Chapter 06

0Shares

“அப்புறம்..?”

ஆதுரத்துடன் வினவினாள் சாவித்திரி.. அர்ச்சனாவின் வாயைக் கிளறிக் கதை கேட்கும் தொனியாக இல்லாமல் அவளது மனதில் உள்ள சோகத்தை இறக்கி வைத்து இளைப்பாற வைத்து மடி தாங்கும் தாயின் குரலாக அவள் கேட்ட தொனி இருந்தது.. 

அர்ச்சனா சாவித்திரியின் பக்கமாக ஒருக்களித்துத் திரும்பிப் படுத்தாள்.. அறையில் ஹீட்டரினால் உண்டான வெப்பம் குளிருக்கு இதமாக இருந்தது.. கனத்த கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டதில் கதகதப்பு வந்தது.. தூக்கம்தான் வரவில்லை..

இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அவளது கண்களில் துளிர்த்தக் கண்ணீர்த் துளிகள் பளபளத்தன.. ஆறுதலாக் குறை கேட்கும் அன்னையின் வடிவாய் சாவித்திரி தென்பட்டாள்.. அவளிடம் மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்துக் கொண்டிருப்பதில் அர்ச்சனாவுக்குள் இளைப்பாறுதல் உண்டானது..

வா.. என் அருகில் அமர்ந்து உன் மனதில் உள்ள குமுறல்களைக் கொட்டு.. மடி தாங்க நானிருக்கிறேன் என்று சொல்லும் நல் உள்ளங்கள் இந்த உலகில் மிகக் குறைவு.. அப்படியே கேட்டாலும் அது அடுத்தவரின் வாழ்வை அறிய விழையும் அற்ப ஆசையினால் கேட்கப் படுவதாக இருக்கும்..

இவள் நம் விருந்தாளி என்ற அறிமுகத்துடன் மூர்த்தி சாவித்திரியிடம் அர்ச்சனாவை ஒப்படைத்து விட்டுப் போய் விட்டான்.. அர்ச்சனாவுக்காக அறையைக் காட்டி.. அந்த நடு நிசியிலும் அலுப்பையும், களைப்பையும் முகத்தில் காட்டாமல் சூடாக உணவும், பாலும் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்து அவளை உண்ண வைத்து, அவள் உறங்கப் பாதுகாப்பாக துணைக்கு வந்து படுத்திருக்கும் சாவித்திரியின் மீது அர்ச்சனாவுக்குள் பிரியம் சுரந்தது..

“என்னம்மா பிரச்னை..?” என்ற இதமான கேள்வி மட்டுமே அர்ச்சனாவுக்குப் போதுமானதாக இருந்தது..

அவள் மடி சாய்ந்து அழுது தீர்த்து விடும் வேகத்துடன் தன் வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்து விட்டாள்..

“அப்புறம் என்ன ஆண்ட்டி.. சித்தியின் கையில் வீட்டோட மொத்த அதிகாரமும் போய் விட்டது.. அவங்க தடாலடியா வந்து நின்று தாலிகட்ட வைத்துக் குடும்பத்துக்குள்ளே நுழைஞ்சிருவாங்கன்னு அப்பா எதிர்பார்க்கலை போல.. இடிஞ்சு போயிட்டார்..”

வீரப்பனின் நிலைமை அப்படித்தான் ஆகியிருந்தது.. லீலாவதியை மனைவியாய் ஏற்க அவரால் முடியவில்லை.. அபிராமியின் இடத்தில் லீலாவதியை நிறுத்தி 

வைக்க நேர்ந்து விட்டதில் மனம் உடைந்து விட்டார்.. லீலாவதி அவருடன் மட்டும் வாழவில்லை.. இந்த உண்மை தெரிந்திருந்ததால்தான் அவளை தள்ளியே நிறுத்தியிருந்தார்.. சபலத்தில் வீழ்ந்து அவளுடன் தொடர்பை வைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு ஓர் எல்லைக் கோட்டை வகுத்திருந்தார்..

