பு சாவித்திரியைக் கவர்ந்தது.. அவர்கள் பேசியபடி படியிறங்கினார்கள்..
“கொடைக்கானலுக்கு உன் பிரண்டைப் பார்க்க வந்ததா மூர்த்தி தம்பி சொல்லுச்சே..”
“ஆமாங்க.. ரேகான்னு ஒரு பிரண்ட்.. என்னுடன் படிச்சவ.. கொடைக்கானலில இருந்தா.. அவளைத் தேடித்தான் வந்தேன்.. வீடு பூட்டிக் கிடக்கு..”
“நீ வருகிறதா அவளிடம் சொல்லலையா..?”
“இல்லைங்க.. காலையில வீட்டை விட்டு வெளியே வந்தப்ப எங்கே போகிறதுன்னே டிசைட் பண்ணலை.. பஸ் ஸ்டாண்டில கொடைக்கானல் போகிற பஸ் கிளம்பிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தேனா.. டக்குன்னு ரேகா ஞாபகம் வந்துருச்சு.. பஸ்ஸில் ஏறிட்டேன்..”
விசித்திரமாக அர்ச்சனாவைப் பார்த்தாள் சாவித்திரி..
‘இவளைப் பார்த்தா மனம் போன போக்கில் அலைகிறவளைப் போலத் தெரியலையே..’
மூர்த்தியைப் போல சாவித்திரிக்கும் குழப்பம் வந்தது..
“அப்பாம்மா இல்லைன்னு சொன்னியே.. வீட்டை விட்டு வெளியில் வந்ததாவும் சொல்கிற.. யார் வீட்டில இருந்த..?”
“என் வீட்டில்தாங்க..”
இதை விடத் தெளிவான பதில் உலகத்தில் இருக்க முடியாது என்று தோன்றியது சாவித்திரிக்கு..
“மூர்த்தித் தம்பியிடமும் நீ இப்படித்தான் சொன்னியா..?” என்று விசாரித்தாள்..
“எப்படி..?” அர்ச்சனாவுக்குப் புரியவில்லை..
“மொட்டைக் காத்தான் குட்டையில விழுந்தான் என்கிறதைப் போலச் சொன்னியே.. அதைச் சொன்னேன்..” விளக்கம் சொன்னாள் சாவித்திரி..
அர்ச்சனா சிரித்து விட்டாள்.. சிரிக்கும் போது அவளது கண்களும் சேர்ந்து சிரித்த அழகில் வியந்து போனாள் சாவித்திரி.. அந்தச் சிரிப்பின் இடையே இழையோடிய சோகத்தின் முகவரியை சாவித்திரியால் இனம் காண முடிந்தது..
சோகம் சுமப்பவர்களால் சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் பாவப்பட்ட ஜீவன்களை இனம் காண முடியாதா..?
‘பெண்ணாகப் பிறப்பெடுத்தாலே இப்படித்தான்.. மனம் கனக்க மனதின் வலியை மறைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல் வாழ்ந்தாக வேண்டும்..’ நெடிய மூச்சு வெளிப்பட்டது..
‘பெண் மட்டுமா மனச்சுமையுடன் வாழ்கிறாள்..? ஆண்கள் அதற்கு விதி விலக்கா..? சுமை தாங்கும் சுமைதாங்கிகளாய் வாழ்பவர்களும் இவ்வுலகில் உண்டே.. மூர்த்தியை மறந்து விட்டாயா..?’ சாவித்திரியின் மனம் கேட்டது..
மற்றுமொரு நெடுமூச்சு.. அர்ச்சனா சங்கடம் கொண்டாள்..
“நான் ஏதாவது உங்க மனசைப் பாதிக்கிறதைப் போலச் சொல்லிட்டேனா..?”
“ஏன் அப்படிக் கேட்கிற..?”
“மூட்-அவுட் ஆகிட்டேங்களே..”
“மூட்-அவுட் ஆகிட்டேனா..? நீ தெளிவாச் சொன்ன விளக்கத்தில தலை சுத்திக் கிறுகிறுத்துப் போயில்ல இருக்கேன்..”
“போங்க ஆண்ட்டி..”
அர்ச்சனாவுக்கு வெட்கம் வந்து விட்டது.. சோகப் பதுமை போல இருப்பவளிடம் மலர்ச்சி வந்தால் அவள் தங்கப் பதுமை போல ஜொலிக்கிறாள் என்பதை கண்டு கொண்டாள் சாவித்திரி..
“அதுசரி.. என்னை போங்க ஆண்ட்டின்னு கொடைக்கானலை விட்டு விரட்டி விடத்தான் வந்திருக்க போல..”
“அச்சச்சோ.. அப்படி எங்கே சொன்னேன்..?”
“இப்பச் சொல்லலை..?”
“என்னன்னு..?”
“போங்க ஆண்ட்டின்னு..”
“அது ச்சும்மா.. சொல்கிறது..”
“ஊஹீம்..?”
அர்ச்சனா சமையலறையிலிருந்த சின்க்கில் பாத்திரங்களைப் போட்டு.. விட்டுக் குழாயைத் திறக்கப் போனாள்..
“என்னம்மா செய்கிற..?” சாவித்திரி தடுத்தாள்..
“இதைக் கழுவி வைக்கிறேன் ஆண்ட்டி..”
“வேண்டாம் வா.. காலையில் குறிஞ்சி வந்து கழுவி வைப்பா..”
“ஏனாம்..? இப்பக் கழுவி வைத்தால் என்னவாம்..?”
“என்னவா..? இது கொடைக்கானல்ம்மா.. நடுராத்திரியில குழாயைத் திறந்தா சில்லுன்னு பனிக்கட்டி போலத் தண்ணி கொட்டும்.. நீ தாங்க மாட்ட..”
“மணிக்கணக்கா பனியையும் கொட்டற மழையையும் தாங்கி நின்றுக்கிட்டு இருந்தவதானே ஆண்ட்டி.. சார் அந்தப்பக்கம் இந்த நேரத்துக்கு கடவுள் போல வந்து காப்பாத்தி அழைச்சுக்கிட்டு வரலைன்னா இன்னும் அங்கேயேதான் நின்றுக்கிட்டு இருந்திருப்பேன்..?”
சாவித்திரிக்குப் பாவமாக இருந்தது.. அர்ச்சனா எதற்காக இந்த பனி விழும் இரவில் கொடைக்கானலின் குளிர் மழையில் நனைந்து கொண்டு நின்றாள் என்று புரியாவிட்டாலும் அந்த நிலைமைக்கு அவளை அவளது வாழ்க்கை துரத்தியிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது..
“அதான் பாதுகாப்பா வந்துட்டேயில்ல.. இனியும் அந்த நினைப்பு எதுக்கு..? விட்டுத் தள்ளு..”
சாவித்திரி அர்ச்சனாவை இழுத்துக் கொண்டு படியேறினாள்..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.