அபிராமி இறந்து விடுவாள்.. லீலாவதி அவளுக்கான எல்லைக் கோட்டை அழித்துவிட்டு அவர் வீட்டில் நுழைந்து விடுவாள் என்று அவர் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.. லீலாவதி அவருடைய மனைவியென்ற பட்டத்தை வாங்கிக் கொண்டதும் அவர் நினைத்துப் பார்க்காத அத்தனையையும் நடத்திக் காட்டி விட்டாள்..

“உன்னை பேங்கில் பார்த்ததா நடராஜன் சொன்னானே..?”

“ஆமாம்.. பேங்குக்குத்தான் போயிருந்தேன்..”

“என்னம்மா.. இந்தப் பக்கம்ன்னு அவன் கேட்டதுக்கு நகையை அடகு வைக்க வந்திருக்கிறதாய் சொன்னாயாமே..?”

“ஆமாம் சொன்னேன்..”

“ஒரு பவுனில்ல, இரண்டு பவுனில்ல.. அறுபது பவுன் நகையை அடகு வைத்துப் பத்து லட்சம் பணம் வாங்கினாயாமே..?”

“ஆமாம் வாங்கினேன்..”

“உனக்குன்னு ஒரு குண்டுமணி நகைகூட சொந்தமா இல்லை.. எங்கிருந்து வந்தது அந்த அறுபது பவுன்..?”

“எல்லாம்.. உங்களாலே வந்ததுதான்..”

பூடகமாகச் சொன்னவளை உற்றுப் பார்த்த வீரப்பனுக்கு மனதில் என்னென்னவோ சந்தேகங்கள் வந்தன..

‘ஒருவேளை இவளுக்கு நான் நகையேதும் வாங்கிக் கொடுக்கலைங்கிறதைக் குத்திக் காட்டிப் பேசறாளோ..?’

எப்படி வாங்கிக் கொடுப்பார்..? எந்த நொடியிலும் அவருடனான தொடர்பை அறுத்துக் கொண்டு வேறு எவருடனும் அவள் சென்று விடலாம் என்ற நிலையில் அவளுடன் பழகிக் கொண்டிருந்தவர் அவளுக்காக வீட்டு வாடகை, மளிகை, துணிமணி, செலவுக்குப் பணம் என்று அள்ளி விட்டதே அதிகம்.. இதை லீலாவதியும் அறிவாள்.. அறிந்தும் ஓர்நாள்கூட ஏன் அப்படி நினைக்கிறீர்கள்..? உங்களை விட்டு நான் எங்கே போவேன் என்று வாய் வார்த்தைக்குக் கூடக் கேட்டதில்லை.. மாறாக அவரை விட உயர்ந்த நிலையிலிருக்கும் எவர் பெயரையாவது சொல்லி அவரிடம் போயிருந்தால் தங்கத்தால் இழைத்திருப்பார், இவரிடம் போயிருந்தால் பட்டுக்களாக வாங்கிக் குவித்திருப்பார் என்று புலம்பிக் கடுப்பேற்றுவாள்.. கடுப்புத் தாங்காமல் அவர் அவளிருக்கும் தெருப் பக்கம் கூடப் போகாமல் விலகியிருந்தால் கண்ணீரும் கம்பலையுமாக சரசமாடி அவரைக் கவிழ்த்துத் தன் வீட்டுக்கு வர வைத்து விடுவாள்..

‘சாகசக்காரி..’

அவரது மகள் அர்ச்சனா இருக்கும் வீட்டிற்குள் இப்பேற்பட்ட குணம் கொண்ட லீலாவதி நுழைந்து விட்டாளே என்றுதான் அவருக்குப் பதைப்பாக இருந்தது..

அவரது சபல புத்தியால் அன்பு மனைவியை பறி கொடுத்ததுமில்லாமல் அருமை மகளின் பாதுகாப்புக்கும் உலை வைத்து விட்டாரே.. என்ன செய்வார்..?

லீலாவதியை வீட்டை விட்டுத் துரத்தவும் முடியாமல், வீட்டில் ஒருத்தியாக நினைக்கவும் முடியாமல் தொண்டையில் முள் சிக்கிக் கொண்டதைப் போல அவஸ்தைப் பட்டார் அவர்..

அப்படித் தவித்துக் கொண்டிருந்தவரின் தலைமீது இடி மீது இடியாக இறக்கிக் கொண்டிருந்தாள் அவரின் ‘சதி’ லீலாவதி..

“என்னால் வந்ததா..?”

“பின்னே.. யாராலே வந்ததாம்..? உங்களுக்குப் பெண்டாட்டியா ஆனதினாலதானே இந்த வீட்டுக்கு உடந்தைப் பட்டவளா நான் ஆக முடிஞ்சது..?”

“பெண்டாட்டி, கிண்டாட்டின்னு உரிமை கொண்டாடினேன்னு வை.. அடித்துப் பல்லைப் பேர்த்திருவேன்..”

“அதுக்கு ‘ஆ’ன்னு வாயைத் திறந்து நான் பல்லைக் காட்டிக்கிட்டு இருப்பேன் பாருங்க.. ரொம்பத் துள்ளாதீங்க..”

“நகை எப்படி வந்தது.. அதைச் சொல்லுடி..”

“ஊம்..? என் சக்களத்தி போட்டுக்கிட்டு இருந்த நகை இப்ப என்னோடதா ஆகியிருச்சில்ல..?”

‘இவள் அபிராமியைச் சொல்கிறாள்..’ வீரப்பன் நகையை மறந்து விட்டு..

“யாருக்கு யாருடி சக்களத்தி..?” என்று எகிறினார்.

“இப்ப எதுக்கு இந்தக் குதி குதிக்கறிங்க..? நான்தான் அவளுக்குச் சக்களத்தி.. போதுமா..?”

“அஃது.. யாரை என்ன பேச்சுப் பேசற..?”

மூச்சிரைக்கச் சொன்னவருக்கு அப்போதுதான் அவள் சொல்லிக் கொண்டிருக்கும் விவரம் புரிந்தது..

“அடிப்பாவி.. என்னடி செஞ்சு வைச்சிருக்கிற..?” ஓடிப் போய் பீரோவைத் திறந்து பார்த்தார்.. அதிலிருந்த அபிராமியின் நகைப்பெட்டி காலியாக இருந்தது.. லீலாவதியை இழுத்துப் போட்டு மிதித்தார்.. என்ன பிரயோசனம்..? யானை வாயில் போன கரும்பு திரும்புமா..?

“அடகு வைத்த பணம் எங்கேடி..?”

“அதை வைத்துத்தானே என் பேரில வீட்டடி மனை வாங்கினேன்..”

“அடிங்.. யாரு பணத்தை வைச்சு யாரு வீட்டடி மனை வாங்கறது.. உன் மூஞ்சிக்கெல்லாம் சொந்த வீடு ஒரு கேடா..?”

அன்று வீரப்பன் கேட்ட கேள்விதான் மூன்றே வருடங்களில் அர்ச்சனாவை லீலாவதி வீட்டை விட்டுத் துரத்தக் காரணமாக அமைந்தது..

பாவம் அர்ச்சனா, அவளுக்கு இந்தக் கதையெல்லாம் தெரியாது.. அபிராமி இறந்த போது அவளுக்கு பத்தொன்பது வயது.. கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.. வங்கி வேலையில் அவளுக்கு விருப்பம் என்பதற்காக பி.காம் பட்டப் படிப்பில் அவளை வீரப்பன் சேர்த்திருந்தார்..

எதிர்பாராத தாயின் மறைவு.. அடுத்த சில நாள்களில் மாற்றாந்தாயின் வரவு என்று அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் கதிகலங்கிப் போயிருந்த அர்ச்சனா மனதின் திகிலை மறைக்கப் படிப்பில் தன்னை கரைத்துக் கொண்டாள்.. அச்சம் அதிகமாகும் போது அபிராமியின் படத்தை எடுத்து வைத்து அதில் தலை சாய்த்துக் கண்ணீர் விடுவாள்.. அருளே வடிவான அபிராமி மகளை மடி தாங்கி தலை கோதி ஆறுதல் கொடுப்பதைப் போன்ற உணர்வில் தூங்கி விட்டாள்..

அவர்கள் குடியிருந்த வீடு அர்ச்சனாவின் பெயரில் இருந்தது.. அபிராமி சேர்த்து வைத்திருந்த நகைகள் அனைத்தும் மகளுக்காகத்தான்.. அவற்றை லீலாவதி கைப்பற்றித் தன் பெயரில் அடகு வைத்து அந்தப் பணத்தில் அவள் பெயருக்கு வீட்டடி மனையை வாங்கி விட்டாள்..

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் சாகசமும் சாதுர்யமும் லீலாவதிக்கு மட்டும்தான் வரும்.. அவளே சதி லீலாவதி.. சதி செய்ய அவளுக்குச் சொல்லித்தர வேண்டுமா என்ன..?

அலமாரியின் சாவி அவளிடம் இல்லை.. பூதம் புதையலைக் காப்பதைப் போல அதை வீரப்பன் அடி மடியில் கட்டிக் காவல் காத்துக் கொண்டிருந்தார்.. லீலாவதியிடமிருந்து பாதுகாக்க பத்திரப்படுத்தியிருக்கும் சாவியை லீலாவதி கேட்டால் கொடுத்து விடுவாரா என்ன..?

லீலாவதி தன் விளையாட்டுக்கு பகடைக் காயாக எந்த மகளுக்காக வீரப்பன் அலமாரியின் சாவியை அடி மடியில் கட்டிப் பாதுகாக்கிறாரோ.. அந்த மகளையே பயன் படுத்திக் கொண்டாள்.. தாய் மறைந்து விட்டத் துக்கத்தில் புதையுண்டிருந்த அர்ச்சனாவை அழைத்தாள்..

“இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படி கண்ணு..? உன்னால உன் அப்பாவும் துக்கமா இருக்காரு பாரு..”

தகப்பனைச் சுட்டிக்காட்டி லீலாவதி பேசவும் மனம் தாளாத அர்ச்சனா..

“அப்பா..” என்று வீரப்பனைத் தேடிக் கிளம்பி விட்டாள்..

“கொஞ்சம் இரு கண்ணு.. உன் அப்பா ரெண்டு நாளா பச்சைத் தண்ணியக் கூடத் தொண்டையில ஊத்திக்கலை.. சூடா சாதம் வைத்துக் குழம்பு, காய்ன்னு சமைச்சிருக்கேன்.. கொண்டு போய் சாப்பிட வை ராஜாத்தி..” தடுத்து நிறுத்தி அவள் உருகிய உருகலில் தன்னையும் அறியாமல்..

“கொடுங்க சித்தி..” என்று உறவு கொண்டாடி விட்டாள் அர்ச்சனா..

‘அப்படி வழிக்கு வாடி என் சக்களத்தி மகளே..’ லீலாவதியின் இதழ்களில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது..

“பாவம் உன் அப்பா.. பசியோட இருப்பாரு.. நான் கொடுத்தா சாப்பிட மாட்டாரு.. நீயே உன் கையால பரிமாறினா சாப்பிட சான்ஸ் இருக்கு.. அவரைச் சாப்பிட வைச்சிருவ இல்ல..”

“என்ன சித்தி இப்படிக் கேட்டுட்டிங்க.. அம்மா போன பின்னாலே இனி அப்பாதானே எனக்கு எல்லாமும்.. நான் பார்த்துக்குவேன் சித்தி..”

‘ஆமாண்டி.. அப்பனும் மகளும் பாசப்பயிரை வளர்க்கத் தண்ணி விடத்தானே நான் வந்திருக்கேன்.. ஒட்டு மொத்தமா அத்தனையையும் உருவிட்டு ஓட்டிவிட வந்திருக்கேண்டி..’

“சாப்பாட்டைக் கொடுங்க சித்தி.. யோசனையா ஆகிட்டிங்களே..”

“அதுவா கண்ணு.. உன் அப்பாவோட அழுக்குத் துணிகளைத் துவைச்சு மடிச்சு அயர்ண் பண்ணி வைச்சிருக்கேன்.. அதை எங்கேம்மா வைக்கிறது..?”

“பீரோவில அடுக்கி வையுங்க சித்தி..”

“பீரோ பூட்டியிருக்கு அர்ச்சனா..”

“சாவி அப்பாகிட்ட இருக்கும்.. நீங்க சாப்பாட்டைக் கொடுங்க.. அப்பா சாப்பிட்டு முடித்ததும் நான் சாவியைக் கேட்டு வாங்கிக்கிட்டு வர்றேன்..”

“நான் சாப்பாடை எடுத்து வைக்கிறதுக்குள்ள நீ சாவிய வாங்கிக்கிட்டு வந்துட்டா, நீ உன் அப்பாவை சாப்பிட வைக்கிறதுக்குள்ள நான் பீரோவில உன் அப்பாவின் துணிகளை அடுக்கி வைச்சுருவேன்.. காலையில இருந்து ஒத்தை ஆளா ஓடியாடி வேலை செய்ததில இடுப்பு ஒடிஞ்சிருச்சும்மா.. கொஞ்ச நேரம் படுத்து எழுந்தாத் தேவலை போல இருக்கு..”

சோர்ந்து போன முகத்துடன் லீலாவதி இடுப்பை நீவி விட்டு வலி தாளாதாதைப் போல முகத்தைச் சுளித்தாள்.. அப்பாவி அர்ச்சனா வீரப்பனிடமிருந்து சாவியை வாங்கி வரக் கிளம்பினாள்..

“நான் கேட்டேன்னு சொல்லாதேம்மா.. என்மேல இருக்கிற கோபத்தில உன் அப்பா நான் துவைச்ச துணிகளை உடுத்தவும் மாட்டாரு.. சமைச்ச சாப்பாட்டை சாப்பிடவும் மாட்டாரு.. நீயே எல்லாத்தையும் செய்ததாச் சொல்லும்மா.. அப்பத்தான் உன் அப்பா பசிக்குச் சோற்றைச் சாப்பிட்டு அழுக்கில்லாத சுத்தமாத் துவைச்ச துணிகளை உடுத்துவாரு..” லீலாவதி எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தாள்..

மறந்தும் லீலாவதி சாவியென்ற பெயரைச் சொல்லவில்லை.. சாப்பாடு, துவைத்த துணியென்று அவள் காட்டிய கரிசனத்தில் அர்ச்சனா சாவி தனக்குத்தான் வேண்டுமென்று கேட்டு வாங்கி வந்து கொடுத்து விட்டாள்..

அன்றே அபிராமியின் நகைகளை அபேஸ் செய்த லீலாவதி அவற்றை வங்கியில் அடகு வைத்துத் தன் பெயருக்கு வீட்டடி மனையை வாங்கி விட்டாள்..

அபிராமியின் நகைகளை தன் பெயருக்கு லீலாவதி வங்கியில் அடகு வைத்ததின் மூலம் நகைகளைக் கைப்பற்றி தன் பெயரில் வங்கியில் வைத்துப் பாதுகாத்து விட்டாள்.. இது அவள் பெற்ற முதல் வெற்றி.. அடகு வைத்ததின் மூலம் கிடைத்த பணத்தில் தன் பெயருக்கு ஒரு வீட்டடி மனையை வாங்கி விட்டது இரண்டாவது வெற்றி..

இப்படித்தான் அவள் ஒரே கல்லில் இரண்டு வெற்றிகளை ஈட்டினாள்.. பணம் கையில் இருந்தால் அதை வீரப்பன் பறித்து அர்ச்சனாவின் பெயரில் முதலீடு செய்து விடலாம்.. அதற்கு வழியில்லாமல் செய்தாகி விட்டது.. அவள் பெயரில் அபிராமியின் நகைகளை அடகு வைத்ததை வீரப்பானல் நிரூபிக்க முடியாது.. நகையனைத்தையும் அபிராமி உயிருடன் இருக்கும் போதே லீலாவதிக்குக் கொடுத்து விட்டார் என்று வீரப்பனின் நெருங்கிய நண்பரான நடராஜனிடம் லீலாவதி புளுகியிருந்தாள்.. அதை நம்பிய நடராஜன் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று வீரப்பனிடம் காறி உமிழாத குறையாக கேள்வி கேட்டு விட்டு ஊர் முழுக்க அந்தச் செய்தியை பரப்பி விட்டிருந்தார்..

அதை பொய்யென்று வீரப்பன் எப்படிச் சொல்வார்..?

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link